கே: சட்டத்தை யார் இயற்றுவது?
ப: மத்திய அரசு
கே: சட்டத்தை யார் அமல்படுத்துவது?
ப: மாநில அரசுகள், பஞ்சாயத்துகள்
கே: சட்டம் இயற்றுவதற்கு முன்னால் மத்திய அரசு, மாநில அரசுகளையும், பஞ்சாயத்துகளையும் கலந்தாலோசித்தார்களா?
ப: அப்படி நடந்ததாகத் தெரியவில்லை.
கே: மேற்படி மசோதா சட்டமானால், மாநில அரசுகள், பஞ்சாயத்துகளுக்கு ஏதேனும் செலவுகள் உண்டா? இல்லை மத்திய அரசே எல்லாப் பணத்தையும் கொடுத்துவிடுமா?
ப: பஞ்சாயத்துகள் மீது எந்தச் செலவும் கிடையாது. பொதுவாக மாநில அரசுக்கும் எந்தச் செலவும் கிடையாது, மத்திய அரசு கொடுத்துவிடும். ஆனால்... இந்தத் திட்டத்தின் படி மாநில அரசால் வேலை எதையும் கண்டுபிடித்து அதை மக்களுக்குக் கொடுக்க முடியாமல் போனால் மாநில அரசுதான் unemployment benefits ஐக் கொடுக்க வேண்டும்.
கே: புரியவில்லையே? விளக்க முடியுமா?
ப: சரி. தமிழகத்தில் பூஞ்சோலை கிராமத்தில் 60 பேர் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தமக்கு வேலை வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் பூஞ்சோலை கிராமத்தில் இந்த 60 பேர்களும் செய்யக்கூடிய மாதிரி வேலை ஒன்றுமே இல்லை. தமிழக அரசும், பூஞ்சோலை பஞ்சாயத்தும் என்ன தேடியும் ஒரு நல்ல project அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால் இப்பொழுது பழி தமிழக அரசின் தலையின் மீது விழுகிறது. முதல் மாசம் ஒப்புக்கொண்ட தினசரி ஊதியத்தில் கால்பங்கை தமிழக அரசு திட்டத்தில் பதிவு செய்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அடுத்த மாதத்திலிருந்து அரைப் பங்கு கொடுக்க வேண்டும்.
கே: தமிழக அரசு இம்மாதிரி பணத்தைச் செலவு செய்ய விரும்பாதே? வேறு ஏதாவது குளறுபடிகள் செய்து இதிலிருந்து தப்பிக்கத்தானே பார்க்கும்?
ப: ஆம். மிகவும் எளிதாகச் செய்யக்கூடியது... குழியை முதலில் வெட்டச் சொல்ல வேண்டும். பிறகு அதை மூடச் சொல்ல வேண்டும். மீண்டும் குழியை வெட்டு. மூடி. வெட்டு. மூடு. அதை புராஜெக்ட் என்று சொல்லிவிட்டால் பணம் மத்திய அரசிடமிருந்து வரும். இல்லாவிட்டால் மாநில அரசின் கஜானாவில் கைவைக்க வேண்டும்.
கே: wait wait wait! முதலில் இந்த மசோதா யாருக்காக? என்னதான் சொல்கிறார்கள் என்று விளக்கமாகச் சொல்லுங்கள். ஆங்கிலத்தில் 38 பக்கங்கள் படிக்க போரடிக்கிறது...
ப: சரி. அடிப்படையில் நல்ல எண்ணம்தான்.
யாருக்காக? வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள். அவர்களாக விரும்பி வந்து உடலுழைப்பைத் தருகிறேன் என்று சொன்னால், அவர்களுக்கு வருடத்தில் 100 நாள்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை தரப்படும்.
என்ன வேலை? உடலுழைப்பு மட்டும் சார்ந்தது. முடிந்தவரையில் எந்த இயந்திரக் கருவிகளையும் பயன்படுத்தக்கூடாது. அதாவது குழி தோண்ட வேண்டுமென்றால் கடப்பாரைதான். மண் அள்ளிக்கொட்ட வேண்டுமென்றால் தலையில் சுமந்து எடுத்துக்கொண்டுதான் போய்க் கொட்டவேண்டும். மரத்தை வெட்ட வேண்டுமென்றால் power saw கிடையாது. கோடாலிதான் போட வேண்டும்.
யார் வேலைகள் பற்றிய திட்டங்களைத் தீர்மானிப்பார்கள்? பஞ்சாயத்துகள்.
புதிய வேலைகளை ஆரம்பிக்க என்ன் குறைந்த பட்ச தேவை? குறைந்தது 50 விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும். இவர்களுக்கு ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் எந்தத் திட்டத்திலும் வேலை கொடுக்க முடியாது இருக்க வேண்டும்.
என்ன சம்பளம்? நாள் ஒன்றுக்கு மாநில அரசுகளால் குறைந்த பட்ச ஊதியம் என்ன என்று தீர்மானிக்கப்பட்ட இப்பொழுதைய கணக்கான ரூ. 54 (எட்டு மணிநேர வேலைக்கு)
இதில் சேர வயது வரம்பு உண்டா? பால்? வேறு ஏதாவது கட்டுப்பாடுகள்? 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். உச்சபட்ச வரம்பு எதுவும் இல்லை. (90 வயதுக்காரர் வந்தால் சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டும். 'மாட்டேன், போ' என்று சொல்ல முடியாது.) ஆண், பெண் இருவருக்கும் ஒரே ஊதியம்தான். இப்பொழுது தனியார் துறை நடைமுறையில் இருப்பது போல வித்தியாசம் கிடையாது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது என்று சொல்கிறார்கள். அதாவது மொத்தம் மூன்று பேர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு இடங்கள்தான் இருக்கின்றன என்று வைத்துக்கோள்வோம். அப்படியென்றால் ஒரு குடும்பத்திலிருந்து விண்ணப்பித்த இருவரில் ஒருவருக்கு மட்டும்தான் முதலில் வேலை கிடைக்கும். இரண்டு இடங்கள் காலியாக இருந்தால் இருவருக்கும்.
கே: இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு புதிதாக ஏதாவது தொழில் கற்றுக்கொடுக்க முடியுமா?
ப: முடியாது. இது வேலை கொடுக்கும் திட்டம். கல்வி, கற்பித்தல் கொடுக்கும் திட்டம் அல்லவாம். அதனால் புதிதாக பணம் சம்பாதிக்கக்கூடிய வகையில் எந்தத் திட்டமும் கற்றுக்கொடுக்கப்பட மாட்டாது.
கே: ஐயா! நான் கிராமத்தில் இருக்கிறேன். 12வது வரை படித்துவிட்டேன். எனக்கும் வேலை கிடையாது. நான் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்து உடலுழைப்பு இல்லாத பிற மூளை சார்ந்த வேலை ஏதேனும் செய்யமுடியுமா?
ப: முடியாது! Unskilled ஆசாமிகளுக்கான திட்டம் என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள். எனவே நீ என்ன படித்திருந்தாலும் எடு கடப்பாரையை. தோண்டு குழியை. இல்லாவிட்டால் உன்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டேன்.
கே: எனக்கு உடல் ஊனம்... எனக்கு வேலை கிடைக்குமா?
ப: உண்டு. ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது (என்று பேசிக்கொள்கிறார்கள்). ஆனால் ஒன்று. நீங்களும் கடப்பாரையைத் தூக்க வேண்டும். என்ன... மற்றவர்கள் இரண்டு அடி ஆழம் வெட்டினால் நீங்கள் சற்று குறைந்து வெட்டினால் போதும் என்று சொல்லலாம்.
கே: எனக்கு வயதாகி விட்டது. என்னால் அதிக வேலை செய்ய முடியாது. எனக்கு வேலை கிடைக்குமா?
ப: சட்ட வரைவின்படி உங்களை யாரும் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்று சொல்லமுடியாது. அதே நேரம் கடப்பாரையை தூக்கிக் கொத்த முடியவில்லையென்றால் உங்களை வேலையை விட்டு நீக்கமுடியுமா என்று எந்த ஷரத்தும் இந்த சட்ட வரைவில் இல்லை.
கே: கடப்பாரை இல்லாமல், உடலை அதிகம் வருத்தாமல் ஏதேனும் வேலை - உருப்படியாக என்னாலும் செய்ய முடியும் - எனக்குக் கிடைக்குமா? வயதாகி விட்டதே... உடம்பு முடியாது.
ப: கிடையாது. இந்தத் திட்டம் உடல் உழைப்பை மட்டுமே பிரதானமாக வைத்துச் செய்யப்படுவது. இஷ்டம் இருந்தால் வாருங்கள்.
கே: எனக்கு தச்சு வேலை, கொத்து வேலை என்று சில வேலைகள் தெரியும். என் திறமைக்கேற்ற வேலைகள் உண்டா?
ப: என்னென்ன வேலைகள் (இந்த வரிசையில் இருக்கலாம் என்று தில்லியிலே நாங்கள் முடிவு செய்தாகி விட்டது) என்று சொல்கிறோம். பாருங்கள்:
- நீர்நிலைகளைப் பராமரிப்பது, தண்ணீர் சேமிப்பு
- மரம் வெட்டுதல், மரம் நடுதல்
- வாய்க்கால், கண்மாய் வெட்டுதல், பராமரித்தல்
- தனியார் வயல்கள் SC/ST உடையதாக இருந்தால் அந்த வயல்களுக்கான நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தரலாம்.
- தூர்வாருதல்
- பொறம்போக்கு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது
- வெள்ளக்கட்டுப்பாடு, நீர் வடிகால் அமைப்பது
- கிராமச்சாலைகள் அமைப்பது
- மத்திய அரசு அவ்வப்போது மேற்படிப் பட்டியலுடன் சேர்க்கும் திட்டங்கள்.
இவ்வளவுதான். அதாவது ஒரு பஞ்சாயத்து தன் வசதிக்கு என ஒரு கட்டடம் கட்ட விரும்பினாலும் அது இப்போதைக்கு முடியாது. (மேலே எங்கும் வரவில்லை. மத்திய அரசு ஓகே சொன்னால்... ஒருவேளை...)
ஆக எல்லாமே விவசாயம் ஒன்றை மட்டுமே குறிவைத்துச் செய்யப்படுவது.
கே: எங்கள் பூஞ்சோலை கிராமத்தில் மேற்படி விஷயங்கள் அனைத்தையும் செய்துவிட்டோம். இப்பொழுது மழை இல்லை. எனவே எங்களுக்கு விவசாய வேலைகள் இல்லை. வேறு ஏதாவது செய்யலாமா?
ப: முடியாது. உங்கள் ஊரைச் சுற்றி ஐந்து கி.மீ தொலைவில் உள்ள பிற திட்டங்களில் வேலை செய்யுங்கள் (அங்கும் கடப்பாரைதான்!).
=======
ஓரளவுக்கு இந்தப் பதிவு (என்னுடைய slantஐ விலக்கிப் பார்த்தாலும்) இந்தத் திட்டம் பற்றி விளக்கியிருக்கும். இன்னமும் பல குழப்பங்கள் உள்ளன. அதைப்பற்றி வரும் பதிவுகளில் சேர்க்கிறேன்.
No comments:
Post a Comment