Saturday, February 19, 2005

RSS சுதர்சன் சந்திப்பு

நேற்று மாலை RSS சரசங்கசாலக் K.S.சுதர்சன் சென்னை ம்யூசிக் அகாடெமியில் பேசினார். கிட்டத்தட்ட 1000 பேர் (அழைப்பின் பேரில்) வந்திருந்தனர்.

நானும் ஓரளவுக்குத் திறந்த மனத்துடன் சென்றிருந்தேன்.

மொத்தத்தில் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் நல்லதாக சொல்லக்கூடியதாக இருந்தன. அவை:

1. கூட்டம் சரியாக மாலை 6.30க்கு சொன்னது சொன்னபடி ஆரம்பித்தது. சரியாக 8.30க்கு - ஒரு நிமிடம் கூட தாமதம் இல்லாமல் - முடிந்தது.
2. கடைசியாகப் பாடிய "ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்திஹி" வரிகள்.

சுதர்சன் ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசியதன் தலைப்பு "The fundamental transformation that is taking place in Bharath and around the world and the role of RSS in it."

இந்தப் பேச்சை சுருக்கமாகச் சொல்வதென்றால்

* முதலில் ஆன்மிக மம்போ ஜம்போ ("மேற்கில் உடல், மனம், புத்தி என்று மூன்றைத்தான் சொல்கிறார்கள். இந்திய ஆன்மிக வழியில் ஆன்மா என்று நான்காவது உள்ளது." "மேற்கத்திய நாகரிகங்கள் உயர்ந்த நிலைக்குச் சென்றிருந்தாலும் கீழே வீழும்போது மீண்டும் எழுந்திருக்க முடிவதில்லை. ஆனால் இந்தியா கடந்த 5000 வருடங்களில் மூன்று முறை அதல பாதாளத்தில் விழுந்தும் மீண்டும் எழுந்து நிற்கிறது. காரணம் இந்திய நாகரிகத்தின் பலம் அதன் வேர்களில் உள்ளது.")

* அடுத்து வரலாற்று மம்போ ஜம்போ ("மஹாபாரதம் 5128 (அந்த மாதிரி ஏதோ நம்பர் சொன்னார்) வருடத்துக்கு முன்னால் நடந்தது. புத்தர் வந்தார், பின் ஷங்கரர் 2500 ஆண்டுகள் முன்னால் வந்தார்..., பின் முஸ்லிம்கள் படையெடுத்தனர், பின் வெள்ளைக்காரர்கள்... பின் ஆகஸ்ட் 15, 1947 இந்தியாவின் கறுப்பு தினம், அன்றுதான் பாரதம் இரண்டாகத் துண்டாடப்பட்டது...." என்றெல்லாம் வரலாற்றை விளக்கியதோடு மட்டுமில்லாமல் "இந்தியர்கள் உலகெங்கிலும் தங்கள் கொள்கைகளைப் பரப்பியிருந்தனர். சவுதி அரேபியே என்பது அரவஸ்தான் என்று அங்குள்ள "இந்தியர்களால்" அழைக்கப்பட்டது - குதிரைகள் இருப்பதால். பின் அரேபியா என்றானது" போன்ற கதைகளையும் சொன்னார்.)

* அடுத்து அரசியல் மம்போ ஜம்போ ("Javaharlal Nehru confided that he was the last Englishman to rule India", "இந்தியா விடுதலைக்குப் பின் அழிவதற்கு முதல் காரணம் ஜவஹர்லால் நேஹ்ரு" etc. இன்றைய இந்தியாவின் வில்லன்கள் கம்யூனிஸ்டுகள், லாலு பிரசாத் யாதவ் (இவரை மட்டும் பெயர் குறிப்பிட்டுச் சொன்னார்), மாவோயிஸ்டுகள். இந்தியாவின் ஹீரோக்கள் சாவர்கார், காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ஹெக்டேவார், குருஜி...)

* அடுத்து சமூக மம்போ ஜம்போ ("ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. யாரும் குடும்பத்துக்கு ஒன்றிரண்டு பிள்ளைகள் போதும் என்பதைக் கேட்காதீர்கள். ஹிந்துக் குடும்பம் ஒவ்வொன்றும் மூன்றுக்கும் அதிகமாக பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், சமீபத்தில் பெண்கள் மட்டும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் இதைத்தான் நான் அவர்களுக்குச் சொன்னேன்." (அரங்கம் முழுவதும் கைதட்டல்))

* எதையெடுத்தாலும் மேல்நாட்டு சதி என்றார். காஞ்சி சங்கராச்சாரியா மீதான பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே அந்நிய நாட்டு சதி. ஆங்கிலப் பத்திரிகைகள் RSS பற்றி மோசமாக எழுதுவதற்குக் காரணம் - அவர்களுக்கு அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் பணம் கொடுக்கின்றன. தெஹெல்காவில் வந்திருந்த அமெரிக்க கிறித்துவ மத போதகர்களின் ஜோஷுவா-1, ஜோஷுவா-2 திட்டங்களைப் பற்றி தீவிர விளக்கம் கொடுத்தார். முஸ்லிம்களை விட கிறித்துவர்களையே அதிகம் திட்டினார். ஜார்ஜ் புஷ் குடிகாரனாக இருந்தவரை மதபோதகர் பில்லி கிரஹாம் காப்பாற்றியதால் இன்று born again christian புஷ் அமெரிக்க கிறித்தவ மத போதகர்களுக்கு $80 பில்லியன் வரி விலக்கும், $2 பில்லியன் மான்யமும் அளித்திருப்பதாகச் சொன்னார். CIA ஆதரவுடன் அவர்களும் இந்தியாவை மதம் மாற்றப்போவதாக தெஹெல்காவில் வந்த கட்டுரையை அப்படியே வரி விடாமல் ஒப்பித்தார். போப்பையும் விட்டுவைக்கவில்லை.

* பாஜக மீதும் குற்றச்சாட்டு. இப்பொழுது மீண்டும் சரியான பாதைக்கு வருவதைப் போலத் தோன்றுகிறது என்றார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த இல.கணேசன் போன்ற பாஜக பெரியவர்கள் தம் இருக்கைகளில் நெளிந்தார்களா என்று தெரியவில்லை.

பெண்கள் மீதான gratuitous comments அதிகமாக இல்லை. ஒரே இடம்... புத்த மதம் ஏன் அழிந்தது என்றால் அவர்கள் பெண்களையும் பிக்குணிகளாக சேர்த்துக்கொண்டதுதான்... என்பது மட்டுமே. சிலர் ஷங்கரரை "பிரச்சன்ன பவுத்தர்" என்றார்கள் என்றார். அது உண்மை. ஆனால் அது அவரை கேவலப்படுத்துவதற்காக சொன்னது, பெருமைப்படுத்த அன்று.)

தவிர்த்து தனியாகப் பார்க்கும்போது அவர் சொன்ன "ஜனக மஹாராஜா - அஷ்டாவக்ரன்" பற்றிய கதை நன்றாக இருந்தது.

இந்தக் கூட்டம் எனக்கு திகிலூட்டக் கூடியதாக இருந்ததற்குக் காரணம் - இந்தியாவில் RSS-ல் உள்ள பலரும் இவற்றை அப்படியே நம்புவதுதான். இப்பொழுது மொத்தமாக இந்தியா முழுவதும் 50,000 ஷாகாக்கள் உள்ளனவாம்.

19 comments:

  1. // மொத்தத்தில் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் நல்லதாக சொல்லக்கூடியதாக இருந்தது. அவை:
    1. கூட்டம் சரியாக மாலை 6.30க்கு சொன்னது சொன்னபடி ஆரம்பித்தது. சரியாக 8.30க்கு - ஒரு நிமிடம் கூட தாமதம் இல்லாமல் - முடிந்தது.
    2. கடைசியாகப் பாடிய "ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்திஹி" வரிகள்.//


    இரண்டாவது விஷயம் குறித்து சொல்ல தேவையில்லை. நகைச்சுவையாக எடுத்துகொள்ளலாம். முதலில் சொல்லப்படும் நேரந்தவறாமை ஒழுக்கம் இன்ன பிற, அதில் நாசிக்கள் இன்னும் சிறப்பாக செயலாற்றினார்கள். ஒருவேளை நாசிக்களிடம் இருக்கும் ஒரு நல்ல விஷயமாக அதை சொல்லப்பட கூடுமெனில், நோ கமெண்ட்ஸ்! ரோ..வ..

    ReplyDelete
  2. அசதோமா சத் கமய
    தமசோமா ஜ்யோதிர் கமய
    ம்ருத்யோமா அம்ருதம் கமய
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

    ப்ருஹதாரயண்யஹ உபனிஷத்தின் இந்த வரிகளுக்கு மதம், இனம், ஆத்திகன் - நாத்திகன் விலக்குகள் இல்லை.

    பொய்மையிலிருந்து வாய்மைக்கு
    இருளிலிருந்து வெளிச்சத்துக்கு
    மரணத்திலிருந்து நிலைத்த தன்மைக்கு
    (எம்மை வழிநடத்திச் செல்க)
    அமைதி, அமைதி, அமைதி.

    பரம்பொருளை நம்புகிறவர் பரம்பொருளுக்கும், நம்பிக்கையில்லாதவர் தன் மனசக்திக்கும் விடுக்கும் வேண்டுகோள் இது.

    எல்லோருக்கும் பொதுவான கனமும் கம்பீரமும் கலந்த வரிகள் இவை.

    ஆர்.எஸ்.எஸ்ஸ¤க்கு மட்டும் இல்லை, உலகக் குடிமக்கள் எல்லோரும் நம்பிக்கையும் நேசமுமாக இதைச் சொல்லலாம். டி.எஸ்.எலியட் 'பாழ் நிலம்'கவிதையில் பெருமையோடு எடுத்து ஆண்டதுபோல.

    era.murukan

    ReplyDelete
  3. முதல் பின்னூட்டத்தினை வழிமொழிகிறேன். இரண்டாம் வரி நீங்கலாக.

    இந்த பயம் நிஜமான, நியாயமான பயம். உலகமெங்கும், இஸ்லாமிய தீவிரவாதத்தை விரட்டுகிறேன் என்கிற பெயரில், அமெரிக்கா, அடிப்படைவாத கிறிஸ்துவத்தை முன்வைக்கிறது. "உண்மை"யில் படித்தது, மனிதர்களின் பரிணாம வளர்ச்சி, என்கிற டார்வினின் கோட்பாட்டை அமெரிக்க பள்ளிகளில் விரிவாக சொல்ல தடை விதிக்கப் பட்டிருக்கிறது. காரணம், அவர்கள் கடவுள், ஆதாம் ஏவாளின் மூலம் மனிதர்களை படைத்தார் என்கிற ஒற்றை சொல்லாடலை முன்னிறுத்தி வைப்பது. டெஹல்காவில் உள்ள விசயங்களின் உண்மை நிலை வேறாக இருக்கலாம். என்னிடத்தில் சான்றுகள் இல்லை. ஆனால், ட்சுனாமி பாதிப்பிற்குபின் சில இடங்களில் மதமாற்றம் பற்றிய சலசலப்புகள் எழுந்து அடங்கியிருக்கின்றன.

    எந்தளவிற்கு நாம் இந்து அடிப்படைவாதத்திற்கு பயப்பட வேண்டுமோ, அதே அளவிற்கு கிறிஸ்துவ/இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் பயப்படும் நிலையில் தான் இருக்கிறோம். நீங்கள் உங்களின் முந்தைய பதிவில் பதிந்திருந்த ஆப்ரிக்க உதாரணம் வேறுவகையில் பயங்கரமாக ஆப்ரிக்க நாடுகளில் காட்சியளிக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு ஆறுதலும், மருந்தும் தருகிறேன் என்கிற பெயரில் உள் நுழைந்த அமெரிக்கர்கள், ஒட்டு மொத்தமாக அங்கிருக்கிற பழங்குடி மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற சொல்லி ஆசை காட்டி டாலராலும், ஜீன்ஸாலும் அடிக்கிறார்கள். உலகின் மிகப் பழைமை வாய்ந்த சில தொல்குடிகள் அடியோடு அழிக்கப்படும் ஆபத்து இதிலுண்டு.

    ஓஸாமா பின் லேடன் எவ்வளவு மூடத்தனமாக இஸ்லாமை முன்வைத்து வாதம் புரிகிறாரோ அதைவிட மும்மடங்கு பயங்கரவாதத்தை, அடிப்படைவாதத்தை, புஷ்ஷின் அரசாங்கம் முன்னெடுத்து செல்கிறது.

    கடவுளின் இருப்பினை பற்றிய சந்தேகங்களை தாண்டி, எனக்கு நிறைய கடவுள்களை நினைத்து பாவமும், பரிதாபமும் வருகிறது. இனி கடவுள்கள் (இருப்பார்களேயானால்?!!) அவர்களின் பிள்ளைகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவாவது தரிசனம் தரவேண்டிய கட்டாயங்களிலிருக்கின்றன.

    அடிப்படைவாதம் எந்த மதத்தினை முன்வைத்து பேசினாலும், முறியடிக்கப் படவேண்டியதே. ஆனாலும், ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும். சிந்தாந்தம் என்கிற விசயத்தை அழகாக கைக்கொண்டு, மனித மனங்களை மாற்றும் இவர்கள், இந்தியாவின் பல்வேறு பொருட்கள், சேவைகளுக்கு விற்பனை முகவர்களாக இருந்து விற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    - நாராயணன்

    ReplyDelete
  4. //மம்போ ஜம்போ//

    'தலித் மம்போ ஜம்போ'
    தலித்துகளைப் பற்றி எதுவும் பேசவில்லையா? நல்லது. சில சமயம் அவர்கள் சொல்லுகிற நம்பர்கள் ரொம்ப ஆச்சர்யமாய் இருக்கும். ஆதிக்குரங்கு தமிழ்க் குரங்கு எழுதும் அறிவிஜீவிகள், குருசேத்திரம் சரியாக 9312 (அதுமாதிரி) வருடங்களுக்கு முன் நடந்த வரலாற்றைப் பற்றி எதுவுமே எழுதுவதில்லை என்பது கொஞ்சம் ஆச்சர்யமானதுதான்.

    நான் சில வருடங்கள் ஆர்.எஸ்.எஸ் ஷாக்காளை, அதன் மேல் மட்ட தலைவர்களை அருகில் இருந்துபார்க்கும் பாக்கியம் பெற்றேன். அதன் அரசியல் தனி.

    நன்றி.

    தங்கமணி

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன் தங்கமணி, என்ன, இந்தியாவில் ஷாகாக்கள், பாகிஸ்தானில் மதராஸாக்கள், அமெரிக்காவில் சர்ச்சுகள்

    - நாராயணன்

    ReplyDelete
  6. when bush declared war on terrorism they supported it thinking that it would do harm to muslims and islam.but they did not realise at that time that bush was a fundamentalist as well.so RSS is a fundamentalist organisation which is unable to take a rational policy against the two other fundamentalisms.and rss knows that a section of bjp does not want to push the hindutva agenda too far as pushing that would
    cost votes.so they are unable to influence bjp
    beyond a point.this is true of vhp also.and on the population issue it is a lie.the nda govt.
    funded a study on this and this was done by
    a chennai based think tank cpsindia.org. and since then they are repeating it in all possible fora. but demographers have debunked that study.
    they are facing problems now as they never thought that congress would bounce back that too
    under sonias leadership.
    ravi srinivas

    ReplyDelete
  7. நாரயணன், நீங்கள் மத அடிப்படைவாதத்தை மட்டும் பார்க்கிறீர்கள். நான் இந்த நவீன இந்துமத அடிப்படைவாத்ததின் நோக்கம், இந்துமத்தை காப்பாற்றுவதாகவோ/பரப்புவதாகவோ பார்க்கவில்லை. சாதியத்தை மீளநிறுவதற்கும், மற்ற மதங்களை வெருட்டி (இந்தியாவில்) அதற்கு தப்பிச்செல்ல தலித்துகளுக்கு இருக்கும் வழியை அடைப்பதற்குமான முயற்சியாகவே பார்க்கிறேன். சர்சும், மதராஸாக்களூம் இவ்விதத்தில் வேறுபடுகின்றன. தலித்துகள் மதம் மறினாலும் அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற எச்சரிக்கைதான் குஜராத் கலவரம். எனவே இந்து அடிப்படைவாதமென்பது மற்ற மத்தினருக்கு எதிரானதல்ல மாறாக, பெண்களுக்கு, தலித்துகளுக்கு எதிரானது. எனவெ மற்ற மத அடிப்படைவாதங்களையும் இதையும் ஒன்றாக பார்க்கமுடியாது.
    -Thangamani

    ReplyDelete
  8. Fundamentalism and extremism can not be tackled by dividing or isolating the people, be it Muslims, Chiristians or Hindus. The world is not for one set or group or religious people. It is for everyone and everyone has the responsibility to tackle the deviant groups. The method of removing the extremism need to be defined.

    Akbar Batcha

    ReplyDelete
  9. பத்ரி தான் ஆர். எஸ். எஸ் கூட்டத்துக்குப் பார்வையாளராகச் சென்றதை ஒளிவு மறைவில்லாமல் கூறியதற்காக அவரைப் பாராட்டலாம்.

    ReplyDelete
  10. தங்கமணி, உங்கள் கருத்துகளோடு இணைகிறேன். ஆனாலும், அமெரிக்கர்கள் சொல்லும், கிறிஸ்துவ அடிப்படைவாதம் இதற்கு சற்றும் மிகைப்பட்டதல்ல. கரு கலைத்தல் என்பதை குற்றமாயும், பெண்கள் வேலைக்குப் போகாமல் 'சாக்லேட்' 'கேக்' தயாரித்து பொழுதை கழிப்பதாகவும் முன்வைக்கப்படும் விசயங்கள் அபாயகரமானவை.

    தலித், பெண்கள் நசுக்கப்படுவார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதேப் போல், உலகெங்கிலுமுள்ள பழங்குடிகள் அழிக்கப்படுவார்கள் என்பதையும், பழமைவாதத்தை பரப்புவதையும் மிகவும் அபாயகரமான நிகழ்வாக பார்க்கிறேன்.

    இந்தியாவில் 50,000 ஷாகாக்கள் இருந்தால், அமெரிக்கர்களை நினைத்துப்பாருங்கள் ? ஒரு நாட்டின் மீது போர் தொடுத்த காரணத்தை கூட நிறுவ இயலாமல், வறட்டு வாதங்களை பேசிக் கொண்டிருக்கும் தலைவனை, அமெரிக்கர்கள் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுத்தற்கு காரணங்கள் என்னென்ன? இந்தியாவை தாண்டி, RSS வேறெங்கும் அதிகமாக வம்பளக்க முடியாது. ஆனால், அடிப்படைவாத அமெரிக்கர்கள் ? எல்லா இடங்களிலும் ஊடுருவும் புகையைப் போன்றவர்கள்.

    உலகினை தலை கீழாக்கி அதன்மேல் சிலுவையை நிறுவும் முயற்சிகளில் புஷூம் அவர் அரசாங்கமும் காய்களை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள். இது வெறும் மதவாதம் மட்டுமல்ல. இன,மொழி, கலாச்சார, பண்பாடு,சிந்தனை, கற்பனை மீது வைக்கப்படும் யுத்தம். அவர்களுக்கு, எல்லா மக்களையும் ஜெராக்ஸ் காப்பி போல ஒரே சிந்தனையில் பார்க்க ஆசை. இது உடல்ரீதியாக குறிவைக்கப்படும் வன்முறைகளை விட மிகக் கொடிய வன்முறையாக எனக்கு தெரிகிறது. ஒரு தனிமனிதனின் சிந்தனையை ஊடுருவி, அவனை குற்றேவல் புரியும் அடிமையாக மாற்றுவது, மிகக் கொடுமையான, திட்டமிடப்பட்ட, வன்முறையானால் கட்டமைக்கப்பட்ட சூழ்ச்சி. இது மற்ற எல்லாவற்றையும் விட மிக மோசமானதும், கொடியதும் ஆகும். இதன் மூலம் ஒரு உலகளாவிய அடிமைத்தனத்தை முன்னிறுத்தி, அதன் மூலம் கட்டுக்கடாங்கா அதிகாரத்தையும், செல்வாக்கினையும் நிறுவக்கூடிய முயற்சி.

    "Fundamentalists have a loathing of democracy when it applies equally to others. One bitter fundamentalist had this to say, "democracy is the cause of all world problems...humans are under the law of God, and thus they CANNOT do anything they want or speak anything they wish to speak...democracy ultimately started with Satan...we can't rule ourselves. God must rule us...those who actually set up America, and drew up the laws were people who did not favor Christianity. Christians living during that time disagreed with those in power or rather the founding fathers. They saw them as ultra liberals, and of course, they were."மேற்சொன்னது தான் நான் அதிதீவிரமாய் எதிர்க்கும் கிறிஸ்துவ அடிப்படைவாதம். இதே வீரியத்துடனும், வேகத்துடனும் நான் RSS-ஐயும் எதிர்க்கிறேன்.

    சற்றே நேரம் கிடைக்கும்போது கீழ்க்காணும் சுட்டிகளை பாருங்கள். அடிப்படைவாத கிறிஸ்துவ இயக்கங்களும், குருமார்களும் எப்படி அமெரிக்க அரசினையும், அதன்மூலம் அதற்குட்பட்ட உலக நாடுகளின் அரசுகளையும் இயக்குகிறார்கள் என்பது தெரியவரும்.

    http://www.alternet.org/story/18259
    http://www.globalpolicy.org/empire/terrorwar/fundamentalism/2004/0708zuneschrist.htm
    http://www.thirdworldtraveler.com/New_World_Order/Gods_Warrior_Twins.html
    http://www.sullivan-county.com/news/
    http://www.geocities.com/cut2thechase_ca/index2.htm
    http://www.opednews.com/droubay_052204_armageddon.htm

    இந்த பதிவு அடிப்படைவாதத்தை முன்வைத்தே. இது எந்த கிறிஸ்துவ நண்பரையும் புண்படுத்த அல்ல.

    ReplyDelete
  11. there are two different issues here.resisting american hegemony, irresepective of whether president is from democractic party or republican party.resisting american hegemony and christian funadmentalism that supports it.democrats and other so called liberals often support american hegemony but they are not fundamentalists.but the bush variety all the more dangerous.it is the counterpart of islamic fundamentalism. rss advocates cultural nationalism which is equally dangerous.ravi srinivas

    ReplyDelete
  12. பத்ரி,
    என் பதிவிலிட்டதற்கு பாலாஜி-பாரியின் பதிவுக்கான என் விளக்கம். உங்களின் கருத்தினை அடிப்படையாக வைத்து அமைந்ததால், இங்கு வெட்டி, ஒட்டுகிறேன்.

    நான் என் பதிவிலிட்டது, இந்துத்தவ அடிப்படைவாதமில்லையென்றோ, கிறிஸ்துவ அடிப்படைவாதம், இந்துத்தவத்தை விட பெரிது என்பதோ இல்லை. உங்களின் கருத்துக்களோடு பல இடங்களில் ஒத்துப் போகிறேன்.மதம் பல்வேறு இனங்களை, மக்களை அடிமையாகவும், சுய மரியாதையற்றும் இருக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாக, பல்வேறு சாதிகள் உருவாகி, முன் ஆதிக்க சாதிகள் (பிராமணீயம் பேசுபவர்கள்), பின் ஆதிக்க சாதிகள் (தேவர்கள், நாயக்கர்கள் போன்றவர்கள்) என்று கூட்டம் பிரிந்து மக்களை இன்னமும் அழுத்தி வைத்து, சுரண்டி கொண்டிருக்கிறார்கள். தங்கமணி கூறியது போல, பல இடங்களில் இந்துத்வா மிக கொடுமையானதும், பயங்கரமானதுமே ஆகும். மதம் மாறிய பின்னும், நீங்கள் இலக்கில்லாமல் போக மாட்டீர்கள் என்பது தான் குரூரமான உண்மை.

    நகரங்களில் இது பெரியதாக தெரிவதில்லை என்று பெரும்பாலோர் கருத்து. ஆனால், நீறு பூத்த நெருப்பாய் நகரங்களிலும் இந்த சாதிப்பற்று இருந்துதான் வருகிறது. கொஞ்சம் இணைய மேட்சிங் தளங்களிலும், ஹிந்துவின் மேட்ரிமோனியல்களும் பார்த்தால் அழகாய் புலப்படும். ஆக, இது ஒரு தீவிரமான விசயம். என்னளவில், மதம் மாறுதல் என்பது ஒப்புமை கிடையாது. ஆனால், ரோசாவசந்த் சொல்லுவது போல், நான் தலித்துக்களைப் பற்றி பேசுதலும், ஒரு தலித் தன்னை முன்னிறுத்தி பேசுதலிலும் இருக்கும் ஆழத்தினை அறிந்திருக்கிறேன். அதனால், இதனைப் பற்றி பேசும்போதே ஒருவித மேல்தட்டு மேதாவிதனத்தோடுதான் நான் சொல்ல வேண்டியதை குற்ற உணர்ச்சியோடு ஒத்துக் கொள்ளும் தருணத்தில், "மதம் மாறுதல்" எவ்விதமான பாதிப்புகளை உருவாக்குகிறது என்பதையும் அறிய வேண்டும்.

    அடிப்படை உரிமைகளைக் கூட பெற இயலாமல் இருக்கும் அடித்தட்டு மக்களின் நிலைமையை மதம் மாறுதலினால் மட்டும் மாற்றிவிடமுடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இதை சொல்லும் தருணத்தில், வேறு ஒரு நிலையையும் இங்கு நான் எடுக்க வேண்டியதிருக்கிறது. திருமாவளவனின் பல்வேறு அரசியல் ஸ்டண்டுகளில் எனக்கு உடன்பாடு இல்லாதபோதும், திருமாவின் இருப்பு தமிழக அரசியலில் மிக அவசியம் என்கிற நிலையிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே பிரதிநிதியாய் திருமாவினை முன்னிறுத்த விரும்பாதபோதும், திருமாவினை விட்டால் யார் அவர்களுக்காக பேசுவார்கள் என்பதையும் எண்ணிப்பார்த்தல் அவசியம் என்று நினைக்கிறேன். (கிருஷ்ணசாமி பற்றி நிறைய அறிந்ததில்லை) ஆக, இதற்கான விடிவு, உள்ளிருந்து போராடி பெறுதலே என்பது தான். இந்த அனுமானம் தவறாக கூட இருக்கலாம்.

    முக்கிய மதங்களை தாண்டி, இந்தியாவில் புத்தமதத்தை தழுவியவர்கள் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்ற தெரிதல் இல்லை. புத்தம் என்பது மதமா ? இல்லை இந்தியாவில் இந்துமதத்தில் ஒரு பிரிவாக வைத்திருக்கிறார்களா ? என்பதை தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டுக் தெளிவேன்.

    தலித்துகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், பெண்களுக்காகவும் பேசும் தருணத்தில் இந்துமதத்தின் பார்வையாக சொல்லபடுவது மிக கோரமானது. அவர்களின் வாழ்க்கையினை எழுத்தில் பதிந்து புரிந்து கொள்ள இயலாது. ஆனால், உணவும், ஒரளவு மதிப்பும் தருவதாய் சொல்லி மதம் மாறினாலும், அவர்களே அறியாமல் ஒரு உலகளாவிய அடிமைத்தனத்திற்கு அவர்கள் அடிபணிகிறார்கள் என்கிற விசயம்தான் கிறிஸ்துவ அடிப்படைவாதம் பற்றிய விவரணைக்கு அடிகோலுகிறது.

    மேலும், என்னளவில் உணர்ந்த புரிதல் மிக சுலபமானது, கொஞ்சம் அரைவேக்காடுதனமாய் இருந்தாலும் கூட. எந்த மதமும் சக மனிதனை அடிமைப்படுத்தவோ, அழுத்தி மெறிக்கவோ சொல்லிக்கொடுப்பதில்லை. மதத்தினை முன்னிறுத்தி, மதத்தலைவர்களும், மத நூல்களின் சூட்சுமங்கள் தெரியாமல் பொத்தாம்பொதுவாக படித்துவிட்டு "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்ற ஒற்றைத்தன்மை சிந்தனையுடன் இருக்கும் மதவெறியர்களுமே காரணமாய் தெரிகிறார்கள். தலித்தினை கூட்டி சென்ற ராமானுஜரும் பிற முற்போக்கு சிந்தனையுள்ள ஆன்மிக வாதிகளும் இருந்த மதமிது. ஆகவே, மதத்தினை விட, மதத்தினை முன்வைத்து செயல்படும் கரசேவகர்களும், ஜிகாதிகளும், பார்ன் அகேய்ன் கிறிஸ்துவர்களுமே ஆபத்தானவர்கள்.

    ReplyDelete
  13. குஜராத்தில் காவிமயமாக்கல் தொடர்கிறது. நரேந்திர மோடியின் ஆட்சியில், எதிர்ப்புகளையும் மீறி மறைமுகமாக காவிமயமாக்கம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் தற்போதைய இன்னொரு அத்தியாயம் "லோக் சேவக்குகள்". குஜராத்தில் 3,000 பேர் லோக் சேவக்குகளாக பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் 2,500 சம்பளமாக தர இருக்கிறது. ஐந்து வருட பயிற்சி காலத்திற்கு பின் இவர்களை குஜராத் பொலீஸ் கான்ஸ்டபிள்களாக பதவி உயர்வு கொடுத்து பொலீஸில் சேர்த்துவிடுவார்கள். இந்த தேர்வினை தலைமையேற்று நடத்தும் திரு. யஷோதர் பட், தீவிர RSS ஆதரவாளர். சாதாரணமாக பொலீஸில் வேலை எடுப்பது ஒரு பொதுவான தேர்வுகள் நடத்தி , உடல், பல,மன, புத்தி கூர்மைகளை பரிசோதித்து தேர்வாகிற விசயம். ஆனால், இங்கு பின்புற வாசல் வழியாக 3,000 பேர்களை பொலீஸ் வேலைக்காக பயிற்றுவித்தலில், காவிகளின் உள்ளூணர்வு தெரியும். பின்னால் ஏற்படக்கூடிய அல்லது ஏற்படும் அபாயங்கள் இருக்கக்கூடிய மதமோதல்களில் பொலீஸ் எந்த பக்கமிருக்கும் என்பதை இப்போதே தீர்மானித்து விடுகிறது இந்த தேர்வு.

    இந்தியாவில் வாழ்க ஜனநாயகம்!!

    செய்தி: டெஹல்கா [ Khaki gets saffron makeover - The Narendra Modi governmetn is recruiting policemen through the back door ]

    ReplyDelete
  14. ஆனால், உலகில் பரவலாக இஸ்லாமிய பயஙரவாதம் குறித்தே பேசப்படுகிறது.(மற்ற பயங்கர வாதங்கள் குறித்து குறைவாகவே பேசப்படுகிறது. இத்தனைக்கும் முஸ்லிம்கள் பெயரால் நடக்கும் பயங்கர வாதங்களை முஸ்லிம் மத குருமார்களோ முஸ்லிம் அரசாங்கங்களோ ஆதரிப்பதாக த்தெரியவில்லை-) அதாவது, அவைகள் ஸ்டேட் ஸ்பான்சர்ட் இல்லை-குஜராத் போலவோ! இராக் போலவோ.!
    ஒரு ஜெயேந்திரரை, ஒரு பிரேமானந்தாவை,ஒரு சதுர்வேதியை வைத்து ஹிந்து மதத்தையே தவறாக பேசக்கூடாது. என்பது போல ஒரு பின் லேடனை அல்லது ஒரு கஷ்மீர் பிரிவினைவாத அமைப்போ செய்வதை வைத்து இஸ்லாத்தை குற்றம் சொல்வது சரியாகப்படவில்லை. குஜராத்தில் போலிஸ் வேலைக்கு ஆர்.எஸ்.எஸ். ஆட்க்களை பின் வாசல் வழியாக நுழைத்து வருவது குறித்த அனானிமஸின் கருத்து கவலைப்படவைக்கிறது.

    சுட்டு விரல்.
    suttuviral.blogspot.com

    ReplyDelete
  15. ஆனால், உலகில் பரவலாக இஸ்லாமிய பயஙரவாதம் குறித்தே பேசப்படுகிறது.(மற்ற பயங்கர வாதங்கள் குறித்து குறைவாகவே பேசப்படுகிறது. இத்தனைக்கும் முஸ்லிம்கள் பெயரால் நடக்கும் பயங்கர வாதங்களை முஸ்லிம் மத குருமார்களோ முஸ்லிம் அரசாங்கங்களோ ஆதரிப்பதாக த்தெரியவில்லை-) அதாவது, அவைகள் ஸ்டேட் ஸ்பான்சர்ட் இல்லை-குஜராத் போலவோ! இராக் போலவோ.!
    ஒரு ஜெயேந்திரரை, ஒரு பிரேமானந்தாவை,ஒரு சதுர்வேதியை வைத்து ஹிந்து மதத்தையே தவறாக பேசக்கூடாது. என்பது போல ஒரு பின் லேடனை அல்லது ஒரு கஷ்மீர் பிரிவினைவாத அமைப்போ செய்வதை வைத்து இஸ்லாத்தை குற்றம் சொல்வது சரியாகப்படவில்லை. குஜராத்தில் போலிஸ் வேலைக்கு ஆர்.எஸ்.எஸ். ஆட்க்களை பின் வாசல் வழியாக நுழைத்து வருவது குறித்த அனானிமஸின் கருத்து கவலைப்படவைக்கிறது.

    ReplyDelete
  16. Suttuviral, the anoynomous is me. -- Narayanan ;-)

    ReplyDelete
  17. நாரயண், Sorry, கவனக்குறைவால் அனானிமஸ் என்று எழுதிவிட்டேன்
    சுட்டுவிரல்.

    ReplyDelete