Sunday, February 29, 2004

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3

காப்பி முடிந்து, வந்திருந்த சென்னைப் பெரிய மனிதர்கள் ஒருவரோடொருவர் அளவளாவி முடிந்ததும், கேள்வி, பதில்கள் ஆரம்பித்தன. சுத்தமான ஆங்கிலத்தில் (அவ்வப்போது தமிழ்ச் சொற்களைத் தூவி) கேள்விகள் கேட்கப்பட்டன, அப்படியே பதில்களும் வழங்கப்பட்டன. (ஒருசிலர் அபத்தமான ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்டனர், அபத்தமாக இருந்தாலும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதே பெருமை என்று நினைத்தனர் போலும்.) முதலில் கேள்விகள் கேட்ட சிலர் இரண்டு நிமிடங்கள் மகாதேவனின் பேச்சைப் புகழ்ந்து கடைசியில் சப்பென்ற கேள்விகளாய்க் கேட்டனர்.

கீழே ஒருசில கேள்விகளையும், பதில்களையும் தொகுத்துள்ளேன்.

1. தமிழ் எண்களுக்கான வரிவடிவம் எப்பொழுது தோன்றியது?

எழுத்துகளுக்கான வரிவடிவம் தோன்றியபோதே எண்களுக்கான வரிவடிவமும் தோன்றியிருக்க வேண்டும். அரிக்கமேடு கல்வெட்டுகளில் எண்களும் காணப்படுகின்றன.

2. இரண்டு 'ர'/'ற' ஏன்?

தொடக்கத்தில் 'ற'வுக்கு 'ர' சத்தம் கிடையாது. [நான் சொல்வது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். -பத்ரி], யாழ்ப்பாணத்தில் உச்சரிப்பதுபோல் 'ட்ர' (?) என்றுதான் இருந்தது, பின்னர் அழுத்தமான 'ர' ஆனது.

3. ஆயிரம் வருடங்களாக அப்படியே இருக்கிறதே தமிழ் [குறளைச் சுட்டிக்காட்டினார் கேள்வி கேட்டவர்: "சொல்லுதல் யார்க்கும் எளிதாம், அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்"], இது தமிழின் தேக்கத்தைக் குறிக்கிறதா (static), இல்லை, தமிழின் தாங்கும் சக்தியைக் (resistance power) குறிக்கிறதா?

இரண்டுக்குமிடையில் உள்ளது. ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியும் தமிழால் பிறமொழியின் தாக்கத்தைத் தடுக்க முடிகிறது, தூய்மையை நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது, சக்தியுடன் இருக்க முடிகிறது. அதன் சமகாலத்திய மொழிகளான வேதிக் சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம் ஆகியவை இன்று அழிந்துவிட்டாலும் தமிழால் இன்னமும் தாக்குப் பிடிக்க முடிகிறது. அதே சமயம் தமிழானது பிறமொழிச் சொற்களை ஒரேயடியாக விலக்கக் கூடாது. கணினித் துறைகளில் (தகவல் தொடர்புத் துறையில்) பல்லாயிரக்கணக்கான சொற்கள் புதிதாக ஆங்கிலத்தில் உருவாக்கப்படுகின்றன, அவற்றை தமிழில் கண்டுபிடித்தல் கடினமாக இருக்கலாம். இந்நிலையில் தமிழ், ஆங்கிலச் சொற்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பழங்காலத்திலும் பல பிராக்ரிதச் சொற்கள் தமிழால் கடன்வாங்கிய சொற்கள் என்று தெரியாத வண்ணம் அழகாக உள்வாங்கப்பட்டிருக்கிறது.

[அவர் ஆங்கிலத்தின் சொன்னதை, கருத்து மாறாமல் தமிழாக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.]

4. ரொமீலா தாப்பர் 'சிந்து சமவெளி நாகரிக' வரிவடிவம்/மொழி திராவிட வரிவடிவம்/மொழி அல்ல என்று எழுதியிருக்கிறாரே, அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிந்து சமவெளி நாகரிக வரிவடிவம் இன்னமும் வகையறுக்கப்படவில்லை (decipher). சிந்து வரிவடிவம் படவடிவம் (pictograph). தமிழ் வரிவடிவம் நேர்க்கோட்டு வடிவம் (linear).

5. இப்பொழுதுள்ள தமிழ் வரிவடிவம் பரமேஸ்வரன் என்ற பல்லவ அரசனால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். நீங்கள் வேறு யாரோலோ என்று சொன்னீர்களே?

இப்பொழுதுள்ள தமிழ் வரிவடிவம் மகேந்திரப் பல்லவனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள ஒரு கல்வெட்டில் 'சித்திரகாரப் புலி' என்ற சொற்றொடர் அப்படியே இன்றைய எழுத்துக்கு அருகில் காணப்படுகிறது.

6. தொல்காப்பியம் எந்த வரிவடிவில் முதலில் எழுதப்பட்டது? (இதுதான் கேள்வி, ஆனால் மகாதேவன் ஒருவேளை கேள்வியைச் சரியாகக் கேட்கவில்லையோ என்னவோ, கீழ்க்கண்ட பதிலைத் தந்தார்.)

பனையோலையில் சேமிக்கப்பட்ட எந்த எழுத்துமே முன்னூறு/நானூறு ஆண்டுகளுக்கு மேல் பாதுகாத்து வைக்க முடியாதவை. கொல்கத்தா அருங்காட்சியகம் ஒன்றில் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஓலைச்சுவடு தொல்காப்பியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

7. உ.வே.சாமிநாதைய்யர் படித்த ஓலைகள் எந்த வரிவடிவத்தில் இருந்தன?

சாமிநாதைய்யர் படித்தவை 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்லது அதற்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த ஓலைகள். அதற்கு முந்தையதாக் இருந்திருக்க முடியாது. சாமிநாதைய்யரைப் பற்றிச் சொல்கையில் யாரோ ஒரு வெளிநாட்டவர் சொன்ன மேற்கோளைச் சுட்டினார்: "சாமிநாதைய்யர் தமிழுக்குச் செய்த தொண்டை இந்த உலகத்தில், எந்த மொழிக்கும், வேறு யாரும், எந்தக் காலத்திலும் செய்ததில்லை." [அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது.]

8. தமிழில் வரிவடிவில் மட்டும் ஏன் ख, ग, घ, छ, ज, झ போன்றவை இல்லை?

எந்த வரிவடிவமுமே ஒரு மொழிக்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்படுகிறது. தமிழ் மொழியில் தொடக்கத்திலிருந்தே இந்த சத்தங்கள் கிடையாது, எனவே எழுத்துகள் கிடையாது, எனவே வரிவடிவம் தேவையில்லை. அதனால்தான் அசோகன் பிராமி எழுத்துகளைப் பயன்படுத்தி, தமிழ் பிராமியாக்கும் போது, தேவையற்ற சத்தங்களை/எழுத்துகளை/வரிவடிவங்களை விலக்கிவிட்டு, தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டனர்.

ராபர்ட் கால்டுவெல் தென்மொழிகளின் இலக்கணத்தை (?) எழுதும்போது எப்படி மெல்லினத்தை அடுத்து வல்லினம் வரும்போது சத்தம் மாறுகிறது (பால், அம்பு) என்று எழுதியுள்ளார். ஆனால் இதுகூட ஏற்க முடியாததாக இருக்கலாம். மலையாளத்தில் 'அம்பு' என்னும் தமிழ்ச்சொல் இன்றும் கையாளப்படுகிறது. அம்மொழியில் இப்பொழுது 'प', 'ब' என்னும் இரு சத்தங்களும் தரக்கூடிய எழுத்துகள் இருந்தாலும், அழுத்தமான 'ப' வே கையாளப்படுகிறது. எனவே தொடக்கத்தில் தமிழர்கள் வல்லினத்தை, எங்கு வந்தாலும் அழுத்தமாகவே உச்சரித்தார்கள் என்றும் கூடக் கருதலாம்.

கிரந்த எழுத்துகள், கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழல்லா சத்தங்களைக் குறிக்கப் பயன்பட்டது.

9. ['Madras Musings' முத்தையா என்று நினைக்கிறேன் இந்தக் கேள்வியைக் கேட்டது. அவரது முகம் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனால் கேள்வி கேட்டபோது 'இப்படி நான் Madras Musings'இல் எழுதியிருந்தேன் என்றார். பேச்சைக் கேட்க வந்த வேறு யாராவதுதான் சொல்ல வேண்டும் இவர் யாரென.] தமிழில் மட்டும் ஏன் இன்னமும் நாகரியில் இருக்கும் மற்ற சத்தங்கள் வரவில்லை? எப்பொழுது நாம் இந்த நிலையை மாற்றப்போகிறோம்? தமிழர்கள் கொடுமையாக 'Brigitte Bardot" என்னும் பெயரை 'பிரிகெட்டி பார்தாத்' என்று கொலை செய்கின்றனர்! [இப்படியாகக் குமுதத்தில் வந்ததாம்]

[இந்த அபத்தமான கேள்விக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார் மகாதேவன்.] தமிழர்கள் பிறமொழியைக் கொல்வதைவிட மோசமானது தமிழர்கள் தமிழையே கொலை செய்வது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரியும். எனவே இன்றைய நிலையில் இதுவே கவலையை அதிகரிக்க வைக்கிறது. வேண்டிய இடத்தில் 'ஃ' போன்றவற்றை 'ப'வுக்கு முன்னால் போட்டு 'f' என்னும் சத்தம் வருமாறு செய்துகொள்கிறோம். அதுபோல் தேவைப்பட்டால் மற்ற குறியீடுகளையும் கொண்டுவரலாம்.

10. பலுசிஸ்தானில் தமிழ் போன்றதொரு மொழி இருக்கிறதாமே?

ஆம். அங்கு பிராஹுயி என்றொரு மொழி - இப்பொழுது கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. அம்மொழியில் 'ஒண்ணு', 'ரெண்டு', 'மூணு' என்றுதான் எண்கள் இருக்கும். ஏக், தோ, தீன் என்று இல்லை. உறவுகள், உடல் உறுப்புகள் ஆகியவற்றுக்கு தமிழ்ச் சொற்களைப் போன்றே இருக்கும். நமக்கு ஒன்றுவிட்ட உறவே இந்த மொழி.

11. நான் தற்பொழுது மதிவாணன் என்பவர் எழுதிய புத்தகத்தைப் படித்து வருகிறேன். அதில் அவர் சிந்து சமவெளி வரிவடிவம், மொழி ஆகியவை தமிழிலிருந்து வந்தது என்கிறார். உங்கள் கருத்து?

மதிவாணன் என் நண்பர். அவரை நன்கு அறிவேன். அவர் அவரது குருநாதர் தேவநேயப் பாவாணர் கருத்தையே எழுதி வருகிறார். தேவநேயப் பாவாணர் தமிழ்தான் உலகின் முதல் மொழி, முதல் வரிவடிவம், அதிலிருந்துதான் உலக மொழிகளே கிளைத்து வந்தன என்ற எண்ணம் கொண்டவர். அவர் கொள்கைகளைப் பின்பற்றினால்தான் மதிவாணன் சொல்வதை ஒருவர் ஒத்துக்கொள்ள முடியும். மற்றபடி இந்தக் கூற்றுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

12. [படு உளறலாக ஒருவர் எழுந்து கேட்ட கேள்வி இது.] தொலைக்காட்சியில் பேசுவது மட்டமாக உள்ளது என்கிறீர்கள். நம் பிள்ளைகளே இப்படித்தான் பேசுகின்றனர். இதற்குக் காரணம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழில் 'ண', 'ள', 'ற', 'ழ' போன்ற எழுத்துகளை ஒழித்து விட்டார். அதனால்தான் தமிழ்க் குழந்தைகளால் தமிழை ஒழுங்காகப் பேச முடிவதில்லை. [நிசமாகவே இப்படித்தான் பேசினார் இந்த 'அறிஞர்'.]

[பொறுமையாகக் கேட்ட மகாதேவன்] எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோது நான் அவரிடம் வேலை பார்த்துள்ளேன். அவர் மொழி அறிஞர் கிடையாது. ஆனால் ஒருசில மொழியறிஞர்கள் (குழந்தைசாமி போன்றவர்கள், நானும் உட்பட) சொன்னதைக் கேட்டு செயல்படுத்தக் கூடிய அரசியல் பலம் அவரிடம் இருந்தது. அவர் கொண்டுவந்தது ஆகார, ஐகார மெய்களில் ஒருசில சீர்திருத்தங்கள். நீங்கள் சொல்வது போல் ஒருசில தமிழ் எழுத்துகளை அவர் ஒழித்துவிடவில்லை.

நான் தினமணி ஆசிரியராக ஆனவுடன் செய்த முதல் காரியம் சீர்திருத்தத் தமிழ் எழுத்துகளை தினமணியில் அச்சிட வைத்ததே. என் உதவி ஆசிரியர்கள் இதனை வெகுவாக எதிர்த்தனர். [அவரது அப்பொழுதைய உதவி ஆசிரியர்களுல் ஒருவரான திருப்பூர் கிருஷ்ணன் அரங்கில் இருந்தார்.] ஆனால் நான் கணினி இயக்குபவர்களிடம் போய் உதவி ஆசிரியர்கள் எப்படி எழுதிக்கொடுத்தாலும் சீர்திருத்தப்பட்ட எழுத்துகளையே அச்சுக்கோருங்கள் என்று சொல்லிவைத்தேன்.

இதனை எதிர்த்தும், ஆதரித்தும் பல கடிதங்கள் வந்தன. இந்தச் சீர்திருத்த எழுத்துகள் 'பெரியார் எழுத்துகள்' என்று பெயரிடப்பட்டதால் ஒருவர் 'விடுதலைக்கு ஆசிரியராக வேண்டியவர் தினமணிக்கு ஆசிரியராக வந்துள்ளார்' என்று எழுதினார். அந்தக் கடிதத்தையும் வெளியிட்டோம். பலர் பெரியார் எழுத்துகளைக் கொண்டுவருவதால் தினமணியின் விற்பனை பாதிக்கப்படும் என்றனர். இவர்கள் தினமணியைப் படிப்பது 'தஞ்சைப் பிராமணர்கள்' மட்டுமே என்று நினைத்திருந்தனர் போலும். அப்படி விற்பனை குறைந்தாலும், நான் என் நிலையை மாற்ற மாட்டேன், தினமணிதான் வேறு ஆசிரியரை அமர்த்திக் கொள்ள வேண்டி வரும் என்று சொன்னேன். ஆனால் சில மாதங்களிலேயே விற்பனை 15,000 பிரதிகள் அதிகமானது.

இன்னமும் தேவை உகர, ஊகார சீர்திருத்தம். [மேற்கொண்டு என்னுடைய தமிழ் இணையம் 2003இல் குழந்தைசாமி பேசியதைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கவும்.]

----

'சத்தியபுத்தோ' என்பது 'சத்யாவின் மகன்' என்று பிற்காலத்தில் வந்த ஒருவரைக் குறித்திருக்குமோ என்று பார்வையாளர் ஒருவர் அபத்தமாக ஜோக் அடிக்க, கேள்வி-பதில் நிகழ்ச்சி முடிந்தது.

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 2

இதன்மூலம் மகாதேவனின் முடிவு:

- அசோகன் பிராமி வரிவடிவத்தைப் பின்பற்றியே தமிழ் பிராமி வரிவடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

- இதனை சமண முனிவர்கள், மதுரை அரசனின் (பாண்டியன்) ஏற்பாட்டின் பேரில் செய்துள்ளனர் என்று சொல்லலாம். அதிகபட்சமான கல்வெட்டுகள் மதுரையைச் சுற்றிக் கிடைத்துள்ளன. சமணர் குகைகள் என்று கருதப்படும் இடங்களில் கிடைத்துள்ளன. இந்தக் கல்வெட்டுகளுக்கும், காஞ்சி/பிறவிடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் வரிவடிவத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. (இரண்டு வேறுபட்ட வரிவடிவங்கள் தமிழ்க் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.)

- அசோகன் பிராமி தமிழுக்கு வந்தது போலவே, தேவநாகரியாக மாறியுள்ளது.

- அசோகன் பிராமி, தக்காணப் பிராமியாக மாறி, அதிலிருந்து கன்னட, தெலுங்கு வரிவடிவங்கள் உருவாகியுள்ளன.

- தமிழ் பிராமி, கிட்டத்தட்ட கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வட்டெழுத்தாக மாற்றம் அடைந்துள்ளது. அப்பொழுதுதான் பனையோலையில், இரும்பு எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டது.

- கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆளுகைக்குள் கொண்டுவந்தபோது, கிரந்த எழுத்தாக மாறிய தக்காணப் பிராமியைக் கொண்டுவந்தனர். சோழர்கள், பல்லவர்களுக்குக் கீழ் இருந்து தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்தபோது இந்த கிரந்த வழித் தமிழெழுத்து, வட்டெழுத்தை முழுவதுமாக அழித்து விட்டு கோலோச்ச ஆரம்பித்தது. அதன் வழியே (பின்னர் வீரமாமுனிவர் வழியாக மாற்றத்துடன்) இன்று நம்மிடையே உலவி வருகிறது.

- கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வட்டெழுத்து முற்றிலுமாய் அழிந்துவிட்டது.

- கி.பி. பதினாலாம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து, மலையாள எழுத்தாக மாற்றம் கொண்டது.

- வரிவடிவங்கள் மாறினாலும், மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதே தொடர்போடு உள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட 75% சொற்களை இன்றைய தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும். (சில கல்வெட்டுகளைப் படித்துக் காட்டினார்.) மீதமுள்ள 25% சொற்கள் பிராக்ரித் தழுவலாக உள்ளது.

- கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பிராக்ரித்துக்குப் பதில் சமஸ்கிருதக் கலவை அதிகமாக வருகிறது. [அரையர்/அரசர் என்பது பிராக்ரித வழிச் சொல் என்றும், இராசர்/ராஜன் என்பது சமஸ்கிருத வழிச்சொல் என்றும் குறிப்பிடுகிறார்.]

- குகைக் கல்வெட்டுகளில் சமணர்களைப் பற்றியே காணப்படுவதாகவும், புத்தர்கள், ஆஜீவகர்கள் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். [இதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.]

- ஒருசில தமிழ்க் காசுகள் எகிப்து, அலெக்சாண்டிரியா போன்ற இடங்களில் (அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குக்) கிடைத்துள்ளது என்றும் அவற்றின் தேதி கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு என்றும், அதில் காணப்படும் எழுத்துகள் தமிழ் பிராமி என்றும் ஆதாரங்கள் உள்ளன என்றார்.

- தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாகப் புள்ளி எழுத்துகள் (மெய்), தமிழ் எழுத்துகள் 12+18=30 என்று சொல்லப்படுவதாலும், இது பல காலமாக இருக்கிறது என்று அழுத்தமாகச் சொல்வதாலும் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டு என்று தான் கருதுவதாகச் சொன்னார்.

- இப்படிப்பட்ட கூற்றைத் தமிழ் அறிஞர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், ஆனால் தன்னுடைய கண்டுபிடிப்பு கல்வெட்டியலை மட்டுமே சார்ந்திருப்பதாகவும், இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் தன் கூற்றை நிரூபிப்பதாகவும் சொன்னார்.

- அசோகன் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், அதற்கு முந்தைய கல்வெட்டுகள் எதுவும் இந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை என்றும், அசோகருக்கு முந்தைய காலத்தில் கல்வெட்டுகள் இல்லாமல் துணியில் எழுதியிருக்கலாம் (அதாவது அசோகர் காலத்தைய பிராமி வடிவம் அதற்கு முந்தையதாக இருந்திருக்கலாம், ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை...), அழிந்துபோயிருக்கலாம் என்றும் சொன்னார்.

- கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு பதிற்றுப்பத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.

- "சத்தியபுத்தோ அதியமான் நெடுமான் அஞ்சி" (ஔவையாரின் நண்பர், தகடூர் அரசர், நெல்லிக்காய் வள்ளல்) என்று ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சத்தியபுத்தோ என்னும் பாலி மொழி யாரைக் குறிக்கும் என்று ஒரு புதிர் பல நாட்கள் இருந்ததாகவும், அது அதியமானையே குறிக்கும் [சத்திய புத்தோ -> சத்திய புத்திரன் -> சத்திய மகன் -> அதிய மான்] என்றும் சொன்னார்.

பேச்சு ஒரு மணி நேரம் நிகழ்ந்தது. அதன்பின், அருமையான காப்பி இருக்கையிலேயே அனைவருக்கும் வழங்கப்பட்டது. காலையில் வந்திருந்த அனைவருக்கும் காலையுணவும் (இலவசமாக) வழங்கப்பட்டதென அறிந்தேன்!

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 1

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள்

இன்று சென்னை டி.டி.கே. சாலை டாக் செண்டரில் (Tag Centre), ஐராவதம் மகாதேவன் "Twin Puzzles in Tamil Epigraphy" என்ற தலைப்பில் பேசினார். இந்தப் பேச்சு, அவரது புத்தகம் "Early Tamil Epigraphy. From the Earliest Times to the Sixth Century A.D." முன்வைத்த கருத்துகளின் சுருக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

நான் உள்ளே நுழையும்போது பேச்சு ஆரம்பித்திருந்தது. இந்த இயல் எனக்கு முன்பின் அறிமுகமில்லாதது. நான் இன்னமும் மகாதேவனின் புத்தகத்தைப் படிக்கவில்லை. (வாங்கவேண்டிய பட்டியலில் உள்ளது.) பேச்சு தமிழ் கல்வெட்டுகளைப் பற்றி இருந்தாலும், ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது. தினமணியின் முன்னாள் ஆசிரியரால் நிச்சயம் தமிழிலேயே இந்த உரையை ஆற்றியிருக்க முடியும். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலோரும் தமிழர்களே. ஒரேயொரு வெளிநாட்டவர் இருந்தார். அவர்கூட 'வட்டெழுத்து' என்பதை நன்கே உச்சரித்தார்.

---

கல்வெட்டுகளைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு எனக்குத் தெரிந்த வகையில் ஒரு சிறு அறிமுகம். பண்டைத் தமிழர்கள் கல்வெட்டுகளில் பொறித்துள்ள எழுத்துகளை நம்மால் இன்று படித்துப் புரிந்து கொள்ள முடியாது. இந்த வரிவடிவத்தில் ஒவ்வொரு குறியீடும் என்ன எழுத்தை/சத்தத்தைக் குறிக்கிறது என்பதை ஆராய்ச்சிகளின் மூலம், பல கல்வெட்டுகளைப் படிப்பதன் மூலம் கண்டுபிடிப்பதுதான் epigraphy எனப்படும் இயல் - கல்வெட்டியல் என்று நானாகப் பேர் கொடுத்துள்ளேன். தமிழில் என்ன சொல் கையாளப்படுகின்றதென்று தெரியவில்லை. இந்தக் கல்வெட்டுகள் ஒருசிலவற்றின் படங்கள் Frontline இதழின் இந்தக் கட்டுரையில் காணக்கிடைக்கிறது.

இனி மகாதேவனின் உரைக்கு வருவோம்:

* 1906ஆம் வருடத்தில் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த வெங்கய்யா என்பவர், மேட்டுப்பட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு இதில் எழுதப்பட்டிருப்பது 'பிராக்ரித்' மொழியாக இருக்குமோ என்று நினைத்தார்.

* பின்னர் அவரது மாணவரான கிருஷ்ண சாஸ்திரி, 1919 வாக்கில் இந்தக் கல்வெட்டுகளில் திராவிட மொழிகளின் தாக்கம் இருக்கிறது, ஒருவேளை தமிழாக இருக்கலாம் என்று சொன்னார்.

* 1924இல் சுப்பிரமணிய அய்யர் தன் ஆராய்ச்சியின் முடிவாக இந்தக் கல்வெட்டுகள் பிராக்ரித் ஆக இருக்க முடியாது, ஏனெனில் இவற்றில் 'ள', 'ற', 'ண', 'ழ' போன்ற எழுத்துக்கள் காணக்கிடைக்கின்றன, நாகரி/பிராக்ரித் மொழியில் வரும் இரண்டாவது/மூன்றாவது/நான்காவது 'க', 'ச' க்கள் (ख, ग, घ, छ, ज, झ போன்றவை) இல்லை என்று கண்டுபிடித்தார். ஆனால் அதே நேரத்தில் 'தந்தை' என்னும் சொல் 'தாநதய' (?) என்று எழுதப்பட்டிருந்தது என்றும் கண்டார்.

* பின்னர், பட்டிப்ரோலு (ஆந்திரம்) என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் படிக்கையில் மெய் எழுத்துகள், அகர, ஆகார மெய்கள் ஆகியவற்றைக் குறிக்க நீட்டல் கொம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தனர். [படமில்லாமல் இதனை விளக்குதல் கடினம், ஆனால் அந்தப் படங்களை இப்பொழுது இங்கு வரைய முடியாத நிலையில் உள்ளேன்.]

* K.G. கிருஷ்ணன் என்பவர் 1960களில் அரச்சாளூர் கல்வெட்டுகளைப் படிக்கையில் அங்கு புள்ளி வைத்த மெய் எழுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டுகள் கி.பி ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்தவை என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாம். இந்தக் கல்வெட்டுகள் புள்ளி இல்லாத மெய்யெழுத்துகள் உள்ள மேற்சொன்ன கல்வெட்டுகளுக்குப் பிந்தைய காலமாக கண்டறியப்பட்டுள்ளன.

* சாதவாகன காசுகள் ஒரு பக்கம் பிராக்ரித் மொழியிலும், மற்றொரு பக்கத்தில் தமிழ் (புள்ளி எழுத்துக்களுடனும்) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காசுகள் வழங்கப்பட்டது கி.பி. 1-3 நூற்றாண்டுகளுக்குட்பட்டவை.

* இந்த ஆரம்பகால வரிவடிவங்கள் அசோகர் காலத்து பிராமி வரிவடிவங்களைப் பின்பற்றியுள்ளன. ஆனால் பிராக்ரித்தில் இருந்த, தமிழில் இல்லாத வரிவடிவங்கள் விலக்கப்பட்டு, பிராக்ரித்தில் இல்லாத 'ள', 'ற', 'ண', 'ழ' ஆகிய எழுத்துகளுக்கான புது வரிவடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படிப் புது வரிவடிவங்கள் சேர்க்கப்படும்போதும், ஏற்கனவே இருக்கும் 'ல', 'ன', 'ர' ஆகியவற்றின் குறியீடுகளை எடுத்து, அவற்றினை நீட்டித்தது போல் உள்ளது.

ஆம்பூர் திசைகள் கூட்டம்

நேற்று வீடு வந்து சேர்கையில் இரவு பத்து மணி. முந்தைய த்ரிஷா பதிவு பார்த்திருப்பீர்கள். அது எதற்காக செய்யப்பட்டது என்றும் அனைவருக்கும் புரிந்திருக்கும்! மாணவர்களை இப்படி பள்ளி ஆசிரியர்கள் ஊக்குவிக்காததால்தான் அவர்களும் படிக்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்!

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம், நூறு மாணவர்கள் சின்ன அறையில் இடுக்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இணையத்தின் சாத்தியங்கள், தமிழில் எழுதுவது எப்படி என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மொத்தம் அந்தக் கல்லூரியில் படிப்பவர்கள் 900 மாணவர்களே. இந்தக் கணினிப் பட்டறை நடந்துகொண்டிருந்தபோது கவிதைப் பட்டறையும் இணையாக வேறிடத்தில் நடந்துகொண்டிருந்தது.

இன்று காலை ஐராவதம் மகாதேவனின் ஒரு பேச்சுக்குப் போயிருந்தேன். மதியம் முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன்.

Saturday, February 28, 2004

ஆம்பூரில் மாணவர்கள் திரிஷா மீது ஜொள்ளு

ஆம்பூர் மஸ்ருல் உலூம் கல்லூரி மாணவர்கள் திரிஷா மீது மிகுந்த காதலினால் அந்தப் படத்தை இந்த வலைப்பதிவில் போட்டே தீரவேண்டும் என்று அடம் பிடித்தனர்.

Friday, February 27, 2004

தமிழோவியம் கிரிக்கெட்

என்னுடைய இந்த வாரத் தமிழோவியம் கட்டுரை இங்கே.

Tuesday, February 24, 2004

அமெரிக்காவில் ஒருபால் திருமணங்கள்

அமெரிக்காவில் மசாசூசட்ஸ் மாகாணத்தில் ஒருசில நீதிபதிகள் ஒருபால் ஜோடிகளுக்குத் திருமண அனுமதிப்பத்திரம் வழங்க ஆரம்பித்துள்ளனர். இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்றுமுன் தொலைக்காட்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்த ஒருபால் திருமணத்தை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்க அரசியல் நிர்ணயச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முயலப்போவதாக அறிவித்தார்.

வரவிருக்கும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் சமயத்தில் வாய்க்கு மெல்ல நல்ல அவல் கிடைத்துள்ளது.

Monday, February 23, 2004

மூன்றாவது வலை

வெங்கட் தனது வலைப்பதிவில் மூன்றாவது வலை என்று வலைப்பதிவுகளின் சாத்தியங்களைப் பற்றிய ஒரு தொடரை ஆரம்பித்துள்ளார்.

அதன் முதல் மூன்று பதிவுகள் இங்கே: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

Sunday, February 22, 2004

திறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 3

சன், எச்.பி இருவரும் சில நாட்களிலேயே கொலாப்.நெட் டின் நுகர்வோராக இணைந்தனர். சன் மைக்ரோசிஸ்டம் அப்பொழுது ஸ்டார் ஆஃபீஸ் என்னும் அலுவல் செயலி நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருந்தது. மைக்ரோசாஃப்ட்டின் அலுவல் செயலியுடன் அப்பொழுதிருக்கும் வணிக முறைகளில் போட்டி போட முடியாது (அதாவது மைக்ரோசாஃப்ட் அலுவல் செயலியின் தரத்திற்கு, ஆனால் அதைவிட விலை குறைத்து விற்று) என்று முடிவு செய்த சன் பரிமென்பொருள் திட்டத்தில் இணைய ஆசைப்பட்டது. உடனே கொலாப்.நெட் துணை கொண்டு ஓப்பன் ஆஃபீஸ் என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தது. [இதனால்தான் இன்று தமிழிலும் ஓப்பன் ஆஃபீஸ் கொண்டுவர முடிகிறது.]

எச்.பி நிறுவனத்திற்கு உலகெங்கிலும் மென்பொருள் எழுதும் ஊழியர்கள் உண்டு. ஆனால் இவர்கள் ஒருங்கிணைந்து செயலாற்றியதே இல்லை. இதனால் இந்நிறுவனத்தில் பல மென்பொருள் திட்டங்களில் ஓரிடத்தில் எழுதப்பட்ட ஆணைமூலங்கள் மறுபடியும் மறுபடியும் எழுதப்பட்டு வந்தன. பின்னர் கொலாப்.நெட் உதவியுடன் எச்.பி பரிமென்பொருள், திறந்தநிரல் செயலிகள் எழுதுவோரின் திட்ட ஒருங்கிணைப்பு முறைகளைத் தன் அலுவலகத்தில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

பிரையனின் பேச்சிலிருந்து ஒரு பொன்மொழி: "ஆணைமூலம் என்பதை இதுவரை தங்கக்கட்டிகள் என்று பாதுகாத்து இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்திருந்தனர் மக்கள். ஆனால் அது லெட்டூஸ் (lettuce - நம்மூர்ப் பாஷையில் கொத்துமல்லிக் கட்டு என்று வைத்துக்கொள்வோமே?) போன்றது. உள்ளேயே வைத்திருந்தால் அழுகிப் போய்விடும். வெளியே கொண்டுவந்தால்தான் அதற்கு மதிப்பு."

பேச்சின் இறுதியில் பரிமென்பொருள் பற்றிய பல கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்பொழுது மேசைக்கணினியில் லினக்சு பெரிய சக்தியாக வருமா என்ற ஒரு கேள்விக்கான பதில் அனைவரையும் சிந்திக்க வைக்கக் கூடியது.

தாய்லாந்தில் பொதுமக்கள் அனைவருக்கும் விலை குறைவான மேசைக்கணினியும், மடிக்கணினியும் கிடைக்கவேண்டுமென அந்நாட்டு அரசு முடிவுசெய்தது. குறைந்த விலையில் கணினிகளைத் தர பல நிறுவனங்கள் (எச்.பி போன்றவையும் சேர்த்து) முன்வந்தன. ஒரு மடிக்கணினி $300 என்ற அளவிற்கு விலை குறைக்கப்பட்டது. ஆனால் மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தின் விலை அதிகமாக இருந்தது. அலுவல் செயலியின் விலையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! இதனால் தாய்லாந்து அரசு மைக்ரோசாஃப்டை அணுகி விலையைக் குறைக்கமுடியுமா என்று கேட்டுக்கொண்டது. மைக்ரோசாஃப்ட் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தாய்லாந்து அரசு உடனடியாக தன்னார்வலர்கள் சிலரைக் கொண்டு லினக்சு இயங்குதளத்தை தாய்-மொழியில் மொழிபெயர்க்க வைத்தது. ஓப்பன் ஆஃபீசும் தாய்-மொழிக்கு மாற்றப்பட்டது. ஆக பைசா செலவில்லாமல் அருமையான இயங்குதளமும், அலுவல் செயலியும் தயாரானது. தாய்லாந்து அரசு மீண்டும் மைக்ரோசாஃப்டை அணுகி, நிலைமையை எடுத்துச்சொல்ல, உடனே மைக்ரோசாஃப்ட் பலநூறு டாலர்கள் செலவாகும் இயங்குதளத்தையும், அலுவல் செயலியையும் ஒன்றிணைத்து வெறும் $10க்குத் தருவதாக ஒத்துக்கொண்டது. [பிரையன் தவறாக மேற்கோள் காட்டுகிறார். $35 என்று என் ஞாபகம்.]

$300க்கு லினக்சு மடிக்கணினி, $335க்கு மைக்ரோசாஃப்ட் மடிக்கணினி. எது அதிகம் விற்கிறது?

இன்று லினக்சு கணினிகள் 60% அளவிற்கும், மைக்ரோசாஃப்ட் உள்ள கணினிகள் மீதம் 40%க்குமே விற்பனையாகிறதாம் தாய்லாந்தில்.

இதிலிருந்து தமிழகம்/இந்தியா அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல.

திறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 2

இன்றும் 65% இணையப் பக்கங்கள் அபாச்சி மூலம் வழங்கப்படுகிறது என்று சொல்லும்போது பிரையன் முகத்தில் பெருமை பளிச்சிடுகிறது.

மூன்று வருடங்கள் அபாச்சி அறக்கட்டளைக்குத் தலைவராக இருந்த பிரையன், பின்னர் கொலாப்.நெட் என்னும் நிறுவனத்தை 1999இல் உருவாக்கினார்.

திறந்தநிரல் செயலிகளைப் பற்றிப் பேசுகையில் அபாச்சியின் வரலாற்றை அழகாக விளக்கினார். அபாச்சியினை உருவாக்கும்போது அதில் ஈடுபட்ட அனைவருக்கும் மற்ற வேலைகள் - மற்ற நிறுவனங்களின் இணைய நிர்வாகிகளாக, மென்பொருள் எழுதுபவர்களாக - இருந்ததனால், யாருக்கும் அபாச்சியை விற்கும் எண்ணமே இல்லை. ஆனால் அந்த மென்பொருளை இலவசமாக வழங்கி, அதற்கு மேலான சேவைகளை விற்பதில் - யார் வேண்டுமானாலும் விற்பதில் - இந்த மென்பொருள்களை எழுதுபவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. மேலும் அபாச்சி கொடுக்கும் உரிமம், GPL உரிமத்தை விட சுளுவானது, குறைவான ஷரத்துக்களைக் கொண்டது. அபாச்சியின் ஆணைமூலத்தை (source code) எடுத்து, அதில் வேண்டிய மாறுதல்களைச் செய்து, வேறு பெயரிட்டு (கட்டாயமாக வேறு பெயரிட வேண்டும்) காசுக்கு விற்பனை செய்யலாம்! அபாச்சி எழுதியவர்களுக்கு ஒரு பைசா கொடுக்க வேண்டியதில்லை. கேள்வி நேரத்தின் போது பலரால் இப்படிப்பட்டதொரு சித்தாந்தத்தை ஜீரணிக்க முடியவில்லை என்பது புரிந்தது!

1998இல் எரிக் ரேமாண்ட் Cathedral and the Bazaar என்னும் ஒரு கட்டுரையை எழுதினார். [இன்று இது ஒரு புத்தகம் அளவிற்கு வளர்ந்து, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, தமிழில் இன்னமும் மொழிபெயர்க்கப்படவில்லை.] அக்கட்டுரையைப் படித்தபின்னர் ஐபிஎம் நிறுவனம் அபாச்சி குழுமத்தைத் தொடர்பு கொண்டது. ஐபிஎம் அப்பொழுது 200 பொறியாளர்களை வைத்து தனக்கென ஒரு இணையத்தள வழங்கி மென்பொருளை உருவாக்க முயன்றதாம். அவர்களது ஆணைமூலத்தில் 2 மில்லியன்களுக்கு மேற்பட்ட வரிகள். அபாச்சி ஆணைமூலம் இணையத்தில் இலவசமாகக் கிடைத்தது - கிட்டத்தட்ட 100,000 வரிகளுக்கு இருக்கும். ஐபிஎம் விரும்பும் எதையுமே அபாச்சி செய்யக்கூடியதாக இருந்தது. ஒருவழியாக ஐபிஎம் அபாச்சியையே தாங்கள் பயன்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தனர். ஒரு பைசா செலவில்லாமல் ஐபிஎம் இதைச் செய்திருக்கலாம்! அபாச்சியின் உரிமம் அப்படி. ஆனால் ஐபிஎம் முக்கு இது மனம் வராததால் அவர்களது பொறியாளர்களை அபாச்சி குழுவினரோடு இணைந்து வேலை செய்யத் தூண்டினார்கள். இதன்மூலம் அபாச்சியில் உள்ள பிழைகளைத் திருத்த அதிக உழைப்பினையாவது ஐபிஎம் மால் வழங்க முடிந்தது. அதே வருடத்தில் சன் மைக்ரோசிஸ்டமும் அபாச்சியுடன் சேர்ந்து உழைக்க ஆரம்பித்தது.

அபாச்சியில் இப்பொழுது 15 திட்டங்கள் நடந்துகொண்டு வருகின்றன. இவையனைத்தும் இணையத்தின் மூலமாகவே திறம்பட நடக்கின்றன. இதற்கென மின்னஞ்சல் குழுக்கள், CVS எனப்படும் ஆணை மூல நிர்வாகம், உரையாடல் குழுக்கள், பின்னூட்டங்கள் ஆகியவை பயன்பட்டு வருகின்றன. இவற்றைத் பரிமென்பொருள் உலகத்திலிருந்து அப்படியே பிய்த்தெடுத்து ஒரு புட்டியில் அடைத்து வணிக மென்பொருள் உலகிற்குக் கொண்டுவர முடியுமா என்ற எண்ணத்தின் அடுத்த கட்டமே பிரையனின் கொலாப்.நெட்.

திறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 1

csiநேற்று இரவு (21 பெப்ரவரி 2004) கம்ப்யூட்டர் சொஸைட்டி ஆஃப் இந்தியா, சென்னை ஆதரவில் "The World After Open Source" என்னும் தலைப்பில் பிரையன் பெலிண்டார் (Brian Behlendorf) பேசினார். இந்நிகழ்ச்சி பசுல்லா சாலை, ஹோட்டல் ஸ்டார் சிடியில் நடைபெற்றது. 17.30க்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி இந்திய கால நிர்ணயப்படி 18.30க்குத் தொடங்கியது.

Brian Behlendorfபிரையன் பற்றிய பல விவரங்கள் இணையத்தில் உங்களுக்குக் கிடைக்கும். வயர்ட் அச்சு இதழ் இணையத்தில் தன் பின்னிதழ்களைப் போட நினைக்கையில் அங்கு இணையத்தள நிர்வாகியாகப் பணிபுரியச் சேர்ந்தவர் பிரையன். பின்னர், அந்நிறுவனம் இணையத்திற்கெனப் பிரத்தியேகமாக ஹாட் வயர்ட் இணைய இதழை ஆரம்பிக்க, அதற்கான தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். அப்பொழுது வலைப்பதிவுத் தளங்கள் அனைத்தும் CERN அல்லது NCSA உருவாக்கிய சேவையகச் செயலிகளைப் (webserver software) பயன்படுத்திக்கொண்டிருந்தன. NCSAஏவில் வேலை பார்த்து, மொசாயிக் என்னும் உலாவி மென்பொருளை உருவாக்கிய மார்க் ஆன்றீசன் போன்றோர் அப்பொழுது நெட்ஸ்கேப் நிறுவனத்திற்கு வேலை செய்யக் கிளம்பிக் கொண்டிருந்தனர். [பிற்காலத்தில் நெட்ஸ்கேப்பினை ஏ.ஓ.எல் முழுதாக வாங்கியது, அதன்வழியேதான் இன்றைய மொசில்லா உலாவி நமக்குக் கிடைத்துள்ளது.] பிரையன் NSCA httpd மென்பொருளில் உள்ள ஒருசில பிழைகளைக் கண்டறிந்து (bug fixing) அதனை NCSAவுக்கு அனுப்பியும் அங்கிருந்து சரியான பதில்கள் வரவில்லை, பிழைதிருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதனால் பிரையனும், மற்ற சில ஒத்த கருத்துள்ளவர்களும் ஒன்றிணைந்து அபாச்சி என்ற இணையத்தள வழங்கி மென்பொருளை உருவாக்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் மைக்ரோசாஃப்ட் இணையத்தின் பக்கம் தன் கருத்தைச் சரியாகச் செலுத்தவில்லை. ஆனாலும் மேசைக்கணினிகளில் மீதான் மைக்ரோசாஃப்டின் கட்டுப்பாடு 90% மேல் இருக்கையில், இதுவே சேவையகக் கணினிகளிலும் (servers) சேர்ந்து இருந்தால் உலகை யாராலும் மைக்ரோசாஃப்டிடமிருந்து காக்க முடியாது என்னும் ஒரு ஆதர்சமும் அபாச்சி மென்பொருள் அறக்கட்டளையை முன் நடத்தியது.

தமிழ் எப்பொழுது அழியும்?

யுனெஸ்கோ 'சர்வதேசத் தாய்மொழி தினம்' பற்றிய காசியின் வலைப்பதிவு. அங்கிருந்து மெய்யப்பனின் பார்வை வலைப்பதிவுக்கு ஒரு தாவல். பா.ராகவனின் பாரதீய பாஷா பரிஷத் விருது பெறுகையில் பேசிய "என் காலம். என் கவலை. என் கருத்து." பேச்சிற்கான எதிர்வினை இது.

எனக்கும் இந்த யுனெஸ்கோ அறிக்கை என்று எல்லோரும் மேற்கோள் காட்டுவதில் நம்பிக்கை இல்லை. நேற்றைய 'தி ஹிந்து' மெட்ரோ பிளஸ் பகுதியில் வந்த தமிங்கில விளம்பரங்கள் பற்றிய கட்டுரையின் ஆரம்பமும் சும்மாவேனும் பீதியைக் கிளப்புமாறு உள்ளது. மேற்கோள் இங்கே: "ANXIOUS VOICES cry out that the Tamil language will cease to exist in another five years or so, unless immediate steps are taken (so says a UNESCO finding)"

அழியும் உலக மொழிகளில் தமிழ் முதலாவதாக இருக்கும் என்பதிலிருந்து இன்னும் ஐந்தே வருடங்களில் அழிந்தே போய்விடும் (ஏதேனும் செய்யாவிட்டால்) என்று பயமுறுத்துகிறார் கட்டுரையாளர்!

தமிழின் மீதான் ஆங்கிலத்தின் அசுரத்தாக்குதல் அதிகமாயுள்ளது உண்மையே. அதிவேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், முக்கியமாகக் கணினியியல், தகவல் தொடர்பியல் ஆகியவை, தமிழில் கலைச்சொல்லாக்கம் தங்கிப்போயிருப்பதை வெளிப்படையாக்கியுள்ளது. இது மிக அவசரமாக கவனிக்கவேண்டிய ஒன்று.

ஒருசில ஆங்கிலப் பள்ளிகள் "வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு மிகவும் தேவையான ஆங்கிலத்தை எங்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்" என்று விளம்பரமிட்டு மக்களைக் கூவி அழைக்கும் காலமிது. அப்படிக் கூவி அழைக்காவிட்டாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளிலேயே போடவேண்டிய கட்டாயம். [தமிழ்வழிக் கல்விக்கூடங்களின் தரம் மோசம். நான் நிறையத் தேடிப் பார்த்து விட்டேன்.] இதை மாற்ற வேண்டும். ஆனால் இப்பொழுதைய சந்தை இதற்கு இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. வருடத்திற்கு ரூ. 10,000 கல்விக்கட்டணமாகச் செலவு செய்து சென்னையில் யாராவது பிள்ளைகளை தமிழ்வழிக் கல்விக்கூடத்தில் சேர்க்கத் தயாரா என்று தெரியவில்லை.

ஆங்கிலவழிக் கல்வியின் மூலம் தமிழ் இரண்டாம் பாடமாக இருந்தாலும் தரமான தமிழறிவினைப் புகட்ட முடியாது.

அடுத்த ஐந்தாண்டுகளில் அழியாவிட்டாலும், தரமான தாய்மொழிக் கல்விக்கூடங்கள் வராவிட்டால், தமிழ் வளம் குன்றி, வருங்காலத்தில் அழியவும் வாய்ப்பிருக்கிறது.

சிறுவயதில் தாய்மொழியில் கல்விகற்பிப்பதே சிறந்தது

சர்வதேசத் தாய்மொழி தினம் நேற்று (21 பெப்ரவரி 2004) கொண்டாடப்பட்டுள்ளது. இதுபற்றி யுனெஸ்கோ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தாய்மொழியில் கல்வி கற்பது குழந்தைகளின் உணர்ந்தறிதல் வளர்ச்சிக்குப் (cognitive development) பெரிதும் உதவுகிறது என்று சொல்லியுள்ளனர்.

பன்மொழிக் கல்வியில் முன்னிலையில் இருப்பதற்காக (80 மொழிகள் வரை குழந்தைகளுக்குப் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்படுகிறதாம் நம் நாட்டில்) இந்தியாவிற்குப் பாராட்டும், ஆப்பிரிக்காவில் 2000க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தும் காலனியாதிக்க மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீஸ் மொழிகளே பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்படுவதாகவும் ஆதங்கப்படுகிறது யுனெஸ்கோ.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழா, தமிங்கிலமா என்ற கேள்வி எழுகையில் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் தாய்மொழியான தமிங்கிலத்திலேயே கல்வி கற்றுத்தருவதாக சந்தோஷப்படலாம்.

தொடக்கக்கல்வியாவது தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழிலேயே இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் சரியான, தரமான தமிழ்ப்பள்ளிகள் சென்னையில் கிடைக்கமாட்டேன் என்கிறது. என் நான்கு வயது மகளுக்குத் தமிழிலேயே (நன்கு) பேசக் கற்றுக்கொடுத்துள்ளேன். வீட்டில் அவளுடன் நாங்கள் தமிழிலேயே பேசுகிறோம். அதனால் அவளது கற்றுக்கொள்ளும் வேகம் அதிகமாக உள்ளது என்பது என் எண்ணம்.

கிடா வெட்டல் தடை நீக்கம்

தேர்தல் வருமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று ஆளும் கட்சிகள் உறுதியோடு இருக்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா முந்தாநாள் (20 பெப்ரவரி 2003) அன்று மற்றுமொரு அவசரச் சட்டத்தை இயற்றி ஏற்கனவே தடைசெய்திருந்த கிடாவெட்டலை (பொதுவாக: விலங்கு/பறவைகளை கோயில்களில் பலியிடுவது) விளக்கிக்கொள்வதாக அறிவித்தார்.

அன்றைய தினம் அங்காள பரமேஸ்வரி, முனீஸ்வரன் போன்ற தெய்வங்களுக்கு உகந்த நாள். தமிழ் மக்கள் பலர் இந்த நாளில் 'மயானக் கொள்ளை' என்றதொரு விழாவையும் கொண்டாடுகின்றனர்.

நான் நாகையில் வசித்தபோது அங்குள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்குச் சென்றுள்ளேன். மயானக் கொள்ளை போன்ற விழாக்கள் அங்கு நடக்கிறதா என்று தெரியவில்லை. நடந்திருந்தாலும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் அந்தக் கோயிலுக்கு 500 மீட்டர்களுக்குள்ளேயேதான் என் வீடும் இருந்தது.

நேற்றைய செய்தித்தாள்களைப் படித்ததில் இந்த மயானக் கொள்ளை மற்றும் அங்காள பரமேஸ்வரி விழா பற்றிய விவரங்கள் கிடைத்தன.

* அங்காள பரமேஸ்வரி கோயில்களிலிருந்து பூசாரிகளும், மற்ற சாமி-ஏறிய மக்களும் ஆடிக்கொண்டே பக்கத்தில் இருக்கும் மயானங்களுக்குச் செல்கின்றனர்.

* அவ்வாறு போகும் பூசாரி, சாமியாடிகள் தங்கள் மீது நடந்து சென்றால் அதனால் தங்களுக்கு நோய் நொடி வாராது, பேய் பிசாசு பிடிக்காது என்பது பொதுமக்கள் நம்பிக்கை. தினமலரில் சில படங்கள் வெளியாகியுள்ளன. அதில் குழந்தைகளை முதுகில் வைத்து படுத்திருக்கும் பெற்றோர்களைத் தாண்டி பூசாரிகள் நடக்கிறார்கள்.

* செல்லும் வழியில் பக்தர்கள் பூசாரி/சாமியாடி களுக்கு பலியாக (அம்மனுக்கு பலியாக) கோழி, ஆடுகளைத் தருவது வழக்கமாம். ஆனால் பலர் அரசின் மாறுபட்ட ஆணையின் விவரம் தெரியாமல் விலங்குகளை பலியிடுவதற்குத் தடை இருப்பதாக நினைத்து வெறும் எலுமிச்சை பழத்தைக் கொடுத்துள்ளனர். அரசாணை விவரம் வெளிவரத்தொடங்க கோழி, ஆடுகளைக் கொடுத்தனராம். இந்தப் பூசாரிகள் உயிருடன் உள்ள கோழியைக் கடித்து, குருதியை உறிஞ்சி பலியை ஏற்றுக்கொள்கின்றனர். தமிழ்ச் செய்தித்தாள்களில் கோழியைக் கடிக்கும் பூசாரியின் படங்கள் வெளியாகியுள்ளன.

* சென்னைக்கருகில் பொன்னேரியில் 60 ஆடுகள், 100 கோழிகள் பலியிடப்பட்டன. அதில் ஒரு ஆட்டைப் பூசாரி பாய்ந்து கடித்து, குடலை உருவி எடுத்து தன் கழுத்தின் மீது மாலையாகப் போட்டுக்கொண்டாராம். பின்னர் ஆட்டின் ஈரலைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சிவிட்டு மயானக் கொள்ளைக்குப் புறப்பட்டாராம்.

* (சேலத்தில்) மயானக் கொள்ளையின் கடைசி நிகழ்ச்சியாக பூசாரி/சாமியாடிகள் மயானம் சென்று அங்குள்ள பிரேதங்களின் எரிந்த சாம்பலின் மீது விழுந்து புரண்டு, சாம்பலைப் பூசிக்கொண்டு பின்னர் சாமியிறங்கி ஊர் திரும்புகின்றனர். இது எல்லா ஊர்களிலும் நடக்கிறதா என்று தெரியவில்லை.

இது தொடர்பான ஒரு சில சுட்டிகள்: செய்தி 1, செய்தி 2, செய்தி 3

===

சில கருத்துகள்:

1. ஜெயலலிதா அந்தர்-பல்டி தேர்தலை எதிர்நோக்கியே என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது. ஆனாலும் பல பக்தர்கள் இப்பொழுதாவது நேர்த்திக்கடனை முடிக்க முடிந்துள்ளதே என்று சந்தோஷப்படலாம். ஆனால் மீண்டும் மற்றுமொரு அரசாணை எப்பொழுதும் வரலாம் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.

2. என்னதான் பலகாலத்தையப் பழக்கவழக்கம் என்றாலும் வெகுவாக அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது சில பழக்கங்கள். முக்கியமாக பிரேதங்களின் சாம்பலை உடம்பில் பூசுவது போன்றவையும், ஆடுகளின் கழுத்தைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சி, குடலைக் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொள்வது போன்றவை. விலங்குகளை பலியிடுவது என்பது வேறு, இப்படிக் கொடுமை செய்வது என்பது வேறு.

===

கிடா வெட்டல் பற்றிய என் முந்தைய பதிவுகள்: பதிவு 1, பதிவு 2

Friday, February 20, 2004

தமிழோவியம்

கிரிக்கெட் பற்றி ஒவ்வொரு வாரமும் தமிழோவியத்தில் எழுத இருக்கிறேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியாகிறது.

இந்த வாரக்கட்டுரை பாகிஸ்தான் பயணமும், பாலிடிக்சும்.

Tuesday, February 17, 2004

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வேறு எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளுங்கள், கர்நாடகம் வேண்டாம் என்பது அவரது தரப்பு வாதம். இதனை ஒத்துக் கொள்ளவில்லை உச்ச நீதிமன்றம். இன்று வழங்கிய தீர்ப்பில், வழக்கு கர்நாடகத்திலேயேதான் நடைபெறும் என்று சொல்லியுள்ளது.

ஜெயலலிதா மீதான் ஊழல் வழக்குகள்

நாடார் மஹாஜன சங்கம் - தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

ஒருவழியாக மேற்கண்ட பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கிறது. பல வருடங்களாக நடந்துவரும் பிரச்சினை இது.

1921இல் நாடார் சாதியினர் ஒன்றிணைந்து தூத்துக்குடியில் "தி நாடார் பாங்க்" என்ற வங்கியினை உருவாக்கினர். 1962இல் இதற்கு சாதிப்பெயரை நீக்கி "தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த வங்கியின் பங்குகள் பல நாடார் குடும்பங்களிடையே இருந்து வந்தன.

1994இல் எஸ்ஸார் நிறுவனக் குழுமத்தை நடத்தும் ருய்யா குடும்பத்தினர் நாடார் குடும்பங்களுக்கிடையேயான சண்டையைப் பயன்படுத்திகொண்டு கிட்டத்தட்ட 68% பங்குகளை ஒருசில நாடார்களிடமிருந்து வாங்கி விட்டனர். ஆனால் தினத்தந்தி பத்திரிகை நிறுவனத்தின் சிவந்தி ஆதித்யன் தலைமையில் நாடார்கள் இந்தப் பங்குகளை மீட்க ஒரு போராட்டத்தைத் துவங்கினர்.

இதற்கிடையில் 1996இல், மத்திய ரிசர்வ் வங்கி, எஸ்ஸார் நிறுவனத்தினரிடம் ஒரு வங்கி செல்வதை எதிர்த்து, இந்த பங்கு மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்தது. இதற்குக் காரணமாக எஸ்ஸாரில் பல தொழில் நடவடிக்கைகளில் இவர்கள் மற்ற பல வங்கிகளுக்கு பெரும் பாக்கி வைத்திருக்கின்றனர், பணத்தை உரிய நேரத்தில் செலுத்தியதே கிடையாது, அப்படிப்பட்டவர்களிடத்தில் ஒரு வங்கி இருப்பது சரியல்ல என்பதைத் தெரிவித்தது.

மேலும் இந்தப் பிரச்சினை வடக்கு/தெற்கு என்றெல்லாம் அரசியல் மயமாக்கப்பட்டது.

இந்த நேரத்தில் ஸ்டெர்லிங் நிறுவனத்தின் சிவசங்கரன் (இன்றைக்கு ஏர்செல் செல்பேசி நிறுவனத்தின் சொந்தக்காரர்) பல்வேறு செல்பேசி வட்டங்களின் உரிமத்தை வாங்கியிருந்தார். தில்லி மற்றும் அதைத் தொட்டுள்ள பல வட்டங்களின் உரிமையை எஸ்ஸார் நிறுவனத்துக்கு விற்று, அதற்கு பதிலாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிப் பங்குகளைப் பெற்றுக் கொண்டார். [இன்று எஸ்ஸார் நிறுவனம் ஹட்சிசன் நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவின் நான்காவது பெரிய செல்பேசி நிறுவனத்தை நடத்துகிறது.]

நாடார்கள் 'பங்கு மீட்புக் குழு' ஒன்றினை உருவாக்கி சிவசங்கரனிடமிருந்து வங்கியின் பங்குகளைத் திரும்பப் பெற முயற்சித்தனர். இதற்கென நாடார்கள் தம் சாதியினரிடமிருந்து பணத்தை சேகரிக்கத் தொடங்கினர். ஆனால் இந்த வங்கி பங்குச்சந்தையில் இருப்பதாலும், வங்கியின் வருடாந்திர முடிவுகள் பிரமாதமாக இருப்பதாலும், வங்கியின் பங்குகளின் விலை பங்குச்சந்தையில் அதிகரித்துக்கொண்டே போனது. இதனால் நாடார்கள் சேகரித்த பணம் போதுமானதாக இல்லை. சேர்த்த பணத்தை வைத்து 35% பங்குகளை வாங்கி விட்டனர்.

இந்தக் குழப்பங்கள் நீடித்திருக்கும்போது வங்கியின் இயக்குனர்கள் சரியாக நியமிக்கப்படவில்லை. இதனால் மத்திய ரிசர்வ் வங்கியே ஒருவரை சேர்மனாக நியமித்தது. வங்கியின் இயக்குனர்கள் இந்த சேர்மனை நீக்க முடிவு செய்தபோது ரிசர்வ் வங்கி இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

நேற்று கடைசியாக மீதமுள்ள 33% பங்குகளை சிவசங்கரனிடமிருந்து பெறுவதற்கான விலையை நாடார்கள் சங்கம் ஒத்துக்கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினையிக்கு சுமுகமான தீர்ப்பைப் பெற்றுத்தர சுதேசி ஜாகரண் மஞ்சின் எஸ்.குருமூர்த்தி பஞ்சாயத்து செய்துள்ளார் என்று தெரிய வருகிறது. குழப்பமான வழக்குகளை நீதிமன்றம் வரை போகாது தங்களுக்குள்ளேயே தீர்த்துக்கொள்வதில் குருமூர்த்தியின் மூன்றாவது முக்கிய சாதனை இது. இதற்கு முன்னர் பஜாஜ் குடும்ப வழக்கு, எல்&டி - பிர்லா வழக்கு இரண்டையும் தீர்த்து வைப்பதில் உதவியுள்ளார்.

கோழி இறைச்சி விழிப்புணர்ச்சி பேரணி

இன்று தினமலரில் வந்த ஒரு விளம்பரம். இன்று சென்னை அண்ணாசாலை தாமஸ் மன்ரோ சிலையிலிருந்து அரசு விருந்தினர் மாளிகை வரை 'தென்னிந்திய கோழி உற்பத்தியாளர் மற்றும் விற்பனை சங்கம்' ஒரு பேரணியை நடத்தவுள்ளது. மதியம் 2.30 முதல் 5.30 வரை இந்தப் பேரணி நடக்கும்.

இதன் நோக்கம் கோழி இறைச்சி, முட்டை ஆகியவைகளை உட்கொள்வதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது; இந்தியக் கோழிகளுக்கு 'bird-flu' தொல்லை எதுவுமில்லை என்பதே.

மேற்கொண்டு தினமலர் செய்தியில் தெரிந்து கொண்டது: இந்தப் பேரணியில் கலந்துகொள்ளும் சங்கத்தவர்கள் கோழிக்கால் கறியை சுவைத்தபடியே நடப்பார்களாம். சாலையில் உள்ள பார்வையாளர்களுக்கும் இலவசமாக கோழிக்கால் கறியும், முட்டைகளும் கொடுக்கப்படுமாம். இதற்காக 1,500 கிலோ எடையுள்ள கோழிகள் வெட்டப்படுகின்றனவாம்.

ஆஹா! என்னவொரு விநோதமான பேரணி! இதையெல்லாம் பார்த்துவிட்டு தமிழகக் கட்சித் தொண்டர்கள் தங்கள் தலைவர்களையும் கோழிக்கறி பேரணி நடத்துமாறு கேட்டுக்கொள்ளலாம். தேர்தல் நெருங்குகிறதே?

இந்த வலைப்பதிவைப் படிக்கும் சென்னை வாசகர்கள் தவறாமல் இலவசக் கோழித்துண்டை ஒரு கை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

Sunday, February 15, 2004

காட்பரீஸ் சாக்லேட்

கோகோ கோலா, பெப்ஸி ஆகியவை தயாரிக்கும் பானங்களில் பூச்சி மருந்தின் அளவு அதிகம் என்று தில்லியைச் சேர்ந்த CSE என்னும் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது உங்களுக்குத் தெரியும். அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு இந்த பானங்களின் விற்பனை குறைந்தது. பாராளுமன்றத்தில் இந்த விஷயம் பெரிதாகி வெடித்தது.

நிலத்தடி நீரில் உள்ள பூச்சிமருந்து (pesticides) அளவே இதற்குக் காரணமாம்.

கோலா நிறுவனங்கள் இந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக எதிர்த்தன. இந்தியாவில் தாங்கள் தயாரிக்கும் பானங்கள் உலகத்தில் வேறு எங்கும் தயாரிக்கும் பானங்களைப் போலவே அதே உயர்ந்த தரத்தில் உள்ளன என்றனர். பாராளுமன்றம் ஒரு கூட்டுப் பாராளுமன்றக் குழுவை (JPC) அமைத்து இந்த விவகாரத்தை ஆராயச் சொன்னது.

இதே நேரத்தில் இரண்டு கோலாக்களும் விளம்பரங்களால் மக்களை மசிய வைக்க முயன்றன. கோகா கோலாவின் அச்சு விளம்பரங்களில் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் முக்கிய அதிகாரிகளே முன்னிலைப் படுத்தப்பட்டார்கள். அவர்கள் நம்மிடம், தாமும், தம் குடும்ப உறுப்பினர்களும் முழு நம்பிக்கையோடு கோகோ கோலா பானங்களை அருந்துவதாகவும், பொதுமக்களும் அதனால் சிறிதும் கவலைப்படாது இந்த பானங்களை அருந்தலாம் என்றும் சொன்னார்கள். முழுப்பக்க விளம்பரங்களில் இருவரும் இணைந்தும், தனித்தனியாகவும், கேள்வி-பதில் முறையில் தங்கள் பொருட்களில் ஒரு குறையும் இல்லை என்று சாதித்தார்கள். பின்னர் ஆமீர் கான் சின்னத்திரை விளம்பரங்களில் ஒரு பெங்காலியாகத் தோன்றி நாலைந்து கோகா கோலாக்களைக் குடித்து விட்டு, அவற்றில் 'கட்-பட்' எதுவும் இல்லை என்று உறுதி கூறினார்.

இந்த ஓரத்தில், பெப்ஸியின் பிராண்ட் காவலர்கள் ஷாருக் கானும், சச்சின் டெண்டுல்கரும் 'pepsi is not safe' என்று வார்த்தைகளை வைத்து விளையாட்டுக் காண்பித்து நம்மை மயக்கினார்கள்.

இப்பொழுது அதே காரியத்தைச் செய்கிறது காட்பரி. காட்பரி சாக்லேட்டில் புழு இருந்தது என்று மஹாராஷ்டிர அரசு காட்பரி நிறுவனத்தின் மேல் குற்றம் பதிவு செய்தது. இந்த வழக்கு மேற்கொண்டு என்ன ஆனது என்று சரியாகத் தெரியவில்லை. கேட்பரியும் ஒரு முழுப்பக்க விளம்பரத்தைக் கொண்டுவந்து புழு விவகாரத்தில் உள்ள பல கேள்விகளுக்கு "விடை கொடுத்தது." நேற்று பார்த்த ஒரு விளம்பரத்தில் அமிதாப் பச்சன் மடியில் ஒரு அழகுக் குழந்தை. அமிதாப் காட்பரியை விழுங்கிக் கொண்டிருக்கிறார். குழந்தை கேட்கிறது, "அம்மா இதில் ஏதோ இருக்கிறது என்கிறார்களே, நீங்கள் எப்படி இதைச் சாப்பிடலாம்?" அமிதாப் தான் கையில் வைத்திருப்பதில் பாலையும் கோக்கோவையும் தவிர வேறெதுவும் இல்லை, தைரியமாகச் சாப்பிடலாம் என்று நம்பிக்கையூட்டுவதோடு குழந்தைக்கும் ஒரு துண்டைத் தருகிறார்.

கோலா நிறுவனங்களும், காட்பரியும் இவ்வாறு பிரபலங்களைக் கொண்டுவந்து தங்கள் பொருட்கள் சாப்பிட/குடிக்கத் தகுதியானவை என்று நிரூபிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. நாளை மீண்டும் ஒருவர் வாங்கும் காட்பரி சாக்லேட்டில் புழுவோ, அல்லது வேறேதோ குறைபாடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பிரபலங்கள் பொய் சொன்னார்கள் என்று இவர்கள் மீது நேரடி வழக்குத் தொடுக்க முடியுமா? முடியும் என்றே நினைக்கிறேன். இவர்கள் விளம்பரங்களில் நடிக்கும் ஒரு நடிகராகப் பணியாற்றவில்லை. தங்கள் முகத்தையும், மற்ற துறைகளில் சம்பாதித்த பெருமையையும் பணயம் வைக்கிறார்கள்.

மேலும் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் பொதுமக்களை கேள்வி-பதில் என்று முழுப்பக்க விளம்பரங்களைக் காட்டிக் குழப்பிவிடுவோம், பிரபலங்களைக் காட்டி seduce செய்துவிடுவோம், முட்டாள் மக்களும் சில நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு முன்போலவே 'கோலாக்களை வாங்கிக் குடிப்போம், சாக்லேட்டைத் தின்போம்' என்று நடந்துகொள்வர் என்றே எதிர்பார்ப்பது போல் இருக்கிறது.

இது இப்படி இருக்க, அமெரிக்காவில் GM நிறுவனம் தன் கார்களில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறது என்று தெரியவந்தால் அத்தனை கார்களையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் லட்சக்கணக்கான டயர்களை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. பொதுவில் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் இந்த நாடுகளில் அமைந்திருக்கும் பொதுநல அமைப்புகளும், வலுவான சிவில் சொஸைட்டி அமைப்பும், நீதிமன்றங்களில் இந்த நிறுவனங்களை இழுத்து கடைசிப் பைசா வரை வசூல் செய்துவிடும் வழக்கறிஞர்களும் இருப்பதே காரணம். இதெல்லாம் இந்தியாவில் இல்லாததால்தான் மேற்படி நிறுவனங்கள் இப்படிக் கூத்தடிக்கின்றனர்.

Wednesday, February 11, 2004

தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி

வேலை நீக்கம் செய்யப்பட்ட தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் (999 பேரும்) கடைசியாக அம்மாவின் தயவால் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். உங்களின் ஞாபகத்தைக் கிளறும் வகையில் என்ன தேதிகளில் என்ன நடந்தது என்று இதோ கீழே:

மார்ச் 2003: தமிழக அரசு மார்ச் 2003க்குப் பிறகு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் ஒருசில ஓய்வு வசதிகளைக் குறைக்கும் வகையில் நான்கு ஆணைகளைப் பிறப்பிக்கிறது.

ஜூன் 2003: 12 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியத்தில் கை வைப்பதைக் கண்டித்து ஜூலை முதல் வாரம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவிக்கின்றனர்.

29 ஜூன் 2003: அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைக்காவிட்டால் 2 ஜூலை 2003 முதல் வேலை நிறுத்தம் செய்தே தீருவோம் என்று ஊழியர் சங்கங்கள் அறிவிக்கின்றன.

30 ஜூன் 2003: அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் பயமுறுத்துகிறார்.

1 ஜூலை 2003: தமிழக அரசு, அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்களை 30 ஜூன் 2003 நள்ளிரவில் கைது செய்கிறது. உடனே அரசு ஊழியர்களும் 2 ஜூலை 2003இல் நடத்தவிருந்த வேலை நிறுத்தத்தை 1 ஜூலையிலேயே ஆரம்பித்து விடுகின்றனர்.

2 ஜூலை 2003: தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைக்கிறது.

3 ஜூலை 2003: எஸ்மா அரசியல் நிர்ணயச் சட்டத்துக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தொடுக்கப்படுகிறது.

4 ஜூலை 2003: தமிழக அரசு எஸ்மா சட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து ஒரு அவசரச் சட்டத்தை இயற்றுகிறது. இந்த அவசரச் சட்டம், அரசுக்கு அதிகப்படியாக ஒட்டுமொத்த வேலை நீக்கல் அதிகாரங்களை வழங்குகிறது.

அரசும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்களை ஒட்டுமொத்தமாக நீக்கி விட்டு, புதிய, வேலையில்லாதவர்களை வேலைக்கு எடுப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவை விசாரிக்கும் நீதிபதி P.T.தினகரன், அரசு வீடு புகுந்து கைதுகள் செய்திருப்பதைக் கண்டிக்கிறார். அதே சமயம் வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்களையும் கடிந்து கொள்கிறார்.

5 ஜூலை 2003: 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர். 2000க்கும் மேற்பட்டவர்கள் (பெண்களும் சேர்த்து) சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

நீதிபதி தினகரன் அரசு ஊழியர் சங்கங்களை வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு எழுதி வாங்கிக் கொண்டு, அடுத்த நாள் வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதாகச் சொல்கிறார்.

6 ஜூலை 2003: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தினகரன், அரசின் வேலை நீக்க ஆணையைத் தடை செய்து உத்தரவிடுகிறார்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சைக் கூட்டுகின்றனர். தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி N.தினகர் இருவரும் நீதிபதி P.T.தினகரனின் ஆணையை நிறுத்துகின்றனர்.

அரசு ஊழியர்களிடையே குழப்பமே நிலவுகிறது.

11 ஜூலை 2003: உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சு தீர்ப்பில் வேலை நீக்கம் செய்திருப்பது அடிப்படை உரிமைகளை எவ்விதமும் பாதிக்கவில்லை என்றும், அரசு ஊழியர்கள் முதலில் இந்த சச்சரவுகளை தீர்ப்பாயத்தில் (employment tribunal) முறையிட்ட பின்னரே உயர் நீதிமன்றத்துக்கு வரமுடியும் என்றும் சொல்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை பிணையில் விடுவிக்கலாம் என்றும் உத்தரவிடுகின்றனர். ஆனால் நீதிபதிகளோ, 11 வரையிலான ஒவ்வொரு நாள் விசாரணையிலும் தமிழக அரசின் செயலை வன்மையாகக் கண்டித்து வந்திருக்கின்றனர்.

12 ஜூலை 2003: சிறையில் அடைக்கப்பட்ட அரசு ஊழியர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

17 ஜூலை 2003: அரசு ஊழியர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கை எடுத்துச் செல்கின்றனர். வழக்கு 21 ஜூலை விவாதத்துக்கு வரும் என்று தலைமை நீதிபதி கரே, நீதிபதிகள் பிரிஜேஷ் குமார், S.B.சின்ஹா ஆகியோர் தீர்மானிக்கின்றனர்.

24 ஜூலை 2003: உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் A.R.லக்ஷ்மணன், M.B.ஷா இருவரும் விசாரித்து சமரசம் செய்து வைக்க, தமிழக அரசு வேலை நீக்கம் செய்யப்பட்ட 1.7 லட்சம் அரசு ஊழியர்களையும் 25 ஜூலை முதல் வேலைக்குத் திரும்ப எடுத்துக் கொள்ள சம்மதிக்கிறது. ஆனால் இந்த ஊழியர்கள் அனைவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் யார் மீதெல்லாம் கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டார்களோ, அவர்கள் மீதான வேலை நீக்கம் நடைமுறையில் இருக்கும்.

25 ஜூலை 2003: 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் வேலைக்குத் திரும்புகிறார்கள். இந்த 12,000 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

26 ஜூலை 2003: வேலைக்குத் திரும்ப அனுமதிக்கப்படாதவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்கிறார்கள்.

31 ஜூலை 2003: எத்தனை பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதில் குழப்பம் நிலவுகிறது. 30,000க்கு மேல் என்கிறது தமிழக அரசு. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் A.R.லக்ஷ்மணன், M.B.ஷா இருவரும் 5,000 பேர்கள் தவிர மீதி அனைவரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு சொல்கின்றனர்.

5 ஆகஸ்டு 2003: 6,072 பேர்கள் தவிர மீதி அனைவரையும் வேலைக்கு எடுத்துக்கொள்ள தமிழக அரசு சம்மதிக்கிறது. இந்த 6,072 பேர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவினால் விசாரிக்கப்படுவர் என்றும், இந்த மூவர் எடுக்கும் முடிவு அரசினைக் கட்டுப்படுத்தும் என்றும், ஊழியர்களுக்கு இந்த முடிவில் குறை இருந்தால் மேற்கொண்டு நீதிமன்றங்களை அணுகலாம் என்றும் தீர்ப்பாகிறது.

6 ஆகஸ்டு 2003: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் A.R.லக்ஷ்மணன், M.B.ஷா அரசி ஊழியர்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய எந்த விதமான அனுமதியும் இல்லை என்று தீர்ப்பளிக்கின்றனர். அத்துடன் தமிழக அரசின் பெருந்தன்மையை மிகவும் மெச்சுகின்றனர்.

12 ஆகஸ்டு 2003: தமிழக அரசு ஊழியர் சங்களுக்குக் கொடுத்திருந்த அங்கீகாரத்தை விலக்கிக்கொள்கிறது.

13 ஆகஸ்டு 2003: ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் K.சம்பத், P.தங்கவேல், மலை.சுப்ரமணியன் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, வேலை நீக்கப்பட்ட 6,072 அரசு ஊழியர்களின் வழக்கை விசாரிக்க நியமிக்கிறார்.

23 அக்டோபர் 2003: அரசின் மார்ச் 2003 ஆணைகள் நான்கில் இரண்டு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. ஆனால் மற்ற இரண்டும் செல்லும் என்றும் தீர்ப்பு கூறுகிறது. இந்த நான்கு ஆணைகளை எதிர்த்துதான் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

15 நவம்பர் 2003: சென்னையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட 2,937 ஊழியர்களில், 587 பேர்களைத் தவிர மீதி அனைவரையும் வேலைக்கு எடுத்துக்கொள்ளச் சொல்லி ஓய்வு பெற்ற நீதிபதிகள் கமிஷன் உத்தரவிடுகிறது.

31 டிசம்பர் 2003: மொத்தமாக 999 பேர்கள் தவிர்த்து, மற்ற அனைவரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளச் சொல்லி மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகளும் உத்தரவுகளை வழங்குகின்றனர்.

8 ஜனவரி 2004: 999 பேர்களும் மேற்கொண்டு நீதிமன்றத்தை அணுகி முறையிட முடிவு செய்கின்றனர்.

9 ஜனவரி 2004: அரசு ஊழியர்கள் ரூ. 1,000க்கு மேற்பட்டு அன்பளிப்பு எதனையும் அனுமதியின்றிப் பெறக்கூடாது, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ரூ. 5,000 வரை அன்பளிப்பு பெறலாம்; அதற்கு மேலிருந்தால் அரசிடம் தெரிவிக்க வேண்டும்; அரசின் கொள்கைகளை விமரிசிக்கக் கூடாது; புத்தகங்கள் எழுதக்கூடாது, இதழ்களுக்குக் கட்டுரைகள், கதைகள் எழுதக்கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்கிறது.

10 பெப்ரவரி 2004: தமிழக முதல்வர் ஜெயலலிதா வேலை நீக்கம் செய்யப்பட்ட 999 பேர்களையும் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வதாகவும், ஆனால் இவர்களுக்கு நான்கு வருடாந்திர ஊதிய உயர்வுகள் அளிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கிறார்.

Tuesday, February 10, 2004

உமா பாரதி சாமியாருக்கு கிறித்துவ பிஷப்கள் ஆதரவு!

சிஃபி rss செய்தியோடையை நிறுவியபின் கண்ணில் பட்ட முதல் செய்தி பல கிறித்துவ பிஷப்கள் அம்மையாரைச் சந்தித்து அவரது அரசுக்கு தாங்கள் அனைவரும் ஆதரவு தருவதாகச் சொல்லியுள்ளனர் என்பது. இவர்கள் அம்மையாரிடம் முட்டை, இறைச்சி உணவைப் பற்றிப் பேசினரா என்பது தெரியவில்லை.

இந்த அம்மையார் சாலைகள் அமைப்போம், மின்சாரம் கொடுப்போம் என்று பேசி தேர்தலில் வென்றார். வந்தவுடன் செய்வதென்னவோ, 'முட்டை, இறைச்சி விற்காதே', 'இது புனித நகரம்' அன்று ஆணைகள் பிறப்பிப்பது.

உமா பாரதி சாமியாட்டம்

ஜெயலலிதா கோயில்களில் விலங்குகளை பலியிடக் கூடாது என்னும் 1950களில் போட்ட சட்டத்தைத் தூசு தட்டியெடுத்து வைத்தார்.

உமா பாரதி அம்மையார் மத்தியப் பிரதேசத்தில் மூன்று நகரங்களைப் புனித நகரங்கள் என்று அறிவித்து இந்த நகரங்களில் மது, இறைச்சி உணவு, முட்டைகள் ஆகியவைகளை விற்கவே கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளார். இந்தப் புனித நகரங்கள் மஹேஷ்வர், அமர்கண்டக், உஜ்ஜைனி ஆகியவையாம்.

சாமியார்களை நாட்டை ஆளவைத்ததன் விளைவு இது.

அடுத்து இந்த நகரங்களில் மனிதர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது என்று ஆணை பிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வெங்காயம், பூண்டு முதலியவைகளை சாப்பிடக் கூடாது, ஏகாதசியன்று விரதம் இருக்க வேண்டும் என்று அடுத்த ஆணை வரலாம்.

சட்டப்படி இதுபோன்ற முட்டாள்தனமான ஆணைகள் செல்லுபடியாகுமா? இன்னமும் ஏன் யாரும் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவில்லை?

Sunday, February 08, 2004

அஞ்சல் துறை கருத்துக் கணிப்பு

இன்று காலை என் வீட்டிற்கு (ஞாயிறு அன்று!) ஒரு அஞ்சல் துறை ஊழியர் வந்தார். எங்கள் பகுதிக்குக் கடிதம் கொண்டுவருபவர் அவர். முதலில் தன்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்து, அஞ்சல் துறை ஒரு கருத்துக்கணிப்பு நடத்துவதாகவும், அதற்காக நான் சிறிது நேரம் ஒதுக்க முடியுமா என்றும் பணிவுடன் கேட்டார்.

ஐந்து கேள்விகள் (தமிழில்) இருந்தன. அவற்றிற்குத் தமிழில் பதில் எழுதவேண்டும். எனக்கு தமிழில் எழுதத் தெரியுமா என்று கேட்டார். ஆங்கிலத்தில் இருந்தால் தானாகவே அதைத் தமிழில் எழுதிக்கொள்வதாகச் சொன்னார். நானே தாளை வாங்கி எழுதித் தந்தேன். அஞ்சல்துறைச் சேவையை எப்படி முன்னேற்றுவது, அஞ்சல் துறை ஊழியர்கள் எவ்வாறு பொதுமக்களிடம் நடந்து கொள்கின்றனர், மக்களிடம் ஆலோசனை வழங்குமாறும் கேட்டிருந்தனர். என் எண்ணங்களை எழுதிக் கொடுத்தேன்.

தனியார் கூரியர் நிறுவனங்களால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றிச் சொன்னார் அந்த அஞ்சல்துறை ஊழியர்.

அரசின் அஞ்சல் துறை இவ்வாறு செயல்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதில் நேரடி அஞ்சல் ஊழியரே ஈடுபட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. இதன்மூலம் அஞ்சல் துறைக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிட்டும் என்று எதிர்பார்ப்போம்.

எனக்கு இந்திய அஞ்சல் துறையின் மேல் நிறைய மதிப்பு உள்ளது.

Friday, February 06, 2004

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் தணிக்கை தேவையா?

அமெரிக்காவில் சூப்பர் பவல் (Super Bowl) என்பது இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் விளையாடுவதற்கு ஒப்பாகும். இந்த வருடப்போட்டி பெப்ரவரி 1 அன்று நடைபெற்றது. ஆட்டத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது குறைவே.

போட்டி நேரடியாக CBS தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. ஆட்டத்தில் இடைவேளையின்போது, MTV யினால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆட்டம்/பாட்டு நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. [CBC, MTV இரண்டுமே வயாகாம் என்னும் நிறுவனத்தின் தொலைக்காட்சிகள்.] அதில் ஜேனட் ஜாக்சன், ஜஸ்டின் டிம்பர்லேக் இருவரும் ஆடிப்பாடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது ஜஸ்டின் டிம்பர்லேக், ஜேனட் ஜாக்சனின் மேலாடையை உருவிவிட்டிருக்கிறார். ஜேனட்டின் வலது மார்பகம் ஒரு வினாடி வெட்ட வெளிச்சமாக அரங்கிலும், தொலைக்காட்சியிலும் பார்த்துகொண்டிருக்கும் 135 மில்லியன் மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. [இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண விரும்புபவர்கள் செல்ல வேண்டிய இணையத்தளம் இங்கே!] மேற்படி நிகழ்ச்சிக்குப்பின் மனம் வருந்திய(!!) இரண்டு தொலைக்காட்சிகளும் வெளியிட்டுள்ள அறிக்கைகள் இங்கே: சிபிஎஸ் அறிக்கை, எம்டிவி அறிக்கை.

இந்த அம்மணி இதற்கும் மேலே திரைப்படங்களில் காட்டியுள்ளார். ஆனால் அவையெல்லாம் R ரேட்டிங் பெற்ற படங்கள். இப்படி திடீரென்று எதிர்பாராத விதமாக குழந்தைகளும் பார்க்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவில் இப்படி காட்சி கொடுப்பது அமெரிக்காவையே கதிகலங்க வைத்துள்ளது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். நம்மூர்த் தொலைக்காட்சிகளில் இப்படிப்பட்ட ஆடையவிழ்ப்பு நிகழ்ச்சி நடக்க சாத்தியக்கூறுகள் குறைவு. ஆனால் நம் சானல்களில் தொலைபேசி மூலம் கதைக்கும் நிகழ்ச்சிகள் பல வருகின்றன. அதில் எவ்வகையான தணிக்கை முறைகள், time delay ஆகியவை உள்ளன என்று தெரியவில்லை. ஒரு நேயர் தொலைபேசியில் 'பெப்சி உங்கள் சாய்ஸ்' உமாவிடம் பேச ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்...

நேயர்: ஹல்லோ! உங்ககிட்ட பேசனும்னு ரொம்ப நாளா துடிச்சுகிட்டு இருக்கேன் மேடம்...
உமா: அப்படியா, கொஞ்சம் டீவீ வால்யூம கொறச்சுக்குங்க சார்
நேயர்: ஹல்லோ, ஹல்லோ, சரிங்க, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்...
உமா: (வழியும் சிரிப்புடன்), சொல்லுங்க சார், நீங்க என்ன வொர்க் பண்ணிகிட்டு இருக்கீங்க
நேயர்: நானா, நா சும்மா வேலவெட்டி இல்லாம தெருசுத்திகிட்டு இருக்கேங்க
உமா: ஐயோ, என்ன இப்படி சொல்றீங்க?
நேயர்: (திடீரென) ரஜினியை 'சேற்றில் புரளும் பன்றி' என்று சொன்ன இராமதாஸ் ஒரு "தே.... பை.... புறப்படுதுடா படையப்பா படை, பாமகவுக்கு இருக்குடா பாடை"
நிகழ்ச்சி தயாரிப்பாளர்: (தலையில் துண்டைப் போட்டுக்கொண்டே) "கட்!"

தமிழ்கூறும் நல்லுலகில் இருக்கும் அனைவரும் இந்த சுவாரசியமான உரையாடலைக் கேட்கின்றனர். அடுத்து என்ன ஆகும்?

பொதிகையில் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நான் பங்குபெறும்போது எனக்கும் இதே பயம் இருந்தது. திடீரென்று ஒருவர் தொலைபேசியில் "டேய், நீயெல்லாம் பெரிய பருப்பாடா? ஒன்ன எவண்டா இங்க வந்து உக்காரச் சொன்னான், சோமாறிக் கய்தே" என்று வுட ஆரம்பித்தால், எப்படி இருக்கும் என்று.

வலைப்பதிவுகளும், தற்போதைய செய்தி ஊடகங்களும்

இந்த வாரம் வலைப்பூவின் ஆசிரியராக நான் இருக்கிறேன். அதில் இன்று எழுதிய பதிவு இங்கே. அதனைக் கீழே கொடுத்துள்ளேன்.

இதுநாள் வரை நாம் எவ்வாறு செய்திகளைப் பெற்று வந்திருக்கிறோம்? இங்கு 'செய்தி' எனும்போது news, views, analysis, opinion என்று அனைத்தையும் குறிக்கிறேன். Reuters, AP, AFP, UNI, PTI போன்ற பல செய்தி சேமிக்கும் நிறுவனங்கள் உலகம் முழுதும் தங்கள் நிருபர்களை (reporters, stringers) வைத்துள்ளனர். அத்துடன் பல இடங்களில் புகைப்படக் காரர்களையும் வைத்துள்ளனர். மேற்சொன்னவற்றுள் Reuters, AFP, AP போன்றன உலகம் முழுவதும் செய்தி சேகரிக்கும் நிறுவனங்கள். UNI, PTI ஆகியவை இந்தியாவில் செய்தி சேகரிக்கும் நிறுவனங்கள். இதுபோல் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டிற்கான பிரத்யேகமான செய்தி நிறுவனங்கள் உள்ளன. மேற்சொன்ன செய்தி ஏஜென்சிகள், இணையத்தளங்கள் வருமுன்னர், தாங்களாகவே நேரடியாக செய்திகளை மக்களுக்கு வழங்கவில்லை. இந்த செய்தி ஏஜென்சிகளின் செய்தியோடையை பெறும் ஊடக நிறுவனங்கள் - செய்தித்தாள்கள், அச்சு இதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள் ஆகியவை - வரும் செய்திகளை தங்களுக்கேற்ற வகையில் மாற்றி எழுதி, தங்கள் ஊடகங்களில் பயன்படுத்துவர்.

அதைத்தவிர இந்த செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும், வானொலிகளும் தங்களுடைய நேரடி நிருபர்களை சம்பவம் நடக்கும் இடத்திற்கு அனுப்பித்து செய்திகளை சேகரிப்பர்.

ஒரு செய்தி வெளியாகி வெடித்தவுடன், அதைப்பற்றிய வல்லுநர் கருத்துகள், பின்னணி விவரம், அரசியல்வாதிகள், மந்திரிகள், அரசு அதிகாரிகள், துறை வல்லுனர்கள், பொதுமக்கள் ஆகியோருடைய கூற்றுகள் ஆகியவை சேர்க்கப்பெற்று செய்தித்தாள்களில் பத்திகளை சாப்பிடத் துவங்கும். தொலைக்காட்சிகளில் பல நிமிடங்கள் இதற்கென ஒதுக்கப்படும்.

செய்தி ஊடகங்கள் ஏதாவது விஷயத்தைப் பெரிது செய்ய விரும்பினால், அதை ஊதிப் பெரிதாக்க முடியும். எதையாவது அமுத்த விரும்பினால் வெளியே தெரியாத வகையில் செய்யமுடியும்.

இணையத்தில் செய்தி ஊடகங்கள் கால்பதிக்க ஆரம்பித்தவுடன் செய்தி ஏஜென்சிகளும் தங்களுக்கென பிரத்யேக இணையத்தளங்களை ஆரம்பித்தன. இணையத்தில் மட்டுமே இருக்ககூடிய சில செய்தித்தளங்களும் வர ஆரம்பித்தன. இந்தியாவில் ரீடிஃப், சிஃபி போன்ற செய்தித்தளங்கள் தோன்றின.

மேற்சொன்ன அனைத்தும் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் மூலதனத்தில் உருவான நிறுவனங்கள். பல்லாயிரக்கணக்கான நிருபர்கள், புகைப்படக்காரர்கள், கேமராக்கள், வீடியோ தொழில்நுட்பக்காரர்கள், ஒலிப்பொறியாளர்கள், செய்தி வாசிப்பவர்கள், எழுத்தர்கள், செய்தி ஆசிரியர்கள், இணையத்தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை வேலைக்கு வைத்திருப்பவர்கள்.

அப்படியிருப்பினும், தனிமனிதர்கள் ஒருங்கிணையாமல் ஆங்காங்கே உருவாக்கும் வலைப்பதிவுகள் பல ஒன்று சேர்ந்து மேற்சொன்ன 'organized' செய்தி சேகரிக்கும் நிறுவனங்களைப் பல இடங்களிலும் மிஞ்ச முடியும். அப்படி நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது.

இது எப்படி சாத்தியமாகிறது?

1. பல நேரங்களில் கையில் மடிக்கணினியும், இணைய இணைப்பும், டிஜிட்டல் கேமராவும், வலைப்பதிவும் வைத்திருப்பவர்கள் தாங்களாகவே நிருபர்கள் ஆகிவிடுகிறார்கள். இவர்களால் ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன் அதனை அனைவருக்கும் முன்னதாக வெளியுலகிற்குக் கொண்டு செல்ல முடிகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் தீவிபத்து ஒன்று நடைபெற்றது. அங்கு எதிர்வீட்டில் இருக்கும் ஒருவரிடம் மேற்சொன்ன உபகரணங்கள் இருந்தால் அவரால் உடனே இந்தத் தகவலை வலைப்பதிவு மூலம் தெரிவிக்க இயலும். எந்த organized செய்தி ஊடகத்தாலும் இதைவிட வேகமாக இந்தச் செய்தியை வெளியே சொல்ல முடிந்திருக்காது. முதலில் இந்தச் செய்தியை இரண்டு வரிகளில் தெரிவித்து விட்டு, நம் நண்பர் உடனடியாக தன் டிஜிட்டல் கேமராவில் ஓரிரண்டு படங்கள் பிடித்து அதனை அடுத்ததாகத் தன் வலைப்பதிவில் ஏற்றலாம். அதனை RSS செய்தியோடை மூலம் பார்க்கும் மற்ற செய்தி நிறுவனங்கள் இந்த வலைப்பதிவின் நம்பகத்தன்மையைப் பொறுத்து செய்தியைத் தாங்களும் பெற்றுக்கொண்டு தங்கள் ஊடகங்களின் வழியே பரப்புவர்.

2. செய்திகளை உடனுக்குடன் ஏற்றுவது மட்டுமல்ல. மேற்கொண்டு செய்திகளை அலசுவது. செய்தி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு துறையில் அதிக விஷய ஞானம் இல்லாத 'அரைகுறைகள்'தான்! இவர்கள் பொருளாதாரம், அறிவியல், குற்றவியல், கணினியியல், கணிதம், அரசியல்(!) ஆகியவற்றில் வரும் விஷயங்களை அலசி, ஆராய்ந்து அது பற்றி எழுதக்கூடிய முழு அறிவு பெற்றவர்கள் அல்ல. அதனால்தான் இவர்கள் எழுதும் பல செய்திகள் தப்பும் தவறுமாக உள்ளது. ஒரு செய்தி வெளியானவுடன், அதனை அலசக்கூடிய திறமையுள்ளவர்கள் அவ்வாறு ஆராய்ந்து தம் வலைப்பதிவில் எழுதினால், அது செய்தி ஊடகங்களில் வரும் செய்தி அலசல்களை விட அதிக உபயோகமாக இருக்கும்.

3. 'fact-check-your-ass' என்று அழகான(!) அமெரிக்க ஆங்கிலத்தில் குறிப்பிடுவதைப்போல் ஒரு செய்தி ஊடகத்தின் செய்தியை அலசி, அது உண்மையா, புருடாவா என்பதைக் கண்டு, அதை வெளியிட்டு, ஒரு தவறான செய்தியை வெளியிட்டவர்களின் மானத்தை வாங்கலாம். தி ஹிந்து ஈழத்தமிழர்கள் பற்றித் தவறான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது என்ற ஒரு கருத்து பெரும்பாலும் நிலவிவருகிறது. அப்படியானால், உடனடியாக எங்கெல்லாம் தவறு செய்துள்ளார்கள் என்பதனை ஆதாரத்துடன் வெளியிட்டு அவர்களது தோலை உரிக்கலாம்.

4. எந்தச் செய்தி ஊடகமும் கண்டுகொள்ளாத சிற்றூர்களில் உள்ள பிரச்சினைகளை, செய்திகளை வெளிக்கொணரலாம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 'பின்கோடு'க்கும் ஒரு வலைப்பதிவாவது இருந்தால் அங்குள்ள செய்திகளை ஒன்று சேர்க்கலாம். இந்த இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களை வெளியிடலாம். இதற்கு இந்த சுற்றுப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களையே செய்தி சேகரிக்கும், வலைப்பதியும் இடங்களாக மாற்றலாம்.

இதனாலெல்லாம் வலைப்பதிவுகள் ஒன்றுசேர்ந்து செய்தி ஊடகங்களைத் துரத்திவிடும்/ஒழித்துவிடும் என்றில்லை. ஆனால் இரண்டும் (unorganized வலைப்பதிவுகள், organized செய்தி நிறுவனங்கள்) இணைந்து ஒரு புதிய "Media Ecosystem" ஒன்றினை உருவாக்கும். ஒன்றை மற்றொன்று சார்ந்திருக்கும்.

References:
1. A New News Architecture - Rajesh Jain's blog
2. A New Architecture for News - Dan Gillmor's blog
3. The click heard 'round the world - Jeff Jarvis's blog
4. Blogosphere: the emerging Media Ecosystem - John Hiler

मै उन्को pardon देता हू!

இன்று காலை காரில் வரும்போது முஷாரஃப் வானொலியில் மிகவும் பெருந்தன்மையோடு அப்துல் காதீர் கானுக்கு 'மன்னிப்பு' வழங்கிய ஒலித்துண்டைக் கேட்டேன். அப்துல் காதீர் கான் பாகிஸ்தானின் அணுசக்தித்துறையில் வேலை செய்தவர். பாகிஸ்தான் நூக்ளியர் குண்டு உருவாக்கியவர். பாகிஸ்தான் அணு ஆயுதத் தந்தை என்று போற்றப்படுபவர். முஷாரஃபால் AQ என்று அன்போடு அழைக்கப்படுபவர். தெருவில் மசால் வடை விற்பது போல் கூவிக்கூவி அழைத்து லிபியா, வடகொரியா, இரான் ஆகிய நாடுகளுக்கு நூக்ளியர் தொழில்நுட்பத்தை விற்றிருக்கிறார். எக்கச்சக்கப் பணமும் செய்துள்ளார்.

நேற்றைக்கு முந்தைய நாள், குற்றத்தை ஒப்புக்கொண்டாராம். அவருக்கு மன்னிப்பு வழங்கவேண்டுமென்று கேபினட்டைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். கேபினட் 'அப்படியே ஆகுக' என்று முடிவு செய்துள்ளது. முஷாரஃப் அன்போடு அதனை வரவேற்று மன்னிப்பும் கொடுத்து விட்டார். தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைக் கூறி (தமிழில்: மை உன்கோ pardon தேதா ஹூ!) பாவங்களைத் துடைத்து விட்டார்.

அமெரிக்கா பராக்கு பார்த்துக் கொண்டிருக்கிறது சந்தோஷமாக.

அதுமட்டுமல்ல. கண்டிப்பாக எந்த வெளிநாட்டு சக்திக்கும் (முக்கியமாக IAEA) தன் நாட்டிலிருக்கும் எந்த தஸ்தாவேஜுகளையும் கொடுக்க மாட்டேன், ஆனால் IAEA வுக்குத் தேவையான ஒத்துழைப்புகளைத் தருவேன் என்று திட்டவட்டமாகச் சொன்னார் முஷாரஃப். அதாவது ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன் என்கிறார். (Documents எதையும் தர மாட்டேன் என்றால் அது எந்த வகை ஒத்துழைப்பு?)

முஷாரஃப் பற்றிய வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையைப் படிக்கவும். ஜார்ஜ் புஷ், அமெரிக்கா சண்டியர்கள் இப்பொழுது என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

Thursday, February 05, 2004

கிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 2

3. என் பையன் தொலைக்காட்சி பார்த்து அப்படியே திராவிட்/டெண்டுல்கர் மாதிரி நன்றாக விளையாடுகிறான். வயது அதிகமானவர்களுடன் விளையாடும்போதும் சிறப்பாக விளையாடுகிறான். அடுத்து என்ன செய்வது?

பெற்றோர்களுக்கு, தன் பிள்ளைகள் எது செய்தாலும் சிறப்பானதாக இருப்பதாகவே தோன்றும். மூன்று வயது முதற்கொண்டே முக்கால்வாசி இந்தியக் குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்த்து 'அது தெந்துல்கர் மாமா' என்று மழலையில் கலக்கும் (என் மகள் சேர்த்து). ஒரு பையனுக்கு (பெண்குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன். பெண்களுக்கான கிரிக்கெட் வாய்ப்புகள் இன்றைய தேதியில் வெகு குறைவு) கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் ஈடுபடுவது எளிது. இன்றைய தேதியில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரைப்படத்துறையினரைக் காட்டிலும் அதிக மதிப்புடையவர்கள். கிரிக்கெட் வீரர்கள் இன்று சோப்பு, சீப்பு, கண்ணாடி, செல்பேசி, கோதுமை மாவு, கோகா கோலா என்று எல்லாவற்றையும் விற்கிறார்கள். இன்றைய சிறுவனின் 'ஹீரோக்கள்' கிரிக்கெட் வீரர்களே.

அதனால் வீட்டில் சிறுவர்கள் கையில் கிடைத்த நியூஸ்பேப்பரைச் சுருட்டி வைத்துக் கொண்டு, பிரெட் லீ பந்தை எதிர்கொண்டு திராவிட் அடிக்கும் கவர் டிரைவ் போல ஒரு 'ஆக்ஷன்' விடுவார்கள். அதைப் பார்த்து பெற்றோர்களும் 'ஆஹா, என் மகன்தான் அடுத்த திராவிட்' என்ற கோட்டையைக் கட்டாமல், நேராக ஒரு கிரிக்கெட் பயிற்சியாளரை அணுக வேண்டும்.

ஆரம்பநிலையில் பயிற்சியாளரால் ஒரு சிறுவனது உள்ளார்ந்த திறமை எந்தத் துறையில் உள்ளது என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது. பேட்டிங், பவுலிங், இரண்டிலும்?... பேட்டிங் என்றால் தடுத்தாடும் தொடக்க ஆட்டமா, இல்லை அடித்தாடும் இடைநிலை ஆட்டமா? பவுலிங் என்றால் வேகப்பந்து வீச்சு, சுழல்பந்து... சுழல்பந்தென்றால் விரலால் சுழற்சி அல்லது மணிக்கட்டால் சுழற்சி... வேகப்பந்து என்றால் 12 வயதில் என்ன வேகம் போட முடியும்? இப்படிப் பல குழப்பங்கள்.

அதனால் பயிற்சியாளர் ஒரு சிறுவனை பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கவனத்தைச் செலுத்தச் சொல்வார். இயல்பான திறமை எங்கு வெளிப்படுகிறது என்பதை கவனிப்பார். பின்னர் அந்த ஒரு துறையில் அதிக கவனம் அளிக்க முயல்வார். இதெல்லாம் ஒரு மாதப் பயிற்சி முகாமில் கண்டறிவது கஷ்டம்.

அதனால் பெற்றோர்கள் தங்கள் வீடுகளின் அருகில் முன்னாள் ரஞ்சி, அல்லது முதல் டிவிஷன் லீக் ஆட்டக்காரர் யாராவது இருக்கிறாரா என்று தேடிக் கண்டுபிடித்து அவரிடம் தன் பையனை அழைத்துக்கொண்டுபோய் பேச வைக்க வேண்டும். வெறும் களப்பயிற்சி மட்டும் போதாது. முதலில் சிறுவர்களுக்கு என்னவெல்லாம் சாத்தியம் என்பது பற்றிய போதனை தேவை. ஆஸ்திரேலியாவில் இடதுகை மணிக்கட்டு சுழற்சி மூலம் பந்து வீசும் ஓரிரு இளம் வீரர்கள் தோன்றியுள்ளனர் (மைக்கேல் கிளார்க், மைக்கேல் பெவான் கூட இப்படித்தான்). இந்தியாவில் எனக்குத் தெரிந்தவரை இப்படியொரு பந்துவீச்சாளர் ரஞ்சிக்கோப்பை அளவில் தற்போது விளையாடுவதில்லை. தென்னாப்பிரிக்க அணியில் பால் ஆடம்ஸ் (கழுத்தை ஒருமாதிரி திருப்பிக் கொண்டு பந்து வீசுபவர்) முதன்முதலில் சர்வதேச அளவில் (கடந்த பத்து வருடத்திற்குள்) இம்மாதிரி பந்து வீசியவர்.

இப்படி யாராவது இடதுகை மணிக்கட்டு சுழற்சியில் பந்து வீச வந்தால் நம்மூர்ப் பயிற்சியாளர்கள் அந்தச் சிறுவர்களை பயமுறுத்தி, விரல் சுழற்சி மூலம் பந்து வீசுமாறு செய்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். இந்தியாவில் இடதுகை விரல் சுழற்சிப் பந்து வீச்சாளர்கள் (பிஷன் சிங் பேடி போல்) பல்லாயிரம். உருப்படியான வலதுகை மணிக்கட்டு சுழற்சி லெக் ஸ்பின் பந்து வீச்சாளர்களே வெகுவாகக் குறைந்து விட்டார்கள்.

அதேபோல் நம்மூர்ப் பயிற்சியாளர்கள் வேகப்பந்து வீசும் ஒவ்வொருவனையும் எப்படியெல்லாம் குளறுபடி செய்யமுடியுமோ செய்து, "வேகம் அவசியமல்ல, 'லைன் & லென்த்'தான் முக்கியம்" என்று மிதவேகப் பந்து வீச்சாளர்களாக்கி விடுகிறார்கள். இதனாலேயே பிரெட் லீ போன்ற அதிவேகப் பந்துவீச்சாளர்கள் நம்மிடையே இல்லை.

எனக்கு, கீழ்நிலையில் இருக்கும் இந்தியப் பயிற்சியாளர்கள் மீது சிறிதும் நம்பிக்கையே இல்லை. இந்தியாவிற்குத் தேவை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் உள்ளது போல் கற்று, தேர்வெழுதி, சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள். இப்படிச் சான்றிதழ் பெற்றவர்களும் ஒவ்வொரு வருடமும் மேற்படிப் பயிற்சிக்காக ஓரிடத்தில் குழுமி, அதிகம் தெரிந்தவர்களிடம் கற்க வேண்டும். கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

பாகம் ஒன்று

Wednesday, February 04, 2004

கிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 1

பொதிகையில் கிரிக்கெட் கதை
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளைப் பொதுவாக இப்படி வகுக்கலாம்:

1. எங்கள் ஊரில் பயிற்சி மையம் உண்டா? சென்னையில் எங்கெல்லாம் பயிற்சி தருகிறார்கள்? என் பையனை எங்கு சேர்ப்பது?

தமிழகத்தில் சென்னையை விட்டால் கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களிலேயே சரியான, தரமான பயிற்சி முகாம்கள் நடப்பதில்லை. இப்படி ஒரு/இரண்டு மாதப் பயிற்சி முகாம்களே ஒழுங்காக நடக்காத போது, வருடம் முழுதும் நடக்கும் பயிற்சி மையங்கள் இருக்காது.

சென்னையிலும் எனக்குத் தெரிந்தவரை 4-5 முழுநேரப் பயிற்சி மையங்கள் உள்ளன. வி.பி.சந்திரசேகர் நடத்தும் 'நெஸ்ட்', ராபின் சிங் நடத்தும் ஒரு மையம், சுரேஷ் குமார், அப்துல் ஜப்பார் போன்ற ரஞ்சிக்கோப்பை விளையாடியவர்கள் நடத்தும் மையங்கள் போன்றவையே. ஆனால் கோடை காலத்தில் (மார்ச் ஆரம்பித்து ஆகஸ்டு வரை) பல பயிற்சி முகாம்கள் எங்கு பார்த்தாலும் முளைக்கும்.

இந்த கிரிக்கெட் பயிற்சியாளர்கள் அனைவரும் எந்தத் தேர்வும் எழுதித் தேர்ந்த பயிற்சியாளர்கள் இல்லை. ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கென்றே தேர்வு நடத்தி அதற்கான சான்றிதழும் வழங்குகிறார்கள். இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டும் (ECB), கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் (CA), ஒவ்வொரு வருடமும் தங்கள் நாடுகளில் உள்ள கிரிக்கெட் பயிற்சியாளர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி, சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர்.

இது எதுவும் இந்தியாவில் நடைபெறுவதில்லை.

2. எத்தனை வயதில் தீவிர கிரிக்கெட் பயிற்சி ஆரம்பிக்கப்பட வேண்டும்? எப்படி என் மகன் இந்திய அணியில் சேர முடியும்?

பனிரெண்டு வயதிலிருந்தே தீவிரமான பயிற்சியினை ஆரம்பிக்க வேண்டும். இந்தியாவிற்காக விளையாடக் கனவு கண்டால், முதலில் ஒரு ரஞ்சி அணியில் விளையாட முயற்சி செய்ய வேண்டும். அதற்கு முன்னர் பள்ளிக்கூட அணியில் ஆரம்பிக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு 12 வயதுப் பையன் சென்னையில் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்...
 • பள்ளிக்கூட அணி
 • சென்னை u-13 அணி
 • தமிழ்நாடு u-13 அணி
 • தமிழ்நாடு u-16 அணி
 • தமிழ்நாடு u-19 அணி ... இந்தியா u-19 அணி
 • தமிழ்நாடு ரஞ்சி அணி [இங்கெல்லாம் இருக்கும் போதே முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில்]
 • கல்லூரி கிரிக்கெட் அணிகள்
 • சவுத் ஸோன் (South Zone) அணி
 • இந்தியா-A அணி
 • இந்தியா அணி
இப்படி ஒரு பெரிய போட்டிக்களம் உள்ளது. u-13 விளையாடாவிட்டால் என்னால் இந்திய அணிக்கு வரமுடியாதா என்ற கேள்வி எழலாம். அப்படியெல்லாம் கிடையாது. ஆனால் கிரிக்கெட்டைத் தீவிரமாக எடுத்துக் கொண்டால் அப்பொழுதிருந்தே தொடங்க வேண்டும். இந்த அணிகளில் தேர்ந்தெடுக்கப்பட முயற்சி செய்ய வேண்டும். 12 வயதிலிருந்தே பயிற்சி மையம் எதிலாவது சேர வேண்டும். பெற்றோர்களில் ஆதரவு வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களின் ஆதரவு வேண்டும். பள்ளிக்கூடத்திலேயே கிரிக்கெட் ஒரு முக்கிய விளையாட்டாகக் கருதப்பட்டு, அதற்கான ஆடுகளம் முதலியவை இருத்தல் வேண்டும்.

தேவையான கருவிகளைப் பெற்றோர்கள் வாங்கித்தர வேண்டும். பேட்ஸ்மேன் என்றால் நல்ல மட்டைகள் மூன்று/நான்கு வாங்கித்தர வேண்டும். காஷ்மீர் வில்லோ (Kashmir Willow) ஒத்துவராது. அதெல்லாம் தெரு முனையில் தட்ட மட்டுமே லாயக்கு. இங்கிலீஷ் வில்லோவால் (English Willow) ஆன - இந்த மட்டை இங்கிலாந்தில் வளர்க்கப்படும் வில்லோ மரங்களிலிருந்து வெட்டி இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது - மட்டை ஒன்று குறைந்தது ரூ. 3000 ஆகும். அதிலேயே நல்ல மட்டையாக வாங்க வேண்டுமானால் (Grade என்று சொல்லுவோம்... Grade I, II, III, IV என்று இருக்கும். Grade I இங்கிலீஷ் வில்லோ மட்டைகள் ரூ. 6000-7000 ஆகிவிடும்.) இன்னமும் அதிகம் செலவாகும். அத்துடன் கால்காப்பு, தலைக்கவசம், மற்ற முக்கியமான இடத்தின் காப்பு, கையுறைகள் (இரண்டு, மூன்று), அனைத்தையும் அள்ளிக்கொண்டு போக ஒரு பை என்று ரூ. 15,000 வரை இழுத்துவிடும். பல நடுத்தர வர்க்கத்தினரால் இதனைச் சமாளிக்க முடியாது. குறைந்த செலவில் ரூ. 3000க்குள் முழு 'கிட்' வாங்கிக் கொடுப்பர். அதில் காஷ்மீர் வில்லோ பேட் மட்டுமே கிடைக்கும்.

இதுமட்டும் போதாது! இயல்பாகவே விளையாடும் திறமை இருக்க வேண்டும். உன்னிப்பாக கவனிக்கும் தன்மை வேண்டும். சாதிப்பேன் என்ற மன உறுதி வேண்டும். உடல் பயிற்சி வேண்டும். நேற்று என்னிடம் பேசிய ஒரு அம்மா, தன் மகன் நன்றாக விளையாடுகிறான், ஆனால் சாப்பாடு சரியில்லை, உடல் பயிற்சி செய்வதில்லை என்றார். மாத்தியூ ஹேய்டனைப் பாருங்கள் - எருமை மாடு போல வளர்ந்துள்ளார்!:-) வலுவான தசைகள் இருந்தால்தான் பந்துவீச்சிற்கும் உதவும், பேட்டிங்குக்கும் உதவும்.

திறமை, பயிற்சி, ஆதரவான பெற்றோர் இருந்தும், இன்னமும் தேவை அதிர்ஷ்டம், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பது, ஒரு வாய்ப்பு கிடத்ததும் அதை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்வது.

இன்னமும் தொடரும்.

Tuesday, February 03, 2004

கிரிக்கெட் பயிற்சி மையங்கள் பற்றிய தொ.கா நிகழ்ச்சி

நானும், நிகழ்ச்சி வழங்கும் செல்வியும்
இன்று சென்னைத் தொலைக்காட்சி பொதிகை சானலில் 12.30 மணிக்கு வரும் 'தெரியுமா உங்களுக்கு' என்னும் நிகழ்ச்சியில் என்னைக் கூப்பிட்டிருந்தார்கள். இது ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று வரும் நிகழ்ச்சி. ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுனர்களிடமிருந்து நிகழ்ச்சி வழங்குபவர் நேரிடையாகவும், பொதுமக்கள் தொலைபேசி மூலமும் கேள்விகள் கேட்டு விடைகளைப் பெறும் நிகழ்ச்சி.

கிரிக்கெட் விளையாட்டில் பணம் அதிகமாகப் புழங்குகிறது. தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஆட்டங்கள் தொடர்ச்சியாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்திய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கிரிக்கெட்டில் பணத்தைக் கொட்டுகின்றனர். இதனால் இப்பொழுதெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாட்டை நன்றாகப் பயின்று அதனையே ஜீவாதாரமாகத் தேர்ந்தெடுப்பதை வரவேற்கவும் செய்கின்றனர். என் தந்தை நான் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது கிரிக்கெட் என்று வேளியே சென்றால் காலை உடைத்து விடுவேன் என்று சொன்னார்! இன்று நான் பல பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகளை கிரிக்கெட்டில் சேர்த்து விடுவது எப்படி என்று விளக்குவதைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?

இந்த நிகழ்ச்சி பற்றிய என் பதிவு அடுத்து.

காந்தியின் பலதுறைப் பங்களிப்பு

காந்தியின் பலதுறைப் பங்களிப்பு பற்றிய ராமச்சந்திர குஹாவின் பேச்சிற்குச் சென்றுவந்து அதைப்பற்றி நான் எனது பதிவில் எழுதியிருந்தேன். அதில் ஒருசில விடுபட்டவைகளை சத்யாவின் ஆங்கில வலைப்பதிவில் முழுமையாகப் பார்க்கலாம்.

என்னுடைய பதிவுகள்: ஒன்று | இரண்டு

Monday, February 02, 2004

ழ கணினி அறிமுகம் - 4

இதெல்லாம் போதுமா?

தமிழ் க்னூ/லினக்ஸ் கணினி வருவதில் இன்னமும் பல தடைகளை என்னால் காணமுடிகிறது.

1. இந்தத் தமிழாக்கம் திட்டம் எப்பொழுதும் நடந்துகொண்டே இருக்க வேண்டிய ஒன்று. இது முடிவே அடையாத ஒன்று. எக்ஸ் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும் (வெறுமே கேடிஈ மட்டும் தமிழ்ப்படுத்தப்பட்டால் போதுமானதில்லை என்று நினைக்கிறேன். ஒருசில error செய்திகள் எக்ஸிலிருந்து நேரடியாக வரும். அவை ஆங்கிலத்திலேயே இருக்கும் என நினைக்கிறேன்). பல நிரலிகள் தமிழ்ப்படுத்தப்பட வேண்டிய பட்டியலில் உள்ளது. ஒவ்வொரு முறை ஒரு செயலியின் version மாறும்போதும் புதிய சொற்கள் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு முறை fedora, mandrake distribution புதிதாகும்போதும் பல சொற்றொடர்கள், உதவிக்கோப்புகள் ஆகியவை தமிழ்ப்படுத்தப்பட வேண்டும். அதனால் இதற்கெனத் தனிக்குழு ஒன்று எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

2. இப்பொழுதைக்கு ஆங்கில வெகுஜன உலகில் புழங்கிக் கொண்டிருக்கும் அத்தனை distributionஉம் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும். பிரபு ஆனந்த் இன்னமும் மாண்டிரேக் தொகுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. ழ குழு பெடோராவைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. டெபியனுக்கு ஆள் தேவை. (வசீகரன்?)

3. டேடாபேஸ் (mysql?) செயலி ஒன்றுக்கு முகம் தமிழில் அமைக்கப்பட வேண்டும். அதற்கு php, apache ஆகியவை மூலம் செய்யலாம். அவ்வாறு செய்யும்போது error message (php/apache/mysql) ஆகியவை தமிழாக்கப்பட வேண்டும். இதில் யாரும் ஈடுபட்டுள்ளனரா என்று தெரியவில்லை. அதைத் தவிர பல்லூடகச் செயலிகள் (கே-பவில் ஒருவர் எம்.பி3 கோப்புகளை வெட்டி, ஒட்டுவதற்கு செயலிகள் தமிழில் கிடைக்குமா என்று கேட்டார்), ஆடியோ, வீடியோ, டிவி டியூனர், தமிழில் ஒளிவகை எழுத்துணரி (OCR), அலுவல் செயலிகளில் பிழை திருத்துவான், போன்று எண்ணற்ற செயலிகள் தேவை. மென்பொருளாளர்களுக்கிடையில் லினக்ஸ் இயங்குதளத்தில் மென்பொருள் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

4. இத்தனையும் செய்தாலும் தமிழ்க் கணினித் தொகுப்புக்கு ஒரு வலுவான பிராண்ட் தேவை. மாண்டிரேக், பெடோரா ஆகியவை போதாது. தமிழ் நாட்டில் விளம்பரம் செய்வது, மக்களிடையே மைக்ரோசாஃப்ட் கணினியை விட, குறைந்த விலையில் (கவனிக்க: இலவசம் இல்லை) தரமான இயங்கு தளம் இதோ என்று பட்டி தொட்டியெங்கும் பரப்புவது. ழ இதனைச் செய்ய விரும்பினால் அவர்களுக்கு நிறைய மூலதனம் தேவை. ரெட் ஹாட் இந்த மூலதனத்தை வழங்காது என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படியொரு மூலதனம் யாரிடமிருந்தாவது வராத வரையில் ழவின் வளர்ச்சி மிகக் குறைவாகவே இருக்கும். ழ போல் மற்ற பலர் இது போன்ற திட்டங்களில் ஈடுபடலாம். அவர்கள் வேறு சில க்னூ/லினக்ஸ் தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு திட்டத்தினர் கொண்டு வந்த மாற்றங்கள் அனைத்தும் மற்ற அனைவருக்கும் செலவின்றியே கிடைக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்! அப்படிப்பட்ட நிலையில் மூலதனம் கொடுக்க வருவோர் என்ன நினைப்பார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

5. இந்தக் கணினியை விற்பது என்பதே ஏதேனும் தொல்லை வந்தால் யாராவது சேவை செய்யப் பக்கத்தில் வருவார்களா என்பதைப் பொறுத்தது. ஆக, யார் தமிழகம் முழுவதும் தமிழ் க்னூ/லினக்ஸ் கணினிகளை install செய்வது முதல், பழுது பார்த்துக் கொடுப்பது வரை அனைத்தையும் எந்த நிறுவனம் செய்கிறதோ, அதைத்தான் மக்கள் நம்பி இந்த க்னூ/லினக்ஸ் தொகுப்புகளை வாங்குவர்.

மொத்தத்தில் தமிழகத்தில் தமிழ் க்னூ/லினக்ஸ் ஆர்வம் வளர நிறைய வாய்ப்பிருக்கிறது. முதலில் தமிழகம் முழுதும் விழிப்புணர்வுக் கூட்டங்களை ஏற்படுத்த வேண்டும். தமிழில் நாப்பிக்ஸ் (knoppix) போன்ற முழுத் தொகுப்பு (முழுதும் தமிழிலேயே அமைந்தது) வேண்டும். (இங்கு ஏதோ முயற்சிகள் நடந்துகொண்டு வருகின்றன என்று கேள்விப்பட்டேன். ழ குழுவும் இப்படி ஒரு குறுந்தகடை வெளிக்கொணர முயற்சி செய்தனராம், ஆனால் முடியவில்லை என்றும் இனிவரும் விழாக்களுக்கு முன்னதாகவே தயாரித்து வைத்திருக்கப் போவதாகவும் சொன்னார்கள்.)

ஒன்று | இரண்டு | மூன்று

ழ கணினி அறிமுகம் - 3

அதன்பின்னர் கேள்வி-பதில்கள் தொடங்கியது. மொத்தமாக 150 பேர்களாவது அரங்கில் இருந்திருப்பர். பலர் 'கற்றதும் பெற்றதும்' படித்துவிட்டு வந்தவர்கள். மற்றவர்கள் எம்.ஓ.பி வைஷ்ணவா, லயோலா கல்லூரி மாணவர்கள். ஒருவர் நெல்லையிலிருந்து இதற்காகவே வந்துள்ளதாகவும், வீட்டிற்குப் போகும்போது இந்தக் கணினியை அமைப்பதற்கான குறுந்தகடுகளை வாங்கிக்கொண்டு போவதாக நிச்சயம் செய்துள்ளேன் என்றார், ஆனால் இங்கு விற்பனைக்கு (அல்லது சும்மா) என்று எதுவும் இல்லை. பத்திரிகைகாரர்களுக்கென்று கொடுக்கப்பட்ட பாக்கெட்டில் எனக்கு (வலைப்பதிவு எழுதியே பத்திரிகைகாரனானவன் நான்!) ழ குறுந்தகடு கிடைத்தது.

கேள்விகள் பல தளங்களில் அமைந்திருந்தன. "எனக்கு தமிழில் ஒரு இணையத்தளம் அமைக்க வேண்டும், எப்படிச் செய்வது" என்பதிலிருந்து, "லினக்ஸில் ஜாவாவில் ஒரு செயலி அமைத்தால் அதில் தானாகவே தமிழில் மெனு ஆகியவை வந்துவிடுமா" என்பதிலிருந்து, "மொழிமாற்றத்தில் சில இடங்களில் சந்திப்பிழை உள்ளது என்று ஆரம்பித்து உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை" என இலக்கணப் பாடம் நடத்தும் வரை சென்று விட்டது.

கேள்விகளுக்கு சிவக்குமார், ஜெயராதா, சுஜாதா, பாரதி, சாந்தகுமார், ஹரிஹரன் ஆகியோர் விடை கொடுத்தனர்.

இந்த அறிமுக நிகழ்ச்சி பற்றிய என் கருத்துகள்:

1. சிவக்குமார், ஜெயராதா, மற்ற குழுவினர் presentationஐ இன்னமும் திருப்திகரமாகச் செய்யவேண்டும். ஆரம்பத்தில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. கூட்ட அரங்கினுள் மக்கள் கூட்டம் வந்தபிறகும் பூச்சி, பூச்சியான எழுத்துகளை TSCu_paranarக்கு மாற்றிக்கொண்டிருந்தனர்.

2. சிவக்குமார், சாந்தகுமார் பேச்சில் ஆங்கிலம் நிறையக் கலந்திருந்தது. இது சாதாரணமாக சென்னையில் நடப்பதுதான். ஆனாலும் தமிழ்க் கணினி விற்கப்போகிறேன் என்று சொல்லும்போது தமிழிலேயே பேசுவதில் நிறைய நன்மைகள் உள்ளன, முக்கியமாக வாங்குபவர்களுக்கு, விற்பவர்களிடத்தில் நம்பகத்தன்மை அதிகமாகும்.

3. கருத்துகுழப்பம்: லீனா க்னூ/லினக்ஸ் தொகுப்புகள் பற்றிப் பேசுகையில் மிகவும் குழப்பமாகவும், பல இடங்களில் தவறாகவும் பேசினார். மொசில்லா என்பது ஒரு லினக்ஸ் தொகுப்பு என்று பொருள் தருமாறு பேசினார். (எங்குமே, யாருமே க்னூ என்பதையே பயன்படுத்தவில்லை... ஆனால் இன்றைய புழக்கத்தில் லினக்ஸ் என்பதே க்னூ/லினக்ஸ் தொகுப்பிற்குப் பெயராகப் புழங்கப்படுகிறது.) அனைவருமே சிலமுறை மீண்டும் மீண்டும் பேசிப் பழகிக்கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

4. எங்களுக்குக் கிடைத்த 'பத்திரிகை செய்தி - இணைப்பு' கையேட்டில் கீழ்க்கண்ட வரிகள் இருந்தன:
தமிழ் திறந்த நிரல் இயக்கம்:

1997களில் தமிழ் ஓப்பன் சோர்ஸ் இயக்கம் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களின் முயற்சியால் துவங்கியது. இதன் முக்கிய நோக்கம் உலகில் உள்ள அத்தனை இலவச மென்பொருள்களையும் தமிழில் தரவேண்டும் என்பதே. இந்தக் குழுவில் முக்கிய அங்கத்தினர்கள் கேடியி வசீகரன் குழுவினர், ஜீனோம் தினேஷ் நடராஜன் குழுவினர், சிவராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர். இவர்களது முயற்சியால் தமிழ் லினக்ஸ் துவங்கியது. இது தொடர்பான விவரங்கள் http://groups.yahoo.com/group/tamillinux வலைமனையில் கிடைக்கும்.


மேற்சொன்னதில் http://groups.yahoo.com/group/tamilinix என்றிருந்திருக்க வேண்டிய சுட்டி, தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்தத் தவறு தெரியாமல் நடந்தது என்றே நினைக்கிறேன். மற்றபடி முன்னோடிகளை மறைக்கும் முயற்சி எதுவும் இல்லை.

5. இந்த முயற்சியை நான் புரிந்து கொள்வது இப்படியே: ஏற்கனவே பிரபு ஆனந்த் என்பவரது முயற்சியில் மாண்டிரேக் லினக்ஸ் தொகுப்பு (Mandrake 9.0) வெளியே வந்துள்ளது. அதுதான் எனக்குத் தெரிந்து முதலில் வெளிவந்த முழுமையானதொரு க்னூ/லினக்ஸ் தொகுப்பு. முதலில் டிஸ்கி எழுத்துருவில் கேடிஈ தமிழ்ப்படுத்தப் பட்டிருந்தது. அத்துடன் மாண்டிரேக் installation பற்றிய உதவிக்கோப்புகள், கணினியில் மாண்டிரேக்கைப் பொருத்தும் போது ஒவ்வொரு திரையிலும் தோன்றும் செய்திகள் ஆகியவையும் தமிழ்ப்படுத்தப்பட்டிருந்தன. பின்னர் யூனிகோடுக்கு மாற்றம் செய்தபோது வெளியான மாண்டிரேக் (Mandrake 9.1) குட்டையைக் குழப்பி விட்டது. மாண்டிரேக்கில் அப்பொழுது இருந்த கேடிஈ யால் யூனிகோடை சரியாகக் காண்பிக்க முடியவில்லை. (அதன் அடிப்படையான QTயினை இந்திய மொழிகளுக்கான யூனிகோடுக்குத் தேவையானவை செய்யப்பட்டிருக்கவில்லை.)

அப்பொழுது கேடிஈ 30%தான் தமிழ்ப்படுத்தப்பட்டிருந்ததாம். இப்பொழுது ழ குழு 95% தமிழ்ப்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட தமிழ்ப்படுத்திய கேடிஈ கூட ழவின் சொந்த சொத்து அல்ல இனி. இதனை வசீகரன் அதிகாரபூர்வ கேடிஈ உடன் சேர்த்து விட்டார். இனி நாம் யாரும் தமிழ் கேடிஈ வேண்டினால் நமக்குக் கிடைப்பது இந்த 95% தமிழாக்கப்பட்ட கேடிஈ தான். மேலும் இதிலும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் (ஒற்றுப்பிழைகள் பலவிடங்களில் களையப்பட வேண்டும். "Save" என்பது "சேமி" என்றும், "Save as" என்பது "சேமி போல" என்றும் தமிழாக்கப்பட்டிருக்கிறது. "Save as" என்பதற்கு ஒத்த தமிழாக்கம் "வேறு பெயரில் சேமி..." என்று சொல்வதே ... என நான் நினைக்கிறேன். இதுபோல் முழுவதுமாகப் பார்க்கும் போது நம் அனைவருக்கும் பல புதிய திருத்தங்கள் தோன்றலாம். அப்பொழுது நாம் இதனை தமிழாக்கக் குழுவிற்குச் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். யார் இந்த அவர்கள்? ழ குழுவினரா? இல்லை வசீகரனா என்ற கேள்விக்கு என்னிடம் சரியான விடை இல்லை. வசீகரன் என்றுதான் நினைக்கிறேன்.

ழ குழு, ரெட் ஹாட்டின் பெடோராவை எடுத்துக்கொண்டு பிரபு ஆனந்த் மாண்டிரேக்கில் செய்தது போல் செய்ய முற்பட்டிருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே இருந்த ஒருசில குறைபாடுகளை முழுமையாக முதலில் களைவது அவசியம் என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றனர் என்பது புரிகிறது. முக்கியமாக கேடிஈ யைத் தமிழ்ப்படுத்த வேண்டும், தமிழ் எழுத்துக்களை உள்ளிடுவதில் TAM/TAB/TSCII/Unicode ஆகிய அனைத்துக் குறியீடுகள், TamilNet 99, Typewriter (old/nes), Anjal அல்லது Phonetic உள்ளிடும் முறை ஆகியவற்றை கிராபிகல் முறையில் மாற்றும் வகையில் ஒரு செயலியைச் செய்திருப்பது [மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்களில் முரசு அஞ்சல், எ-கலப்பை ஆகியவை இதைச் செய்கின்றன] ஆகியவையே இவை. மற்றபடி ழ குழுவினருக்கு அதிகாரபூர்வ மென்பொருள் நிர்மானிப்போரின் தயவு தேவை. வசீகரன் கேடிஈ மாற்றங்களுக்குத் தேவை. முகுந்த் மொசில்லா உலாவியின் மாற்றங்களுக்குத் தேவை. ரெட்ஹாட் நிறுவனத்தின் உதவி பெடோரா வைத் தமிழ்ப்படுத்தத் தேவை.

இவர்கள் அனைவரும் ஒருவரோடொருவர் சேர்ந்து இயங்கினால்தான் நம்மைப் போன்ற பயனர்களின் தேவையும் நிறைவு பெறும்.

ஒன்று | இரண்டு | நான்கு

ழ கணினி அறிமுகம் - 2

ழ குழுவினராக, ஜெயராதா, மா.சிவக்குமார், சாந்தகுமார், ஹரிஹரன், லீனா, பாரதி ஆகியோர் அரங்கில் இருந்தனர்.

மா.சிவக்குமார்
ஜெயராதா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். முதலில் மா.சிவக்குமார் 'திறந்த நிரலும் தமிழும்' என்ற தலைப்பில் பேசினார். திறந்த நிரல் செயலிகள் பல உரிமைகளை நமக்கு வழங்குகின்றன: (1) எத்தனை படிகள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் (2) எத்தனை பேர்க்கு வேண்டுமானாலும் பகிர்ந்தளிக்கலாம் (3) மூல நிரலையும் சேர்த்தே பெறும் உரிமை உள்ளது (4) மூல நிரலை ஒருவர் தன்னுடைய தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்த உரிமைகளோடே வரும் கடமை: அவ்வாறு மாற்றிய எந்த நிரலையும், அதன் மூலத்துடன் மேற்சொன்ன அத்தனை உரிமைகளுடன் பிறருக்கு வழங்கவேண்டும் என்பதே அது. ரிச்சர்ட் ஸ்டால்மேன், லினஸ் டோர்வால்ட்ஸ் ஆகியோரது பங்களிப்பு பற்றிப் பேசியபின்னர், தமிழ்லினக்ஸ் குழு வழியே மற்ற ஆர்வலர்களின் பங்களிப்பு என்ன என்றும் சொன்னார். [KDE, Gnome, Mandrake Linux, Keyboard drivers, fonts, Mozilla etc.]

தொடக்கத்தில் திறந்த நிரல் பற்றிப் பேசுகையில், இதை இலவசமாகக் கிடைக்கிறது என்று யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இங்கு "freedom" (பரிச்செயலி - இராம.கி) என்ற பொருளிலேயே வருகிறது என்றும், ழ-கணினி குறுந்தகடுகள் ரூ.1000க்கு விற்றால், மற்றொருவர் அதனை அப்படியே நகல் எடுத்து ரூ.800க்கு விற்கலாம் என்றும், பின்னொருவர் அதனையே மீண்டும் நகலெடுத்து, ஒரு சில மாறுதல்களைச் செய்யவேண்டுமானால் செய்து, மீண்டும் ரூ. 200க்கு விற்கலாம் என்றும், நாளடைவில் இந்த விலை இந்தக் குறுந்தகடுகளை பயனருக்குக் கொண்டுசெல்வதற்கான distribution செலவே ஆகும் என்றும் சொன்னார்.ழ கணினித் திட்டம் எதைப் பற்றியது: (1) திறந்த நிரல் பயன்பாடுகள் பற்றித் தமிழருக்குத் தொகுத்தளித்தல் (2) ஏற்கனவே பணியாற்றும் ஆர்வலர்களுடன் இணைந்து மொழிபெயர்ப்புப் பணிகளைத் துரிதப்படுத்துதல் (3) ஏற்கனவே பங்களிப்பவர்களுக்கு இந்தப் பெரிய முயற்சி மிகவும் சோர்வையும், அயர்வையும் தரக்கூடியது என்பதால் ("தன்னால் ஒரு நாளைக்கு நூறு சொற்களுக்கு மேல் மொழிபெயர்க்க முடியவில்லை" என்றார்) தமிழ்நாட்டில் ஆர்வலர்களை - முக்கியமாக மாணவர்களை - பெரிய அளவில் திரட்டுதல் என்றார்.

சாந்தகுமார்
அடுத்துப் பேசிய சாந்தகுமார் ழ கணினியை சந்தையில் விற்க நிறைய வாய்ப்புகள் உள்ளது என்றார். IDC அறிக்கை ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டி, கணினிச் சந்தை விரிவாகும் போது வரும் வருடங்களில் அதிக அளவு B/C நகரங்கள்தான் முக்கியமான சந்தையாக இருக்கப்போகிறது என்றார். அப்பொழுது தமிழ்ப்படுத்தப்பட்ட கணினி விற்பனையாகும் வாய்ப்புகள் அதிகமாகும் என்றார். இதற்காகத் தாங்கள் ஒரு வியாபாரத் திட்டம் (business plan) எழுதியிருப்பதாகவும், முதலீடு வரவேற்கப்படுகிறது என்றும் சொன்னார்.

முதலீடு செய்யும் முறை:
(அ) தமிழ் இணையப் பல்கலைக் கழகம் போல 'passive investor' - அதாவது முதலீடு செய்துவிட்டு, ழ கணினி ஒருங்கிணைப்பாளர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுவது; ழ-கணினி ஒருங்கிணைப்பாளர்கள் இந்த முதலீட்டினை வைத்து distribution infrastructureஐக் கட்டுவது
(ஆ) HCL போன்ற பெரிய நிறுவனம் தமிழ்க்கணினியை ஒவ்வொருவருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும் வண்ணம் முழுமையாகவே இந்தத் திட்டத்தை தாங்களே ஏற்றுக்கொள்ளலாம்
(இ) மற்ற வகையில்...

ஹரிஹரன்
பின்னர் ஹரிஹரன் என்பவர் ழ கணினியைச் செயல்படுத்திக் காண்பித்தார். கணினியில் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொடுத்து உள்ளே போனதும் கேடிஈ திரை எப்படி இருக்கும், எவ்வாறு மின்னஞ்சல் அனுப்புவது, ஓப்பன் ஆஃபீஸ், கே-மைன்ஸ்வீப்பர் எனும் விளையாட்டு ஆகியவற்றைச் செய்து காட்டினார்.

கடைசியில் லீனா என்பவர் ழ கணினிக் குறுந்தகட்டை எப்படிக் கணினியில் உட்செலுத்துவது என்று செய்முறை விளக்கம் போலச் செய்து காட்டினார். முதலில் ஒருவரிடம் க்னூ/லினக்ஸ் ஏற்கனவே இருக்கவேண்டும் (ஆனால் எந்தத் தொகுப்பாக இருந்தாலும் பரவாயில்லையா என்று சொல்லவில்லை - இவர்கள் பெடோரா பயன்படுத்தியுள்ளனர்.), பின்னர் ழ குறுந்தகட்டில் உள்ள கோப்பு ஒன்றில் கொடுத்துள்ளது போல, அடியொட்டிச் செயல்பட்டால் (முதலில் கேடிஈ "மேற்படுத்துதல்", இரண்டாவதாக 'ழ விசைப்பலகை', மூன்றாவதாக 'ழ ஓப்பன் ஆஃபீஸ்') ழ கணினி கிடைத்து விடும் என்றார்.

ஒன்று | மூன்று | நான்கு

ழ கணினி அறிமுகம் - 1

நேற்று சென்னை லயோலா கல்லூரி லாரன்ஸ் சுந்தரம் அரங்கில் 'ழ கணினி' பற்றிய அறிமுகம் நடந்தது. 'ழ கணினி'யின் இலக்கு க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை முடிந்தவரைத் தமிழ்ப்படுத்தி தமிழர்களிடம் கொண்டுசேர்ப்பது என்று புரிகிறது. இந்த அறிமுக நிகழ்ச்சியின் இலக்குகள்:
 • இதுவரை இவர்கள் செய்துள்ளவற்றைப் பொதுமக்களிடம் காட்டுவது
 • ழ கணினி ஆர்வலர்களுடன் இணைந்து பங்காற்றக் கிடைக்கும் வணிக வாய்ப்புகள்
 • கேள்வி-பதில்கள்
[சிறு முன்குறிப்பு: க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களில் ஆரம்பத்தில் வெறும் (ஆங்கில) எழுத்துகளால் ஆன 'டெர்மினல்' எனப்படும் இடைமுகமே இருந்து வந்தது. இந்த டெர்மினல்கள் மூலம் சொற்களால் ஆன ஆணைகளை மட்டுமே கணினிக்குப் பிறப்பிக்க முடியும். இதே கதிதான் மற்றைய யூனிக்ஸ் இயங்குதளங்களுக்கும். பின்னர் எக்ஸ் விண்டோஸ் எனப்படும் திறந்த நிரல் படத்தினால் ஆன இடைமுகம் வந்தது. இந்த பட இடைமுகம் மைக்ரோசாஃப்ட் விற்றுவந்த விண்டோஸ் 3.11, விண்டோஸ் 95, 98, ME, 2000, XP போன்றது. மௌஸ் கிளிக் மூலமும் கணினிக்கு ஆணைகளை இட முடியும். இந்த எக்ஸ் விண்டோஸ் மேலாக எழுப்பப்பட்டதே கேடிஈ எனப்படும் திறந்த நிரல் கணினி இடைமுகச்சூழல். மைக்ரோசாஃப்டின் கிராபிகல் இடைமுகத்தைப் போல, அல்லது அதையும் மிஞ்சிய வகையில் பார்வைக்கு அழகாக, கண்களுக்கு இதமாக, பயன்படுத்த இயற்கையாக, எளிதாக இருக்குமாறு அமைக்கப்பட்டதே கேடிஈ. கேடிஈ வருகைக்கு முன்னர், யூனிக்ஸ்+எக்ஸ் விண்டோஸ் பார்வைக்கு மைக்ரோசாஃப்டை விட மட்டமானதாகவே இருந்து வந்தது. இன்றைய தேதியில், எனக்குத் தெரிந்தவரை, க்னூ/லினக்ஸ், எக்ஸ், கேடிஈ இணைந்தது மைக்ரோசாஃப்டை விட ஒரே ஒரு இடத்தில்தான் பின்தங்கியுள்ளது: Anti-aliased எழுத்துருக்களை வழங்குவதில். (மைக்ரோசாஃப்ட் கிராபிகல் திரையில் எழுத்துருக்கள் பார்க்க அழகாக இருப்பதன் காரணம் எழுத்துகளை அழகாக, வழுவழுப்பாக, முனைகளை மழுக்கிக் கொடுப்பதே. ஆரம்ப நாள் முதலே எக்ஸில் bitmap எழுத்துருவே இருந்து வந்தது. இப்பொழுது எக்ஸ்/கேடிஈ யிலும் முனைமழுங்கிய, வழுவழுப்பான எழுத்துருக்களைக் காண முடியும், ஆனால் அவ்வளவு சுலபமாகச் செய்ய முடிவதில்லை.)

இந்த கேடிஈ சூழல் - மற்ற மென்பொருட்களைப் போலவே - முதலில் ஆங்கிலத்திலேயே உருவாக்கப்பட்டது. உலகெங்கிலும் பிறமொழி பேசும் மக்களும் இருக்கிறார்கள் என்ற கவனம் மென்பொருள் உருவாக்குபவர்களிடையே தோன்றத் தோன்ற internationalization/localization ("சர்வதேசமயமாக்கல்", "உள்ளூர்ப்படுத்துதல்" ??) என்னும் கருத்தும் உருவாக ஆரம்பித்தது. இதன்படி மென்பொருள் எழுதுவோர் தங்கள் நிரல்களில் உள்ள ஆணைகளில் பலமொழிகளிலும் சொற்கள் வருமாறு அமைப்பர். பின்னர் ஒவ்வொரு மொழிக்காரரும் இந்த நிரலில் வரும் ஆங்கிலச் சொற்களுக்கு ஈடாகத் தத்தம் மொழிகளில் உள்ள இணக்கமான சொற்களை மொழிமாற்றி, வடிவமைத்து, மீண்டும் நிரலியினை 'compile' செய்து இயங்கும் செயலியாக மாற்றுவர்.]

சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா (ரங்கராஜன்) ழ-கணினித் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறார். கேடிஈ சூழலில் உள்ள ஆங்கிலச் சொற்றொடர்களைத் தமிழாக்குவது, அதற்காக தன்னார்வலர்களை ஓரிடத்தில் சேர்த்து அவர்களை வழி நடத்துவது, இம்முயற்சியில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பது, தான் எழுதும் கட்டுரைகள் (கற்றதும், பெற்றதும் - ஆனந்த விகடன்) மூலம் ழ-கணினித் திட்டம் பற்றிப் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவது ஆகியவையே இவை. சுஜாதா இந்த விழாவின் தொடக்கத்தில் இதைப் பற்றிப் பேசினார். லயோலா கல்லூரி, எம்.ஓ.பி வைஷ்ணவா மாணவர்கள் இந்த மொழியாக்கத் திட்டத்தில் பெருமளவு ஈடுபட்டதை சிலாகித்தார். ("எம்.ஓ.பி பெண்களுக்கு தமிழே தெரியாது என்று நினைத்திருந்தேன், ஆனால் பெருமளவில் அவர்கள் இந்தத் தமிழாக்கத்துக்கு உதவினர்"). தான் ஆனந்த விகடனில் லினக்ஸ் பற்றி ஒரு கட்டுரை எழுதியதையும் ('பில் கேட்ஸ் விரித்த டாலர் வலை'), அதைத் தொடர்ந்து தனக்கு வந்த பல மின்னஞ்சல்களையும் பார்த்தபின்னர், வெறும் எழுத்தளவோடு விட்டுவிடாது, செயலிலும் காட்டித் தீரவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தத்திட்டத்தில் ஈடுபட ஆசைப்பட்டவர்களை ஒன்றுதிரட்டியதாகச் சொன்னார். இப்படி மொழிமாற்றம் செய்ய வேண்டிய சொற்கள் தொடக்கத்தில் 700ஆக இருந்து, இறுதியில் கேடிஈயை சேர்த்து 70,000 ஆனதாம். தமிழ் இணையப் பல்கலைக் கழகம் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி செய்துள்ளது என்றார். கேடிஈ இப்பொழுது 95% மொழிபெயர்க்கப்பட்டு விட்டது என்றும், ஓப்பன் ஆஃபீஸ் என்னும் இலவச, திறந்த நிரல் அலுவல் செயலி தொடக்கநிலை மொழிபெயர்ப்பு முடிந்துள்ளது என்றும் இன்னமும் முழுமையாக்க வேலைகள் மீதி உள்ளது என்றும் சொன்னார்.

பேரா.கிருஷ்ணமூர்த்தி
இன்னமும் செய்ய வேண்டியதாகச் சொன்னது: ரெட்ஹாட் தொகுப்பினைத் தமிழ்ப்படுத்துதல்.

பின்னர் சுஜாதா ழ-கணினி குறுந்தகட்டை வெளியிட பேரா.கிருஷ்ணமூர்த்தி அதனைப் பெற்றுக்கொண்டார். பேரா.கிருஷ்ணமூர்த்தி பொன்விழி (தமிழ் OCR), பொன்மொழி (தமிழ் அலுவல் செயலி, spellchecker வசதியுடன்), பொன்மடல் ஆகிய செயலிகளை உருவாக்கியவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

இரண்டு | மூன்று | நான்கு

பொதிகையில் பத்ரியுடன் கிரிக்கெட், நாளை

நாளை தூரதர்ஷன் (பொதிகை) சானலில் 12.30 மணி முதல் 13.30 வரை தொலைக்காட்சி நேயர்களுடன், கிரிக்கெட் பற்றித் தமிழில் நான் உரையாடுகிறேன்.

சானல் கிடைப்பவர்கள், விரும்பினால் பார்க்கவும். என்னைப் பிடிக்காதவர்கள் தொலைபேசியில் கூப்பிட்டு கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கோழி, ஆடு, மாடு, சாராயம்

என்னவோ காரணத்தால் இன்று கண்ணில் பல வித்தியாசமான செய்திகள் பட்டுக்கொண்டிருக்கின்றன.

முதலாவதாகக் கோழியை எடுத்துக் கொள்வோம். பறவை-சுரம் விவகாரத்தில் இன்று WHO மனிதர்களுக்கிடையிலும் இந்த வைரஸ் பரவலாம், பரவியிருக்கக்கூடும் என்று சொல்லியுள்ளது. ஆனால் தினமலரில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பலவாறாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். தினமலரும் அதைப் பெரிய செய்தியாக இரண்டாம், மூன்றாம் பக்கங்களில் போட்டுக்கொண்டிருக்கிறது. (எடுத்துக்காட்டு 1, மற்றொரு நேற்றைய பேட்டிக்கு இணையத்தில் சுட்டி கிடைக்கவில்லை.)

ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இருவரும் தம் விமானத்தில் வழங்கும் உணவில் கோழிக்கறி சேர்க்கப்போவதில்லை என்று சொல்லியுள்ளனர்.

கோழி சுரம் பற்றிய முந்தைய பதிவு

கோழியிலிருந்து ஆட்டுக்கு

இன்று பக்ரீத். குர்பானிக்காக கறி ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவிலிருந்து வந்து குவியும் ஆடுகளைப் பற்றி தினமலரில் படமும், கதையும் வந்துள்ளது. ஆனால் இணையத்தில் கதை கிடைக்கவில்லை. இந்த ஆடுகள் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேல் போகின்றனவாம்.

இதுபற்றி சிலநாட்கள் முன்னர் ஆசாத் எழுதிய ஒரு கதைக்-கட்டுரைதான் உடனடியாக ஞாபகத்துக்கு வந்தது.

அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துகள்.

ஆட்டிலிருந்து மாட்டிற்கு

மாடுகளை வெட்டுவதற்கு எதிராக ஒரு இஸ்லாமிய மத 'நிறுவனம்' ஃபாத்வா அளித்துள்ளதாம். தாருல்-உலூம் என்னும் இந்தக் குழு இன்று ஈதின் பொழுது மாடுகளைத் தவிர மற்ற எதையும் வெட்டிகொள்ளலாம் என்று மத ஆணை (ஃபாத்வா) வழங்கியுள்ளதாக 'தி ஹிந்து' செய்தி கூறுகிறது. ஜமாயத்-உலேமா-இ-ஹிந்தும் தாங்கள் ஒரு வருடத்துக்கு முன்னரேயே இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்ததாகச் சொல்கின்றனர். இந்த வெவ்வேறு இஸ்லாமிய மதக்குழுக்கள் யாவர் என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை.

சரியாக ஊகித்து விட்டீர்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ் இதனை பலமாக வரவேற்றுள்ளனர். மத நல்லிணக்கம் ஓங்குக. அடுத்த செய்திக்குப் போவோம்.

காவல்துறையினரிடம் 'மாட்டடி' வாங்கும் சட்டத்துக்குப் புறம்பானவர்கள் ஒரு புது யுத்தியைக் கண்டுபிடித்துள்ளனராம். காவல்துறையினர் பிடியில் மாட்டுவதற்கு முன், இரண்டு 'உறை' (பாக்கெட் சாராயத்துக்கு 'தமிழ்'ச்சொல்) அடித்துவிட்டு, ஒரு கப் மாட்டுவால் சூப் போட்டுவிட்டுப் போனால் எவ்வளவுதான் அடி வாங்கினாலும் வலிக்கவே வலிக்காதாம். இறைச்சிக்காக வெட்டப்படும் எருமை மாடுகளின் (எருமைதானே? பசு இல்லையே? ஆர்.எஸ்.எஸ் கோச்சுக்காது) வால்களை சேகரித்துத் தயாரிக்கப்படும் இந்த சூப்பின் பெருமையை ஒரு காவல் அதிகாரியே இப்படிச் சொல்கிறார்: "'மாட்டு வால் சூப்' சாப்பிடும் பழக்கம் உள்ள குற்றவாளிகளை அடித்தால் அடிக்கும் போலீசார் கைதான் வலிக்கும். குற்றவாளிக்கு ஒன்றுமே ஆகாது." இது நம்பும்படியாக இல்லை. கையால் அடித்தால் சரி, கம்பால் அடித்தால்? ஆசனவாயில் மிளகாய்த்தூள் தடவிய பிரம்பை நுழைத்தால்? (உபயம்: பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை). தினமலர் இணைய எடிஷனில் இந்தச் செய்தி இல்லை.

மாட்டிலிருந்து சாராயத்துக்கு

இன்றைய சாரய ஸ்பெஷல் (ஒரு பக்கம் நிரம்பக்கூடிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளது தினமலர்) பகுதியில் அரசு நடத்தும் மதுக்கடைகளில் உள்ள 'அட்டாச்ட் பாரில்', அவித்த முட்டை, வெள்ளரிப் பிஞ்சு, பாக்கெட் தண்ணீருடன் அமோக விற்பனையாம். மாட்டுக் கால் சூப் + சாராயம் - நல்ல காம்பினேஷன் போலத்தான் தெரிகிறது. ஆனால் அரசு ஏன் தங்கள் சாராயக் கடைகளில் இந்தக் காம்பினேஷனைக் கொடுப்பதில்லை?

எரி சாராயம் குடித்து 18 பேர் சிலநாட்களுக்கு முன்னர் திருவள்ளூரின் இறந்து போயினர். ஏன் அரசு முன்னர் சூப்பராக ஓடிக்கொண்டிருந்த 'கடா மார்க்' சாராயத்தை மீண்டும் கொண்டுவரக் கூடாது என்று கேட்கிறது தினமலர். நல்ல யோசனை. என்னைக் கேட்டால் 'மாட்டு வால்' பிராண்ட் சாராயம் கொண்டுவரலாம் என்பேன். கடா மார்க் சாராயத்தை மாட்டுவால் சூப்போடு கலந்து அப்படியே அடிக்கும் வகையில் பாக்கெட்டில் போட்டு விற்கலாம்.

மற்ற செய்திகளில் கர்நாடக அரசின் சாராய பாக்கெட்டுகளை தமிழ்நாட்டிற்குக் கடத்தி வந்தவர்கள் கைதாம். யோவ்!, நாங்க கேக்குறது இந்தத் தண்ணிய இல்ல, அந்தத் தண்ணிய, காவேரித் தண்ணிய.