Thursday, July 15, 2004

நிதிநிலை அறிக்கை 2004 - 4

[முதலாவது | இரண்டாவது | மூன்றாவது]

இந்த பட்ஜெட்டில் பங்குச்சந்தை தொடர்பாக மூன்று மாறுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை முறையே:

1. Securities Transaction Tax: Securities என்பது பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பங்குகள் (shares), கடன் பத்திரங்கள் (debenture, bond, loan notes etc.), futures, options, listed mutual fund units என்று பலவற்றையும் குறிக்கும். இதுநாள் வரை இவற்றை வாங்கி, விற்கும்போது தனியாக வரி ஏதும் இல்லாமலிருந்தது. வாங்கி விற்கும்போது கிடைக்கும் லாப, நஷ்டங்களுக்கு மட்டும்தான் கேபிடல் கெயின்ஸ் வரி இருந்தது. இந்த பட்ஜெட்டில் கொண்டுவந்துள்ள திட்டப்படி, ஒவ்வொரு வாங்கல்-விற்றலுக்கும் Transaction tax விதிக்கப்படுகிறது. இதன்படி, வாங்குபவர், வாங்கும் மதிப்பின் மேல் 0.15% வரியாகக் கட்டவேண்டும். இத்துடன் கூடவே கேபிடல் கெயின்ஸ் வரிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

2. Capital Gains tax (on securities): Securities மீதான கேபிடல் கெயின்ஸ் இரண்டு வகையானது. குறுகிய காலம் (Short term capital gains - STCG). நீண்ட காலம் (Long term capital gains). எடுத்துக்காட்டாக 100 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை இன்று (15 ஜூலை 2004) பங்கு ஒன்று ரூ. 419க்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இன்றிலிருந்து ஒரு வருடத்திற்குள்ளாக இந்தப் பங்குகளை விற்றுவிட்டால் அது குறுகிய கால மூலதன லாபம் ஆகும். ஒரு வருடத்திற்கு மேல் அந்தப் பங்குகளை வைத்திருந்தால் அது நீண்ட கால வகைக்குள் அடங்கும். 100 பங்குகளையும் ரூ. 560க்கு விற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பங்குப் பரிமாற்றத்தில் தரகருக்குக் கொடுத்த கமிஷன் - வாங்கும்போது ரூ. 356.15, விற்கும்போது ரூ. 476. (சாதாரணமாக கமிஷன் 0.85% இருக்கும்). இப்படிப் பார்த்தால் உங்களுக்குக் கிடைத்த மூலதன லாபம் = 100*(560-419)-356.15-476 = ரூ. 13,267.85. இந்த விற்பனை 14 ஜூலை 2005க்குள் நடந்தால், உங்களுக்குக் கிடைத்த லாபத்தை குறுகிய கால மூலதன லாபம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். 15 ஜூலை 2005க்குப் பிறகு நடந்தால் நீண்ட கால மூலதன லாபமாகும்.

இந்த பட்ஜெட் (இன்னமும் ஃபைனான்ஸ் பில் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை....) வருமுன்னால் செக்யூரிடிகள் மீதான குறுகிய கால மூலதன லாபம் மேல் 30% வரி கட்ட வேண்டியிருந்தது. நீண்ட கால மூலதன லாபம் மீது 10% வரி கட்ட வேண்டியிருந்தது. இந்த பட்ஜெட்டுக்குப் பிறகு, நீண்ட கால மூலதன லாபத்திற்கு வரி ஏதும் கிடையாது. குறுகிய கால மூலதன லாபம் மீது வெறும் 10% வரி மட்டும்தான்.

ஆக மேலே சொன்ன பரிவர்த்தனை நீண்டகால மூலதன லாபமாக இருந்திருந்தால் போன வருடம், அதன் மீது வரியாக ரூ. 1,327 கட்ட வேண்டியிருந்திருக்கும். குறுகியகால மூலதன லாபமாக இருந்திருந்தால் அதன்மீது ரூ. 3,980 வரி கட்ட வேண்டியிருந்திருக்கும்.

இந்த பட்ஜெட்டுக்குப் பிறகு, பங்குகளை வாங்கும்போதே டிரான்சாக்ஷன் வரியாக 0.15% கட்ட வேண்டியிருக்கும். அது 0.15%*(100*419) = ரூ. 62.85. விற்கும்போது நீங்கள் எந்த வரியும் கட்டவேண்டியதில்லை. வாங்குபவர் கட்டிக்கொள்வார். நீண்டகால மூலதன லாபமாக இருந்தால் வரி ஏதும் கிடையாது. குறுகிய காலமாகயிருந்தால் மூலதன லாபம் = ரூ. 13,267.85-62.85 = ரூ. 13,205 இல் 10% ஆக ரூ. 1,321 கட்ட வேண்டியிருக்கும். இந்த மூலதன லாப வரியின் மேலாக கல்வி செஸ் வரியும் (2%) உண்டு.

நிச்சயமாக புதிதாகக் கொண்டுவந்துள்ள டிரான்சாக்ஷன் வரி மற்றும் பங்குகள் மீதான் மூலதன லாப வரி இரண்டையும் சேர்த்துப் பார்க்கையில் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு நன்மையாகத்தானே தெரிகிறது. அதன்பின்னர் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? அதனைக் கீழே பார்க்கலாம்.

சரி, நஷ்டமாக இருந்தால்? ரூ. 419க்கு வாங்கிய பங்குகளை ரூ. 400க்கு விற்றால்? அந்த நஷ்டத்தைக் கையோடே வைத்திருந்து, மற்ற பங்குச்சந்தை தொடர்பான மூலதன லாபத்தில், அல்லது பிற மூலதன லாபத்தில் (எ.கா: வீடு, நிலம் வாங்கி விற்றதில் கிடைக்கும் மூலதன லாபத்தில்) இந்த நஷ்டத்தை சரிக்கட்டலாம். அவ்வளவே. இந்த நஷ்டத்தை மாதச் சம்பளத்தில் கழித்துவிட முடியாது.

3. Prevention of dividend and bonus stripping: பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் தன் லாபத்திலிருந்து பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஈவுத்தொகை (dividend) கொடுக்கும். எல்லா நிறுவனங்களும் ஈவுத்தொகை கொடுக்கவேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு வருடமும் இவ்வளவு ஈவுத்தொகை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ஒன்றுகூடி ஒவ்வொரு வருடமும் எவ்வளவு ஈவுத்தொகை கொடுப்பது என்று முடிவு செய்வார்கள். அப்படிக் கொடுக்கும் ஈவுத்தொகையைப் பெறுபவர்கள் அந்த வருமானத்தின் மேல் எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை. ஏனெனில் இப்பொழுதுள்ள சட்டப்படி, அந்த ஈவுத்தொகைக்கான வரியை, அந்த நிறுவனமே வருமான வரியலுவலகத்திற்குக் கட்டிவிட வேண்டும்.

இதைத் தமக்குச் சாதகமாக சிலர் எடுத்துக்கொண்டு செய்வதுதான் dividend stripping என்பது. பங்குச்சந்தையில் பங்குகள் கைமாறிக்கொண்டே இருப்பதால், யாருக்கு ஈவுத்தொகையைத் தருவது என்பதைத் தீர்மானிக்க 'record date' என்றொரு நாளைக் குறிப்பிடுவர். உதாரணமாக, 10 மே 2004 அன்று யார் கைகளில் பங்குகள் இருக்கின்றனவோ, அவர்கள் கையிலிருக்கும் பங்குகளுக்கான ஈவுத்தொகையைத் அவர்களுக்குத் தருவது என்று அந்த நிறுவனம் தீர்மானிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனத்தின் பங்குகள் 1 மே 2004க்கு முதல் நாள் பங்கு ஒன்றுக்கு ரூ. 100 ஆக உள்ளது என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 10 ஈவுத்தொகையாகத் தரப்படும் என்று இயக்குனர்கள் முடிவு செய்து, 2 மே 2004 அன்று அறிவிக்கின்றனர் என்றும் வைத்துக்கொள்வோம். வேறெந்த நிகழ்வும் பாதிக்காத போது, நியாயமாக 2 மே 2004 தொடங்கி, 9 மே 2004 வரை அந்தப் பங்கின் விலை சந்தையில் கிட்டத்தட்ட ரூ. 10 ஏறி, ரூ. 110 ஆகிவிடும் அல்லவா? அதே போல 11 மே 2004 அன்று தொடங்கி வேகமாக பங்கின் விலை மீண்டும் சரிந்து ரூ. 100க்கே சீக்கிரம் திரும்பி விடும். (ஏன் என்று சிந்தியுங்கள்...) இப்பொழுது ஒருவர் 9 மே அன்று 100 பங்குகளை, ரூ. 110க்கு வாங்குகிறார், 13 மே 2004 அன்று ரூ. 100க்கு விற்றுவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்காக இவர் கொடுத்த கமிஷன் (விற்க, வாங்க சேர்த்து) சுமார் ரூ. 178.50 ஆக இருக்கும். அவரது வங்கிகணக்கில் பங்கு ஒன்றுக்கு ரூ. 10 வீதம் ஈவுத்தொகையாக ரூ. 1,000 வந்திருக்கும். குறுகிய கால மூலதன நஷ்டமாக அவர் கணக்கில் ரூ. 1,178.5 சேர்ந்திருக்கும். ஈவுத்தொகைக்கு எந்த வரியும் கிடையாது. தனக்குக் "கிடைத்த" மூலதன நஷ்டத்தை வேறு மூலதன லாபத்தில் கழித்து அதன்மூலம் தன்மீது விதிக்கப்படும் வரியையும் குறைக்கலாம்! அப்படிக் குறைக்கப்பட்ட வரி இவர் பெற்ற நஷ்டத்தில் 30% (குறுகிய கால மூலதன லாப வரி விகிதம் 30% ஆக இருக்கையில்) = ரூ. 0.3*1178.50 = ரூ. 353.55. ஆக இவருக்குக் கிடைக்கும் நிகர லாபமானது: ரூ. - 178.50 + 353.55 = ரூ. 175.05.

இதைத்தான் பலச் செய்து வந்தனர். இதனைத் தடுக்க இயற்றப்பட்ட சட்டத்தில், மேற்படி பங்குகளை (அல்லது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை) குறைந்தது மூன்று மாதங்களுக்குக் கூட வைத்துக் கொள்ளவில்லையென்றால், அதிலிருந்து பெறும் மூலதன நஷ்டத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்று சொல்லியிருந்தனர். இதுவும் பயனளிக்கவில்லையென்ற காரணத்தால் தற்போதைய Finance Billஇல் இந்த வரம்பை மூன்று மாதத்திலிருந்து ஒன்பது மாதங்களாக மாற்றியுள்ளார் சிதம்பரம்.

Bonus stripping என்பதும் இதைப்போல நிறுவனங்கள் கொடுக்கும் ஊக்கப் பங்குகள் பற்றியது. அதைப்பற்றி அதிகம் பேசி உங்களைக் குழப்ப விரும்பவில்லை. (ஆகா, இதையெல்லாம் அழகாக யாராவது தமிழில் புத்தகமாக எழுதக்கூடாதா என்று தோன்றுகிறதா? இன்னமும் இரண்டு மாதங்கள் பொறுத்திருங்கள்....)

===

சரி, இந்த பரிமாற்ற வரி (transaction tax) மீது ஏன் பலர் கோபப்படுகிறார்கள்? இந்த 0.15% சகட்டுமேனி வரி மீது அதிகக் கோபம் கொண்டிருப்பது பங்குச்சந்தையில் ஈடுபட்டிருக்கும் டிரேடர்கள். பங்குச்சந்தையில் 'டெலிவரி' என்றொரு விஷயம் உண்டு. நான் ஒரு பங்கை விற்கிறேன் என்றால் அந்தப் பங்கை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் பங்குச்சந்தை நடத்துனர்களிடத்தில் கொடுத்துவிட வேண்டும். அதற்குத்தான் 'டெலிவரி' என்று பெயர். பங்குச்சந்தையினர் என் பங்கை வாங்கியவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, நான் கொடுத்த பங்கை வாங்கியவர் பெயருக்கு மாற்றிவிட்டு, அதன்பின் பணத்தை என் கைக்குத் தருவார்கள்.

ஆனால் கையில் பங்கே இல்லாமல் அதை விற்க முடியும். ஒரு நாளில் பலமுறை, இல்லாத பங்கை விற்று, அந்தப் பங்கை மீண்டும் வாங்கி, கடைசியாக அந்த நாள் முடியும் போது மொத்தக் கணக்கைச் சரிக்கட்ட வேண்டும். இப்படிச் செய்பவர்களை நாள் வியாபாரிகள் (Day Traders) என்று அழைப்பது வழக்கம். ஒரு நாளினுள்ளேயே பங்கின் விலை மேலும் கீழுமாகப் போய்க்கொண்டிருக்கும் அல்லவா? அந்த மாறுபாடுகளினூடாக லாபம் செய்ய முயற்சிப்பவர்கள்தான் நாள் வியாபாரிகள். ஒரு நிறுவனப் பங்கு ரூ. 213இல் இருக்கும்போது அந்த நாளிலேயே அது ரூ. 200க்குப் போகும் என்று தோன்றினால், அந்தப் பங்குகள் கையில் இல்லாத போதே நாள் வியாபாரி 1000 பங்குகளை ரூ. 213க்கு விற்பார். பின்னர் பங்கு விலை ரூ. 200க்கு வந்துவிட்டால் 1000 பங்குகளை வாங்குவார். இப்படி இல்லாத பங்குகளை விற்று, பின் வாங்கி ரூ. 13,000 (கமிஷன் தொகையைக் கழிக்க வேண்டும்) லாபம் பார்த்திருப்பார். இப்படியே ஒரு நாளைக்குள் பத்து முறை விற்றும், வாங்கியும் கிட்டத்தட்ட மொத்தமாக பல லட்சம் பங்குகளை வாங்கியிருப்பார். ஆனால் அவர் டெலிவரி கொடுக்க வேண்டியது என்று பார்த்தால் மிகக் குறைவாகவே இருக்கும். சிலசமயம் நாள் கடைசியில் ஒரு பங்கைக் கூட அவர் டெலிவரி கொடுக்க வேண்டியிருக்காது. அவர் இதுவரை கட்டி வந்த வரி மொத்தமாக வருடக் கடைசியில் அடைந்த லாபத்தைக் கணக்கிட்டு அதன்மீது சாதாரண 10%-20%-30% வருமான வரி மட்டுமே.

இவர்தான் டிரான்சாக்ஷன் வரியைக் கடுமையாக எதிர்க்கிறார். இவரால் சகட்டுமேனிக்கு 0.15% டிரான்சாக்ஷன் வரியைத் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறார். அதுவும் உண்மையே. டிரான்சாக்ஷன் வரியை எதிர்த்து இந்த நாள் வியாபாரிகள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தனர். தொடர்ந்து நிதியமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து சில மாறுதல்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர். இன்றைய The Financial Express, டிரான்சாக்ஷன் வரி மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும் என்று யூகிக்கிறது. இதன்படி டெலிவரி கொடுக்கும் ஷேர்கள் மீதுதான் 0.15% வரி, ஆர்பிட்ராஜ் வகையிலான பரிமாற்றங்களுக்கு 0.015% வரி, நாள் வியாபாரிகள் செய்யும் பரிமாற்றங்களுக்கு 0.0015% வரியும் விதிக்கப்படலாம் என்கிறது இந்தச் செய்தி. இதுபற்றி அதிகாரப்பூர்வமாக செய்தி வரும்போதுதான் பேச முடியும்.

6 comments:

  1. திரு. பத்ரி அவர்களுக்கு, பங்குச் சந்தை மீதான வரி குறித்து அனைவரும் புரிந்துகொள்ளும் அளவில் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் பங்குச்சந்தை பற்றி ஒரு பதிவு எழுத கூடாது மீனாக்ஸ்-சின் மார்க்கெட்டிங் மாதிரி. நானும் பங்குச் சந்தை பற்றி தமிழில் பல முறை தேடிவிட்டேன். ஒன்று கூட கிடைக்கவில்லை. தயவுசெய்து எழுதுங்களேன். ஏனென்றால் நான் பங்குச்சந்தையில் ஈடுபட விரும்புகிறேன். ஆனால் அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லாவிடில் எனக்கு இது குறித்த விபரங்களை எனது இ-மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும். மிக்க நன்றி.

    ப. மோகன்
    info@almomtathil.com

    ReplyDelete
  2. மோகன்: பங்குச்சந்தை பற்றி தொடர்ந்து எழுதத் தேவையான நேரம் என்னிடம் இல்லை. அதனால் அதற்கென தனியொரு பதிவு ஆரம்பித்து எழுதக்கூடிய நிலையில் இல்லை. உங்களுக்குத் தேவையான சில கேள்விகளை எனக்குத் தனிமடலில் அனுப்புங்கள். எனக்கு நேரம் கிடைக்கும்போது, எனக்குத் தெரிந்த அளவிற்கு, அதற்கான பதிலை எழுதி அனுப்புகிறேன். அதுவே பிறருக்கும் பயனளிக்கும் என்று தெரிந்தால் அதை பதிவிலும் சேர்க்கிறேன்.

    ReplyDelete
  3. //வேறெந்த நிகழ்வும் பாதிக்காத போது, நியாயமாக 2 மே 2004 தொடங்கி, 9 மே 2004 வரை அந்தப் பங்கின் விலை சந்தையில் கிட்டத்தட்ட ரூ. 10 ஏறி, ரூ. 110 ஆகிவிடும் அல்லவா? அதே போல 11 மே 2004 அன்று தொடங்கி வேகமாக பங்கின் விலை மீண்டும் சரிந்து ரூ. 100க்கே சீக்கிரம் திரும்பி விடும். (ஏன் என்று சிந்தியுங்கள்...) //

    பத்ரி : ஏனென்றால், டிவிடெண்ட் அன்றைக்கு யார் பங்குகளை கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான், அன்றைக்கு மட்டும் தான், அதே நேரம் போனஸ், அல்லது ரைட்ஸ் குடுக்கிறார்கள் என்றால், பங்கு விலைகள் ஏறி, போனஸ்/ரைட்ஸ் அமுலுக்கு வரும் வரை நீடித்து, பின் ஒரிஜினல் மார்க்கெட் விலைக்கு வந்துவிடும்.

    ReplyDelete
  4. ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த நேரம் ஆனந்த விகடனில் அவரின் பேட்டி ஒன்று படித்ததாக எனக்கு நினைவு. பட்ஜட் பற்றி ஒரு சொற்பொழிவும் அச்சமயம் ஆற்றிவிட்டு வந்திருந்தார் (எங்கே...?). மிக எளிமையாக இருந்ததாக பாராட்டப்பட்டதாக ஞாபகம் இருக்கிறது. அந்த சொற்பொழிவு ஆனால் கிடைக்கவில்லை எனக்கு.

    ஆனால் இந்த நான்கு பதிவுகளும் மிக நன்று. ஞானசூன்யத்தில் டார்ச்விளக்கேற்றியதற்கு நன்றி.

    ஆகஸ்ட் 15ஆம் தேதி (இரண்டு மாதம்?) விளித்து உங்கள் புத்தகம் ரிசர்வ் செய்யப்படுகிறது.

    க்ருபா

    ReplyDelete
  5. Excellent tutorial. Thanks for demystyfying so many facts on stock transactions. In US, the loss can be deducted from the annual income directly. I burnt my fingers on some Indian IT stocks. I am waiting for the next tax claim to adjust the losses. Atleast I'll reclaim a portion of my losses.

    Thanks
    S.T

    ReplyDelete
  6. (ஆகா, இதையெல்லாம் அழகாக யாராவது தமிழில் புத்தகமாக எழுதக்கூடாதா என்று தோன்றுகிறதா? இன்னமும் இரண்டு மாதங்கள் பொறுத்திருங்கள்....)
    >>
    'கிழக்கு'ச் செவக்கையிலே
    நான் கீரை அறுக்கையிலே
    ... :-)

    ReplyDelete