அயர்லாந்து, டப்லின் நகரில் இருக்கும் ஸ்டியார்ன் (Steorn) என்னும் நிறுவனம் காந்தங்களை வைத்து புதுக் கருவி ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் அதன்மூலம் கொஞ்சம் ஆற்றலை உள்ளே செலுத்தினால், செலுத்தியதற்கும் மேலான ஆற்றல் வெளியே வருவதாகவும் அறிவித்துள்ளனர்.
இயல்பியல் படிப்பில், ஆற்றல் என்பது சும்மா கிடைப்பதல்ல என்று நாம் படித்திருக்கிறோம். ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு வடிவிலிருந்து மற்ற வடிவுக்கு மாற்ற மட்டுமே முடியும் என்று படித்துள்ளோம். மேலும் இவ்வாறு மாற்றும்போது இயல்பாற்றல் (எண்டிரோபி - Entropy) காரணங்களால் உள்ளே செலுத்திய ஆற்றலின் அளவை விட வெளியே வரும் வேறு வகை ஆற்றலின் அளவு குறைவாகவே இருக்கும். (மீதி ஆற்றல் வெளியே விரயமாகிப் போகும்.)
மின்சாரம் தயாரிக்கிறோம். அதனை சில பொருள்களை எரிப்பதன்மூலம் தயாரிக்கிறோம். வெப்ப ஆற்றல் மின் ஆற்றலாக மாறுகிறது. ஆற்றலை ஜூல் என்னும் அலகு கொண்டு அளக்கிறோம். ஒரு ஜூல் அளவுள்ள வெப்ப ஆற்றலை ஒரு மின்சார ஜெனரேட்டரில் உள்செலுத்தினால் வெளியே கிடைக்கும் மின்சார ஆற்றலின் அளவு ஒரு ஜூலை விடக் குறைவாகத்தான் இருக்கும் என்று வெப்ப இயக்கவியல் (Thermodynamics) நமக்குச் சொல்கிறது. எந்த அளவுக்கு இந்த ஆற்றல் மாற்றம் உள்ளது என்பதை வெளியே கிடைக்கும் ஆற்றலுக்கும் உள்ளே செலுத்தப்பட்ட ஆற்றலுக்குமான விகிதமாகக் கூறுகிறோம். அதுதான் இந்த இயந்திரத்தின் செயல்திறன் - efficiency.
ஆனால் இந்த ஆற்றல் மாற்றங்களின்போது நமது அமைவின் (System) நிறை மாறுவதில்லை. தொடக்கத்திலும் முடிவிலும் ஒரே எடைதான்.
பொருளையே ஆற்றலாக மாற்றமுடியும் - அணுக்கரு பிளத்தல் அல்லது இணைதல் மூலம் - என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதேபோல ஆற்றலையும் பொருளாக மாற்றமுடியும் என்றும் அறிவீர்கள். ஐன்ஸ்டைனின் பெருமைவாய்ந்த E = m c^2 என்னும் சமன்பாடு இன்று டிஷர்ட்களில் எல்லாம் காணக்கிடைக்கிறது.
இதுதான் காலம் காலமாக அறிவியல் நமக்குச் சொல்லிவந்தது. இன்றும், இதுவரையில் இதில் மாற்றமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் பல கிறுக்கு கண்டுபிடிப்பாளர்கள் 'நிரந்தர இயக்கக் கருவிகள்' (Perpetual Motion Machines) சிலவற்றைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லிவந்தனர். இந்தக் கருவிகளில் கொஞ்சம் ஆற்றலை உள்ளே செலுத்தினால் விளைவாக அதிகமான அளவு ஆற்றலை உருவாக்குமாம்; அதில் ஒரு பகுதியை மீண்டும் இதே கருவியில் உள்ளே செலுத்தினால் அது மேலும் மேலும் அதிகமான அளவு ஆற்றலை உருவாக்கும்.
சுருக்கமாகச் சொல்வதானால் 'ஆற்றல் அட்சய பாத்திரம்'.
வெப்ப இயக்கவியல் விதிகளின்படி இது நடைமுறையில் சாத்தியமானதல்ல என்றே விஞ்ஞானிகள் கருதிவந்துள்ளனர்.
இப்பொழுது ஸ்டியார்ன் நிறுவனமோ இந்த விதிகளுக்கெல்லாம் மாற்றாக, தாம் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்கிறது. உள்ளே ஒரு ஜூல் ஆற்றலைச் செலுத்தினால் வெளியே வருவது 2.85 ஜூல்கள். அதாவது 285% செயல்திறனுடன் இயங்கும் கருவி. நிலையான காந்தங்கள் சிலவற்றைக் குறிப்பிட்ட இடங்களில் வைத்து, நகரும் காந்தங்களைக் குறிப்பிட்ட வகையில் இயக்குவதன்மூலம் இப்படியான ஆற்றல் வெளியாகிறது என்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக இதை யாரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாததால் 75,000 பவுண்டுகள் (கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய்கள்) செலவு செய்து தி எகானமிஸ்ட் இதழில் ஒரு விளம்பரம் எடுத்துள்ளனர். அந்த விளம்பரத்தில், 12 சிறந்த அறிவியல் அறிஞர்களை நீதிபதிகளாக வைத்து தங்கள் இயந்திரத்தை சோதனை செய்ய அழைப்பதாக அறைகூவல் விடுத்துள்ளனர்.
இதுவும் பிசுபிசுத்துப் போகுமா அல்லது பெட்ரோல் நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
தி கார்டியன் செய்தி
Sunday, August 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
பத்ரி அவர்களே!
ReplyDeleteநல்ல பயனுள்ள அறிவியல் கட்டுரை.
வார்த்தை வெடித்தல் என்பது கூட இந்த தத்துவத்தில் அடங்கும். அதாவது எதிர்த்து எதிர்த்து பேசி சண்டை முற்றுவது :))
அசத்த போறோமுனு சொல்றாங்க.
ReplyDeleteபத்ரி
ReplyDeleteஇது வெற்றி பெற்றால் நமது பண்பாட்டில் உள்ள பல கருவிகளை தூக்கிப்போடுவதுமட்டுமல்லாமல் பாட திட்டங்களை கூட திருத்தி எழுத வேண்டியிருக்கும்.
அதைவிட மலேசிய முன்னால் பிரதமர் சொன்ன"ஆயிலை மக்கள் ஆயுதாமாக பயன்படுத்தவேண்டும்"என்ற சொல் பயனற்றுப்போகும்.
பார்ப்போம்-வெற்றி யாருக்கு என்று.
எப்படியிருந்தாலும் பாராட்டப்படவேண்டிய ஒன்று.
ஏனோ எனக்கு ராமர் பிள்ளை ஞாபகம் வருகிறார்
ReplyDeleteஅந்த நிறுவனத்தின் வலைத்தளத்தில் அதிக விஷயங்கள் இல்லை. ஒரே Hype தான் இருக்கிறது...!!
ReplyDeleteஅந்த வீடியோவில் மூன்று horse shoe காந்தம் வைத்து நடுவில் அந்த கம்பெனி லோகோவைச் சுற்றி காட்டி படத்தை முடித்துவிட்டார்கள்!!
கார்டியன்ல எல்லாம் செய்தி வந்திருக்கு!, இது ஏதோ இணய காமெடி இல்லையே!! மீனாக்ஷி அம்மன் கோவிலை உலக அதிசயம் ஆக்கும் இணயதளம் போல!!?
ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு நிதி நிறுவனத்தில் பணம் கட்டி அப்புறம் தலையில் துண்டைப் போட்டுக் கொள்வது போல ஒவ்வொரு கால கட்டத்திலும் இது மாதிரி நிறுவனங்கள், முயற்சிகள் வந்து மறைகின்றன. இயற்பியல் விதிகளின் படி சாத்தியமில்லாத இதை தூக்கிப் பிடிக்க ஏதாவது கொக்கி வைத்திருப்பார்கள். பரவலாகச் செய்து விட முடியாத கொக்கியாக அது இருக்கும்.
ReplyDeleteநீங்கள் சொல்வது போல அணுவைப் பிளந்து நிறையை அழித்துக் கிடைக்கும் ஆற்றலோ, விண்வெளியிலிருந்து வரும் கதிர் வீச்சைப் பிடித்துப் பயன்படுத்தும் ஆற்றலோ இல்லாமல் இது போல தன்னுள் அடங்கிய ஒரு அமைப்பிலிருந்து உள்ளே போடுவதை விட வெளியே அதிகம் கிடைப்பது ஏமாற்று வேலைதான்.
அன்புடன்,
மா சிவகுமார்
http://comment.zdnet.co.uk/0,39020505,39281444,00.htm
ReplyDeleteபத்ரி நான் பலூன் ஊதினேன்
ReplyDeleteபலூன் பெரிசாச்சு
BOYLE'S LAW தப்பு
அப்படின்னு சொல்லாம இருந்தா சரி.
I think they are doing it for time pass or for some kind of attraction.I am not able to believe the stuff......
CT
"ஆயிலை மக்கள் ஆயுதாமாக பயன்படுத்தவேண்டும்" என்ற சொல் பயனற்றுப்போகும்.
ReplyDeleteOMG. Even b4 I start u guys want to finish the race. This is unfair. If Bush can why not me?
:-))
*cheers*
Nambi