Monday, July 05, 2004

மாநில ஆளுனர்கள் நீக்கம்

ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு வித்தியாசமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தது தப்புதான். ஓரிருவரைத் தவிர மீதி எல்லோரும் அதே, பழைய காங்கிரஸ்காரர்கள்தானே? மேலும் மன்மோகன் சிங் சம்மதத்துடன் இவை நடக்கிறதா இல்லை சோனியா நேரடியாக இதைச் செய்கிறாரா என்பது நமக்கு கடைசிவரை தெரியப்போவதில்லை. ஒருவேளை மன்மோகன் சிங் இதுபோன்ற 'டார்ச்சர்கள்' தாங்காது தன் பதவியை விட்டு விலகப் போவதாக அறிவிக்கலாம்.

உருப்படியாகச் செய்ய வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை விட்டுவிட்டு இப்படி காங்கிரஸ் செய்யும் அரசியல், வருத்தம் தரவைக்கிறது. பாஜக 'எங்கே வாய்ப்பு கிடைக்கும், பாராளுமன்றத்தைத் ஸ்தம்பிக்க வைக்கலாம்' என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்?

முதலில் வந்தது 'மாசுபட்ட அமைச்சர்கள்' பிரச்சனை. இதில் காங்கிரஸால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை. மாசுபடிந்த அமைச்சர்கள் யாருமே காங்கிரஸ்காரர்கள் இல்லை. எல்லோரும் கூட்டணிக் கட்சி ஆசாமிகள். அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்தால், ஆட்சி ஆட்டங்காணும். பாஜக சிலநாள்கள் கூத்தடித்து விட்டு மறந்து விடுவார்கள். இந்தக் கூத்துமே காங்கிரஸ்+மற்ற எதிர்க்கட்சிகள் போன ஆட்சியின் போது ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் மீது நடத்திய தாக்குதலினால்தான்.

ஆனாலும் மன்மோகன் சிங் வேறு வழியின்றி 'குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான்' என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். தான் எதிர்க்கட்சியில் இருந்தால் ஒரே ஆட்டமாக ஆடியிருப்பார் சோம்நாத் சாட்டர்ஜி. இப்பொழுது அவரும் ஒருவழியாக சமரசம் செய்து கொள்ளலாம், வாருங்கள் சபையை நடத்துவோம் என்று பொறுமை பேசுகிறார். இந்த புத்தியெல்லாம் போன பாராளுமன்றத்தில் எங்கு போயிற்று?

சரி, இந்தப் பிரச்சனை சரியாகும் என்று நினைக்கையில் ஆளுனர்கள் பதவி நீக்கம். இதை இப்பொழுது செய்ய என்ன தலை போகிற அவசரமோ? பாஜகவும் இதனைச் செய்துள்ளது. அப்படிப் பார்த்தால் இந்த மாதிரி அசிங்கத்தை ஆரம்பத்தில் செயல்படுத்த ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். பின்னர் ஜனதா கட்சி, பின்னர் மீண்டும் காங்கிரஸ், பின் சில்லறை ஜனதா தள், பின் பாஜக, இப்பொழுது மீண்டும் காங்கிரஸ். அடுத்து பாஜக வந்தால் நிச்சயம் இந்தக் கூத்து மீண்டும் அரங்கேறும்.

நல்லவேளை, இஷ்டத்திற்கு மாநில அரசுகளைக் கலைக்கும் முயற்சிகளை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்ற நிலை இப்பொழுது.

கவர்னர்கள் நீக்கத்தை நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்ல வாய்ப்பில்லை போலத் தோன்றுகிறது. மன்மோகன் சிங், அப்துல் கலாம் என்ற இரண்டு நல்ல மனிதர்களின் constitutional proprietyஐ கேலி செய்யும் விதமாகவே இந்தக் கூத்து நடைபெற்றிருக்கிறது. இந்த நிலை எப்பொழுது மறையுமோ!

இன்னும் சில வாரங்களுக்கு பாஜக கூட்டணி பாராளுமன்றம் நடக்கவிடாமல் செய்யும். ஆளும் கூட்டணியால் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இல்லாவிட்டால் எதிர்க்கட்சி ஆசாமிகளை வெளியே தூக்கி எறிந்து விட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படலாம். இதனால் பட்ஜெட்டின் மீதான நியாயமான விமரிசனம் எதுவும் பாராளுமன்றத்தில் நடக்காது. அதைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? கட்சி அரசியல்தானே முக்கியம்? நாட்டை ஒழுங்காக ஆள்வதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

3 comments:

  1. பாராளுமன்றம் ஒழுங்காக நடந்த போது மட்டும் அரசியல் கலப்பில்லாமல் பட்ஜெட் மீது நல்ல விவாதம் எந்தக் காலத்தில் நடந்தது? வெகு அரிதாகவே. நமது நாட்டில் மீடியாவில் தான் (குறிப்பாக பிரிண்ட் மீடியாவில்) பட்ஜெட் மீதான ஒழுங்கான விவாதம் காலங்காலமாக நடந்து வந்திருக்கிறது.

    ReplyDelete
  2. மீனாக்ஸ்: பட்ஜெட் பற்றி எம்மாதிரியான உருப்படியான விவாதங்கள் செய்தித்தாள்களில் வந்தாலும் அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. பாராளுமன்றத்தில் வந்தால்தான் நிதி அமைச்சரை வலியுறுத்தி சில மாறுதல்களைக் கொண்டுவர முடியும். இதுவரை 'அரசியலாக்கப்பட்டிருந்தாலும்' இனியும் அப்படியே தொடர்வது ஆரோக்கியமானதல்ல. அதனால் இந்த கவர்னர்கள் நீக்கம் தவறான நேரத்தில் செயல்படுத்தப்பட்டது என்பது என் கருத்து.

    ReplyDelete