Thursday, February 03, 2005

கோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்

நடப்பு கோவா சட்டமன்றத்தில் இனியும் வேறு கட்சி/தரப்பு மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை என்றால், அங்கு நிலையான ஆட்சி கிடையாது; சட்டமன்றத்தைக் கலைத்து கவர்னர் ஆட்சியைக் கொண்டுவரவேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.

என்?

மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேர். இதில் திடீரென்று நான்கு பாஜக எம்.எல்.ஏக்கள் (காங்கிரஸ் தூண்டுதலால்) தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். (இவர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியிருக்க முடியாது. தாவியிருந்தால் கட்சித் தாவல் தடைச்சட்டம் இவர்கள் மீது பாய்ந்து இவர்கள் பதவி இழந்திருப்பார்கள்!) எனவே இப்பொழுதைய எண்ணிக்கை 36 பேர். இதில் தற்போது பாஜக உறுப்பினர்கள் 17, பாஜக ஆதரவு உறுப்பினர் ஒருவர். ஆக பாஜக ஆதரவாளர்கள் 18 பேர். அதில் ஒருவர் தற்போதைய சபாநாயகர்.

இந்தத் தரப்புக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளின் எண்ணிக்கை 18.

பொதுவாக கமிட்டி சேர்மன், போர்டு சேர்மன் ஆகியோருக்கு casting vote என்று மேலதிக வாக்கு ஒன்று உண்டு. மொத்தம் ஆறு பேர் உள்ள ஒரு கமிட்டியில் 3-3 என்று வாக்குகள் பிரிந்திருந்தால் சேர்மன் தனது 'சேர்மன் வாக்கை' செலுத்தி (இவர் ஏற்கெனவே உறுப்பினராக தனது வாக்கைச் செலுத்தித்தான் 3-3 என்றாக்கியிருந்தார்), தான் விரும்பியபடி தீர்மானத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ நடந்து கொள்ளலாம். ஆக, சேர்மனுக்கு இரண்டு வாக்குகள். அப்படித்தான் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்தலில் ஜக்மோகன் தால்மியா சில 'தில்லாலங்கடி' வேலைகளைச் செய்து தன் ஆளான ரண்பீர் சிங் மகேந்திராவை வெற்றிபெறச் செய்தார்.

ஆனால் சட்டமன்றத்தில் ஓர் அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் போன்றவற்றுக்கு சபாநாயகர் எடுத்த எடுப்பிலேயே வாக்களிக்க முடியாது. அதுபோன்ற தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடந்து, அந்த வாக்கெடுப்பில் எந்தப் பக்கம் என்று தீர்மானிக்க முடியாது என்ற நிலை வந்தால்தான் (tie) சபாநாயகர் வாக்களிக்க முடியும்.

எனவே நேற்றைய கோவா வாக்கெடுப்பின் போது பாஜக பக்கம் 17 வாக்குகள்தான். எதிர்ப்பக்கத்திலோ 18 வாக்குகள். நியாயமாக வாக்கெடுப்பு நடந்திருந்தால் பாஜகவுக்கு கல்தா. இதனால்தான் சபாநாயகர் விஷ்வாஸ் சாதர்கர், காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை உறுப்பினர் பிலிப் நெரி ரோத்ரிகேவை சபையை விட்டு வெளியேறச் செய்து, அதையடுத்து நடந்த அமளியின்போது குரல் வாக்கெடுப்பின் மூலம் 'பாஜக வெற்றி' என்று அறிவித்துவிட்டார்.

ஆனால் கவர்னர் பாஜக அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்துவிட்டார். இப்பொழுது காங்கிரஸ் பதவிக்கு வந்துள்ளது. ஆனால் பிரச்னை இத்தோடு முடிவடையாது.

இப்பொழுது பாஜகவுக்கு ஆதரவளிக்கும் UGDP எம்.எல்.ஏ சல்தானா அப்படியே இனியும் செய்வார் என்று வைத்துக்கொள்வோம். பாஜகவைச் சேர்ந்த சபாநாயகர் உடனடியாகத் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். புது அரசு பதவிக்கு வந்ததும் சட்டமன்றத்தைக் கூட்டி தனது ஆள் ஒருவரை உடனடியாக சபாநாயகர் பதவிக்குத் தேர்வு செய்யவேண்டியிருக்கும். அப்பொழுது காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 ஆகக் குறைந்துவிடும். எதிராக 18 பேர் - பாஜக 17, UGDP 1. பாஜக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் நேற்று என்ன நடந்ததோ அதே மீண்டும் நடக்கும். காங்கிரஸ் அரசு கவிழும். (ஆனால் உண்மையில் கவர்னர் எந்தப் பக்கம் சாய்கிறாரோ அதுதான் நடக்கும்.)

மீண்டும் திரிசங்கு சொர்க்கம்.

இதைத் தடுக்க என்ன செய்யலாம்? உடனடியாக, காலியான நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் அதைச் செய்வது தேர்தல் கமிஷன். தேர்தல் கமிஷனை அவசரப்படுத்த முடியாது. அவர்களுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ, எப்பொழுது முடிகிறதோ (ஆறு மாதங்களுக்குள்), அப்பொழுதுதான் தேர்தலை நடத்துவார்கள்.

UGDP கட்சி காங்கிரஸ் ஆதரவுக்குத் தாண்டிவிட்டது. அதன் எம்.எல்.ஏ சல்தானாவோ பாஜக ஆதரவு. இப்பொழுது அவரைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சி செய்யும். அதில் வெற்றியும் அடையலாம். அப்படியானால், காங்கிரஸ் ஆட்சியை உடைப்பதில் முழு வெற்றி அடைந்துவிட்டது என்று பெருமைப்படலாம்.

அப்படி நடக்காவிட்டால் நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும் வரையில் கவர்னரும், காங்கிரசும் சேர்ந்து ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி செய்வார்கள். அதன்பின் தேர்தல் முடிவுகள் விட்ட வழி!

இந்நிகழ்வை ஜனநாயகப் படுகொலை என்றெல்லாம் பாஜக வர்ணித்திருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. இதெல்லாம் இந்திய அரசியலில், முக்கியமாக கோவா அரசியலில் வெகு சகஜம். பாஜகவும் இதுபோன்ற விஷயங்களில் சந்தோஷமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறது. இந்தச் சிரிப்பு நாடகத்தின் அடுத்த அங்கம் மிக விரைவில் அரங்கேற இருக்கிறது.

No comments:

Post a Comment