Wednesday, February 02, 2005

நேபாள் குடியாட்சிக்கு ஆபத்து

நேபாளில் மன்னராட்சி. இன்றும் கூட இப்படிச் சக்திவாய்ந்த மன்னராட்சியுடன் ஒரு நாடு இருப்பது anachronism. பிரிட்டன் முதல் ஜப்பான் வரையான மன்னராட்சி பெயரளவுக்குத்தான். நாட்டை ஆளும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கே.

நேபாளிலோ, அரசியல் நிர்ணயச் சட்டம் மன்னர் குடும்பத்துக்கு ஏகப்பட்ட அதிகாரங்களைக் கொடுத்துள்ளது. இப்பொழுது மன்னராக உள்ளவர் அரசர் ஞானேந்திரா, எங்கிருந்தோ வந்தவர். இவர் இதற்கு முன் இருந்த அரசர் பிரேந்திராவின் தம்பி. பிரேந்திராவையும் அவரது குடும்பத்தில் உள்ள பிறரையும், சற்றே மனம் பிறழ்ந்த, தன்னிலையில் இல்லாத மகன் திபேந்திரா சுட்டுக் கொன்று விட்டார். தன்னையும் சுட்டுக்கொண்டு செத்தார்.

அதனால் 2001-ல் அரச பதவிக்கு வந்த ஞானேந்திரா நேற்று, ஆட்சியில் இருந்த பிரதமர் ஷேர் பஹாதூர் தூபா அமைச்சரவையைக் கலைத்து, நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்து, தனக்கு இஷ்டமான ஓர் அமைச்சரவையை உருவாக்கியுள்ளார்.

நேபாளில் மாவோயிஸ்டுகள் பல காலமாகவே அரசுத் தரப்பினரோடு சண்டையிட்டு வருகின்றனர். நடுநடுவே சண்டை நிறுத்தம் இருக்கும். பின் மீண்டும் சண்டை தொடரும். பேச்சுவார்த்தையால் மட்டுமே இந்தச் சண்டையை நிறுத்த முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் மாவோயிஸ்டுகள் அரச பதவியை முற்றிலுமாக எதிர்ப்பவர்கள். எனவே இப்பொழுதைய அவசர நிலைப் பிரகடனத்தால் சண்டை வலுக்குமே தவிரக் குறையாது. அரசரின் செயலை எதிர்த்து மாவோயிஸ்டுகள் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஏதாவது வெறிச்செயல்கள் நடந்து, நாட்டின் ராணுவம் அப்பாவிகள் சிலரை சுட்டுத்தள்ளலாம். இதனால் மாவோயிஸ்டுகள் இன்ன்னமும் வேகத்துடன் அரசை எதிர்ப்பார்கள். முடிவில்லாத யுத்தம் தொடரும்.

இந்நேரத்தில் இந்தியா, நேபாளில் நடந்திருப்பதைக் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த அளவுக்கு வலுவான அறிவிப்பு இதற்கு முன்னர் இந்திய அரசிடமிருந்து வந்தது கிடையாது. அடுத்து மியான்மார் அரசின் நடவடிக்கைகளைப் பற்றியும் இந்தியா வெளிப்படையாகவே விமரிசிக்க வேண்டும். [மியான்மார் பற்றிய என் முந்தைய பதிவு.] உலக நாடுகள் பலவுமே நேபாள் அரசரது செயலைக் கண்டித்துள்ளன.

இதற்கிடையில் டாக்காவில் நடைபெற இருந்த சார்க் உச்சி மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ள மாட்டார் என்றும் அதற்கு நேபாளின் நிகழ்வுகள் ஒரு காரணம் என்றும், பங்களாதேஷின் சட்டம் ஒழுங்கு மற்றொரு காரணம் என்றும் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் கருத்து தெரிவித்திருந்தது பங்களாதேஷைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்களாதேஷ் பற்றிய இந்தியாவின் கருத்து தேவையற்றது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. தெற்காசிய நாடுகளின் சட்டம் ஒழுங்கு எப்பொழுதும் பிரச்னைதான். அதற்காக ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டுக்கு செல்லாமல் இருப்பதில்லை.

2 comments:

  1. மக்கள் ஆதரவு கூட இல்லாமல் (குறைந்த பட்சம் இந்த ஞானேந்திராவிற்கு-உண்மையில் அந்த கொலைகளை இவர்தான் நிகழ்த்திவைத்ததாக மக்களிடம் நம்பிக்கை கூட உண்டு) எப்படி இந்த மன்னராட்சி தொடர்கிறது என்று புரியவில்லை.

    ஜப்பான் இதற்கு நேர்மாறானது. இன்றும் மக்கள் மன்னரை ஒரு கடவுள் போல் பார்கின்றனர். ஆனால் மன்னராட்சியிலிருந்து ஜனநாயகத்திற்கு ரொம்ப ஸ்மூத்தாக இடம் பெயர்ந்திருக்கிரது. இதற்கு இரண்டாம் உலகப்ப்போர் (முக்கிய காரணம் எனினும் அது மட்டுமே) காரணமாய் தெரியவில்லை. அடிப்படையில் இந்த கலாச்சரம் மற்றத்திற்கு இடமளிப்பதாக தெரிகிறது.

    ReplyDelete
  2. மத்தியக் கிழக்கு நாடுகளிலும் மன்னர் ஆட்சி முறைதான், ஆனால் இன்றுவரை பிரச்சனைகள் அதிகமின்றி அரசுகள் செயல்படுகின்றன.

    சீனி. வெங்கட்

    ReplyDelete