Sunday, February 06, 2005

கிராம முன்னேற்றம் - 3

தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல்

இந்த வாரம் சற்று தாமதமாக வருகிறது இந்தப் பகுதி. பகுதி 1 | பகுதி 2

கிராம வருமானத்தைப் பெருக்குவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் அனைவர்க்கும் கிடைக்க வேண்டிய அடிப்படையான சத்துணவு (nutritious meal). இது கிராமங்களுக்கு மட்டுமான தேவையல்ல. இந்தியா முழுமைக்குமான தேவை. இந்தியாவில் கிட்டத்தட்ட 20 கோடி மக்கள் (200 மில்லியன்) உணவுப் பற்றாக்குறையால், அல்லது உணவே கிடைக்காமல் இருக்கிறார்கள். மீதிப் பேரில் இன்னமும் 30 கோடிப் பேர்களுக்கு சரியான போஷாக்கு பல நேரங்களில் கிடைப்பதில்லை.

[உலகம் முழுவதிலுமாக 85 கோடி மக்கள் சரியான போஷாக்கு உணவு இல்லாமல் திண்டாடுகிறார்கள். இந்தியாவில் மட்டும் 20 கோடி மக்கள் சரியான உணவு இல்லாமல் இருக்கிறார்கள் - இதுபோன்ற தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் Food and Agriculture Organization இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. 1999 வருடத்தைய தகவல். 2004-ல் அதிக மாற்றங்கள் இருக்காது.]

சரியான போஷாக்கு இல்லாத, உணவு இல்லாத மக்களால் உற்பத்தியைப் பெருக்க முடியாது. தனது நிலையை உயர்த்த முடியாது. எனவே கிராம வருமானத்தை முன்னேற்றுவதற்கு மிக முக்கியமான முன்னோடி அனைவருக்கும் போஷாக்கு உணவு தருவது. அதே சமயம் சிலர், உணவுத்தேவையைப் போக்கிவிட்டால் சோம்பேறிகளைத்தான் நாம் உருவாக்குவோம் என்று குற்றம் சொல்லலாம். அது தவறான கருத்து என்பது என் எண்ணம். எந்த மனிதனுமே வெறும் சோற்றைத் தின்று அது போதும் என்று மர நிழலில் படுத்திருக்க விரும்ப மாட்டான். பழைய ஹிந்துத் துறவிகள்தான் அப்படி இருக்க விரும்பினார்கள். அதுவும் வெறும் 0.1%க்கும் குறைவானவர்களே. இன்றைய ஹிந்துத் துறவி கூட உண்டு கொழுத்து, அதற்கு மேலும் தன் ஆசையை வளர்த்து வைத்திருக்கிறார்.

20 கோடி வாய்களுக்கு சத்தான உணவு வருடம் முழுவதும் தர எத்தனை செலவாகும்? அதைச் செய்ய எம்மாதிரியான அடிப்படைக் கட்டுமானம் தேவை? மூன்று வேளைகளுக்குமாக சமையல் செய்து போட முடியாது. ஆனால் நாளுக்கு ஒருதடவை வேண்டிய அளவு கஞ்சி/கூழ் போன்று சத்தான உணவைக் கொடுக்க முடியும். ஒவ்வோர் ஊரிலும் இதற்கென சமுதாயக் கூடங்களை அமைத்து பஞ்சாயத்து/ஊராட்சி/நகரமன்றம் வழியாக அடிப்படையான உணவை தேவை என்று கேட்கும் அனைவருக்கும் வழங்கலாம். மத்திய அரசு தன் கொள்முதல் பண்டக சாலைகளில் இருக்கும் உணவு தானியங்களை இதற்கென செலவழிக்கலாம். அரிசியோ, கோதுமையோ நொய்யாக, அத்துடன் அந்தந்தப் பகுதிகளில் விளையும் கம்பு, கேழ்வரகு ஆகியவை மாவாக. அத்துடன் சோயா, நிலக்கடலை போன்ற புரதச்சத்து மிகுந்தவை மாவாக. இவற்றை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து மாவாக மூட்டைகளில் அடைத்து ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி விடலாம்.

இந்த மாவைக் கொதிக்க வைத்த நீரில் கரைத்து, கஞ்சியாக்கு, அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் காய்கறிகள், மாமிசத் துண்டுகளுடனும், வாசனைக்கு சிறிது தாளித்தல்களுடனும், உப்புடனும் சேர்த்தால் வயிற்றுப் பசிக்கும், தேவையான குறைந்த அளவு போஷாக்குக்கும் உணவு தயார். ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய அளவு - அது யாராக இருந்தாலும் சரி, எந்த அடையாளச் சீட்டும் இல்லாமல் - கொடுக்க வேண்டும்.

நிச்சயமாக இதிலும் ஊழல் இருக்கும். ஆனால் அதைக் காரணம் காட்டி இம்மாதிரியான ஒரு திட்டம் நடக்காமல் இருக்கக் கூடாது. என்ன செலவாகும்? ஒருவருக்கு ஒரு நாளைக்கான செலவு ரூ. 4 தான் என்று மேலோட்டமாகத் தோன்றுகிறது. எல்லாப் பொருட்களுமே இந்தியாவில் கிடைக்கிறது. மொத்தமாக வாங்கப்போவது மத்திய அரசு. செயல்படுத்துவது மாநில அரசுகள் வழியாக பஞ்சாயத்துகள்/ஊராட்சி/நகராட்சி.

எனவே வருடச் செலவு = (20 கோடி * 365 * 4) = ஏறத்தாழ ரூ. 30,000 கோடிகள்.

இந்த முழுப்பணத்தையும் மத்திய அரசு மான்யமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசின் மொத்தச் செலவில் இது பெரிய அளவுதான். ஆனால் மிகவும் அவசியமானது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தத் திட்டத்துக்கு நிதியுதவி செய்பவர்களுக்கு அரசு முழு வரிவிலக்கு அளிக்கலாம். சுதந்தர தினம், குடியரசு தினம் போன்ற நாள்களில் சிறுவர்களை கூப்பன்கள் வாங்கச் சொல்லலாம். கிடைக்கும் பணம் நேரடியாக அரசுக் கணக்குக்குப் போகும்.

தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்ற நிலை இந்தியாவில் இருக்காது. உழைக்கவோ, படிக்கவோ, மேற்கொண்டு தன் நிலையை முன்னேற்றவோ ஒருவர் தன் முழு கவனத்தையும் செலுத்தலாம்.

இதிலும் நிச்சயம் அரசியல் வரும். தாதாக்கள் வருவார்கள். யாருக்கு உணவு தருவது, தரக்கூடாது என்று அதிகாரம் செலுத்துவார்கள். திருட்டு நடக்கும். கொள்ளை நடக்கும். சாதிச் சண்டைகள் வரும். எதில்தான் இவை இல்லை? ஆனால் 70% சரியாக நடந்தாலும் கூட 14 கோடி மக்களுக்காவது உருப்படியான உணவு போய்ச்சேருமல்லவா?

நாளடைவில் கிராம வருமானத்தைப் பெருக்கும்போது இந்தத் திட்டத்திலிருந்து பலரும் வெளியேறி சொந்தமாகவே உணவைத் தேடிக்கொள்வார்கள். அப்பொழுது அரசின் செலவு வெகுவாகக் குறையும். உலகின் பசியில் வாடும் மக்களின் நான்கு பேரில் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார் என்ற பழிச்சொல் போகும்.

மேலும் பல நன்மைகள் உண்டு. உற்பத்தியான, கொள்முதல் ஆன தானியங்கள் புழுத்துப் போகாமல் செலவாகும். பஞ்ச காலங்களில் அரசு திடீரென்று செயல்பட வேண்டிய நிலைமை இருக்காது. ஒரு கட்டுமானம் ஏற்கெனவே பசியைப் போக்கும் வழியை அறிந்திருக்கும். (மேலை நாடுகளில் soup kitchen என்பது பற்றி கூகிளில் தேடி அறிந்து கொள்ளுங்கள்.) மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளூராட்சிகள் ஆகியவை ஒன்று சேர்ந்து ஒழுங்காக உழைக்கக் கற்றுக்கொள்ளலாம். முன்காலங்களில் அரசன் அன்ன சத்திரம் அமைத்தான் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா? அதைப் போன்றுதான் இதுவும்.

பசி பயம் போன மக்கள் நிச்சயமாக உழைக்கத் தயாராக இருப்பார்கள். படிக்கத் தயாராக இருப்பார்கள். கற்கத் தயாராக இருப்பார்கள்.

அடுத்த வாரம் தொடர்வேன்.

7 comments:

 1. சிந்திக்கவேண்டிய விசயமிது. நல்ல பதிவு. இதுதொடர்பான பிற விசயங்களைப் படித்துவிட்டு, என் கருத்துக்களை பின்னூட்டமிடுகிறேன்.

  ReplyDelete
 2. I enjoy reading this column. I read that some school girl came up with a soup mix as said before in Tamil Nadu and Mr.Kalam appreciated her effort and she was awarded. It was published in Vikatan. That soup mix came up to 3rs per head, and included labor cost to make, serve.
  We do run meals on the wheels, food for poor progarm in USA (I plan and implement health care as well). It is not very expensive and we use tax money to fund. A meagre % from traffic tickets, domestic violence crimes, % of price that inmates pay to purchase cigarettes, soap etc in prison all go toward these programs+ victims asistance programs. They fund themselves and the Govt does not pitch in much. I can wite in detail that might throw some ideas, may not be very helpful but nevertheless, can help us brain storm.
  Later Gator,

  By: Padma Arvind

  ReplyDelete
 3. பத்மா: இது தொடர்பான தகவல்களை நிச்சயம் எழுதுங்கள். உதவியாக இருக்கும்.

  நீங்கள் சொல்வதைப் போலவே இதற்காகும் செலவு - இதனால் விளையும் நன்மைகளைப் பார்க்கும்போது - மிகக்குறைவுதான் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 4. >அதே சமயம் சிலர், உணவுத்தேவையைப் போக்கிவிட்டால் சோம்பேறிகளைத்தான் நாம் உருவாக்குவோம் என்று குற்றம் சொல்லலாம். அது தவறான கருத்து என்பது என் எண்ணம். எந்த மனிதனுமே வெறும் சோற்றைத் தின்று அது போதும் என்று மர நிழலில் படுத்திருக்க விரும்ப மாட்டான். பழைய ஹிந்துத் துறவிகள்தான் அப்படி இருக்க விரும்பினார்கள். அதுவும் வெறும் 0.1%க்கும் குறைவானவர்களே. இன்றைய ஹிந்துத் துறவி கூட உண்டு கொழுத்து, அதற்கு மேலும் தன் ஆசையை வளர்த்து வைத்திருக்கிறார்.

  பத்ரி - இதற்குச் சம்பந்தமில்லாமல் தொடுகோடாக என் மனதில் உதித்தி சில விஷய்ங்களைக் கோர்வைப்படுத்தி இன்றைக்கு என் வலைப்பதிவில் எழுதுகிறேன்.

  நிற்க. நீங்கள் கேட்டிருந்த ஐன்ஸ்டைன் சம்சாராம்-சமாச்சாரம் பற்றிய விஷயத்தின் நேரடிப் பதிலுக்கு இன்றைக்கு வரத் தொடங்கியிருக்கிறேன். காண்க :http://iyarpiyal.org/?item=3-22
  உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். (பத்மா, உங்களையும்தான்)

  By: வெங்கட்

  ReplyDelete
 5. pls see www.righttofoodindia.org


  By: ravi srinivasBy: ravi srinivas

  ReplyDelete
 6. pls see www.righttofoodindia.org


  By: ravi srinivas

  ReplyDelete
 7. ரவி: www.righttofoodindia.org சுட்டிக்கு நன்றி.

  மேலும் படித்துவிட்டு அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete