[பாகம் 1]
இந்த இரண்டு கட்டுரைகளையும் புத்தகத்தின் பாகம் 1 என்று குறிப்பிடலாம். இதைத் தொடர்ந்து வருவது சற்றே கனமான இலக்கிய, தத்துவார்த்த சிந்தனைகள் பற்றிய விளக்கக் கட்டுரைகள். இவைதான் 'வெளிச்சம்' ஏட்டில் தொடராக வந்தவை. சிக்மண்ட் பிராய்ட், கார்ல் மார்க்ஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஹெகல், அல்துசார், நீட்சே, ஹெய்டெக்கர், ஹுசெர்ல், ஜான் போல் சாத்தர், ஆல்பர்ட் கமு, ஃபுகுயாமா, சோம்ஸ்கி, சாமுவேல் ஹண்டிங்டன், மிஷெல் ஃபூக்கோ என்று பல இலக்கிய தத்துவார்த்தவாதிகளின் தத்துவங்களைப் பற்றிய எளிய அறிமுகம் நன்கு எழுதப்பட்டுள்ளது.
மிக முக்கியமான கட்டுரைகளாக மூன்றைக் குறிப்பிடுவேன். புத்தகத்தின் கடைசிக் கட்டுரையான "மனிதத்துவம், சாத்தர் பற்றிய ஒரு (sic) அறிமுகம்", சாத்தர் (Jean Paul Satre) பற்றி தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த, எளிய முறையில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை எனலாம். சாத்தரின் இருத்தலியக் கோட்பாடுகள் குறித்த விளக்கம், சாத்தரது 'குமட்டல்' (Nausea) எனும் நாவல் பற்றிய அறிமுகம், தன் நாவலையே பிற்காலத்தில் சாத்தர் கடுமையாக விமர்சித்தது, நோபல் பரிசை ஏற்க மறுத்தது, சாத்தரின் மார்க்ஸியக் கருத்துகள், மரபுவாத கம்யூனிஸ்டுகளின் கொள்கைகளை எதிர்த்து வாழ்க்கை முழுதும் எழுத்தால் போராடியது, எப்படி ஒரே நேரத்திலேயே இருத்தலியம் மற்றும் மார்க்ஸியம் என இரண்டிலும் வெகுவாகக் கருத்துக்களை முன்வைக்க முடிந்தது (இரண்டையும் ஒட்டவைக்க முயன்றது), ஃபிரான்சுக்கு எதிராக அல்ஜீரியப் புரட்சியாளர்களை ஆதரித்தது என அவரது வாழ்க்கையையும் கொள்கைகளையும் நிறைவாக விளக்குகிறார்.
சாத்தரது எழுத்துகளைப் படிப்பது சிரமமானது. அவரது 'Being and Nothingness' என்னும் 800 பக்கப் புத்தகத்தை சில நாட்களாக வைத்துக் கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கிறேன். பாலசிங்கத்தின் கட்டுரையைப் படித்த பின்னர் மீண்டும் இந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியும் என நினைக்கிறேன். [மேற்படிக் கட்டுரையில் குமட்டல் நாவலின் சுருக்கத்தை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். Fair quotation எனும் கணிப்பில் அந்த முழுச் சுருக்கத்தையும் வெளியிடுவது நியாயமானதா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பிறகு தனியாகத் தட்டச்சிடுகிறேன்.]
இரண்டாவதாகக் குறிப்பிடப்படவேண்டியது ஆல்பர்ட் கமுவைப் (Albert Camus) பற்றிய "அர்த்தமும் அபத்தமும்" எனும் சிறிய கட்டுரை. "அபத்தமான உலகில் அர்த்தமற்று வாழும் அபத்த நாயகனாக (Absurd Hero) அவர் (கமு) மனிதனைக் கண்டார். இந்த அபத்த மனிதனின் அவலமான, அர்த்தமற்ற வாழ்வுபற்றி ஆக்ரோஷத்துடன் எழுதினார்." என்கிறார் பாலசிங்கம். இயந்திர உலகில் வாழும் நவயுக மனிதனின் அலுப்புத் தட்டும் உழைப்பும் அவசர வாழ்வும் அபத்தமானது என்பது கமுவின் கருத்து. இந்த அசட்டுத்தனமான உழைப்பின் குறியீட்டுச் சின்னமாக கிரேக்க இதிகாசத்தின் சிசைப்பஸை முன்வைக்கிறார் கமு. "மனித வாழ்வு அபத்தமானது; துன்பம் நிறைந்தது; நிலையற்றது. இதுதான் இருப்பின் மெய்நிலை. இந்த இருப்பு நிலையிலிருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. [ஆயினும்] இந்த வாழ்நிலையை மனிதன் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். அபத்தத்திலும் அர்த்தமின்மையிலும் அர்த்தத்தைக் காண்பதுதான் அர்த்தமான வாழ்வாக அமையும் என்பது அவர் கருத்து. Myth of Sisyphus என்ற அவரது [கமுவின்] தத்துவ நூல், மானிடத்திற்கு இந்தத் தரிசனத்தையே தருகிறது." என்கிறார் பாலசிங்கம்.
கமுவின் கிளர்ச்சிக்காரன் (The Rebel) என்ற தத்துவ நூல் அரசியல் உலகத்தைப் பற்றிய கடுமையான விமரிசனத்தை முன்வைக்கிறது. மத சித்தாந்தங்களை மட்டுமின்று கம்யூனிச உலகையும் கடுமையாகச் சாடியது இந்நூல். இதனால் கம்யூனிஸ்ட் தோழர்கள் பலரது நட்பையும், நீண்ட கால நண்பர் சாத்தரின் நட்பையும் கூட கமு இழக்க நேரிட்டது.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
12 hours ago
It is not good idea to start (Sartre)with 'Being and Nothingness' ..Start with essays and articles..
ReplyDeleteOn the other hand Albert Camus is more accessible (The Stranger---The Rebel and The Myth of Sisyphus )