சென்ற வருடம் மத்திய அரசு குறைந்த சக்தி பண்பலை வானொலி அலைவரிசைகளை கல்வி நிலையங்களுக்கு சமுதாய வானொலிகளுக்காக அளிக்க முன்வந்தது. அதையொட்டி இந்தியா முழுவதுமாக கிட்டத்தட்ட 50 கல்வி நிலையங்கள் விண்ணப்பித்திருந்தனவாம். அதில் பத்து நிலையங்களுக்கு முதலில் அனுமதி கிடைத்ததாகவும், அதில் அண்ணா பல்கலைக்கழகம் (காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், கிண்டி) முதலாவதாக பிப்ரவரி 2004-ல் வானொலி நிலையத்தை அமைத்ததாகவும், இந்த மாதத்துடன் ஒரு வருடம் நிறைவுபெறுவதாகவும் தினமணியில் செய்தி வந்திருந்தது.
தினமும் ஒரு மணிநேரம் மட்டும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வந்த இந்த நிலையம் இப்பொழுது கிட்டத்தட்ட 1,000 மணிநேரங்கள் நிகழ்ச்சிகளைக் கைவசம் வைத்துள்ளது என்று படித்தேன்.
சமுதாய வானொலி நிலையங்கள் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் ஆரத்தில் கேட்கக் கிடைக்குமாம். நான் இதுவரை இவர்கள் உருவாக்கிய நிகழ்ச்சியைக் கேட்டதில்லை. இம்மாதிரி ஒரு வானொலி நிலையம் இருப்பது என் வீட்டில் (கோபாலபுரத்தில்) ட்யூன் செய்யும்போது வந்ததில்லை. (கிண்டியிலிருந்து பத்து கிலோமீட்டருக்குள்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்!)
இரண்டு வாரங்களுக்கு முன்னர் எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி உருவாக்க இருக்கும் சமுதாய வானொலி நிலையத்துக்கு ஒரு பேட்டி தர சென்றிருந்தேன். இந்த நிலையம் என் வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகத்தான் உள்ளது. இன்னமும் நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பு ஆரம்பிக்கவில்லை.
நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களிடம் தமது நிகழ்ச்சிகளை ஒலியோடை வடிவில் இணையத்தில் போடச் சொன்னேன். செய்வார்களா என்று தெரியவில்லை. எனது நிகழ்ச்சியை wav வடிவத்தில் எடுத்து வந்துள்ளேன். நிகழ்ச்சி ஒலிபரப்பானதும் இங்கே wma வடிவில் சேர்க்கிறேன் (25 நிமிட நிகழ்ச்சி கிட்டத்தட்ட 1 MB வருகிறது).
சமுதாய வானொலிகள் "எப்பொழுதும் சினிமா மட்டுமே" என்ற ரேடியோ மிர்ச்சி, சூர்யன் எஃப்.எம் நிலையங்களுக்கு நல்ல மாறுதலாக இருக்க முடியும். நிறையக் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் இருக்கலாம். நல்ல விவாதங்கள் இருக்கலாம். இவ்வாறு உருவாக்கப்படும் நிகழ்ச்சிகள் காப்புரிமை என்று சிக்கல்கள் எதிலும் மாட்டாமல் பொதுக்களனுக்கு வரும். குறுந்தகடுகள் வழியாகவோ, இணையம் வழியாகவோ நாடு முழுவதும் பரவ முடியும்.
ஆனால் கல்வி நிலையங்கள் அரசுகளுக்கு எப்பொழுதுமே பயந்திருப்பதால் தீவிரமான அரசியல் சார்ந்த, அல்லது அரசியல்வாதிகளையோ, அரசு இயந்திரங்களையோ குறை சொல்லக்கூடிய வகையில் எந்த நிகழ்ச்சிகளும் இருக்க வாய்ப்பில்லை.
அதே சமயம் சமுதாய வானொலி நிலையம் அமைக்கக்கூடிய வகையில் எந்தவொரு கல்வி நிலையமும் கிராமப்புறங்களில் கிடையாது. எனவே இன்றைய நிலையில் பாதிக்கப்படுபவர்கள் மீண்டும் கிராமப்புற மக்களே. மத்திய அரசு இதுவரை சுய உதவிக் குழுக்கள், தொண்டார்வ நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற பிற லாபநோக்கில்லாத நிறுவனங்களுக்கு சமுதாய வானொலி அமைக்கும் உரிமையை மறுத்துள்ளது.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
5 hours ago
No comments:
Post a Comment