Wednesday, February 16, 2005

பாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது

கன்னடத்தில் எஸ்.எல்.பைரப்பா எழுதிய 'பர்வா' என்ற நூலை தமிழில் 'பருவம்' என்று மொழிமாற்றியதற்கு பாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது கிடைத்துள்ளது. [பிற விருதுகள் பட்டியல்]

பாவண்ணன் பெங்களூரில் வசிப்பவர். இணையத்தில், திண்ணையில் பாவண்ணனின் கட்டுரைகள் (முக்கியமாக "எனக்குப் பிடித்த கதைகள்" வரிசை என்னை மிகவும் கவர்ந்தது) பலவும் கிடைக்கின்றன. பொறுமையாக உட்கார்ந்து படியுங்கள்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்த போது கேட்டது: "சார், நீங்க கன்னடத்துலயும் எழுதுவீங்களா?". இல்லை என்றார். எழுதுவது தமிழில் மட்டும்தானாம்.

பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அம்மாநிலத்தின் மொழியை எந்த அளவு கற்கிறார்கள் என்று தெரியவில்லை. இரா.முருகன், சுகுமாரன் ஆகியோர் மலையாள இலக்கியங்கள், சினிமாக்கள், நிகழ்வுகள் பற்றி அவ்வப்போது கதைக்கிறார்கள். பாவண்ணன் ஒருவர் மட்டும்தான் கன்னட இலக்கியங்களைப் பற்றிப் பேசுகிறார். (இதெல்லாம் இணையத்தில். அச்சுப் பத்திரிகைகளில் ஒருவேளை பலரும் இதைச் செய்யலாம். ஆனால் எனக்குக் காணக் கிடைப்பதில்லை.) ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார் என்று அவரது சிறுகதை/குறுநாவல் தொகுப்புகளில் போட்டிருந்தது. ஆனால் அவர் இணையத்தில் காணப்படும் தனது எழுத்துகளில் அதிகமாக மலையாளப் படைப்புலகத்தைப் பற்றியோ, சினிமாக்களைப் பற்றியோ எழுதுவது கிடையாது.

தெலுங்கு நிகழ்வுகளைப் பற்றி யாருமே எழுதுவது கிடையாது. ஹைதராபாதில் வசிக்கும், இலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் யாருமே இல்லையா? ஹிந்தி, மராத்தி, இன்ன பிற மொழிகள்? பெங்காலி? நிச்சயம் கொல்கொத்தாவில் இலக்கிய ஆர்வமுள்ள பல தமிழர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்? ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒரு தமிழராவது தமிழில் ஒரு வலைப்பதிவு அமைத்து தத்தம் மாநில மொழிகளில் என்ன நடக்கிறது - எழுத்தில், சினிமாவில் - என்று பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

மூன்று மொழிகள் (ஆங்கிலம் சேர்த்து) அறிந்தவர்கள் மிகவும் அபூர்வமானவர்கள். ஆச்சரியப்பட வைப்பவர்கள். அதிலும் நன்கு எழுதப் படிக்கக் கூடியவர்கள் பொறாமைப்பட வைப்பவர்கள்.

12 comments:

  1. Blogger பின்னூட்ட முறையில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன். அதனால் இங்கே சில மாறுதல்கள் செய்துள்ளேன். இது ஒரு சோதனைக்கான பின்னூட்டம்.

    ReplyDelete
  2. வாழ்த்து

    ReplyDelete
  3. //ஹைதராபாதில் வசிக்கும், இலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் யாருமே இல்லையா? //

    சுப்ரபாரதி மணியன் ஏதோ கொஞ்சம் தொட்ட ஞாபகம்! ரோசாவ..

    ReplyDelete
  4. இளம் கன்னடக் கவிஞர்களின் கவிதைகள், 'புதைந்த காற்று' என்று கன்னட தலித் எழுத்தாளர்களின் சிறுகதைத்தொகுப்பு, பிற பல தலித் படைப்புகள் (கவர்மென்ட் பிராமணன், etc)பாவண்ணணனின் மொழிபெயர்ப்பில் தான் வந்தன. அந்த பிறமொழி படைப்பாளிகளின் அந்தப் படைப்புகள் தருகிற பாதிப்பிற்கு சமனான ஈடான மதிப்புக்குரியவை ஒரு மொழிபெயபர்ப்பாளராய் பாவண்ணனுடைய உழைப்பும் தேடலும் (அவர் தேர்ந்தெடுக்கிற மொழிபொய்ப்புகள் தமிழில் முக்கியமானவை)சாகித்ய அகாதமி விருதுகள் எல்லாம் தமிழில் தரப்படுகிறபோது அது தேர்கிற நூல்களில் கேவலமான அரசியல்தான் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் பெறுமதியான வேலைசெய்கிற ஒருவரின் உழைப்பிற்கு அது வழங்கப்படுவது
    மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது!
    He deserves it!
    --மூன்று மொழிகள் (ஆங்கிலம் சேர்த்து) அறிந்தவர்கள் மிகவும் அபூர்வமானவர்கள். ஆச்சரியப்பட வைப்பவர்கள். அதிலும் நன்கு எழுதப் படிக்கக் கூடியவர்கள் பொறாமைப்பட வைப்பவர்கள்--
    'அவ் மொழியாளுமையை -இது போன்ற பெறுமதியான வேலைகளால்-பிரயோசனப்படுத்துவபவர்கள்' என்று வாசிக்கலாம்!
    -ஒரு பொடிச்சி

    ReplyDelete
  5. நண்பர் பாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது குறித்து பெருத்த மகிழ்ச்சி. எதையும் தீவிரமான அர்ப்பணிப்புடன் செய்யக்கூடியவர். பாண்டிச்சேரியில் வளர்ந்து வேலை நிமித்தமாக பெங்களூரில் வாழ்ந்துவரும் அவர் கன்னடம் கற்று மொழிபெயர்க்கத் தொடங்கி இன்று விருதும் பெற்றிருப்பது பெரும் சாதனை.

    சிக்கந்தராபாத்தில் வசிக்கும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தன் 'கனவு' சிறுபத்திரிகை மூலம் கொஞ்சம் தெலுங்கு இலக்கியத்தையும், சினிமாவையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். தமிழ் நாட்டிலேயே தெலுங்கை வீட்டு மொழியாகவும், தமிழை வீதி மொழியாகவும் கொண்டவர்கள் ஏகப்பட்டபேர் இருக்கிறார்கள். பாவண்ணனின் ஊக்கத்தைப் பார்த்து எனக்கும் படிப்பு முடிந்தபின் முறையாக தெலுங்கு கற்று மொழிபெயர்ப்புகளில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. என் ஊர் ஆந்திர எல்லைக்கருகில் இருப்பதாலும், தெலுங்கு கற்ற உறவினர்கள் பலர் ஆந்திரப் பகுதியில் வசிப்பதாலும் இருந்த வாய்ப்பு நாட்டை விட்டு வெளியேறியதால் கை நழுவிப்போனது. ஐஐஎஸ்சியில் 'மின்னல்' கையெழுத்துப் பத்திரிகையில் ஆந்திர நண்பர்களின் உதவியோடு குந்தூர்த்தி ஆஞ்சனேயலுவின் கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்த்ததோடும், SCTயில் நரசிங்கராவின் 'மட்டி மனுஷுலு' திரைப்பட விமர்சனமும் எழுதியதோடு என் முயற்சி முடிந்து விட்டது.

    மு. சுந்தரமூர்த்தி

    ReplyDelete
  6. சுப்ரபாரதி மணியன் இப்பொழுது திருப்பூரில் இருக்கிறார். கடைசியாக ஐந்து/ஆறு மாதங்களுக்கு முன்னால் அவரை திருப்பூரில் பார்த்தேன்.

    அவர் ஆந்திர மாநிலத்தை விட்டு தமிழகம் வசிக்க வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றன என்று அறிகிறேன்.

    ReplyDelete
  7. சுப்ரபாரதி மணியன் இப்பொழுது திருப்பூரில் இருக்கிறார். கடைசியாக ஐந்து/ஆறு மாதங்களுக்கு முன்னால் அவரை திருப்பூரில் பார்த்தேன்.

    அவர் ஆந்திர மாநிலத்தை விட்டு தமிழகம் வசிக்க வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றன என்று அறிகிறேன்.

    --பத்ரி

    ReplyDelete
  8. Vaazththukkal to Paavannan.

    Pudusseri Ramachandran received the award for Kulasekhara Azhwar translation from Tamil into Malayalam. Also, Sara Abubackar whose mother tongue is Malayalam, has been selected yesterday for the Kannada State Sahitya award, for her Kannada writings.

    Our congrats to them also.

    era.mu

    ReplyDelete
  9. கவிஞர் (மறைந்த) மீரா அவர்களின் நெருங்கிய நண்பரான ருத்ர துளசிதாஸ் (இளம்பாரதி) பல தெலுங்குச் சிறுகதைகளை மொழிபெயர்த்து சாகித்ய அகாதெமி பரிசு பெற்றிருக்கிறார். நா.கண்ணன்

    ReplyDelete
  10. கவிஞர் (மறைந்த) மீரா அவர்களின் நெருங்கிய நண்பரான ருத்ர துளசிதாஸ் (இளம்பாரதி) பல தெலுங்குச் சிறுகதைகளை மொழிபெயர்த்து சாகித்ய அகாதெமி பரிசு பெற்றிருக்கிறார். நா.கண்ணன்

    ReplyDelete
  11. தகவலுக்கு நன்ரி பத்ரி.பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகள் வரிசையாகப் படித்தேன்.அவரது ரசனை மிகவும் உயர்ந்தது.

    ReplyDelete
  12. கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழில் இருந்து வங்காளத்துக்கு மொழிப்பெயர்த்துள்ளார். இவர் திருக்குறளை வங்காளத்தில் இரண்டடி குறள்களாகவே எழுதியுள்ளார். இ பாவின் குருதிப்புனல் நாவலை வங்காளத்தில் மொழி பெயர்த்துள்ளார். அதற்காக மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகதமி விருதும் பெற்றுள்ளார். தமிழ் தாய் மொழியாக இருந்த போதிலும், வங்காளத்தைப் படித்துப் புலமை பெற்று தமிழ் படைப்புக்களை வங்கத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

    ReplyDelete