Thursday, February 10, 2005

குட்கா மட்கா

சில மாதங்களாகவே குட்கா சமாச்சாரம் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் உள்ளது.

குட்கா என்பது பாக்குடன் சில மசாலா சமாச்சாரங்கள் கலந்த தூள். அத்துடன் புகையிலையும் கலந்துள்ளது. போதை வஸ்து. கிட்டத்தட்ட சிகரெட் பிடிப்பவர்களுக்கு அந்த நிகோடின் தேவை எப்படியோ, அதைப்போன்றே குட்கா வஸ்து உபயோகிப்பவர்களுக்கு அதன் தேவை எப்பொழுதும் இருந்தபடியே இருக்கும்.

பான் மசாலா என்றும் அழைக்கப்படும் இந்தப் பொருள்.

பெட்டிக்கடைகளில் முன் பாக்கெட் பாக்கெட்டாக கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் இந்த வஸ்து. இதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருப்பது மாணிக்சந்த் குட்கா.

சில வருடங்களுக்கு முன்னர் பல்வேறு மாநிலங்கள் (தமிழகம், மஹாராஷ்டிரம் போன்றவை) இந்த குட்கா சமாச்சரத்தை தத்தம் மாநிலங்களில் விற்பதைத் தடை செய்தனர். ஆனால் குட்கா கோஷ்டியினர் உச்ச நீதிமன்றம் சென்று இந்தத் தடையை எதிர்த்து வெற்றியும் பெற்றனர். இந்த வழக்கின் தீர்ப்புப்படி உச்ச நீதிமன்றம் குட்காவை ஓர் உணவுப்பொருள் என்றும், உணவுப்பொருளைத் தடை செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும், எனவே மாநில அரசுகளால் இந்தப் பொருளின் விற்பனையைத் தடை செய்ய முடியாதென்றும் சொன்னது. அதை ஏற்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழகத்தில் குட்கா விற்பனைத் தடையை நீக்கியது.

இந்தத் தடை அமலில் இருக்கும்போது கூட வெளியே தோரணம் கட்டித் தொங்கவிடாமல் உள்ளுக்குள்ளாக விற்பனை ஜரூராக நடந்த வண்ணமே இருந்தது. காகிதப் பொட்டலத்தில் கட்டி பாக்கெட் பாக்கெட்டாக விற்றுக்கொண்டுதான் இருந்தார்கள். இப்பொழுது தடை உடைந்ததும் மீண்டும் வெளியே விற்பனையாகிறது இந்தப் பொருள். சில கடைகளில் "18 வயது நிரம்பாதவர்களுக்கு புகையிலைப் பொருளை விற்பது குற்றம்" என்று மட்டும் எழுதி வைத்திருக்கிறார்கள். சிறுவர்கள் யாரும் இந்த வஸ்துவை உபயோகிப்பது போலத் தெரியவில்லை. உபயோகிப்பவர்கள் அனைவருமே பெரியவர்கள்தான் என்று தோன்றுகிறது.

சரி, அது கிடக்கட்டும், விஷயம் அதுவல்ல இப்பொழுது.

ரசிக்லால் மாணிக்சந்த் தாரிவால் என்பவர் இந்தியாவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவர். மேபாக் என்னும் விலை உயர்ந்த கார் இந்தியாவில் சமீபகாலத்தில் விற்பனைக்கு வந்தபோது அதில் முதலாவதை வாங்கி தன் மகளுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தவர்.

ரசிக்லால் மாணிக்சந்த் தாரிவாலுக்கும் அவரது தொழில் பார்ட்னர் ஜக்தீஷ் ஜோஷி என்பவருக்கும் இடையில் பல வருடங்களுக்கு முன்னர் தொழில்முறையில் ஏதோ பிரச்னை. மும்பையில் இதுபோன்ற பெரும் பணக்காரர்களுக்கிடையே ஏதேனும் பிரச்னை என்றால் நேராக நீதிமன்றங்கள் மூலமோ, அல்லது டிரிப்யூனல் மூலமோ தீர்த்துக் கொள்ள மாட்டார்கள் போல. ஏதாவது கறுப்புப் பணம் பிரச்னையாகக் கூட இருக்கலாம். அதனால் நியாய வழியில் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளாமல் தாதா தாவூத் இப்ராஹிமை மத்தியஸ்தத்துக்குக் கூப்பிட்டு இருக்கின்றனர்.

தாவூத் இப்ராஹிமும் பிரச்னையைத் தான் தீர்த்து வைப்பதாகவும், அதற்கு விலையாக இப்படி சூப்பர் லாபம் கொழிக்கும் குட்கா தொழிலை தன் கூட்டாளி ஒருவனுக்கும் சொல்லிக்கொடுத்து அவனுக்கு குட்கா தொழிற்சாலை வைக்க உதவ வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். சாத்தானிடம் போய் தலையைக் கொடுத்தால்? சொன்னபடி செய்ய வேண்டியதுதான். பிரச்னை முடிந்ததும் இரண்டு பார்ட்னர்களும் பிரிந்தனர். ஜோஷி 'கோவா குட்கா' என்று மற்றுமொரு குட்கா கம்பெனி வைத்தார். அத்துடன் ஜோஷியும் தாரிவாலும் சேர்ந்து திருவாளர் தாவூத் இப்ராஹிமின் தம்பிக்கு கராச்சியில் குட்கா கம்பெனி வைத்துக் கொடுத்தனர். இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் மஹாராஷ்டிரா காவல்துறையினர்.

மும்பையில் உள்ள ஒரு நீதிமன்றம் தாரிவால், ஜோஷி இருவரையும் காவல்துறை முன் வரவேண்டும் என்று வாரண்ட் அனுப்பியது. இதைத் தெரிந்து கொண்ட இருவரும் நேராக துபாய் போய் உட்கார்ந்து கொண்டார்கள். (அதுதான் தாவூதின் தேசமாயிற்றே!) மஹாராஷ்டிரா காவல்துறை இண்டெர்போலைத் தொடர்பு கொள்ள, அவர்கள் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். தாரிவாலைக் கேட்டால் அவர் தான் வெளிநாட்டில் இல்லாவிட்டால் தன் என்.ஆர்.ஐ ஸ்டேடஸ் போய்விடும் என்கிறார். தனக்கும் தாதாக்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்கிறார்.

இதற்கிடையில் ஒவ்வொரு வருடமும் பாலிவுட் ஹிந்திப் படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா ஃபில்ம்ஃபேர் விருதுகள் என்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. அதுவும் இந்த வருடம் இந்த விருதுகள் தொடங்கிய ஐம்பதாவது வருடம்! கடந்த சில வருடங்களாக மாணிக்சந்த் குட்கா இந்த விருதுகளை ஸ்பான்சர் செய்து வந்தது. இந்த வருடம் இதுதான் சாக்கு என்று மாணிக்சந்த் ஸ்பான்சர்ஷிப்புக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

ஃபில்ம்ஃபேர் பத்திரிகை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையை உள்ளடக்கிய பென்னெட் அண்ட் கோல்மேன் குழுமத்தைச் சேர்ந்தது. அத்துடன் இந்த பத்திரிகையில் சிறுபான்மைப் பங்காளி பிபிசி! ஷிவ்சேனா முதற்கொண்டு மும்பையில் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே இம்முறை விருதுகள் நிகழ்ச்சிக்கு மாணிக்சந்த் ஸ்பான்சர்ஷிப் விலக்கிக்கொள்ளப்பட்டது என்று அறிவித்திருக்கிறார்கள்.

6 comments:

 1. >குட்கா என்பது பாக்குடன் சில மசாலா சமாச்சாரங்கள் கலந்த தூள். அத்துடன் புகையிலையும் கலந்துள்ளது. போதை வஸ்து>>>

  I object the last two words my lord.

  By: para

  ReplyDelete
 2. >பான் மசாலா என்றும் அழைக்கப்படும் இந்தப் பொருள்>>>

  தகவல் பிழை. பான் மசாலா வேறு. குட்கா வேறு. குட்காவின் உள்ளடக்கம் சிற்றிதழ்களைப் போன்றது. பான் மசாலா என்பதோ, குமுதம், குங்குமம் போன்ற இதழ்களின் உள்ளடக்கத்தை ஒத்தது.

  By: பாரா

  ReplyDelete
 3. சரி, இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கமாகத்தான் சொல்லுங்களேன்? நான் என்ன சாப்பிட்டா பார்த்திருக்கிறேன்?

  ReplyDelete
 4. குடை நட்டு, கையகல வெற்றிலையில் பலவண்ணப் பொடிகள் தூவி பீடாவென சுருட்டிக்கொடுப்பதை வாங்கி மென்று துப்பும் மார்வாரிப் பெண்களையும் பிற கல்லூரிப் பெண்களையும் இலக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்டது பான் மசாலா. இதில் புகையிலை கிடையாது. ஆனால் கமகமவென்று மணக்கச் செய்யும் ஏலம், கிராம்பு போன்ற வாசனாதி திரவியங்களும் காரத்துக்கெனச்சில எசன்ஸுகளும் கொஞ்சம் எலுமிச்சைச் சாறும் சேர்க்கப்படும். ஆனால் எதிர்பார்த்த அளவு மகளிர் வோட்டு இதற்குக் கிடைக்காததைவைத்து, பீடா ப்ரியைகளான பெண்களுக்கும் கொஞ்சமேனும் புகையிலை வாசம் வேண்டியிருக்கிறது எனக் கண்டறிந்தார்கள். ஆகவே பான் மசாலா என்பது ஒரு ஃபெய்லியர் மாடல் ஆகிப்போனது.

  இத்தருணத்தில் மாணிக்சந்த் குட்கா இரண்டரை ரூபாயாக விலை இருந்தது. அதன் ஆதிக்கத்தை ஒழிக்கும்பொருட்டு பான்பராக் காரர்கள் ஒரு ரூபாய்க்கு குட்காவைக் கொண்டுவந்தார்கள். (விரைவிலேயே ஒன்றரை ஆகிவிட்டது.) மாணிக்சந்தின் கலவைக்கு நேரெதிரான கலவை+சுவை. ஆனால் காட்டத்தில் அதைக்காட்டிலும் தீவிரம் என்பதே பான்பராகின் பிசினஸ் மாடல். இவர்கள்தான் முதலில் அதிகளவு புகையிலைப் பங்களிப்பை உள்ளே சொருகியது. பல லட்சக்கணக்கானோர் பான்பராகின் ரசிகர்களானார்கள். பாக்கு+ஏலக்காய்+எலுமிச்சை+புகையிலை+மெந்தால்+சில வாசனை திரவியங்கள்+கொஞ்சம் சுண்ணாம்பு என்பதே இதன் உள்ளடக்கம். (பல்லிவால் என்ற குற்றச்சாட்டு எழுந்தது எதிரிகளின் திட்டமிட்ட சதி.)

  கிட்டத்தட்ட எல்லா குட்காக்களிலும் இதே உள்ளடக்கம் தான் எனினும் கலவை விகிதத்தில் மாறுபாடு உண்டு. மாணிக்சந்தில் புகையிலை மற்றும் சுண்ணாம்பின் அளவு குறைவாக இருக்கும். அதன் வழித்தோன்றலான சிம்லாவிலும் அப்படியே. இதுவே பான்பராக் மற்றும் அந்தக் கழகத்தின் போலிகளாக உதித்த ஃபூல்சந்த் சூப்பர்,ஸ்டார் சூப்பர், பூல்சந்தின் போலியான பூலாச்சந்த் சூப்பர், இகிடி போன்றவற்றில் காரம் சற்றே அதிகம்.

  இன்றைய தமிழ்ச்சூழலில் ;-) பான்மசாலாவின் காலம் வழக்கொழிந்துபோய்விட்டது. ஆனால் ஆதிமூலமான குடைநட்ட பீடாக்கடைகள் இன்னும் உள்ளன. அங்கு வரும் பெண்கள் கூட 120, 64, 333 போன்ற புகையிலைச் சேர்க்கை உள்ள பீடாக்களையே பெரிதும் விரும்பி வாங்குகிறார்கள்.

  இப்போதைக்கு இவ்வளவு எழுதத்தான் நேரம் உள்ளது. விரிவான அறிக்கை வேண்டுமெனில் பிறகு தனிமடலில் தருகிறேன்.

  By: பாரா

  ReplyDelete
 5. பிரேமி என்ற பாலசன்தரின் சீரியல் போதை மருந்துக்கு எதிராகக் குரல் அழுத்தமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் விளம்பர இடைவேளையில் பெரிதும் தூக்கி நிறுத்தப்பட்டது மாணிக்சந்தின் பான் மசாலாதான். என்னே பாலசந்தரின் இரட்டை நிலை?
  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 6. குட்கா பான் மசாலா வகையராக்களினால் புற்றுநோய் ஏற்படுவதை அறிவோம். இந்தியாவில் புற்றுநோய் கணக்கு இதுவரை இதுவரை சரிவர பதிவு செய்யபடவில்லை. உலக சுகாதார மையத்தின் துணையுடன் இந்தியாவின் முதல் புற்றுநோய் கணக்குப்பதிவு இன்னும் சில மாதங்களில் வெளியிடப்பட உள்ளது (http://www.canceratlasindia.org). இதைப்பற்றி பிரிட்டானிய மெடிக்கல் ஜர்னல் (http://bmj.bmjjournals.com/cgi/content/extract/330/7485/215-c) 2 வாரங்களுக்கு முன்னே ஒரு செய்தி வெளியிட்டது. இதன்படி உலகிலேயே புற்றுநோய் கணக்கில் முதலிடம் வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெரும்பாலான புற்றுநோய்கள் இளவயதில் தாக்குவதில்லை. ஆனால், இந்த புகையிலை வஸ்துக்களை உபயோகிக்கும் பலர் இளையதலைமுறையினர். வருந்தத்தக்க விஷயம் இது. இதைப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு இன்னும் அதிகமாகவேண்டும். இந்த நிலையில் குட்காவை உணவுப்பொருள் என நீதிமன்றம் கூறுவது கேலிக்கூத்து. உடனடியாக அரசு இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை மீண்டும் அணுக வேண்டும்

  By: Ravikumar

  ReplyDelete