Friday, August 04, 2006

ஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்

நாளை - சனிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2006 - முதல் ஈரோட்டில் புத்தகக் கண்காட்சி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 15 வரை செல்லும்.

இந்தக் கண்காட்சி சென்னையை அடுத்து, தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய கண்காட்சியாக இருக்கும் என்று தகவல்கள் வந்துள்ளன. ஈரோடு வ.உ.சி பூங்காவில் 150க்கும் மேற்பட்ட கடைகளுடன் நடக்கும் இந்தக் கண்காட்சிக்கு ஈரோடு, அதைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் சிந்தனைப் பேரவை என்னும் இயக்கத்தால் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்தக் கண்காட்சி சென்ற வருடம்தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பதிப்பகம் இந்தக் கண்காட்சியிலும் கலந்துகொள்கிறது. அரங்கு எண்: 10, 11, 12. இங்கும் கிழக்கு பதிப்பகம் கண்காட்சி நுழைவாயிலை விளம்பரத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

====

மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரையிலும் சென்னையைப் போன்ற பெரிய அளவில் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்த ஆர்வம் கொண்டுள்ளார். இதுநாள்வரையில் மதுரையில் உருப்படியான புத்தகக் கண்காட்சி நடைபெற்றதில்லை. ஒவ்வொரு புத்தகக் கடையும் தனக்கென ஒரு கண்காட்சி நடத்தும்.

ஆனால் இம்முறை மாவட்ட ஆட்சியர் தலையிட்டதின் பேரில், BAPASI செப்டம்பரில் மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது. இந்தக் கண்காட்சி செப்டம்பர் 1-10 தேதிகளில் நடைபெறுகிறது. அதன்பிறகுதான் மழைக்காலம் வரக்கூடும் என்று நினைக்கிறேன்.

இந்த முறை மதுரை கண்காட்சி சிறப்பாக நடந்தால் ஈரோடும் மதுரையும் இரண்டாம் இடத்துக்குப் போட்டிபோட வேண்டியிருக்கும்.

ஒருவகையில் இதுபோன்ற ஆரோக்கியமான போட்டி சந்தோஷம் தருவதாக உள்ளது.

திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற ஊர்கள் கொஞ்சம் விழித்துக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment