Monday, August 07, 2006

ஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்

குத்தம்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் இளங்கோ தான் கடந்து வந்திருக்கும் பாதையைப் பற்றியும் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தான் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றியும் நேற்று பேசினார். (அதன் ஒலித்துண்டு என்னிடம் உள்ளது. அதனை 'சுத்திகரித்து' பின் வலையேற்றுகிறேன்.)

இளங்கோவின் பேச்சு (23 MB)

இளங்கோவைப் பற்றி நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றவர். CSIR-இல் வேலை செய்து வந்தவர். தன் வேலையை உதறிவிட்டு கிராம முன்னேற்றத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்த social entrepreneur. 1996-ல் தமிழகத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தபோது சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் குத்தம்பாக்கம் பஞ்சாயத்துக்கான தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பின் மீண்டும் அடுத்தமுறையும் வென்று இப்பொழுது கிட்டத்தட்ட பத்தாண்டுகாலம் அந்தப் பஞ்சாயத்தின் தலைவராக இருந்துள்ளார்.

தான் கடந்து வந்த பாதையைப் பற்றியும் தன் பரிசோதனைகளைப் பற்றியும் நேற்று பேசினார். முதலில் கிராம நலத்திட்டங்கள் பலவற்றைச் செய்ய முற்பட்டுள்ளார். சாலைகள் அமைப்பது, கழிவுநீர் அகற்ற சாக்கடைகள் அமைப்பது, உள்ளூர் பள்ளிக்கூடத்தைச் சீரமைப்பது, வீடுகளுக்கு குழாய்மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அளிப்பது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வசிக்க, கண்ணியமான நல்ல வீடுகள் கட்டிக்கொள்ள உதவுவது - இப்படியாகத்தான் அவரது முதன்மைகள் (priorities) இருந்தன.

ஆனால் இவை போதா என்பதை சீக்கிரமே அவர் உணர்ந்தார். கிராம மக்கள் பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமது சிந்திக்கும், செயலாற்றும் திறன்களை இழந்து 'எல்லாவற்றையும் அரசு செய்யும்' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கவனித்தார். விவசாயம் ஒரு வளம் கொழிக்கும் தொழிலாக இல்லாமல் போயிருப்பதையும் கவனித்தார். கிராம மக்களிடையே தொழில்முனையும் திறன் (entrepreneurial ability) இல்லாதிருப்பதைக் கண்டார். எந்தவித மதிப்புக்கூட்டுதலையும் செய்யாது விளைபொருளை நகரங்களுக்கு விற்று பின் மீண்டும் மதிப்புக்கூட்டிய பொருள்களை நகரங்களிலிருந்து வாங்குவதால் கிராமங்களிலிருந்து 'மூலதனம்' நகரங்களுக்குச் செல்வதை அறிந்துகொண்டார்.

கிராம மக்கள் ஏழைகளாகவே, அன்றாடங்காய்ச்சிகளாகவே இருந்தனர். என்னதான் நலத்திட்டங்கள் செய்தாலும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே அதிமுக்கியத் தேவை மக்களுக்கு நிலையான வருமானம் என்பதை அறிந்துகொண்டார். அதாவது 'ஏழைமையைக் குறை' என்று சொல்வதைவிட 'செல்வத்தைப் பெருக்கு', 'வருமானத்தை அதிகரி' என்பதுதான் தாரக மந்திரம் என்று புரிந்துகொண்டார்.

'கிராமப் பொருளாதரப் பின்னல்' ஒன்றை உருவாக்குவதன்மூலமும் கிராமங்களில் மதிப்புக்கூட்டும் தொழில்களை உருவாக்குவதன்மூலமும் கிராமக் கூட்டங்களுக்குத் தேவையான 80% பொருள்களை அந்தப் பின்னலிலிருந்தே பெறமுடியும் என்றும் மிகுதிக்கும் தொழில்நுட்பங்களுக்கும் மட்டும் நகரங்களைச் சார்ந்திருக்கலாம் என்றும் கணித்து அதைச் செயல்படுத்தத் தொடங்கினார். அதே நேரம் கிராம மக்களுக்கு அதிக வருமானமும் கிடைக்கும், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

குத்தம்பாக்கத்தைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை இணைத்து வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கினார். இந்த 20 கிராமங்கள் இணைந்த கூட்டமைப்பில் சுமார் 50,000 முதல் 60,000 மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கூட்டமைப்பின் மாதப் பொருளாதாரம் கிட்டத்தட்ட ரூ. 5.5 - 6.0 கோடி ஆகும். அதாவது ஒரு மாதத்துக்கு அந்த அளவுக்கு இந்த மக்கள் பொருள்களை வாங்குகின்றனர். பொருள்கள் என்றால் அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு, பால், பால் பொருள்கள், உப்பு, சோப்பு, ஷாம்பூ, பற்பசை, செங்கற்கள், ஓடுகள், பிளாஸ்டிக் பொருள்கள், பெயிண்ட், தைத்த துணிகள், ஊதுபத்தி, மெழுகுவத்தி, நோட்டுப்புத்தகங்கள், இத்யாதி. பின் சேவைகள்.

எப்படி புதுப் பொருளாதாரத்தை இந்தப் பின்னலில் உருவாக்குவது? 'Priming the pump' என்று சொல்வார்கள். நிலத்தடி நீரை அடிகுழாய் மூலம் எடுக்க முதலில் தண்ணீர் கொஞ்சத்தை மேலே ஊற்றவேண்டும். அதன்பிறகு தொடர்ந்து அடிக்கும்போது நிலத்தடிநீர் மேலே வரத்தொடங்கும். எனவே முதலில் கொஞ்சம் மூலதனம் தேவை. அந்த மூலதனம் மான்யங்கள் மூலம் அவருக்குக் கிடைத்துள்ளது - அரசு மான்யம், தனியார் தொண்டு நிறுவனங்கள் தரும் grant.

இந்தப் பணத்தை வைத்து அரிசி மில் ஒன்றைக் கொண்டுவந்தார். நெல்லை அப்படியே விற்பதற்குபதில் அரிசியாக்கி விற்பனை செய். அதையும் வெளிச்சந்தைக்கு விற்பதற்குமுன் உள்சந்தையில் - வலைப்பின்னலுக்கு உள்ளே - விற்பனை செய். மீதி இருப்பதை வெளியே கொண்டுபோ. கடலையை ஆட்டி நெய் ஆக்கு. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயைத் தயாரி. உள்ளூரிலேயே சோப்பு உருவாக்கு. துவரம்பருப்பை உடைத்து சுத்திகரித்து உள்ளூரிலேயே விற்பனை செய்.

நெல்லை அரிசியாக்கும்போது கிடைக்கும் உமியை எரித்து அதன்மூலம் மின்சாரம் தயாரித்து அதிலிருந்து ஊர் விளக்குகளை எரியவைத்தல், சுட்ட செங்கற்களுக்கு பதில் அழுத்தி உருவாக்கிய களிமண் கட்டிகளைத் தயாரித்தல், ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை - உள்ளூரிலேயே தயாரான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பேசினால் ஆனது.

ஒரு கிராமக்கூட்டத்தில் 35% விவசாயம், 15% கைத்தொழில் வினைஞர்கள், மீதி 50% எந்தத் திறனும் இல்லாத - unskilled தொழிலாளர்கள் என்ற நிலை போய், இந்த 50% மக்களை - 35% உள்ளூர் உற்பத்தியாளர்களாகவும் 15% திறனுள்ள தொழிலாளர்களாகவும் மாற்றியுள்ளார்.

இது ஓர் உடோபிய கனவா? இல்லை. இன்று குத்தம்பாக்கம் சென்று நேரிலேயே பார்க்கலாம். உலக வங்கியிலிருந்து வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். ரிசர்வ் வங்கி கவர்னர் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்.

இதனால் பிற கிராமங்களுக்கு ஏதேனும் நன்மையா? இதை ஒரு தனிமனிதன் ஏதோ மான்யத்தின்மூலம் உருவாக்கியிருக்கிறான், பெருமளவில் இதனைச் செய்ய சாத்தியப்படுமா என்று பலர் சந்தேகிக்கலாம்.

இல்லை, நிச்சயம் சாத்தியம் என்கிறார். ஒரு கிராமக் கூட்டமைப்பை தன்னிறைவடைந்ததாக மாற்ற ரூ. 5 கோடி pump primer தேவைப்படும் என்கிறார். அந்தப் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வட்டியோடு திரும்பக் கொடுத்துவிடக்கூடியதாக இருக்கும். ரிசர்வ் வங்கி கவர்னர் வந்தாராம். பார்த்தாராம். மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். "இது, இது, இதுதான் நமக்குத் தேவை" என்றுள்ளார். ஆனால் உடனேயே "நான் அந்நியச் செலாவணி பிரச்னையில் நேரத்தை செலவழிக்கவேண்டியுள்ளது. மேலும் நான் போய் காந்தியப் பொருளாதாரம், கிராம முன்னேற்றம் என்று சொன்னால் எல்லோரும் அதிர்ச்சி அடைவார்கள். என்னால் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு பேங்க் ஆஃப் இந்தியா சேர்மனை இளங்கோவுக்கு அறிமுகம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

பேங்க் ஆஃப் இந்தியா இப்பொழுது முதல் கட்டமாக ரூ. 24.5 கோடி தருவதாகச் சொல்லியிருக்கிறது. இதன்மூலம் ஐந்து கிராமக் கூட்டமைப்புகளை வலுவான பொருளாதார மையங்களாக மாற்றமுடியும். அது வெற்றிபெற்றால் மேலும் 100 கூட்டமைப்புகளை உருவாக்கத் தேவையான பணத்தைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம்.

இனி பிற வங்கிகளும் இதைப் பின்பற்றலாம்.

என்? கையில் பணம் வைத்திருக்கும் தனியார்கூட இதில் பங்குபெறலாம். வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் பங்குபெறலாம்.

ஐயோ, எல்லாம் போயிற்றே என்று புலம்பி அழாமல், சாதித்துக் காட்டியிருக்கிறார் இளங்கோ. அடுத்தமுறை பஞ்சாயத்துத் தேர்தல் முறையில் ஏற்படும் மாற்றங்களால் (சில பஞ்சாயத்துகள் பெண்களுக்கு அல்லது ஷெட்யூல்ட் சாதியினருக்கு என்று மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அது நடந்தால் குத்தம்பாக்கம் இப்படிப்பட்ட ஒதுக்கீட்டுக்குள் செல்லலாம்.) இளங்கோ மீண்டும் குத்தம்பாக்கத்தில் நிற்கமுடியாமல் போகலாம். அதுவும்கூட ஒருவகையில் நல்லதுதான்.

இளங்கோவின் சேவை குத்தம்பாக்கத்துக்கு வெளியேயும் தேவை.

இந்தச் செயல்பாடுகளின்போது இளங்கோவுக்கு அரசு அதிகாரிகளின் உதவி கிட்டியுள்ளதா? இல்லை என்கிறார். சொல்லப்போனால் உபத்திரவம்தான் அதிகம் என்கிறார். இவர் செய்த பலவற்றில் குற்றம் காண்பது, இவர் பணத்தைத் தவறாகச் செலவழித்தார் என்பது, இவரது சொத்துக்களை முடக்கப்பார்ப்பது என்று பிரச்னைகள்தாம். ஆனால் அதற்கெல்லாம் இவர் கவலைப்படுபவர் போலத் தெரியவில்லை. நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதன்மூலம் பிரச்னைகளை சமாளிப்பதாகச் சொல்கிறார்.

இளங்கோ நேற்று கொண்டுவந்த powerpoint presentation-ஐ உங்களுக்காக வாங்கிவந்துள்ளேன். இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Prosperity generation and poverty reduction through Network Growth Economy, Kuthambakkam Model: Powerpoint File (6 MB) | Low resolution PDF File (698 KB)

(கூத்தம்பாக்கம் என்று எழுதியிருந்ததை குத்தம்பாக்கம் என்று மாற்றியுள்ளேன்.)

19 comments:

 1. "இளங்கோ மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்"-இப்படி எழுதிவிட்டுப்போக உடம்பே கூசுகிறது.
  எப்படியோ கூத்தம்பாக்கம் மென்மேலும் உயரவேண்டும்.
  உழைப்புக்கு ஏத்த ஊதியம் கிடைத்திருக்கிறது.

  ReplyDelete
 2. இளங்கோ பண நிர்வாகத்தை எப்படி செயற்படுத்துகிறார் என்ற விளக்கம் இல்லை.
  கூட்டுறவு முறையில் இவற்றை நிர்வகித்தல் மிகவும் சிறப்பானது.
  கூட்டுறவுக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்போது இன்னும் இவ்வாறான உற்பத்திகளின் வினைத்திறன் அதிகரிக்கும்.

  இந்தியாபோன்ற முதலாளிய போக்கு கொண்ட நாடுகளில் கூட பிரச்சனைகள் அதிகமில்லாமல் முற்போக்கான பொருளாதார அமைப்பினை கூட்டுறவு மூலம் உருவாக்க முடியும்
  தகவலுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. Badri,

  Can you compress the PPT file & re-load?. It will be easier to download a small file.

  ReplyDelete
 4. சூப்பரா இருக்கு பதிவு.

  நான் படிக்கறது கனவு இல்லைதானே? இப்படி ஒரு மனிதரா?
  இந்தியகிராமங்கள் முன்னேறும் நாள் ரொம்ப தூரத்துலெ இல்லை.
  ஏழ்மையை ஓடஓட விரட்டணும். மனசுக்குச் சந்தோஷமா இருக்கு.

  ஏங்க பத்ரி,

  தனியாரும் உதவி செய்யலாமுன்னு சொல்லி இருக்கீங்களே. அதுக்கு எதாவது 'பட்ஜெட்' உண்டா?

  எல்லா வலைஞர்களும் சேர்ந்து ஒரு கிராமத்துக்குச் செய்ய முடியுமா?
  ஒரு ஆர்வக்கோளாறுதான்.

  ReplyDelete
 5. I have created a PDF file of the presentation to reduce the size, but understand that this will make all the photos of considerably lower resolution and highly pixellated. However, the size has reduced by about 1/10th.

  ReplyDelete
 6. துளசி: நாம் என்ன செய்யலாம்?

  1. நேரடியாக கிராமங்களில் வசிப்பவர்களால்தான் பலவற்றை மாற்ற முடியும். நம் கிராமங்களில் வசிக்கும் நம் உற்றார் உறவினர் கூத்தம்பாக்கம் சென்று இளங்கோ என்ன செய்துள்ளார் என்பதைப் பார்க்கச் சொல்லலாம்.

  2. பண உதவி: தெரியவில்லை. இளங்கோ பஞ்சாயத் அகாடெமி என்று ஒன்று தொடங்கியுள்ளார். அதற்கு உதவிகள் தேவைப்படலாம். அவரது மின்னஞ்சல் முகவரி உள்ளது. அவரிடமே நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்! அவரது தொலைபேசி எண்ணும் உள்ளது. அவரிடம் நேரடியாகப் பேசவும் செய்யலாம்.

  ReplyDelete
 7. மயூரன்: இப்பொழுது இவர் செய்திருப்பது எல்லாம் மான்யங்கள்/நன்கொடைகள் மூலம் வந்த பணம். அதனால் தொழில்கள் அனைத்தும் ஓர் அறக்கட்டளை மூலம் இயங்குகின்றன.

  ஆனால் இனி வங்கிப் பணம் மூலம் உருவாக்கப்படும் தொழில்கள் கிராமங்களில் தனியார் வசத்தில்தான் இயங்கவேண்டியிருக்கும். கூட்டுறவு முயற்சிகளும் இருக்கலாம் என நினைக்கிறேன்.

  முதலாளியப் போக்கு பற்றி உங்களுக்கு இருப்பதுபோல எனக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏதும் கிடையாது. தளையற்ற சந்தைகள்மூலமும் முதலாளிய சாதனங்களான கடன், தனிநபர் அல்லது கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவை மூலமும்தாம் கிராமங்கள் வலுவான அமைப்புகளாக மாறமுடியும் என்று நினைக்கிறேன்.

  முகமது யூனுஸ் குறுங்கடன் வாயிலாக பங்களாதேசத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார். அங்கும் சந்தைப் பொருளாதாரம்தான் மக்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

  கம்யூன் முறைப்படி குடியாட்சி நாடுகளில் ஏதேனும் நல்லது நடந்தால் எங்கு நடக்கிறது என்று அறியத் தாருங்கள்.

  ReplyDelete
 8. மிகச் சிறப்பான பதிவு. இப்படி உள்ளவர்கள் வெளிச்சத்திற்கு வருவது பலரை ஊக்குவிக்கும்.

  இதைப்போலவே நமது குடியரசுத்தலைவர் கிராம முன்னேற்றத்திற்காக PURA என்ற ஒரு திட்டத்திற்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறார்.

  Thanks a lot for loading the PDF.

  ReplyDelete
 9. நம்பிக்கையூட்டுகிறது.

  ReplyDelete
 10. It's really amazing.
  Now i am feeling very bad about me as a youth of tamilnadu i haven't done any usefull thing to our society.
  Ilango is a rollmodel for our youth generation.
  I wish him all success in his future Endeavours..and at the same time i will also try my level best to do something..
  Thanks for this inforamtion,

  ReplyDelete
 11. பத்ரி,

  ஒரு சிறு திருத்தம். இந்தக் கிராமத்தின் பெயர் குத்தம்பாக்கம். கூத்தம்பாக்கம் அல்ல.

  இளங்கோ அவர்கள் எனது கல்லூரித் தோழர். அவரைப்பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று நானும் எண்ணியது.

  விடுமுறை நாட்களில், குடும்பத்துடன், புதிதாக ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணியபோது, நாங்கள்

  தேர்ந்தெடுத்த இடம் குத்தம்பாக்கம் கிராமம். அங்குள்ள சமத்துவபுரமும், சமுதாயக் கூடமும், விளைபொருள் உற்பத்திக் கூடமும் குடும்பத்தினரை வியப்பிலாழ்த்தியவை.

  சமத்துவபுரம் அமைக்க அரசாங்க விதிமுறைகள் இடம் கொடுக்காத போதும், அதிகாரிகளிடம் போராடி, விதிகளைத் தளர்த்தச் செய்ததற்கு காரணம் ஒன்று உண்டு. ஒரு காலத்தில் குத்தம்பாக்கத்தில், பெரும்பான்மையினோர் செய்து வந்த தொழில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகும். அரசியல்வாதிகள் பின்னணியில் நடைபெற்று வந்த, கள்ளச்சாராயத்தைப் பெரும்பாடுபட்டு
  ஒழித்த இளங்கோ, கிராம மக்களுக்கு, உழைத்துப் பிழைக்க, வேறு வழி சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, அவர்
  அரசாங்கத்துடன் போராடி, ஒரு சமத்துவபுரம் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் இந்தக்
  கிராம மக்களே. பயன்படுத்திய பொருட்கள் அனத்தும், உள்ளூர்ப் பொருட்களே. இவரைப் பற்றியும், குதம்பாக்கம் பற்றியும் மேலும் ஆங்கிலத்தில் அறிய,

  http://goodnewsindia.com/index.php/Magazine/story/elango-kuthambakkam

  - சிமுலேஷன்

  ReplyDelete
 12. பத்ரி,

  இந்த முயற்சியை பொறுத்தவரை, முதலாளியம் குறித்த என் நம்பிக்கையீனங்களை நான் முதன்மைப்படுத்தவில்லை. அதனால் தான் கூட்டுறவு பற்றி சொன்னேன்.

  கூட்டுறவு எப்போதும் லாபத்தன்மையானது. ஆனால் முற்போக்கானது. மனித உறவுகளை பண்படுத்த அது மிகவும் உதவி செய்யும். அத்தோடு சமூகப்பிரச்சனைகளை கையாள்வதற்கான் களத்தையும் பெற்றுக்கொடுக்கும்.

  இத்தகைய கிராம மட்ட முயற்சிகள் கூட்டுறவினை அடிப்படையாக கொண்டியங்குதலை நான் விரும்புகிறேன்.

  இளங்கோவிற்கு பின்னரு, அவருக்கு அப்பாலும், இம்முயற்சிகள் தனி நபர்களால் விழுங்கப்படாதிருக்க, நீடித்து நிலைபெற அது உதவும்.

  ReplyDelete
 13. பத்ரி சார்,
  உங்கள் கேள்வி பதில்கள் இல்லாதது மைனஸ் பாயிண்ட். உங்கள் இருவருக்கும் உரையாடல் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் அதனையும் கட்டாயம் ஒலியேற்றுங்கள்.

  ஒரு கேள்வி. குத்தம்பாக்கம் கூட்டமைப்பு எவ்வாறு பெரிய முதலாளிகளையும், பெரிய நிறுவனங்களையும் சாமாளிக்கிறது ? ஐந்து கோடி வியாபாரத்தில் ஒரு கோடி லாபம் வருகிறது என்றால் எப்படி பெரிய நிறுவனங்கள் விட்டுக்கொடுக்கும். ? உதாரணத்திற்கு சோப்பை எடுத்துக்கொள்வோம். இப்போ குத்தம்பாக்கத்தில் சோப் செய்ய ஐந்து ருபாய் ஆகிறது என்று வைத்திக்கொள்வோம். HLL அல்லது பவர்சோப் நாலு ஐம்பதிற்கு அதே தரத்தில் சோப் மற்றும் ஒரு இலவசப் பொருளுடன் விற்பனை செய்தால் என்ன ஆகும் ?

  குத்தம்பாக்கம் மக்கள் பெரிய நிறுவனங்களின் கவர்ச்சிக்கும், விளம்பரத்திற்கும், இலவசங்களுக்கும் மயங்காமல் தங்களின் கூட்டமைப்பிற்கே எப்போது ஆதரவாக இருப்பார்களா ? பெரிய நிறுவனங்கள் இந்த ஒற்றுமையை கவர்ச்சியான விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது இலவசப் பொருட்கள் மூலமாகவோ உடைக்கமுடியாதா ?

  நன்றி.

  ReplyDelete
 14. எப்போதும் ஆதரவாக இருப்பார்களா ?
  என்று படிக்கவும்.

  ReplyDelete
 15. பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோ பியன் கனவு:


  பத்ரியின் நல்ல நோக்கங்கள் பாராட்டுக்கு உரியது.

  அந்த கட்டுரை நல்ல விசய்ம்தான்.

  முதலாளித்துவ வளர்ச்சிக்கு இது போன்ற பொருளாதார அமைப்புதான் இன்றைய இந்தியாவின் தேவை. இத்துடன் துண்டு துக்காடாவாக இருக்கும் நிலங்களை இணைத்து கூட்டுறவு பண்ணைகள் மூலம் ஒருங்கிணைந்த மையப்படுத்தப்பட்ட முன்னேறிய வடிவத்தில் விவசாய உற்பத்தியும் மாற்றி அமைக்கப்பட்டால், நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பு ஒரளவு புதிய ஜன நாயாக புரட்சிக்கு பிந்தைய இந்திய பொருளாதார அமைப்பை ஒத்திருக்கிறது.

  புதிய ஜனநாயக பொருளாதார அமைப்புக்கும், பத்ரி கூறிய அமைப்புக்கும் உள்ள மிக மிக முக்கியாமான வித்தியாசம் என்ன என்பதையும், அந்த வித்தியாசங்களின் அடிப்படையில் பத்ரி கூறிய அமைப்பு எப்ப்டி ஒரு உட்டோ பியன் கனவு என்பதையும் விளக்குகிறேன்.

  #1) விவசாயத்தை - விவசாயிகளை விரட்டயடிக்காமல், முதலாளித்துவ மயமாக்கும் விசயம் நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பில் இல்லை என்பது ஒரு முக்கியமான விசயம்.

  #2) மற்றொரு விசயம் இந்த பொருளாதார சீர்திருத்தம், எந்த விதமான அரசு அதிகாரம் செலுத்தும் போது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதில்தான் இந்த பொருளாதார அமைப்பு வரமா, சபாமா என்பது அடங்கியுள்ளது.

  *********
  முதல் விசயத்தில் விவாதிக்க ஒன்றுமில்லை. அது வெளிப்படையாக தெரியும் விசயம்.

  இரண்டாவது விசய்ம்தான் சிறிது விளக்கம் தேவைப்படுகிறது.

  பத்ரி, மேற்சொன்ன பொருளாதார அமைப்பு(விவசாய சீர்திருத்தம் தவிர்த்த) இந்தியா முழுவதும் வீச்சாக அமல் படுத்தப்படுமா?
  அமல்படுத்தப்படுவதற்க்கான(இதே வடிவத்தில் இல்லாவிட்டாலும் வேறு வடிவங்களில் - Ex. உலக வங்கி உதவியுடன் தற்பொழுது செயல்படுத்தப்படும் கிராம சுய தேவை பூர்த்தி செய்யும் திட்டங்கள்) சாத்தியம் அதிகமுள்ளது. இதைப் பற்றி இந்த பின்னூட்டத்தின் பிற்பகுதியில் சொல்கிறேன். அவ்வாறு அமல் படுத்தப்படுவதில் இந்தியாவின் வளங்களை கொள்ளையிடும் ஏகாதிபத்திய சதியும் அடங்கியுள்ளது என்பதை மட்டும் இப்பொழுது குறிப்பிடுகிறேன்.

  இது போல ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மக்கள் தேவைக்காக உற்பத்தி செய்வது தற்பொழுது கூட்டுறவு பண்ணைகளின் கையில் உள்ளதால் அதில் சேகரமாகும் மூலதனம் மீண்டும் மக்கள் நலனுக்கு செலவழிக்கப்படுகிறது.

  இதில் குறிப்பிட்ட அளவு தனியார் மூலதனத்தை அனுமதிப்பதும் சரிதான். ஆனால் எந்த அமைப்பில் இந்த கிராம பொருளாதார சீரமைப்பு நடைபெறுகிறது?

  இந்தியவின் அரசியல் பொருளாதார மூக்காணங் கயிறு முற்று முதலாக ஏகாதிபத்தியங்களின், MNC க்களின் கையில் இருக்கும் ஒரு சூழலில் நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பு நடைமுறைக்கு வருகிறது. (தனித் தனியாக பல இடங்களில்(ஒரு 1000 கிராமங்களுக்கு ஒரு மண்டலம் என்று வைத்துக் கொள்வோம்)).

  இதில் தனியார் முதலீடும் வருகிறது. இதன் வளர்ச்சி காலப்போக்கில்(ரொம்ப காலமெல்லாம ஆகாது) கிராம வளங்கள் அனைத்தும், ஒரு சில தனியார் வசம் - ஏற்கனவே சாதி மற்றும் இன்னபிற நிலபிரபுத்துவ பிற்போக்கு தளைகளால் சக்திவாய்ந்தவர்கள் - கையில் சென்று மையப்படுத்தப்படும், இதே நேரத்தில் மக்கள் அரசு என்பதையும் நம்பி இல்லாமல், தங்களது அத்தனை தேவையையும் பணம் கொடுத்து வாங்கப் பழக்கப்பட்டிருப்பார்கள். (இப்படி ஒரு உணர்வுக்கு மக்கள் வந்தடைவதில், MNCக்கு உள்ள அட்வான்டேஜ் என்ன என்பதை கடைசிப் பகுதியில் சொல்கிறேன்.)

  இந்த சமயத்தில் பகுதி அளவில் வளர்ச்சியடைந்த அந்த முதலாளிகளை தரகு முதலாளிகள் அல்லது MNCக்கள் விலைக்கு வாங்கி(acquisition) தங்களது சந்தையை விரிவுபடுத்திக் கொள்வார்கள். இந்த இடத்தில் இந்தியாவின் கிராம வளங்களையும், சந்தையையும் கையகப்படுத்தும் ஏகாதிபத்திய தந்திரம் நிறைவடைகிறது.

  இதற்க்கு ஏன், ஏகாதிபத்தியங்கள்(WTO, Worl Bank) தலையை சுற்றி மூக்கைத் தொடும் ஒரு process-யை தேர்ந்தெடுக்கிறார்கள்?

  #1)
  இந்தியா மிகப் பெரிய சந்தை. இந்தியாவில் தற்பொழுது MNC க்களின் கையை கிட்டும் அளவில் உள்ள சந்தையே மிகப் பெரிது. ஆனால் அந்த சந்தை இந்தியாவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் பொழுது மிக சிறிது(30 கோடி - rough estimation).

  மீதியுள்ள 90 கோடி பெரும்பாலும் சிறு முதலாளிகள், அரசு நிறுவனங்கள், கிராம உதிரி உற்பத்தி நிலையங்கள்(துண்டு நிலங்கள் etc) கையில் உள்ளன. இந்த சந்தை ஏகாதிபத்தியங்க்ளின் target.

  #2) இந்தியாவின் வளங்கள் - தண்ணீர், நிலம் பிரதானமாக - இன்னும் நிலபிரபுத்துவ பிற்போக்கு கிராம சார்ந்ததாக உள்ளது, இந்த வளங்களை கைப்பற்றை தனது சந்தை தேவைக்கு உபயோகப்படுத்துவது இரண்டாவது target.

  இந்த இரண்டு விசயத்திலும் நம்மிடம் போட்டி போடும் நம்மை விஞ்சும் ஒரு நாடு - சீனா.

  ஆனால் சீனா அரசு ஒரு கம்யுனிஸ்டு அரசாக இன்று இல்லாவிட்டாலும் கூட, அது ஒரளவுக்கு தேசிய முதாலாளிகளின் நலன்களுக்கான அரசு என்பதை சொல்லிவிடலாம். அவர்களின் சந்தையும், வளங்களும் ஏற்கனவே முதலாளித்துவ உற்பத்தி முறை நன்கு வளரந்த அந்த ஊர் தேசிய முதலாளிகள் கையில் இருப்பதும், MNC - க்கள் இந்தியாவில் செய்வது போல் அங்கு விளையாட முடியாது என்பதும் சேர்ந்து இந்தியாவை போட்டியின்றி முதல் இடத்தில் வைக்கிறது.

  ஆக, இப்படி ஒரு மிக மிக முக்க்யாமான ஒரு சந்தையில், ஒரு வளங்களுக்கான பின் நிலத்தில் - நடைமுறைப்படுத்தப்படும் அவர்களின் சதி திட்டம் வெற்றியை உறுதிப் படுத்தும் விதமாக பல இடங்களில் பரிசோதித்த மாடல்களின் விளைவான ஒரு திட்டமாக இருக்க வேண்டும்.

  MNC -க்களுக்கு ஏற்கனவே லத்தீன் அமேரிக்க நாடுகளில் படு மோசமான அனுபவங்க்ள் உண்டு. பல இடங்களில் MNC-க்களின் சேவையால் ஆத்திரமுற்று மக்கள் பல கம்பேனிகளை அடித்து விரட்டியிருக்கிறார்கள் (அப்படி வெளியேறிய கம்பேனிகள் GATS போன்ற ஒப்பந்தத்தின் சரத்துக்களில் உள்ளபடி அந்த அரசாங்கங்களிடமிருந்து நஸ்டயீடு பெற்றுவிட்டன என்பது இன்னோரு கொடுமையான விசயம் - இந்தியாவில் இதற்க்கு உதாரணம் மகாராட்டிர என்ரானுக்கு மின்சாரம் தாயரிக்காமல் இருக்க ஒவ்வொரு வருடமும் சில நூறு கோடிகள் கொடுத்த விசயம்).

  அந்த அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டது, மக்கள் விலை கொடுத்து வாங்க பழக்கப்படுத்த வேண்டும் என்பதும், தங்களது பிரச்சனைகளுக்கு அரசையையோ வேறு யாரையுமே நிர்பந்திக்கூடாது எனும் எண்ணத்தை தார்மீக ரீதியாக அவர்கள் மனதில் உருவாக்குவதும். அதாவது தமது பிரச்சனைக்கு தான் தான் காரணம் என்ற உணர்வை மக்களிடம் உருவாக்குவதுதான்.

  அதாவது பின்வரும் எடுத்துக்காட்டை பார்க்கவும்,

  //ஒரு தலைவர்: இந்த கம்பேனியின் சுரண்டலை எதிர்த்து போராடி அரசை கேள்வி கேட்டு போராட வேண்டும்.

  மக்கள்: அரசு என்னப்பா செய்யும், நாமதான 10 வருச ஒப்பந்தம் ஒரு கோடி ருபாய் வாங்கிக்கிட்டு தண்ணீய அவனுக்கு வித்தோமே. எல்லாம் சட்டப்படி நாம செஞ்ச தப்பு. அந்த கம்பேனிட்ட ஏதாவது பேசி வேலை ஆகுதானு பார்ப்பம். அதவிட்டு போராடுனா, Govt போலிசோட வந்து அடிச்சு நொறுக்கிடுவான் - அரசுக்கு சட்ட ஒழுங்கு ரொம்ப முக்க்யம், அரசு, அவன் கடமையை செய்ய வேண்டாமா?....
  (அந்த கம்பேனி விலை குறைவாக தண்ணீர் கொடுத்தால் தரம் குறைவாகத்தான் கொடுப்பேன் என்று மோசமான தண்ணீரை கிராமத்துக்கும், நல்ல சுத்திகரிக்கப்பட்ட நீரை ஐரோப்பவிற்க்கும் ஏற்றுமதி செய்யும் - அந்த சமயத்தில் ஐரொப்பாவில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்தில் லாபம் பார்ப்பதற்க்காக. இதனை ஒத்த அனுபவம் பொலிவியா கொச்சபம்ப நகரத்தில் நடந்து, மக்களே அணீதிரண்டு அந்த கம்பேனி அடித்து விரட்டினர்.)//


  தண்ணீர் போன்ற அதி அவசிய பொருட்களை விலை கொடுத்து வாங்க மக்களை பழக்கப்படுத்துதல் என்ற சரத்து GATS ஒப்பந்தத்தில் உள்ள விசய்ம்.

  இன்னொரு முக்கிய சரத்து:
  லாபத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும்(அதாவது புரட்சி, போர் அல்லது வேறு காரணத்தால் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்ப்பட்டால் அரசு நஸ்டஈடு தர வேண்டும் - Ex: என்ரான்)

  பத்ரியின் அமைப்பு ஏகாதிபத்திய சேவை நோக்கி போவதற்க்கும், இதனை ஒத்த புதிய ஜனநாயக பொருளாதார அமைப்பு மக்கள் சேவையை நோக்கி போவதற்க்கும் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று அதிகாரத்தில் உள்ள அரசு எனில்,

  இன்னோரு முக்கிய காரணம்,

  பத்ரியின் அமைப்பு தவிர்க்க இயலாமல் தனியார்மயத்தை நோக்கிப் போகும்(சந்தை தேவைதான் அதை ஒந்தித் தள்ளும், மக்களின் தேவையல்ல)
  ஆனால் புதிய ஜனநாயக அமைப்பு முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கான அளவில் தனியார் மயத்தை வைத்துக் கொண்டு அந்த வரம்பை எட்டும் போக்கில் தனியாரின் தேவை சிறிது சிறிதாக சுருங்கி இறுதியில் இல்லாமல் போய்விடும்.

  ஆக, மேற் சொன்ன இந்த காரணங்களினால்தான் பத்ரி சிலாகித்து எழுதியிருந்த பொருளாதார அமைப்பு அதன் உண்மையான வர்க்கச் சார்பில் ஒரு கானல் நீராக/ஏகாதிபத்திய சேவை செய்வதாக உள்ளது.

  பத்ரி மற்றும் இந்த பொருளாதார அமைப்புக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆனால் இந்த அமைப்பு வெற்றிகரமாக மக்களின்
  வாழ்வை வளம் செய்ய போதுமான நிலைமைகள் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது பகுத்தறிவாக இருக்காது.

  மேலும் பத்ரியே சொல்வது போல் அந்த சிறு பகுதியே 6 கோடி அளவிலான சந்தையைக் கொண்டுள்ளது. அதை MNCக்கள் விட்டு வைக்கும்
  என்ற நம்பிக்கைக்கு உத்திரவாதம் கொடுக்கும் அள்விற்க்கு நம்மை ஆள்பவர்கள் நேர்மையாக இல்லை என்பதையும், அதாவது சாதரண(commener) மக்கள் நலனை முன்னிறுத்தும் ஒரு
  அரசு ஆட்சி செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


  நன்றி,
  அசுரன்

  ReplyDelete
 16. 1. குத்தம்பாக்கம் பொருளாதார மாதிரி நிலைத்து நிற்குமா அல்லது பண்ணாட்டு / உள்நாட்டு பெரு நிறுவனங்களால் அழிக்கப்படுமா என்ற கேள்விக்கு நம்மால் இப்பொழுது விடை சொல்ல முடியாது.

  முதலில் முதலாளித்துவம் பற்றி பலர் சொல்வதை நான் ஏற்கவில்லை. 17-18ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம் இயங்கியதிலிருந்து இன்றைய முதலாளித்துவம் நிறைய மாறியுள்ளது. இன்னமும் மாறவேண்டும். ஆனால் வெகுமக்களை நசுக்கி அவர்களை ஓட்டாண்டியாக்குவதுதான் முதலாளித்துவத்தின் நோக்கம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

  வெகுமக்கள் சவுகரியமாக இருந்தால்தான், நிறைய வருமானம் பெற்றால்தான், அவர்களது கைகளில் நிறைய உபரி வருமானம் (Surplus Income) இருந்தால்தான், பல நிறுவனங்களின் பொருள்களுக்குப் பெரிய சந்தை இருக்கும்.

  2. கிராம மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களைத் தாங்களே தயாரிப்பது எவ்வளவு நாள்களுக்குச் செல்லுபடியாகும்? HLL போன்றவர்கள் எவ்வளவு சீக்கிரம் தங்களது பொருள்களை இந்தச் சந்தையில் வந்து குவிப்பர்? 'அந்நியப் பொருள்' தரம் அதிகமாகவும் விலை குறைவாகவும் இருந்தால், அத்துடன் விளம்பரங்கள்மூலம் அறியப்பட்டிருந்தால் கிராம மக்கள் எதை வாங்குவர்?

  இன்றைய காலகட்டத்தில் பல பெருநிறுவனங்கள் கிராமங்களைத் தங்களது சந்தையாகவே கருதுவதில்லை. வெகுசில நிறுவனங்களே கிராமங்களை நோக்கிச் சென்றுள்ளன. எனவே அடுத்த பல வருடங்களில் கிராம மக்கள் தங்களுக்குள்ளாகப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பதில் பிரச்னைகள் இருக்காது.

  ஆனால் நாளடைவில் கிராமச் சந்தை வளர்ந்ததும் பல நிறுவனங்களும் தாங்களும் அங்கு நுழையலாமே என்று நினைக்கத் தொடங்குவார்கள். அதற்குள்ளாக கிராம மக்கள் வேண்டிய கல்வியறிவும் சிந்திக்கும் திறனும் பெற்றிருப்பார்கள் என்று எண்ணுவோம். அப்பொழுது தங்களுக்கு எது நல்லது, எந்தப் பொருளைத் தாங்கள் வாங்குவது தம்முடைய பொருளாதார வளத்துக்கு உகந்தது என்பதை அவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.

  3. அரசு அமைப்புகள் இந்த முயற்சியை எவ்வாறு எதிர்கொள்ளும்?

  என்னிடம் சரியான பதில்கள் இல்லை. ஆனால் இப்பொழுதைய தேவை பஞ்சாயத்துகள் வெகுவாகப் போராடி தங்களுக்கென அதிகபட்ச சுயாட்சியைப் பெற முனைவதுதான். எப்படி மாநிலங்கள் மத்திய அரசுடன் போரிட்டு வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு பங்கைத் தங்களுக்கெனப் பெற்றுள்ளனவோ அதைப்போலவே உள்ளாட்சி அமைப்புகள் போராடவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு முறைகள் தொடர்பாக மேலும் பல சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். இப்பொழுது உள்ளாட்சி அமைப்புகளின் சுதந்தரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்த நிலை மாறவேண்டும்.

  இது தவிர்த்து தனியார் முயற்சியில் கிராம மக்களை ஒருங்கிணைத்து பொருளாதார முறையில் வலுவானவர்களாக ஆக்குவதை எந்த மாநில அரசும் எதிர்க்க முடியாது. நிறைய முட்டுக்கட்டைகளைப் போட முயற்சி செய்யலாம். ஆனால் இது தேர்தல் பிரச்னையாக உருமாறினால் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு நீர்த்துப்போகும்.

  ReplyDelete
 17. பத்ரி,

  எனது பின்னூட்டத்தில் உள்ள விசயங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?

  சரி இருக்கட்டும் ஒரு வேளை நிதானமாக பதில் சொல்லாலாம் என்று கருதியிருக்க வாய்ப்புள்ளது.


  //17-18ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம் இயங்கியதிலிருந்து இன்றைய முதலாளித்துவம் நிறைய மாறியுள்ளது. இன்னமும் மாறவேண்டும். ஆனால் வெகுமக்களை நசுக்கி அவர்களை ஓட்டாண்டியாக்குவதுதான் முதலாளித்துவத்தின் நோக்கம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.//

  என்ன விதமான மாற்றம் என்பதை சிறிதாக கோடிட்டு காட்டுங்களேன்?

  அடிப்படை உற்பத்தி உறவில் ஒரு மாற்றமும் கிடையாது.

  இன்னமும் மார்க்ஸ் கணித்த பதையில் முதாலாளித்துவம் வெகு பெர்பெக்ட்டாக நடைபோடுகிறது.

  இது குறித்து சமீப காலத்தில் முதலாளித்துவ பத்திரிக்கைகளீலேயே பல கட்டுரைகள் வரத்தொடங்கிவிட்டன...

  மெலும் தனிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் இந்த தளத்தில் விவாதம் செய்வீர்கள் எனில் இத்துடன் எனது விவாதத்தை நிறுத்திக்கொள்கிறென். ஏனெனில் முதலாளித்துவம் ஒட்டாண்டியாக்கும் என்பதற்க்கு ஆதராமாகத்தான் அவ்வள்வு பெரிய பின்னூட்டமிட்டேன் அதிலிருந்து ஒன்றையுமே எடுத்துப் பேசாமல் அல்லது தங்களது சொந்த தர்க்க ஆதரங்களை முன்வைக்காமல் //நான் ஏற்றுக் கொள்ளவில்லை// என்று இரண்டே வார்த்தைகளில் கூறுவதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

  முதலாளித்துவம் தனது வரலாற்றுக் கட்டத்தை கடந்துm, ஏகாதிபத்திய தந்திரங்கள் மூலம் தொடர்ந்து இருந்து வருகிறது. இது குறித்துத்தான் எனது ஆங்கில/தமிழ் பதிவுகளில் கட்டுரைகள் உள்ளன(kaipulla.blogspot.com, poar-parai.blogspot.com)

  //வெகுமக்கள் சவுகரியமாக இருந்தால்தான், நிறைய வருமானம் பெற்றால்தான், அவர்களது கைகளில் நிறைய உபரி வருமானம் (Surplus Income) இருந்தால்தான், பல நிறுவனங்களின் பொருள்களுக்குப் பெரிய சந்தை இருக்கும்.//

  பிரிட்டிஸ்க்காரன் காலத்தில் நீங்கள் மேற்சொன்ன விசயம் இல்லையா..... ஏன் சுதந்திரம் வாங்கினோம்?

  கொஞ்சம் யொசியுங்கள்? சந்தைப் பொருளாதாரம் தனக்கு தேவையென்றால் கல்வியறிவு பெற்ற தொழிலாளர்களையும் கூட உருவாக்க அரசை நிர்பந்திக்கும்(1947-1975 - wellfare அரசுகள் எல்லாம் இந்த கதையும் சொசலிச அபாயமும் செர்ந்து உருவாக்கியதுதான். எனது kaipulla.blogspot.com-ல் indian freedom and Imperialism Immediately after freedom படியுங்கள்). இவற்றையெல்லாம் மீறி இந்த பொருளாதரத்துக்கே இருக்கிறா சாபக்கேடுகள்தான் சமீபத்திய ஸ்டாக் மார்க்கெட் எருமை effect, bubble economy etc.

  //இன்றைய காலகட்டத்தில் பல பெருநிறுவனங்கள் கிராமங்களைத் தங்களது சந்தையாகவே கருதுவதில்லை. வெகுசில நிறுவனங்களே கிராமங்களை நோக்கிச் சென்றுள்ளன. எனவே அடுத்த பல வருடங்களில் கிராம மக்கள் தங்களுக்குள்ளாகப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பதில் பிரச்னைகள் இருக்காது.//

  இது தங்களது அறியாமையை காட்டுகிறது. இந்தியாவை பொறுத்தவரை கிராம சந்தை, வளங்களை கைப்பற்றுவதுதான் GATS ஒப்பந்தத்தின் முக்கிய agenda.

  தங்களது இந்த பின்னூட்டத்தில் எனது முந்தைய பின்னூட்டத்திற்க்கான பதிலகள் இல்லை. மாறாக புதிய விசயங்களை பேசியுள்ளீர்கள்.

  அரசு அமைப்புகள் பற்றியும் எனது பின்னூட்டத்தில் கொடுத்துள்ள அம்சத்தை பற்றி எந்த விமர்சன்மும் இல்லை.

  தங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறென்.

  //இது தேர்தல் பிரச்னையாக உருமாறினால் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு நீர்த்துப்போகும். //

  இந்தியாவில் பொருளாதார கொள்கையில் மாறுபட்ட வோட்டுக் கட்சிகள் என்று எதுவும் இல்லை. (எ-கா) BJP இன் தாராளமயம் ஏற்படுத்திய பாதிப்பு anti incubancy factor எல்லா இடங்களிலும் தலைகீழாக புரட்டியது. ஆனால் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அதே திட்டங்களை BJPயைவிட ஆக்ரோசமாக நயவஞ்சகமாக நடைமுறைப்படுத்தவில்லை? அதானால் தேர்தல் பயம் பொருளாதரத்தில் நிர்பந்தத்தை உருவாக்கி மாற்றும் என்பது நம்பமுடியாத அதிசயம்.

  தேர்தல் ஜன நாயகம் கட்சிகளை மிரட்டி கொள்கை மாற்றங்களை கொண்டு வரும் என்பது முதலாளித்துவ ஜன நாயகம் முற்றி அழுகிப் போன ஐரோப்பா, அமேரிக்காவிலேயே சாத்தியமில்லாத ஒரு உட்டோ ப்பியாதான். அதுவும் ஜன நாயகம் என்பது சென்னை, பெங்களூர் போன்ற மா நாகரங்களுக்குள்ளேயே அதுவும் அடுக்குமாடி அபார்ட்மென்டுகளுக்குள் மட்டும் இருக்கும் ஒரு நாட்டில் ,நம் இந்திய திரு நாட்டில். நீங்கள் சொல்லுவது போல் நடக்கும் என்று நம்புவது அடிப்படையற்றது.

  நன்றி,
  அசுரன்.

  ReplyDelete
 18. Dear Mr. Badri,

  The link to audio (mp3) file of Elango's speech is dead. Could you please re-upload it somewhere (like rapidshare.com) and provide me the link.

  Thanks a bundle.

  S.K
  yeskay [at] cyberbrahma [dot] com

  ReplyDelete
 19. came across this article from reference in a friend's blog. It's been almost 7 years since this blog was written. I am curious to know what is the current status of this village and this economy. Especially after reading the sustainability discussion over here.

  ReplyDelete