Thursday, July 01, 2004

கந்துவட்டித் தடைச் சட்டம்

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னால் ஜெயலலிதா அரசு எக்கச்சக்கமாக கந்துவட்டிக்குக் கடன் கொடுக்கும் கூட்டத்தை வழிக்குக் கொண்டுவரும் வரையில் ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியிருந்தார். [Tamil Nadu Prohibition of Charging Exorbitant Interest Ordinance, 2003]. இது பின்னர் சட்டசபையில் சட்டமாக மாற்றப்பட்டது.

அப்பொழுது எல்லோரும் இதை வரவேற்றனர். தெருவெங்கும் 'கந்துவட்டியைத் தடை செய்த புண்ணியவதியே வாழ்க!' என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் எந்த செய்தித்தாளும், இதழும் இதன் விவரங்களைக் குறிப்பிடவில்லை. அவ்வளவு முட்டாள்தனமாக இயற்றப்பட்டுள்ளது இந்த சட்டம் என்று இப்பொழுதுதான் புரிகிறது.

இன்றைய தி பிசினஸ் லைன் செய்தியில் சென்னை உயர்நீதி மன்றம் மேற்படி சட்டத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. இந்த சட்டம் என்ன சொல்கிறது? இந்தச் சட்டத்தின் படி யாரும் 9% ஆண்டு வட்டிக்கு மேல் கடனுக்கான வட்டியை வசூலிக்கக் கூடாதாம்!

கந்துவட்டிக் காரர்கள் ஆண்டிற்கு 60% இலிருந்து 120% வரை கூட வட்டி வாங்கி வந்தனர். [இன்றும் சட்டத்திற்குப் புறம்பாக அதையே செய்து வருகின்றனர்.] இதை அஞ்சு வட்டி, பத்து வட்டி என்று கூறுவது வழக்கம். அஞ்சு வட்டி என்றால் மாதத்திற்கு 1 ரூபாய்க்கு ஐந்து பைசா வட்டி என்ற விகிதத்தில் வசூலிப்பது. ஒருவர் ரூ. 1,000 ஐ, அஞ்சு வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ. 50ஐ வட்டியாகக் கட்ட வேண்டும். ஒரு வருடக் கடைசியில் அவர் கட்டிய வட்டி மட்டுமே ரூ. 600 இருக்கும். முதல் அப்படியே மொத்தமாக இருக்கும். பத்து வட்டியென்றால் கேட்கவே வேண்டாம். மாத வட்டி மட்டுமே ரூ. 100. வருடக் கடைசியில் மொத்தமாக ரூ. 1,200 ஐ வட்டியாக மட்டுமே கட்டியிருப்பார். அஞ்சுக்கும், பத்துக்கும் இடையில் எந்த விகிதம் வேண்டுமானாலும் மாத வட்டியாக இருக்கும்.

இதைத்தான் அரசு தடுத்து நிறுத்துகிறேன் பேர்வழியென்று ஆண்டு வட்டி விகிதம் 9க்கு மேல் போகக்கூடாதென்று சட்டமன்றத்தில் இயற்றியுள்ளது. இது ஏன் முட்டாள்தனம்?

இன்று தேசிய வங்கிகளே வீட்டுக் கடனுக்கு (7% இலிருந்து) 8.5% வரை வட்டி வசூலிக்கின்றன. வாகனக் கடனாக 12-13% வரை. பெர்சனல் கடன் வட்டி விகிதம் 13-24% வரை. சிடிபேங்க் போன்ற தனியார் வங்கிகள் 24% (2 பைசா வட்டி) வரை வசூல் செய்யும்போது மற்ற எல்லோரும் 9% க்கு மேல் வட்டி வாங்கக் கூடாது என்று தமிழக அரசு எப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வர முடியும்? கிரெடிட் கார்டுகளுக்கு தனியார் வங்கிகள் கிட்டத்தட்ட 30% வரை கூட வட்டி வசூலிக்கின்றன. மேலும் Tamil Nadu Pawn Brokers Act, 1943 படி நகையின் மீது கடன் வாங்குவதற்கு 16% வரை வட்டி வசூல் செய்யலாம் என்று ஒரு சட்டம் இருக்கிறதாம். (நடைமுறையில் இதற்கும் மேலே வட்டி வசூலிக்கப்படுகிறது.) ஆக செக்யூரிட்டிக்காக ஒரு தங்க நகையை வைத்து வாங்கும் கடனே 16% வரை போகலாம் என்றிருக்கையில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கொடுக்கும் கடனுக்கு ஏன் 9% மட்டும்தான் என்று தமிழக அரசு தடை போடலாம்?

60%, 120% என்றெல்லாம் கடன் வாங்குவது அநியாயம் என்று நாம் அனைவரும் ஒத்துக்கொள்வோம். ஆனால் அதற்கு மறுகோடியாக 9%க்கு மேல் வட்டி வாங்கக்கூடாது என்ற தமிழக அரசின் சட்டமும் முட்டாள்தனமானதே! EPF ஏ 12% வட்டி தரவேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் கேட்கின்றனர்!

இந்த மாதிரியான சட்டங்களை வரைகையில் தமிழக அரசு அதிகாரிகள் சிறிது சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

1 comment:

  1. க்ரெடிர் கார்ட் நிறுவனங்கள் வாங்கும் 36% விட அதிகமாகத்தான் இதற்கு உச்சம் நிர்ணயைத்திருக்கவேண்டும். ஒன்று, நாட்டு நிலவரம் தெரியாத ஆளும்வர்க்கம்(அரசு அதிகாரிகள்), அல்லது வேண்டுமென்றே, ஓட்டையுடன் (யாருக்கோ பயன்படட்டும் என்று) பின்னப்பட்ட சட்டம். இரண்டில் ஒன்று காரணம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete