புத்தகங்கள் தொடர்பான இரண்டு சுட்டிகள், இன்றைய தி ஹிந்து மேகஸினிலிருந்து:
1. The decline of the book review, நிலஞ்சனா ராய்: புத்தக விமரிசனங்களின் இழிநிலை பற்றி. தமிழை எடுத்துக்கொண்டால் நிலைமை இன்னமுமே மோசம். விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்கள் புத்தக விமரிசனம் பற்றி கவலைப்படுவதேயில்லை. செய்தித்தாள்களை எடுத்துக்கொண்டால் தினமலர், தினத்தந்தி இரண்டும் 200-300 சொற்களில் விமரிசனம் செய்ய முற்படுகின்றன. தினமணி மோசம். இரண்டு வரிக்கு மேல் கிடையாது.
இந்தியா டுடே தமிழ் மட்டும்தான் முழுப்பக்கம், இரண்டு பக்கங்கள் என்று விமரிசனம் செய்கிறது. இது ஒன்றுதான் புத்தக விமரிசனத்தைப் பொருத்தவரை நம்பிக்கை தரும் இதழ். சிற்றிதழ்கள், தீவிர இலக்கிய இதழ்கள் ஆகியவை பொதுவாக புத்தக விமரிசனம் என்றில்லாமல் தங்களுக்குத் தேவையான ஒரு சில புத்தகங்களை மட்டுமே ஆராய்ந்து பல பக்கங்களுக்கு எழுத முற்படுகின்றன.
தமிழில் வெளியாகும் அனைத்து புத்தகங்களையும் விமரிசித்து முடிந்தவரை முழுமையாகக் கொண்டுவர இணையமும் தன்னார்வலர்களும் இணைந்தால்தான் முடியும் என்று தோன்றுகிறது. (புத்தகவாசம் போல) ஆனால் இணைய ஆர்வலர்கள் எழுதும் விமரிசனம் என்றால் விமரிசனங்களின் தரம் பற்றி சில கேள்விகள் எழலாம். தேர்ந்த புத்தக விமரிசகர்கள் இணையத்தை இப்பொழுதைக்குச் சரியாகப் பயன்படுத்துவதில்லை.
அச்சு இதழ் நிறுவனங்களுக்கு பதிப்பாளர்கள் விமரிசனப் பிரதிகள் என்று இலவசமாக அளிப்பார்கள். ஆனால் இணைய ஆர்வலர்கள் தம் செலவிலேயே புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டியிருக்கும். ஆர்வலர்கள் தமிழகத்துக்கு வெளியே இருந்தால் புதிதாக வெளியாகும் புத்தகங்கள் அவர்களுக்குக் கிடைப்பது கடினமாக இருக்கும்.
2. Songs from 'home', ரஞ்சினி ராவ்: மீரா மாசி என்ற பெயரில், அமெரிக்காவில், ஷீதல், சோனாலி என்ற சகோதரிகள் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பாடல்கள், கதைகளை உருவாக்குகின்றனராம். இப்பொழுது டிவிடிக்களுடன், இனி வரும் நாள்களில் புத்தகங்கள், சிடிக்கள் ஆகியவற்றையும், பஞ்சாபி, குஜராத்தி மொழிகளிலும் உள்ளடக்கத்தை உருவாக்க உள்ளனராம்.
மீரா மாசி
பெங்களூர் இலக்கியத் திருவிழா
2 hours ago
புத்தக விமரிசனத்தை பொருத்தவரை இந்தியா டுடே தமிழ் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் கடைசி இரண்டு பத்திகளில் குறைகளை மிக நிறைவாகவே சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ReplyDeleteஇந்தியா டுடேயில் பிடித்தமான விஷயங்களே அலமாரியும், எசப்பாட்டும்தான், கொசுறாக கடைசி இரண்டு பக்க கில்மா செய்திகள்.
பத்ரி,
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை, இப்பொழுதெல்லாம் புத்தக விமர்சனங்கள் மிகக் குறைவாகத்தான் வருகின்றன.
ஏன் நீங்களே புத்தக விமர்சனத்திற்காக ஒரு இதழ் தொடங்கினால் என்ன? (ஆதரவு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறிதான்) ஏனெனில் புத்தக ஆர்வமிக்கவர்கள்தான் அவ்விதழை வாங்குவார்கள்.
அந்த இதழில் வேறு பல விசயங்களையும், கவிதை விமர்சனம், கட்டுரைகளைப் பற்றிய ஆய்வு, புதிய கண்டுப்பிடிப்புகளைப் பற்றிய விவரம், கூடவே இளைஞர்களுக்கான பயனுள்ள செய்திகளையும் போடலாம்.