Sunday, July 11, 2004

நிதிநிலை அறிக்கை 2004 - 1

இது முழு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அல்ல. சென்ற அரசு தாக்கல் செய்திருந்த இடைக்கால பட்ஜெட் மார்ச் 2004 தொடங்கி, இந்த மாதம் வரை நடைமுறையில் உள்ளது. மீண்டும் பெப்ரவரி 2005இல் (ஏழு மாதங்களில்) அடுத்த முழு வருடத்திற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இந்தமுறைதான் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முழுமையாகப் படிக்க முடிந்தது. இதற்கு முன்னர் படிக்க ஆர்வமும், போதிய அறிவும் இல்லாததே காரணம். நிதிநிலை அறிக்கையில் இரண்டு பகுதிகள்: முதல் பகுதி (அதுவும் இரண்டாகப் பிரிக்கப் பட்டது - Part A, Part B), விளக்கவுரை - இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ள திட்டங்கள் என்ன, சென்ற அறிக்கையிலிருந்து இவ்வறிக்கை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை விளக்குவது. இரண்டாவது பகுதி நிதிச் சட்டத் திருத்தம் (Finance (No. 2) Bill, 2004). முதலாவது பகுதியில் உள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஏற்கனவே வரைந்துள்ள சட்டங்களில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்வது - இதைத்தான் பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் பட்ஜெட் முதல் பகுதியில் விளக்கிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். பாராளுமன்ற விவாதத்தில் இந்த Finance Bill இல் சில மாறுபாடுகளைக் கொண்டு வர உறுப்பினர்கள் முயற்சிக்கலாம். அம்மாறுபாடுகளை ஏற்பதாக நிதியமைச்சரும் ஒப்புக்கொள்ளலாம். இந்த Bill அப்படியே, அல்லது மாறுபாடுகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு, கெஸட்டில் அறிவிக்கப்பட்டபின் செயல்பாட்டுக்கு வரும்.

சாதாரணப் பொதுமக்களுக்கு நிதிநிலை அறிக்கையைப் புரிந்து கொள்வது எளிதல்ல. வலைப்பதிவுகளில் (தமிழில்) யாராவது நிதிநிலை அறிக்கை 2004 பற்றி எழுதியுள்ளனரா என்று தேடிப்பார்த்தேன். அருணாவின் ஒரு பதிவுதான் கிடைத்தது. அதனால் நானே எனக்குப் புரிந்ததை வரிசையாக எழுதிவிடுவது என்று தீர்மானித்துள்ளேன். தவறாக எழுதியிருந்தால், அதைப் படித்து தவறென்று அறிபவர் தானாகவே திருத்தங்களை அனுப்பி வைப்பார் என்று நம்புகிறேன்.

பட்ஜெட்டில் தனி மனிதனாகப் பார்க்கையில் என்னை அதிகமாக பாதிக்கும் சில திட்டங்கள் இருக்கும். அதனாலேயே அந்தத் திட்டங்கள் தவறானது என்று குறை கூற முடியாது. பொதுவாக பட்ஜெட் வந்த நாள் முதற்கொண்டு எதிர்க்கட்சியினர் 'இந்த பட்ஜெட் மோசமானது' என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் செய்ததில்லை. கூட்டணிக் கட்சியினர், 'ஆகா, இதுவன்றோ பட்ஜெட்' என்று சபாஷ் போடுவார்கள். ஒவ்வொரு மாநில முதல்வரும் தம் மாநிலத்திற்கு எந்த வகையில் ஆதாயம் என்று பார்த்து, இல்லாவிட்டால் குறை சொல்வதும் வழக்கம். பொருளாதார நிபுணர்கள் கூட தங்களுக்கு விருப்பமான கொள்கைகள் இல்லையென்றால் பட்ஜெட்டையே குறை சொல்வது வழக்கம். பட்ஜெட் என்பதே ஓரிடத்தில் எடுத்து இன்னோரிடத்தில் கொடுப்பதுதான். எங்கு குறைவாக உள்ளது, எங்கு அதிகத் தேவை உள்ளது, எங்கிருந்து அதிகமாகப் பெற முடியும் என்பதை நடைமுறைப்படுத்துவதுதான்.

இந்த அறிமுகத்துடன் இனிவரும் தொடரைப் படியுங்கள்.

4 comments:

  1. புதிய தொடர் ஆரம்பிக்க உள்ளீர்கள். வாழ்த்துக்கள். இந்த பட்ஜெட் அயல் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. மாறாக NRE வைப்பு நிதிகளின் மூலம் வரும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். சந்தனம் மிஞ்சிய கதைதான்.
    கடந்த அரசால் NRI -களுக்கு விரைவில் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட சலுகைகளைப் பற்றி எதுவும் காணவில்லை.
    குருடன் யானையைப் பார்த்த கதையாக கூற வேண்டுமானால், இது பலனற்ற பட்ஜெட்..
    இந்தக் குருடன் யானையைத் தடவிப் பார்க்க உதவிய சுட்டி
    http://indiabudget.nic.in/ub2004-05/bh/bh1.pdf

    srinivas Venkat

    ReplyDelete
  2. ஸ்ரீனிவாஸ் வெங்கட்: எப்பொழுதும் சலுகைகளை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒருகாலத்தில் இந்தியாவிற்கு டாலர்கள் தேவைப்பட்டபோது டாலர் சேமிப்பிற்கு அமெரிக்காவில் கொடுப்பதைவிட அதிக வட்டியை இந்திய வங்கிகள் கொடுத்து வந்தன. இந்திய அரசுக்கு அன்னியச் செலாவணியில் கடன் வேண்டியிருந்தபோது ரிசர்ஜண்ட் இந்தியா பாண்ட் (Resurgent India Bond) கொண்டுவந்தனர். இப்பொழுது அன்னியச் செலாவணி கையிருப்பு தேவைக்கு அதிகமாகவே உள்ளது. இப்பொழுதைக்கு இந்தியாவிற்கு டாலர் தேவை இல்லாத காரணத்தால் டாலர் டெபாசிட்கள் சம்பாதிக்கும் வட்டிக்கு வருமான வரி கேட்கிறார்கள். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ரூபாயில் நாங்கள் வைத்துள்ள பிக்ஸட் டெபாசிட் சம்பாதிக்கும் வட்டிக்கு நாங்கள் வரி கட்டுவதில்லையா? அதுபோல நீங்களும் கட்ட வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. Badri : securities transaction tax பற்றி, ஒரு retail investor என்கிற முறையிலே உங்கள் கருத்துக்கள் என்ன?
    அருணா ஸ்ரீனிவாசன், இதை ஒரு பிரில்லியண்ட் ஐடியா என்று வர்ணித்திருக்கிறார்.
    மேலோட்டமாகப் பார்த்தால், முதலீட்டாளர்களை இந்த வரிச்சுமையினால் நட்டப்படத்தான் போகிறார்கள் என்று தான் எனக்குப் படுகிறது. பங்கு விற்பனை மூலம் வரும் லாபத்தில் வரி கட்டுவது ஏற்கனவே இருக்கின்ற போது, ( tax on capital gains) , இது சிறு மற்றும் உதிரி முதலீட்டாளர்களுக்கு அதிகமாக சுமைதான். பங்கு மார்க்கெட் பரிவர்த்தனைகளில் 75-80 விழுக்காடு, டெலிவரி எடுக்காமல் நடக்கின்றவைதான். வாய் வார்த்தையாக வாங்கி விற்றால் கூட அதற்கு 0.15% வரி கட்டவேண்டும் என்று சொன்னால், இதை நம்பி இருக்கின்றவர்கள் பலருடைய கதி என்ன? ஒருக்கால், ஸ்பெகுலேஷனைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் இதை, ப.சி அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறாரா? ஸ்பெகுலேஷன் கட்டுப்படுத்தப்பட்டால், பங்குச்சந்தை மீதான அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? வரவிருக்கும் புதிய ஐபிஓக்களுக்கு ( குறிப்பாக TCS), இதனால் ஏதாவது பாதிப்பு இருக்குமா? roll back க்கு வாய்ப்பு இருக்கிறதா? ( சில விதிகள் தளர்த்தப்பட்டிருக்கிறது என்று செய்தி படித்தேன். ஆனால், முழுதுமாக விளங்கிக் கொள்ள முடியவில்லை). இதைப் பற்றி நேரம் கிடைக்கும் போது விளக்கமாக எழுதினால், ரொம்ப உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  4. பிரகாஷ்: அருணாவின் பதிவில் எழுதிய அதே பதில் இங்கே:

    ===
    என் பதிவில் இதைப்பற்றி எழுதுவேன். இப்பொழுதைக்கு - டர்னோவர் வரி சரியானதாகத்தான் தோன்றுகிறது. அருணா: இதனால் "பங்குச் சந்தைகாரர்களுக்குதான் படு கடுப்பு" என்பதைவிட டிரேடர்களுக்கு "படு கடுப்பு" என்று சொல்லலாம். என்னைப் போன்ற ரீடெயில் முதலீட்டாளர்களுக்கும், FII, FI க்களுக்கும் இதனால் கஷ்டம் ஏதும் கிடையாது. இப்பொழுது 0.85% கமிஷன் கொடுக்கிறோம். அத்துடன் இன்னமும் 0.15% சேர்ந்து வரியாகப் போகும். அதுவும் ஷேர்களை வாங்கும்போதுதான் இந்த வரி. விற்கும்போது கிடையாது. (ஆனால் வாங்கும்போதும், விற்கும்போதும் தரகர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும்.) முக்கியமாக லாங் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரி கிடையாது, ஷார்ட் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரி குறைந்துள்ளது. FIIக்கள் இந்த வரியை வரவேற்கின்றனர். ஒட்டுமொத்தமாக எக்சேஞ்சே வரியை வசூலித்து அரசிடம் கொடுத்து விடும். அதனால் வருமான வரி அதிகாரிகள் FIIக்களின் கணக்குப் புத்தகங்களை நோண்ட வேண்டி வராது. மேலும் பல சிறு மூலதனக் காரர்கள் பங்குச்சந்தையில் கிடைக்கும் லாபத்திற்கு வரி கட்டாமல் இருந்து வந்தனர். இனி அப்படி முடியாது - நேரிடையாக டிரான்சாக்ஷன் நடக்கும் போதே அரசுக்கு வரி வந்து சேர்ந்து விடும். ஒவ்வொரு டிரான்சாக்ஷனுக்கும் வரி உண்டு - முன்னது போல மொத்தமாக கேபிடல் கெயின்ஸ் லாபம் இருந்தால்தான் என்று கிடையாது.

    இதில் என்ன குறைபாடுகள்?
    1. டர்னோவர் டாக்ஸ் 0.15% இருக்க வேண்டுமா, குறைவாக இருந்திருக்கலாமே? பலர் 0.05% அல்லது 0.1% தான் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஒரேயடியாக 0.15% என்றதும் பலருக்குக் கோபம். இதில் எனக்கு அவ்வளவாக வருத்தம் இல்லை.

    2. எக்சேஞ்சில் நடக்கும் எல்லா வர்த்தகத்துக்கும் ஒரேயடியாக இந்த 0.15% இருக்கும் என்பது. அதாவது பங்குகள், கடன் பத்திரங்கள், பட்டியலிடப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகள், ஆப்ஷன்ஸ், ஃபியூச்சர்ஸ் என்று எல்லாவற்றுக்கும் ஒரே வரி விகிதம் சரியானதல்ல. இந்தக் கூற்றில் நியாயம் இருக்கிறது. பங்குகளுக்கு விதிக்கப்படுவதைவிட குறைவான சதவிகிதம்தான் கடன் பத்திரங்கள் மீது இருந்திருக்க வேண்டும். (இங்கு மார்ஜின் குறைவு). அதைவிடக் குறைவானதுதான் ஃபியூச்சர்ஸ் டிரான்சாக்ஷனுக்கு இருக்க வேண்டும்.

    ஆனால் இதையெல்லாம் வரும் நாட்களில் மாற்றிக் கொள்ள முடியும்.

    3. ஒவ்வொரு நாளும் பல ஸ்பெகுலேடிவ் வர்த்தகங்கள் செய்யும் டிரேடர்கள்தான் மிகவும் கோபத்தில் உள்ளவர்கள். ஏனெனில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு 'buy' டிரான்சாக்ஷனுக்கும் வரி கொடுக்க வேண்டும். லாங் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரியைக் குறைத்ததால் டிரேடர்களுக்கு எந்த லாபமும் கிடையாது. அவர்கள் வருமானமே நாளொன்றுக்கு அவர்களுக்குக் கிடைக்கும் மார்ஜின்தான். அதிலும் கொஞ்சத்தை சிதம்பரம் பிடுங்கிக் கொள்கிறாரே என்ற எரிச்சல். சிதம்பரம் 0.1% க்கு வரியை விதித்திருக்கலாம்...

    ஆனால் எல்லாரையும் மகிழ்ச்சிப் படுத்த முடியாது.

    ===

    மேலதிகமாக, இதனால் ஐபிஓக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. பங்குச்சந்தையில் நடக்கும் டிரான்சாக்ஷனுக்குத்தான் இந்த வரி. ஐபிஓ முடிந்தவுடந்தான் அந்தப் பங்கு பங்குச்சந்தைக்கே வருகிறது.

    ReplyDelete