Monday, August 14, 2006

வாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ்

வணக்கம் நேயர்களே,

நான் ரெண்டு புத்தகங்களைப் பத்தி இப்ப பேசப்போறேன். ரெண்டுமே ஒரே ஆளைப் பத்தினதுதான். அவரு பேரு முகமது யூனுஸ். பங்களாதேச நாட்டைச் சேர்ந்தவரு.

இவர் என்ன செஞ்சாரு? என் இவரைப் பத்தி நாம தெரிஞ்சுக்கணும்? கடந்த 2,000-2,500 வருடங்கள்ள, மிக அதிகமான எண்ணிக்கைல மனுஷங்களோட வாழ்க்கையை மாத்தின ஆட்கள்னு பாத்தீங்கன்னா ரெண்டு மூணு பேரைச் சொல்லலாம் - யேசு, புத்தர், காந்தின்னு. அந்த வரிசைல முகமது யூனுஸ் பேரைச் சேக்கலாம்னு எனக்குத் தோணுது.

இதுல யேசு, புத்தர் ரெண்டு பேரும் spiritual - அதாவது ஆன்மிகத் துறைல சாதிச்சாங்க. காந்தி அரசியல் துறைல - நம்ம நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தாரு. முகமது யூனுஸ் பொருளாதாரத் துறைல நிறைய சாதிச்சிருக்காரு.

நாம ஏழ்மையைப் பத்தி நிறையப் பேசறோம். சுதந்தரம் வாங்கி 60 வருஷமாகப் போவது, ஆனாலும் நம்ம நாட்டுல நிறைய ஏழைங்க. ஆனா பங்களாதேசத்தை எடுத்துக்குங்க. நம்ம நாட்டைவிட மோசம். அவ்வளவு ஏழைங்க. உலகிலேயே மிக அதிகமான ஏழை நாடுகள்ள பங்களாதேசம் ஒண்ணு. பஞ்சம், பட்டினி, இயற்கைச் சீற்றம்னு அழிக்கப்பட்ட பகுதி. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மேற்கு பாகிஸ்தானால் நசுக்கப்பட்ட பகுதி.

விடுதலை கிடைச்சு கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேசம்னு பேர் மாறினாலும் கடந்த 36 வருஷத்துல அந்த நாடு அதிகம் முன்னேறலை. பட்டினி, படிப்பின்மை இப்படி பல பிரச்னைகள். ஆனா அரசியல்வாதிங்களால எதுவும் செய்யமுடியலை.

அப்ப முகமது யூனுஸ் ஒரு எகனாமிக்ஸ் புரொஃபசர். சிட்டகாங் பல்கலைக்கழகத்துல வேலை செய்யறார். அவருக்கு தன்னோட படிப்பு மேலயே ரொம்ப கோபம். ஏட்டுச் சுரைக்கா படிப்பால ஏழை மக்களுக்கு என்ன லாபம்ன்னு கோபம்.

சரி, நாம களத்துல எறங்கி போராடணும்னு யோசிக்கறாரு. ஏழை மக்கள் ஏழைங்களாவே இருக்க என்ன காரணம்? அவங்க முன்னேத்தத்துக்குத் தடையா இருக்கறது என்னன்னு யோசிக்கறாரு. அவங்களுக்குத் தேவையான கடன் வசதிகள் அவங்களுக்குக் கிடைக்காம இருக்கறதுதான்னு புரிஞ்சுக்கிறாரு. ஏன்னா, ஏழைகளுக்கு வங்கிகள் எந்த உதவியும் செய்யறதில்லே. கடன் தரணும்னா நிலம் இருக்கான்னு கேக்கறாங்க. படிக்காத ஏழைக்கு வங்கிகளப் பாத்தாலே பயமா இருக்கு.

இவங்களை முன்னேத்தணும்னா வங்கிகள் மக்கள்ட்ட போகணும்னு நினைக்கிறாரு. ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு வங்கியை ஒப்புத்துக்க வெச்சு கடன்கள் வாங்கிக் கொடுக்கறாரு. சில நூறு பேர்களுக்கு கடன்கள் கிடைக்குது. அதனால அந்த ஏழைகள் வாழ்வுல கொஞ்சம் முன்னேற்றம்.

ஆனா வங்கிகளுக்கு இது புரியறதில்ல. யூனுஸோட செயல்பாட்டுக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுக்கிறாங்க. சரி, இதெல்லாம் சரிப்படாது, நாமே ஒரு வங்கியை ஆரம்பிச்சுடலாம்ங்கற நிலைக்கு தள்ளப்படறாரு. அப்படி ஆரம்பிச்சதுதான் கிராமீன் வங்கி.

ஏழைகளுக்கு மட்டுமே கடன் கொடுப்போம்ங்கற எண்ணத்தோட ஆரம்பிக்கப்பட்டது இந்த வங்கி. நிச்சயமா, இந்த வங்கி கடன் கொடுத்து கொடுத்தே அழிஞ்சிடும், உருப்படாதுன்னு நினைக்கிறாங்க பிற வங்கிகளோட நிர்வாகிகள். ஆனா நடக்கறதே வேற.

இந்த கிராமீன் வங்கி உருவாக்கினதுதான் மகளிர் சுய உதவிக்குழுக்கள்ங்கற கருத்து. இப்ப நம்ம நாட்டுலயும் நிறைய பரவி இருக்கு. ஆனா கிராமீன் வங்கி அளவுக்கு இதோட செயல்பாடுகள் இல்ல.

ஐஞ்சு பேர் கொண்ட குழு. எல்லாமே பெண்கள். இவங்க சேர்ந்து கிராமீன் வங்கிகிட்டேருந்து கடன் வாங்கறாங்க. அதை வச்சு வருமானம் பெருகற மாதிரி தொழில் செய்றாங்க. கோழி வளக்கறது, ஆடு வளக்கறது, மளிகைக் கடை நடத்தறது, பொருள்களை வாங்கி விக்கறது, கூடை முடையறதுன்னு யாரால என்ன முடியுமோ அந்த வேலைங்க.

இதுல கிடைக்கற பணத்தை வெச்சு அந்தக் குடும்பத்துல எல்லாரும் நாளுக்கு மூணு வேளை சாப்பிட முடியுது.

இப்ப பங்களாதேசத்துல 50 லட்சத்துக்கும் மேற்பட்டவங்க - அதுல 90% மேல பெண்கள், கிராமீன் வங்கில உறுப்பினரா கடன்கள் வாங்கியிருக்காங்க. இதுக்கு பேரு மைக்ரோ கிரெடிட் - அதாவது குறுங்கடன். கடன்கள் பொதுவா ரூ. 2,000 - 3,000 இந்த மாதிரி ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா மேல போகும்.

இதனால கிராமத்துல அநியாய வட்டிக்குக் கடன் கொடுத்து வியாபாரம் செஞ்சிகிட்டுருந்தவங்களோட அட்டூழியம் கொறஞ்சிருக்கு.

இப்படி பல மக்களோட வாழ்க்கைல ஒளி ஏத்தியிருக்கற கிராமீன் வங்கிய எப்படி உருவாக்கினேன்னு முகமது யூனுஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்காரு. அவரோட சுயசரிதை. Alan Jolis-ங்கற பத்திரிகையாளரோட சேர்ந்து எழுதியிருக்காரு. Banker to the Poor அப்பிடிங்கறது புத்தகத்தோட பேரு. The University Press Ltd., Bangladesh பிரசுரிச்சுருக்காங்க.

ஒர்த்தர் தன்னோட வாழ்க்கை வரலாறை எழுதறப்போ சில விஷயங்களை சொல்லாம விட்டுடலாம். அதனால எப்பவுமே சுயசரிதை படிச்சா கூடவே அதே விஷயத்தைப் பத்தி எழுதியிருக்கற இன்னொரு புத்தகத்தையும் படிச்சுடறது நல்லது. கிராமீன் வங்கியோட கதையைப் பத்தி David Bornstein-ங்கற பத்திரிகையாளர் ஒரு புத்தகமா எழுதியிருக்காரு. The Price of a Dream - The Story of the Grameen Bank-ங்கறது புத்தகத்தோட பேரு. Oxford University Press பதிப்பிச்சிருக்காங்க.

இந்த ரெண்டு புத்தகத்தையும் நீங்க அவசியம் படிக்கணும்னு நான் பரிந்துரை செய்றேன்.

கிராமீன் வங்கி போல நம்ம நாட்டுலயும் சில அமைப்புகள் உருவாகணும்னு வேண்டிப்போம்.

நன்றி நேயர்களே.

[ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தில் 'வாசித்ததில் நேசித்தது' என்ற நிகழ்ச்சிக்காக நான் ஒலிப்பதிவு செய்த நிகழ்ச்சியின் transcript - சுமார் 10 நிமிடங்கள். 13.71/15.77/17.81 MHz அலைவரிசையில் எப்பொழுதாவது வரும். AIR ஒலிபரப்பு முடிந்ததும் பதிவு செய்திருக்கும் ஒலித்துண்டை சேர்க்கிறேன்.]

6 comments:

  1. planning any follow up from (y)our side?

    ReplyDelete
  2. நிச்சயம் பத்ரி வாங்கி படிக்க ஆவலாக உள்ளது.

    இதுப் போல் நம் இந்தியாவில் யாரும் இல்லையா?

    நன்றி
    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  3. Not much of info about Grameen bank in the following page. But its a good start for anyone interested to know more about it.

    http://en.wikipedia.org/wiki/Grameen_Bank

    ReplyDelete
  4. Do you think Gandi as Individual responsible for India's independentor he is the only reason Indian people's quest for Independence?

    ReplyDelete
  5. அறிமுகத்துக்கு நன்றி பத்ரி..

    ReplyDelete