Sunday, February 27, 2005

தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004

தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004 பற்றி தானம் அறக்கட்டளை (மதுரை) - பொதுச்செலவுகள் வட்டமேசை (சென்னை) இரண்டும் இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கு சனிக்கிழமை அன்று மதுரையில் நடந்தது.

[மேற்படி சட்டத்தின் வரைவு நகல் இங்கு கிடைக்கிறது.]

நானும் கருத்தரங்குக்குச் சென்றிருந்தேன். அந்தக் கருத்தரங்கில் பலரும் பேசியதை அப்படியே ஆடியோவில் பதிவு செய்திருக்கிறேன். அதில் சிலவற்றை நேரம் கிடைக்கும்போது சுத்தம் செய்து வகை மாற்றி இங்கு சேர்க்கிறேன்.

கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள்: பொதுச்செலவுகள் வட்டமேசையின் உறுப்பினர்கள் பலர். இவர்கள் அனைவரும் முன்னாள் IAS. அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள். துறைச் செயலர்களாக இருந்தவர்கள். அடுத்து தானம் அறக்கட்டளையின் அலுவலர்கள். இவர்கள் நேரடியாக கிராமங்களில் பணியாற்றும் தொண்டூழியர்கள். அடுத்து பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள். அடுத்து அரசுப் பணியில் இருக்கும் அலுவலர்கள். விவசாயக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள். அதன் பிறகு நான்.

காலையில் முதலாவதாக மூன்று பேச்சுகள்:

* தானம் அறக்கட்டளையின் குருநாதன் மசோதாவின் வரைவு நகல் பற்றிப் பேசியது [Windows Media Audio, 16kbps encoded, 17.52 minutes, 2.14 MB file]
* பொதுச்செலவுகள் வட்டமேசையின் கே.வெங்கடராமன் பேசியது [WMA 16kbps, 29.01 min, 3.48 MB]
* கீதா கிருஷ்ணனின் உரையை A.M.சுவாமிநாதன் தமிழில் விளக்கியது [WMA 16kbps, 9.43 min, 1.17 MB]

இதைத் தொடர்ந்து வந்திருந்தவர்கள் அனைவரும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் உரையாடினோம். முதல் குழு கருத்தளவில் இந்த மசோதா எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விவாதித்தது. இரண்டாவது குழு - நான் இருந்த குழு - இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், செயல்பாட்டில் என்ன பிரச்னைகள் இருக்கும், எப்படிச் செயல்படுத்துவது என்பதைப் பற்றிக் கலந்தாலோசித்தது. (என் குழுவின் கலந்துரையாடலை ரெகார்ட் செய்துள்ளேன். அதிலிருந்து சில பகுதிகளை பின்னர் வெளியிடுகிறேன்.)

மதிய உணவுக்குப் பின்னர் இரு குழுக்களும் என்ன முடிவுக்கு வந்தனர் என்பதைப் பற்றி குழுத்தலைவர்கள் பேசினர். (இந்தப் பேச்சு சரியாக அமையவில்லை. ஆனால் இரண்டு குழுவினரும் உருப்படியாக சில பரிந்துரைகளை எழுதியுள்ளனர். இந்த எழுத்து மூலமான பரிந்துரைகள் சரியான முறையில் எழுதப்பட்டு அரசுக்கு, பாராளுமன்றத்தின் சப்-கமிட்டிக்கு அனுப்பப்படும். அந்தப் பரிந்துரைகள் தயாரானதும் PERT இணையத்தளத்தில் போடப்படும்.

மூன்றாவது அமர்வில் பக்கத்து கிராமங்களிலிருந்து வந்திருந்த பல பொதுமக்களும் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மசோதாவின் சில முக்கியமான ஷரத்துக்கள் தமிழாக்கமாகக் கொடுக்கப்பட்டது. Open house அமர்வாக இருந்தது. ஆளாளுக்கு 2-3 நிமிடம் பேச அவகாசம் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் இந்த வரைவு மசோதாவினை முழுமையாக வரவேற்றனர். ஆனால் அரசு அலுவலர்கள் மீதான அவநம்பிக்கை நிறையவே வெளிவந்தது. பஞ்சாயத்துத் தலைவர்கள் அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர். அரசு அலுவலர்கள் சிலர் நடைமுறைப் பிரச்னைகள் சிலவற்றை விளக்கினர். இப்படி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது தவறல்ல. நேரடியாகக் கலந்து பேச ஒரு வாய்ப்பு என்று அனைவரும் சந்தோஷப்படவேண்டும்.

எனக்கு இந்த மசோதாவின் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே - குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உள்ளது என்பதற்காக மட்டுமே - அவசர அவசரமாக வரையப்பட்ட மசோதா. குழப்பங்கள் நிறைந்தது. செயல்படுத்துவது கடினம் என்று தோன்றுகிறது. ஆகும் செலவுகளோ எக்கச்சக்கம். இந்தச் செலவுக்குத் தக்க பலன் கிடைக்குமா என்று தெரியவில்லை.

இப்படிக் கட்டாயமாக இவர்களை ஏதோ ஒரு வேலை செய்யவைப்பதற்கு பதில் பஞ்ச காலங்களில் இவர்களுக்கு இலவசமாக உணவு கொடுக்கலாம் என்பதே என் கருத்து. அதைப்பற்றி முந்தைய பதிவு ஒன்றில் எழுதியுள்ளேன். கிராமப்புற வருமானத்தைப் பெருக்க இந்தத்திட்டம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்றே நான் நினைக்கிறேன்.

நான் ஏற்கெனவே கிராம வருமானத்தைப் பற்றி எழுத ஆரம்பித்த தொடரில் என் கருத்தை வெளியிடுகிறேன். அது சிறிது தடைப்பட்டதன் காரணம் இந்த கருத்தரங்கு முடிந்து விடட்டும் என்பதே.

அடுத்த சில பதிவுகளில் மிகுதி ஒலித்துண்டுகளையும் சேர்த்து விடுகிறேன். மேற்கொண்டு விவாதத்துக்கு வசதியாக பொறுமையாக வரைவு மசோதாவினையும் படித்துவிடுதல் நலம். அதன் முக்கியமான விவரங்களை குருநாதனின் பேச்சு விளக்கியிருக்கும். இல்லாவிட்டால் நாளை குருநாதன் பேச்சை முன்வைத்து ஒரு பதிவைச் சேர்க்கிறேன்.

3 comments:

 1. எனக்கென்னவோ இது வியர்த்தமான வேலை என்று தோன்றவில்லை பத்ரி. சரியான உபயோகமான வேலைகளில் / தொழில்களில் இந்த man power உபயோகிக்கப்படும் பட்சத்தில் இது ஒரு ஆக்கப்பூர்வமான திட்டமாகவே இருக்கும். என்ன மாதிரி தொழில்களில் இவர்களுக்கு வேலை கொடுக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. சாலைகள் போடுவது ; கட்டிட வேலைகள்...??? தவிர, வேலை வாய்ப்பு கொடுக்கப்படுபவர்களின் திறமை, கல்வியளவு, பயிற்சி, அனுபவம்.... இப்படி பல விஷய்ங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு செய்லபாடு இருக்க வேண்டும். சகட்டு மேனிக்கு யாரோ - ஏதோ வேலை என்று இல்லாமல் தகுதியான பயிற்சி, தகுதியான வேலை என்ற ரீதியில் வாய்ப்புகள் தரப்பட வேண்டும். "பஞ்ச காலங்களில் இலவசமாக உணவு......" ஒரு தற்கால தீர்வாகதான் இருக்க முடியும் - symptomatic. பஞ்சகாலம் என்பது விவசாயத்தின் அடிப்படையில் வருவது. குறிப்பிட்ட சில காலம் மட்டுமே. ஆனால் கிராமப்புற வறுமைக்கு இயற்கை மட்டுமே காரணமல்ல. இயற்கை வஞ்சிக்காத நாட்களில் வறுமையில் வாடுபவர்களும் உண்டு. பணம் சம்பாதிக்க வழி இல்லாமல்.

  இந்த நிலையில் இப்படி வேலை என்று கொடுக்கும்போது இரண்டு முக்கிய பலன்கள் இருக்கின்றன. ஒன்று, உழைத்து சம்பாதிப்பதின் அருமை தெரியும். இலவசமாக உணவு கிடைப்பதைவிட, தன் உழைப்புக்கு கிடைக்கும் ஊதியம் நிச்சயம் மதிக்கப்படும். சுனாமியில் அடிபட்ட பலர் இலவச உணவைப் பெற தயங்கினர் என்பது செய்தி. அதற்கு பதிலாக வேலை கொடுங்கள் என்றுதான் அவர்களில் பெரும்பாலோர் விரும்பினர். மீனுக்கு பதிலாக தூண்டில் கொடுத்து சொல்லிக்கொடுக்கும் கதைதான். 100 நாள் வேலை செய்து சம்பாதித்த பிறகு, பலர் அந்தந்த தொழில்களில் தொடரவும் வாய்ப்பு இருக்கலாம். இரண்டு, இந்த 100 நாள் வேலையில் ஓரளவு ஏதாவது பயிற்சி கிடைக்கும் - குறைந்த பட்சம் ஒரு துறையில் ஆர்வம் வரலாம். சுயமாக தொழில் தொடங்கும் தன்னம்பிக்கை கூட வரலாம்.

  ஆனால் 100 நாள் முடிந்தவுடன் வீட்டுக்கு அனுப்படும்போதுளது இன்னும் சோக கதையாக இருக்குமே? இதற்கும் ஒரு மாற்று இருக்க வேண்டும். கற்றுக் கொண்ட தொழில்முறையில் சுயமாக தொழில் தொடங்க பயிற்சி / கடன் தொகை கொடுக்கலாம். அதேபோல் இன்னொரு பயமும் எழுகிறது. சம்பாதிக்கும் 100 நாள் சம்பளத்தை குடித்து தீர்க்காமல் இருக்க வேண்டும்! இதற்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யலாம்.

  அடிப்ப்டையில் நல்ல திட்டம் - ஆனால் நீண்ட நாள் பலன் தர வேண்டுமென்றால் சரிவர திட்டம் போட்டு திறமையாக செயல்படுவது முக்கியம்.

  உங்கள் குழுவில் முக்கியமாக என்ன மாதிரி குறைபாடுகள் / தீர்வுகள் பற்றி அலசினீர்கள்?

  அருணா

  ReplyDelete
 2. அருணா: எனது புதிய பதிவையும், முடிந்தால் மசோதா வரைவு நகலையும் ஒருமுறை படித்துவிடுங்கள். எழுத இன்னமும் நிறைய உள்ளது. நடைமுறைச் சிக்கல்கள் சில உள்ளன. அதை அடுத்து எழுதுகிறேன்.

  சிக்கல்கள் இருப்பதாம் இந்தத் திட்டம் கொண்டுவரப்படக் கூடாது என்று சொல்லவில்லை. சரியாக யோசிக்காமல் மசோதா வரைவு வந்துள்ளது. இதற்கான பணம் எங்கிருந்து வரப்போகிறது என்பது முதற்கொண்டு, இந்தப் பணம் எப்படிப் பட்டுவாடா செய்யப்படும் என்பதிலிருந்து பல்வேறு குழப்பங்கள். இதையெல்லாம் மசோதா வரைவு செய்பவர்கள் யோசிக்கவில்லை.

  நிதி அமைச்சகத்துக்கும், கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கும் சரியான உடன்பாடு இல்லை என்றும் தெரிய வருகிறது.

  ஒரு பக்கத்தில் நிதி அமைச்சகத்துக்கு நெருக்கடி ஒன்று உண்டு. அதுதான் Fiscal Responsibility and Budget Management Act, 2003. மற்றொரு புறம் Common Minimum Program.

  இரண்டையும் இன்று சிதம்பரம் எப்படி சரிக்கட்டப் போகிறார் என்று பார்க்கலாம்.

  --பத்ரி

  ReplyDelete
 3. Sir,
  Minimum wage rate in tamil nadu for agriculture work - rs.100 per day
  NREGAS will provide - 10,000 rs(100 days)
  So, does this mean with NREGA - BPL line is totally wiped out with a special"NREGA" eraser?

  BPL - Rs,7,000 per year(around 560 per month * 12)
  in effect, There are no BPLs in this country?

  ReplyDelete