எனக்கும் ஐஐடிக்களின் வெளியீடுகள் பற்றி வருத்தம்தான் உள்ளது. ஆனால் நான் வெங்கட் அளவிற்குப் போய் ஐஐடிக்கள் முழுத்தோல்விகள் என்று சொல்ல மாட்டேன்.
நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் இவையே:
1. ஐஐடிக்கள் தொடக்கத்தில் என்ன குறிக்கோள்களுடன் உருவாக்கப்பட்டன? அந்த குறிக்கோள்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன?
2. 1950களில் தீர்மானிக்கப்பட்ட குறிக்கோள்கள் என்னவாக இருந்தாலும், இன்றைய நிலையில் என்ன குறிக்கோள்கள் இருக்க வேண்டும், அந்தக் குறிக்கோள்களுக்கு எத்தனை அருகில் ஐஐடிக்கள் உள்ளன? உலகத் தரத்தில் உள்ள பிற பொறியியல் உயர் கல்வி நிலையங்களோடு, ஐஐடிக்களை ஒப்பிடும்போது நமக்குக் கிடைக்கும் தோற்றம் என்ன?
3. ஐஐடிக்கள் இப்பொழுது இருக்கும் இடத்திலிருந்து உன்னதக் குறிக்கோள்களை அடைய முடியுமா? எப்படி அடைவது?
இத்துடன்
4. ஐஐடி இளங்கலை நுழைவுத் தேர்வுமுறை சரியானதா? மாற்ற வேண்டுமா?
5. ஐஐடி முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளில் என்ன குறைகள்?
என்னும் கேள்விகளையும் இணைத்துப் பார்க்கலாம்.
முதலில் ஐஐடிக்கள் என்ன குறிக்கோள்களுடன் துவங்கப்பட்டன என்று பார்ப்போம். நளினி ரஞ்சன் சர்கார் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மார்ச் 1946இல் "The Development of Higher Technical Institutions in India" என்றதொரு இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கையென்று ஒன்று சமர்ப்பிக்கப்படவேயில்லை. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது இதுவே:
(அ) குறைந்தபட்சமாக, நான்கு பொறியியல் உயர் கல்விநிலையங்களாவது இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் கட்டப்படவேண்டும். இவற்றில் கிடைக்கும் கல்வி மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மான்செஸ்டர் போன்ற இடங்களில் கிடைக்கும் இளங்கலைப் பட்டங்களுக்கு ஈடாக இருக்க வேண்டும்.இதையொட்டியே கரக்பூர், மும்பை, சென்னை, தில்லி ஆகிய இடங்களில் ஐஐடிக்கள் நிறுவப்பட்டன. பின்னர் கவுஹாத்தியில் புதிதாக ஒன்று கட்டப்பட்டது; ரூர்கியில் ஏற்கனவே இருந்த ஒரு பொறியியல் கல்லூரி ஐஐடியாக மாற்றப்பட்டது.
(ஆ) இந்த நிலையங்கள் இளங்கலை மாணவர்களை உருவாக்குவதில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுதல், ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்குதல், பொறியியல் படிப்புகளை சொல்லிக்கொடுக்கத் தேவையான ஆசிரியர்களை உருவாக்குதல் ஆகிய பணிகளிலும் ஈடுபட வேண்டும்.
குறிக்கோள் (அ) வை கவனித்தால், உலகில் இருக்கும் எந்த கல்லூரியின் இளங்கலைப் பொறியியல் படிப்புக்கும் ஐஐடிக்களின் இளங்கலைப் படிப்பு சிறிதும் குறைந்ததல்ல. ஐஐடியில் கிடைக்கும் அளவிற்கு இளங்கலைப் படிப்பின் தரம் வேறெங்கும் கிடையாது என்று என்னால் உறுதியாகவே சொல்ல முடியும். இந்தியா விடுதலையான காலக்கட்டத்தில், உள்கட்டுமானப் பணிகளுக்காக திறமை வாய்ந்த பொறியியலாளர்கள் தேவைப்பட்டனர். இந்தியாவின் எந்தவொரு பொறியியல் சார்ந்த பொதுத்துறை நிறுவனத்தை எடுத்துப் பார்த்தாலும் அதனைக் கட்டியதில் பெரும்பான்மைப் பங்கு ஐஐடி மாணவர்களுடையதுதான் என்பது புலனாகும். எல்
& டி, டெல்கோ, டிஸ்கோ, பி.எச்.இ.எல், என்.டி.பி.சி தொடங்கி பல்வேறு மின்னுற்பத்தி நிறுவனங்கள், வி.எஸ்.என்.எல், பி.எஸ்.என்.எல் முதல் இன்றைய பார்தி, ரிலையன்ஸ் என்று மெக்கானிகல், எலெக்டிரிகல், எலெக்டிரானிக்ஸ், கெமிகல், கணினித்துறை எஞ்சினியர்களில் தலைமைப் பங்கு ஐஐடியினர்தான். பிற பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருந்தாலும், ஐஐடியில் படித்தவர்களே தலைமை தாங்கினர், தாங்குகின்றனர். டிசிஎஸ், இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற ஐடி துறையிலும் முக்கியமான தலைமைப் பதவிகளில் மற்ற அனைவரையும் விட கணிசமான அளவில் இருப்பது ஐஐடியில் படித்தவர்களே. ஐஐடியில் படித்தபின், ஐஐஎம்களில் பயின்றவர்கள்தான் இந்தியாவின் மார்கெடிங், சேல்ஸ் துறைகளிலும் கோலோச்சுகின்றனர். இங்கு பிரபலங்களைப் பெயர்களாகத் தேடவேண்டாம். ஹிந்துஸ்தான் லீவர், பெப்ஸி முதல் எந்த FMCGக்களை எடுத்தாலும், மெக்கின்ஸி முதல் எந்த கன்சல்டிங் நிறுவனத்தை எடுத்தாலும் அங்கு ஐஐடி+ஐஐஎம் ஆசாமிகள் எவ்வளவு என்பதைப் பார்த்தாலே போதும்.
ஐஐடியில் படித்து வந்தவர்கள் எத்தனை பேர் தலைவர்களாக, தொழில்முனைவோராக வந்துள்ளனர் என்ற கேள்வியைக் கவனித்தால் அது குறைவுதான். விரும்பிய அளவுக்கு இல்லை. இதற்கான பழியை ஐஐடிக்கள் மீது மட்டுமே போடமுடியுமா? நாட்டின் நிலை கடந்த பத்து வருடங்கள் முன்னால் வரை தொழில் முனைவோருக்குச் சாதகமாக இருந்ததே இல்லை. இன்னும் ஐந்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் ஐஐடி பல தொழில்முனைவோரையும் உருவாக்கும் என்பது என் கருத்து. முகேஷ் அம்பானி ஐஐடியில் படித்தாரா என்றெல்லாம் வெங்கட் கேள்வி கேட்பது நியாயமேயில்லை. முகேஷ் அம்பானி திருபாய் அம்பானியின் மகனாகப் பிறந்தார். அது ஒன்றே போதும் அவருக்குத் தகுதியாக. உச்சாணிக் கொம்பில் இருப்போரின் பெயர்களை வெளியில் எடுத்து வைத்து ஐஐடிக்கள் உசத்தி, மட்டம் என்றெல்லாம் பேச முடியாது. உண்மையான உழைப்பு பெயர் தெரியாத பலரிடமிருந்துதான் வருகிறது. (என்னைப் போல:-)
ஆனால் ஐஐடி ஆராய்ச்சித்துறையில் மிகவும் சறுக்கியுள்ளது. இதற்கும் ஐஐடி என்னும் அமைப்பின் மீது முழுப் பழியையும் போடமுடியாது. பொறியியல் இளங்கலை படித்த மாணவர்கள் பலரும் அறுபதுகளில் தொடங்கி இன்றுவரை சாரிசாரியாக அமெரிக்கா செல்லத் தொடங்கினர். வேறெந்தப் பொறியியல் கல்லூரிகளிலும் இது 1995 வரை நடந்தது கிடையாது. மற்ற கல்லூரிகளில் படித்த மாணவர்கள் பெரும்பாலும் முதுகலை (M.E, M.Tech) படித்தவுடன்தான் முனைவர் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா சென்றனர். ஆனால் ஐஐடி மாணவர்கள் அனைவரும் B.Tech முடித்தவுடனே நேரடியாக அமெரிக்கா சென்றனர். [இப்பொழுது பல இந்தியப் பொறியியல் கல்லூரிகளிலிருந்தும் மேற்படிப்புக்கென அமெரிக்கா செல்லும் மாணவர் தொகை அதிகரித்துள்ளது.]
இப்படி அமெரிக்கா சென்ற மாணவர்கள் அனைவருமே, சராசரியாகப் பார்க்கையில், தரம் வாய்ந்த முனைவர் ஆராய்ச்சியையே செய்துள்ளனர். அவர்கள் சென்ற அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் அதற்கான வசதிகளைச் செய்து கொடுத்தன. அதுபோன்ற வசதிகள் இந்தியாவில் இல்லை. மேலும் அமெரிக்க டாலர்கள், அமெரிக்காவின் வசதி கொடுத்த போதை, ஸ்டேடஸ் உயர்வு என்று பல காரணங்களுக்காக இந்தியாவை விட்டு வெளியேறுவதை மட்டுமே ஐஐடி மாணவர்கள் விரும்பினர். இதைத்தொடர்ந்துதான் brain drain மிக விரிவாக அலசப்பட்டது.
இதன் விளைவாக குறிக்கோள் (ஆ) வெகுவாகப் பலனிழந்து போனது. தரமான பொறியியல் ஆசிரியர்கள் இந்தியாவிற்கென உருவாகவில்லை. அவர்கள் இந்தியாவிலிருந்து பெயர்ந்து அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயின்று பெர்க்லி, எம்.ஐ.டி, கால்டெக்கில் அந்த ஊர் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்ததோடு மட்டுமல்லாமல், ஆராய்ச்சிகளையும் அங்கேயே செய்தனர். இந்தியாவில் தரமான ஆராய்ச்சி செய்யமுடியாது என்று வேறு சொல்ல ஆரம்பித்தனர். (அதில் ஓரளுவுக்கு உண்மையும் இருந்தது.) இந்தியாவில் வந்து போராடக்கூடிய மனப்பான்மை அவர்களிடம் இல்லாதிருந்தது. போராடக்கூடிய ஒரு மனப்பான்மையை அவர்களுக்குப் பயிற்றுவிக்க ஐஐடிக்கள் முயலவில்லை.
ஐஐடிக்கள் வெறும் எஞ்சினியர்களை மட்டுமே உருவாக்கியதால் இந்த எஞ்சினியர்களால், அமெரிக்காவின் கண்ணாடிக் கூரையைப் பிய்க்க முடியவில்லை. மேலே செல்லத் தேவையாக இருந்தது மேலாண்மைத் திறன். அது ஐஐடியில் படித்து, பின் அமெரிக்காவிலும் மேற்படிப்பு படித்த எஞ்சினியர்களிடத்தில் இல்லை. ஆனால் இண்டெல், நாசா என்று எங்கும் நீக்கமற நிறைந்து முக்கியமான பங்களிப்பை ஐஐடி மாணவர்கள் வழங்கினர். இணையம் தொடர்பான முயற்சிகளில் அமெரிக்க வென்சர் கேபிடல் பாய ஆரம்பித்ததும்தான் சில ஐஐடியினர் மேலே ஏறத் தொடங்கினர். அதனால் வெளியே தெரிந்த பெயர்கள் அத்தனையுமே கணினிசார் துறையிலிருந்துதான். இன்றுகூட மெக்கானிகல், கெமிகல் போன்ற துறைகளில் அமெரிக்காவில் உள்ள ஐஐடியினர் வெகுவாக ஒன்றும் சாதிக்கவில்லை.
ஆனால் நேரு, சர்கார் இருவரின் தொடக்ககாலக் குறிக்கோள்களின் ஆதாரமான உலகத்தரம் வாய்ந்த இளங்கலை எஞ்சினியர்களை - தொழிற்சாலையில் வேலை செய்யும் எஞ்சினியர்களை - ஐஐடிக்கள் உற்பத்தி செய்கின்றன என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. 1970-2000த்தில் இப்படி உற்பத்தி செய்யப்பட்ட பெரும்பான்மை எஞ்சினியர்கள் இந்தியாவில் வேலை செய்யாது அமெரிக்கா போனது வருந்தத்தக்கது. இதனால் பயனை அதிக அளவில் பெற்றது அமெரிக்கா. (இந்தியாவிற்குக் கிடைத்தது அன்னியச் செலாவணி மட்டுமே).
இப்பொழுது நாம் கேட்க வேண்டிய கேள்வி வேறு. ஐஐடி வரும் மாணவர்களின் விருப்பம், வெறும் இளங்கலைப் படிப்பு மட்டும் படித்து, தொழிற்சாலையில் வேலை செய்வதல்ல. இதனை நேருவுக்குப்பின் வந்த பிரதமர்களோ, மனிதவளத்துறை அமைச்சர்களோ புரிந்து கொள்ளவில்லை. இந்த மாணவர்களை அமெரிக்காவிற்கு ஈர்ப்பது என்ன என்பதைக் கண்டறிந்து அந்தப் பின்னணியை ஐஐடிக்களில் உருவாக்க யாரும் முயலவில்லை. இறுகிப் போன இந்திய பீரோக்ரேசி ஐஐடியிலும் கோலோச்சியது. [ஐஐடியில் படித்தபோது ஒருமுறை ரூ. 500 பரிசு எனக்குக் கிடைத்தது. நான் விரும்பிய புத்தகங்களை என் காசில் வாங்கி, ரசீதைக் கொடுத்து என் பரிசுப் பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக நான் பட்ட பாட்டைப் பற்றி தனியாக ஒரு பதிவில் எழுத வேண்டும். அந்தப் பரிசு என் எதிரிக்குக் கிடைத்திருக்கக் கூடாதா என்று என்னை ஏங்க வைத்து விட்டனர் ஐஐடி மெட்ராஸ் அலுவலர்கள்!]
இன்றைய தேதியில் ஐஐடிக்களின் பெருங்குறைகளாக நான் கீழ்க்கண்டவற்றைப் பார்க்கிறேன்.
1. ஆசிரியர்கள் தரம் வெகுவாக உயரவேண்டும். எம்.ஐ.டி போல இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பு நல்லதுதான். ஆனால் எம்.ஐ.டி போல முயன்று மிக அதிகத் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உள்ளே கொண்டுவர ஆவன செய்யவேண்டும். அதற்காகத் தேவையான அதிக நிதியை அரசுதான் வழங்க வேண்டும். மற்ற நாடுகளின் தலைசிறந்த ஆசிரியர்களை எப்படியாவது ஐஐடிக்களுக்குக் (சப்பாட்டிகல் செய்யக்)கொண்டுவந்து ஓரிரு வருடங்களாவது இங்கு வேலை செய்ய வைக்க வேண்டும்.
2. பிற இந்தியக் கல்லூரிகளை விட ஐஐடிக்களில் பீரோக்ரேசி குறைவுதான் என்றாலும், இன்னமும் குறைக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான அத்தனை அதிகாரங்களும் ஐஐடிக்களின் இயக்குனர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
3. தரம் வாய்ந்த இளங்கலை மாணவர்கள் அமெரிக்கா போய் மேற்படிப்பு செய்ய விரும்புவதன் காரணம் அப்படிச் செல்பவர்களால் அங்கேயே ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட முடியும் என்பதே. இது போன்றதொரு எண்ணத்தை மாற்றுவது கடினம். அமெரிக்காவில் கும்பகோணத்தில் நடப்பது போல குழந்தைகள் கருகிச் சாவதில்லை. சைதாப்பேட்டையில் கடிக்கும் கொசுக்களைப் போல அங்கில்லை. சென்னை தண்ணீர்ப் பஞ்சத்தில் நாங்கள் திண்டாடுவது போல அமெரிக்காவில் யாரும் வாடுவதில்லை.
ஆனால் தரமான ஆசிரியர்களால் இளங்கலை படிக்கும் மாணவர்களிடம் நேரடியாக இதைப்பற்றிப் பேச முடியும். மாணவர்களின் மனதை ஓரளுவுக்காவது மாற்ற முடியும். தேசப்பற்றை அதிரடியாக நுழைத்தே ஆக வேண்டும். எப்படி இந்தியாவின் பிரச்சனைகளைத் தீர்ப்பது மிகச்சிறந்த கடமை என்பதையும், அப்படிச்செய்யும்போதே ஒவ்வொரு துறையிலும் மிக உயர்ந்த ஆராய்ச்சிகளைச் செய்யமுடியும் என்பதையும் ஆசிரியர்களால்தான் எடுத்துக் காட்ட முடியும்.
வெங்கட் சொன்ன குறைகள் அத்தனையும் கிட்டத்தட்ட இந்த விதத்தில்தான். ஐஐடி, மாணவர்களின் மூளையை மழுங்கடிக்கிறது என்ற அவர் கருத்தை நான் சிறிதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐஐடியில் படித்து பின் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படித்து வாழ்க்கையில் வெற்றியடந்தவர்களை ஐஐடிக்களின் வெற்றிகளாகக் காட்டுவது "அழுகுணி ஆட்டம்" என்னும் அவரது கருத்தையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐஐடிக்களுக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கும் சமபங்கு உள்ளது இந்த வெற்றியில்.
என்னை நான் ஒரு ஐஐடி மெட்ராஸ் (50%), கார்னல் பல்கலைக்கழகம் (50%) உற்பத்தி என்றுதான் கருதுவேன்.
ஐஐடியின் அறிவியல் துறைகளின் தரம் ஐஐஎஸ்ஸி, டிஐஎ·ப்ஆர் தரத்தில் இல்லை என்பது உண்மையே. இங்கும் நாம் முதுகலை, ஆராய்ச்சித் துறைகள் பற்றி மட்டுமே பேசுகிறோம். ஐஐடிக்களில் ஆராய்ச்சித் தரம் பொதுவாகவே குறைவு என்பதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்.
[ஐஐடி இளங்கலைப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு பற்றி தனியாக எழுத வேண்டும்.]
முன்னர் இருந்த மான்யம் இப்பொழுது வெகுவாகக் குறைந்து விட்டது. நான் படித்தபொழுது கல்விக்கான வருடக் கட்டணம் ரூ. 200, ஹாஸ்டல் தங்கும் செலவு வருடத்திற்கு ரூ. 100. இப்பொழுது பலமடங்கு ஏறி கல்விக்கட்டணம் ரூ. 30,000, ஹாஸ்டல் கட்டணம் வருடத்திற்கு ரூ. 8,200. இதைத்தவிர சில இதர செலவுகள்.
ReplyDeleteஇதுவே சலுகைக்கட்டணம்தான், ஆனால் அண்ணா பல்கலைக்கழகக் கட்டணமும், ஐஐடி கட்டணமும் வெகு அருகில். தனியார் பொறியியல் கல்லூரிகள் வருடத்திற்கு ரூ. 35,000 தான் வசூலிக்க முடியும். ஆனால் ஐஐடியில் வசதிகள் அதிகம் என்பதால், வருடக் கட்டணத்தை ரூ. 50,000 ஆக்கலாம்.
கட்டாயமாக இந்தியாவில் ஐந்து வருடம் இருக்க வேண்டும் என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. இங்கு அவர்களாகவே வந்து இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமையை மாற்றலாம் என நினைக்கிறேன்.
பத்ரி!
ReplyDeleteஇப்பொழுது இந்தத் தலைப்பிற்குள் நான் நுழையவில்லை.
சில சொல்லாட்சிகளை மட்டும் பொருத்தமாய்க் கையாளுதற்கு இங்கு சொல்லுகிறேன்.
இள நிலை = Bachelor (level)
முது நிலை = Masters' (level)
இள நிலைக் கல்வி = Bachelor Education
முது நிலைக் கல்வி = Masters' Education
இள நிலைப் பட்டம் = Bachelor degree
முது நிலைப் பட்டம் = Masters' degree
இளங் கலை = Bachelor of Arts
முது கலை = Master of Arts
இளம் அறிவியல் = Bachelor of Science
முது அறிவியல் = Master of Science
இளம் பொறியியல் = Bachelor of Engineering
முது பொறியியல் = Master of Engineering
இளம் நுட்பியல் = Bachelor of Technology
முது நுட்பியல் = Master of Technology
நுட்பம் = technique
நுட்பியல் = technology
நுட்பாளர் = technician
நுட்பியலாளர் = technologist
அன்புடன்,
இராம.கி.
நான் வெங்கட் :)
ReplyDeleteபத்ரி, உங்களுடைய இந்த வலைக்குறிப்பைப் படித்தபிறகு நீங்களும் நானும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைத்தான் சொல்கிறோம் என்று தோன்றுகிறது. நமக்குள்ளே இருப்பதவை துல்லியமான விபரங்களைப்பற்றிய மாறுபாடுகள்தான். நான் எடுத்துக்கொண்ட மொழி கடுமையானது, நீங்கள் அதையே மென்மையான வார்த்தைகளில் சொல்ல முயற்சிக்கிறீர்கள். நீங்கள் சொல்லிய ஆசிரியர் தரம், போதுமான அதிகாரங்கள் இவற்றைப் பற்றி நான் வரும்நாட்களில் விரிவாக எழுத உத்தேசம்.
{பத்ரி}
வெங்கட் சொன்ன குறைகள் அத்தனையும் கிட்டத்தட்ட இந்த விதத்தில்தான். ஐஐடி, மாணவர்களின் மூளையை மழுங்கடிக்கிறது என்ற அவர் கருத்தை நான் சிறிதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐஐடியில் படித்து பின் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படித்து வாழ்க்கையில் வெற்றியடந்தவர்களை ஐஐடிக்களின் வெற்றிகளாகக் காட்டுவது "அழுகுணி ஆட்டம்" என்னும் அவரது கருத்தையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐஐடிக்களுக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கும் சமபங்கு உள்ளது இந்த வெற்றியில்.
{\பத்ரி}
அந்தக் கடுமையான வார்த்தையை நான் சொல்வதற்கு முன்பு நன்றாகச் சிந்தித்துவிட்டுதான் சொன்னேன்.
1. வெற்றிபெற்ற ஐஐடிக்காரர்களில் ஐஐடியும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் சமபங்கு என்றால், அமெரிக்கா போகாத ஐஐடியாளர்களின் வெற்றி கிட்டத்தட்ட அமெரிக்கா போனவர்களுக்குச் சமமாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு வினோத் கோஸ்லாக்களுக்கும் ஒரு உலகத்தர உள்ளூர் தொழில்முனைவோர் (வெளிநாடே போகாத) என்று இருக்க வேண்டும். இது இல்லை.
2. வெற்றிக்கு அமெரிக்கச் சூழல் (கல்வியை விடுத்து) வழிதருகிறது, அமெரிக்காவில் வெற்றிபெறுதல் எளிது என்று சொன்னால் அதைப் பாதியாகக் குறைத்துக்கொண்டு இரண்டு வினோத் கோஸ்லாக்களுக்கு ஒருவர் அமெரிக்கா போகாத ஐஐடி வெற்றியாளர் என்றாவது வரவேண்டும். அந்த வீதமும் இல்லை.
3. இல்லை, அமெரிக்க வெற்றி சாத்தியக்கூறுகள் இன்னும் அபரிமிதம் என்றால் ஐஐடிகள் இந்தியச் சூழலுக்கு ஏற்றபடி போராடி வெற்றிபெறத் தக்க மாணவர்களை உருவாக்குவதில் தோல்வியடைகிற்தன என்று கொள்ளவேண்டும். (நாஸாவும், மைக்ரோஸாப்டும்தான் இலக்கு என்றால் இந்தியக் கல்விப்பணத்தில் 12% ஐஐடிக்களுக்கு விரயம்தானே).
4. அமெரிக்கா போய் வெற்றி பெற்ற ஐஐடியல்லாத இந்தியர்களும் கணிசம். அளந்து பார்த்தால் அமெரிக்காவில் நன்றாக இருக்கும் ஐஐடி:ஐஐடி அல்லாதோர் வீதம் கணிசமாக ஐஐடிக்காரர்களுக்கு எதிராக இருக்கும். அவர்களின் வெற்றியையும் உள்ளூர் பல்கலைக்கழகம் 50% - அமெரிக்க மேற்படிப்பு 50% என்று அளவிடமுடியும். ஆதாரக் கல்வி வாய்ப்புகள் சமமில்லாத நிலையிலும் அமெரிக்கா சென்ற ஐஐடி அல்லதாவர்கள் நன்றாகவே வெற்றியடைகிறார்கள். அந்த நிலையில் ஏற்கனவே பொறுக்கியெடுத்த புத்திசாலிகளின் வெற்றிவீதம் திருப்திகரமாக இல்லாமல் இருப்பதைத்தான் "மழுங்கடித்தல்" என்று சொல்கிறேன்.
எனக்கு ஐஐடிக்கள் மீது எந்தவிதமான விருப்பு வெறுப்பும் இல்லை என்பதால் நான் அந்த வார்த்தைகளை எழுதத் தயங்கவில்லை. ஐஐடிக்களூக்கு பிராண்ட் இமேஜ் கிடைத்திருக்கிறது. இதற்கு அவர்கள் மீது இந்தியா போட்ட அபரிமிதமான மூலதனம் உதவியிருக்கிறது. ஆனால் மூலதனத்திற்கேற்ற ஆதாயம் கிட்டவில்லை.
முதலில் இந்தத் (அமெரிக்க ஏற்றுமதி) தொழிலை வைத்தே ஐஐடியை எடைபோட வேண்டியிருப்பதே அபத்தமாக இல்லை?
see my most recent rejoinder to venkat at
ReplyDeletehttp://ravisrinivasblog.rediffblogs.com/