Monday, December 15, 2008

மும்பை - 4: Piling Pressure on Pakistan (PPP)

[பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3]

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் என்ற தேசத்துக்குப் பங்கு உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. பாகிஸ்தான் அரசாங்கத்துக்குப் பங்கு ஏதும் இல்லை என்று ஆசிஃப் அலி சர்தாரி சொல்கிறார். பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐயும் தங்கள் நெஞ்சைத் தொட்டு இதே பதிலைச் சொல்லமுடியுமா?

பாகிஸ்தானை எப்படித் தண்டிக்கலாம் என்பதுதான் பல இந்தியர்களுடைய உடனடி எண்ணமாக இருந்தது. வலதுசாரிகள் தலைமையில் பலவிதக் கருத்துகள் வெளிவந்தன. “பாகிஸ்தான்மீது போர் தொடுப்போம்” என்றனர் பலர். “ஏன்? அமெரிக்கா அப்படிச் செய்வதில்லையா? நாமும் பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பிக்கவேண்டும்” என்றனர் பலர்.

புறநானூற்று வீரம் இங்கு உதவாது. பாகிஸ்தானிடமும் ராணுவம் உள்ளது. பாகிஸ்தானிடமும் அணு ஆயுதம் உள்ளது. சிலர் முட்டாள்தனமாக, “இந்தியாவின் சில பகுதிகள் அழிந்தாலும் பரவாயில்லை, பாகிஸ்தானைத் தரைமட்டமாக்கவேண்டும்” என்றனர்.

வேறு சிலர், “பாகிஸ்தானில் நாம் பிரச்னைகளை உருவாக்கவேண்டும்” என்றனர். இது அருன் ஷோரி வாதம். பலூசிஸ்தானிலும் வடமேற்கு எல்லை மாகாணத்திலும் குழப்பத்தை ஏற்படுத்துவோம் என்றார், சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது. நல்லவேளையாக இவ்வளவு வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் மாநிலங்கள் அவையில் பேசும்போது இதைச் சொல்லவில்லை.

நமது நாட்டில் அந்நியச் சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்றால், நாம் தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்துகிறோம். உலக நாடுகளிடம் முறையிடுகிறோம். ஐ.நாவுக்குச் செல்கிறோம். ஆனால், நாமும் குறைந்த அளவிலாவது அதையே செய்துள்ளோம் என்றால், நம்மிடம் எந்தவித தார்மீக உரிமையும் இருக்காது. வலதுசாரிகள் அதுபோன்ற அழிவுப் பாதையைத்தான் இந்தியாவுக்குக் கொண்டுவருவார்கள்.

அத்வானியும் ஷோரியும் இந்திய அரசைக் கண்டித்தார்கள். அமெரிக்காவிடம், “அம்மா, அவன் என்னை அடிச்சுட்டான்” என்று ஓடாதே என்றார்கள். ஐ.நாவுக்குப் போகாதே என்றார்கள். ஆனால் அது மதியீனம்.

ஐ.நாவிடமோ, அமெரிக்க/ஐரோப்பிய அரசுகளிடமோ நாம் போய், நமது பலவீனத்தை வெளிக்காட்டி, “எனக்கு உதவி செய்” என்று கெஞ்சவில்லை. ஒரு சில வரலாற்றுத் தவறுகளை மாற்றப் பார்க்கிறோம்.

இதுநாள்வரையில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், பாகிஸ்தான்மீது காட்டவேண்டிய கடுமையைக் காட்டவில்லை. ஆஃப்கனிஸ்தானில் நடக்கும் போரில் பாகிஸ்தான் தமக்கு நண்பன் என்றே அவர்கள் சிந்தித்து வந்தனர். ஆனால் கடந்த நான்கைந்து வருடங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான்தான் உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் என்னும் புரிதல் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் தெளிவாக விளங்கியுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் இந்தியர்களை மட்டும் தாக்கவில்லை. அமெரிக்கர்கள், பிற ஐரோப்பியர்கள், யூதர்கள் என்று குறிவைத்துத் தாக்கினார்கள். “நாங்கள் முஸ்லிம்கள்” என்று கத்திய சிலரை மட்டும் விடுவித்துள்ளனர்.

அதுவுமில்லாமல், இன்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் சொன்னபடி, பிரிட்டனில் கண்டுபிடிக்கப்படும் முக்கால்வாசி தீவிரவாத முயற்சிகள், பாகிஸ்தானில் ஆரம்பமானவை. அல்லது பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் செயல்படுத்த முனைபவை.

எனவே இந்தியா, “மம்மி, அவன் என்னை அடிக்கறான்” என்று அழுதுகொண்டு இந்த நாடுகளிடம் செல்லவில்லை. “அட முட்டாள்களே, உங்கள் நாடுகளில் பிரச்னைகளை உண்டாக்கும் தீவிரவாதிகள் புறப்படுவது பாகிஸ்தானில்தான். எனவே என்னுடன் சேர்ந்து போராடுங்கள்” என்று கோடி காட்டுகிறது. அதனால்தான் ஐ.நா சபையின் பாதுகாப்புக் குழு, எந்தவித விவாதமும் இல்லாமல் ஜமாஅத்-உத்-தவாவைத் தடை செய்தது.

அதனால்தான், அமெரிக்கா பாகிஸ்தான்மீது கடுமையான அழுத்தத்தைச் செலுத்தியது. சர்வதேச நிதியத்திடம் 8 பில்லியன் டாலர் கடனுக்காகக் காத்திருக்கும் பாகிஸ்தான்மீது அழுத்தம் தருவது எளிது. பிரிட்டன் முதற்கொண்டு மேற்கு ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்பு அது.

***

இந்தியா போரைத் தவிர்க்கிறது என்றால் அதனால், பயப்பட்டுப் பின்வாங்குகிறது என்று பொருளல்ல. போரில்லாமல், தொடர்ந்து சர்வதேச அழுத்தத்தை பாகிஸ்தான்மீது கொண்டுவருவதன்மூலம் இந்தியா நிறைய சாதித்துக்கொள்ள முடியும்.

1. பாகிஸ்தானின் குடியாட்சி முறையில் வெளியிலிருந்து மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. ஆனால், யார் அந்த மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறாரோ, அவருக்குத்தான் பண ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிப்பதன்மூலம், பாகிஸ்தான் உள்நாட்டு அரசியலை, ஒரு குறிப்பிட்ட திசையில் செல்லவைக்க முடியும்.

2. இதே காரணத்துக்காகத்தான், பாகிஸ்தானுக்கு இந்தியா டாலர் கடன் கொடுக்கவேண்டும் என்பதை நான் முன்வைக்கிறேன். இதுவரையில் இந்தியாவின் முக்கிய அரசியல்வாதி யாரும் இதைப்பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் 8 பில்லியன் டாலர் கடன் கேட்டு ஊரெல்லாம் அலைகிறது. டிரில்லியன் கணக்கில் டாலர்கள் வைத்திருக்கும் சீனா கையை விரித்தபின், சர்வதேச நிதியத்திடம் (IMF) பாகிஸ்தான் சென்றுள்ளது. கடனும் சாங்க்ஷன் ஆகியுள்ளது. ஆனால், மும்பை தாக்குதலுக்குப்பின், இந்தக் கடன் “தாமதமாக” வாய்ப்பு உள்ளது.

இந்தியா, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அதில் பாதித் தொகையை பாகிஸ்தானுக்குக் கடன் கொடுக்க முன்வரவேண்டும். பாகிஸ்தான் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

3. பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்படும் ராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்த இந்தியா முயற்சிகள் எடுக்கவேண்டும். காசு கொடுத்தாலும் சீனா முதற்கொண்டு யாரும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்கமாட்டார்கள் என்ற நிலையை இந்தியாவால் கொண்டுவரமுடியும்.

4. வலுவான, போரில்லாத ஆஃப்கனிஸ்தான் இந்தியாவுக்கு நல்லது. ஆனால் இது எளிதான விஷயமல்ல. பராக் ஒபாமா, ஆஃப்கனிஸ்தான் போரில் கடுமையாக ஈடுபடப் போவதாகச் சொல்கிறார். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று என்றே தோன்றுகிறது. ஆஃப்கனிஸ்தானிலிருந்து அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் படைகளை விலக்கிக்கொண்டால், அதனால் கடுமையாகப் பாதிக்கப்படப்போவது பாகிஸ்தான்; அதன்பின், அதன் காரணமாக, இந்தியா.

பாகிஸ்தானுக்கு அந்த நேரத்தில் காஷ்மீர் பிரச்னையெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிடும். ஒரு பக்கம் கையில் இருக்கும் வடமேற்கு எல்லை மாகாணம் தனியாகப் பிரிய நேரிடும். பலூசிஸ்தானிலும் பிரச்னைகள் வெடிக்கும். (இந்தியா ஒன்றும் செய்யாமலேயே.)

5. இன்று தி ஹிந்துவில் பாகிஸ்தான் பேராசிரியர் பர்வீஸ் ஹூத்பாய் என்பவருடன் முழுநீள நேர்முகம் ஒன்று வந்துள்ளது. இதை முழுவதுமாகத் தமிழாக்கிப் கொடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். முடிந்தால் நாளை இதனைச் செய்கிறேன். அவர் சொல்கிறார்: “பாகிஸ்தானில் உள்ள ஜிஹாதிக் குழுக்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பது நியாயமானதே. ஆனால் அந்த நடவடிக்கைகள் சர்வதேச அழுத்தத்தின்மூலம் செய்யப்படவேண்டும்.” அதனைத்தான் இந்தியா செய்கிறது.

நல்லவேளை. இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.

(தொடரும்)

15 comments:

  1. //“நாங்கள் முஸ்லிம்கள்” என்று கத்திய சிலரை மட்டும் விடுவித்துள்ளனர்//

    இந்த கருத்து மூலம் பத்ரி என்ன சொல்ல வருகிறார். இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாக இருக்கிறது. மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் வீழ்ந்த பிணங்கள்லில் பல முஸ்லிம் பிணங்கள் தான்.

    ReplyDelete
  2. அனானி: ஒன்றும் குறிப்பாகச் சொல்ல வரவில்லை. வந்த தீவிரவாதிகளின் நோக்கம், மிகவும் குறிப்பாக உள்ளது என்பதைத் தவிர. சொல்லி அனுப்பியவர்கள், இந்தியாவில் முடிந்தவரை பெரும் பிரச்னை வெடிப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய் என்று சொல்லியிருக்கிறார்கள். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் சுட்டவர்களுக்கு நேரம், காலம் எதுவும் இல்லை - எனவே கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டார்கள். ஹோட்டல்களில் அப்படிக் கிடையாது. நேரம் இருந்தது. அப்பொது அவர்கள் இப்படிச் செய்தார்கள்:

    Gunfire was reported at luxury hotels, a restaurant, police headquarters and a train station.

    "We are Turkish. We are Muslim," someone in the group screamed. One of the gunmen motioned for two Turks in the group to step aside.

    Then they pointed their weapons at the rest and squeezed the triggers.

    இந்தத் தாக்குதல் பற்றி மிக விரிவாக எழுதிய வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரையைப் படியுங்கள்.

    மற்றபடி இந்து-முஸ்லிம் விஷயத்துக்குள் இந்தப் பகுதியில் நான் இறங்கவில்லை. அதிலிருந்து நழுவப் போவதுமில்லை. அடுத்த சில பாகங்களில் வரும். அப்போது படித்துவிட்டு, தாக்கலாமா, பூச்செண்டு தரலாமா என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. //“பாகிஸ்தானில் நாம் பிரச்னைகளை உருவாக்கவேண்டும்” என்றனர்//

    பாகிஸ்தானில் இருக்கும் சில குழுக்களுக்கு பணம் மற்றும் ஆயுத உதவிகள் செய்வது RAWவின் முக்கிய வேலைகளில் ஒன்று என்று பலமுறை பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இதுவரை ஒன்றுமே செய்யவில்லை என்பதை சற்றும் நம்ப முடியாது.

    ReplyDelete
  4. >>பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்படும் ராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்த இந்தியா முயற்சிகள் எடுக்கவேண்டும். காசு கொடுத்தாலும் சீனா முதற்கொண்டு யாரும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்கமாட்டார்கள் என்ற நிலையை இந்தியாவால் கொண்டுவரமுடியும்.

    இந்நிலையை இந்தியாவால் எப்படிக் கொண்டுவரமுடியும் என்பதைச் சற்று விளக்கமுடியுமா? இந்தியாவுக்குத் தலைவலி/திருகுவலியை ஏற்படுத்த சீன ஏகாதிபத்தியம் பாகிஸ்தானுக்கு இலவசமாகவே ஆயுதம் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதே என் கருத்து.

    - ஸ்வாமி

    ReplyDelete
  5. I agree that there should be no loose talk about war. War is a very serious business and that should be a last resort.

    Giving loan to pakistan is a bad idea. Even IMF is lending at exorbitant rates of over 4% to pakistan, that too with many riders. Pakistan is using this loan amount to service old debts. That country is not interested in being fiscally responsile.

    Pakistan has no future until it comes out of Army Rule- Feudal lords Rule - Army Rule - Feudal lords rule vicious cycle.

    ReplyDelete
  6. excellent article with reality.Waiting for the next part?
    Sheik Mukthar

    ReplyDelete
  7. Good suggestions Badri, I endorse it wholeheartedly. We have to shame Pakistan into friendship. Pakistani civil society should force their government, army and ISI to weed out Jehadi elements in their land.

    ReplyDelete
  8. நல்லவேளை. இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.


    - Adhu daane problem.

    ReplyDelete
  9. போர் என்று கூறுவது ஒன்றும் தவறாக தெரியவில்லை. இந்தியா போரை நோக்கி செல்லாது என்பதை நாம் தெளிவுப்படுத்த கூடாது. இன்றும், ஒரு கட்டுபடுத்தப்பட்ட யுத்தம் சாத்தியமே. ஒரு சில தீவிரவாத தளங்களை அழித்துவிட்டு அதற்கு பிறகு சர்வதேச அழுத்தத்தின் மூலமாக போரை முடிவுக்கு கொண்டு வரலாம். ஒவ்வொரு மாதமும் பலநூறு உயிர்களை இழப்பது நமக்கு வாடிக்கை ஆகிவிட்டது.

    பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு இந்திய அரசாங்கம் எந்த புதிய தகவலும் தரவில்லை. அந்நாட்டு வெளியுறவுத்துறை பாகிஸ்தானில் இயங்கும் குழுக்களை நன்கு அறிவர். பாகிஸ்தான் அரசாங்க உதவி இல்லாமல் தாலிபானை சந்திப்பது கடினம் என்று அமெரிக்கா கருதுகிறது. ஆதலால் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். (மும்பை குண்டுவெடிப்புக்கு பிறகு பாகிஸ்தான் தனது ஒரு லட்ச ராணுவவீரர்களை அப்கான் எல்லையில் இருந்து திரும்பி அழைக்க வேண்டிவரும் என்று அறிவித்தது இதை சார்ந்ததே.)

    இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் சரி, வலதுசாரி கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, நமது ரெஸ்பான்ஸ் ஒரேவிதமாக அமைவது துரதிஷ்டமே.

    இந்தியா வரும் அனைத்து வெளியுறவு தூதர்களும் நேரே பாகிஸ்தான் செல்கின்றனர். இதைக்கூட இந்தியாவால் தடுக்க முடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் இன்றைய காங்கிரஸ் அரசாங்கம் சர்வதேச அழுத்தத்தை சரியான திசையில் திருப்பமுடியும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.

    ReplyDelete
  10. இந்த விஷயத்தில், இதுவரை இந்தியா முதிர்ச்சியுடன்தான் செயல்படுகிறது.

    ஒருவேளை போர் ஏற்பட்டால், நமக்கு உண்மையிலேயே ஆதரவளிக்கும் அல்லது உதவி செய்யும் நாடு உள்ளதா? பாகிஸ்தானுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவும் நாடுகள்தான் அதிகம்.

    இந்தியாவின் எதிரிகளுக்கும், ஆயுதங்கள் விற்போருக்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகள்தான் தேவை. எனவே ஆயுதம் வாங்கப்படுவதையும் தடுக்க முடியாது.

    பாகிஸ்தானில் எவ்வளவுதான் உள்நாட்டு பிரச்சினைகள் கிளம்பினாலும், நாம் காஷ்மீரத்தையே விட்டுக் கொடுத்தாலும் இந்திய எதிர்ப்பை அவர்கள் கைவிடப்போவதில்லை. நம் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கும் நாடுகளும் அதற்கு விடாது. பாகிஸ்தானும் நல்வழியில் திரும்பி முன்னேறப்போவதுமில்லை.

    நம் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளைப் போல், உள்நாட்டு பாடுகாப்பை பலப்படுத்த, கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  11. பத்ரி,

    நிதானமாக பேசப்பட்ட கட்டுரை. பாகிஸ்தானுக்கு (ஜனநாயக ரீதியிலான பாகிஸ்தான் அரசுக்கு) நான் பண உதவி செய்தல் முக்கியம். ஆப்கானிஸ்தானில் போர் முடிந்த பிறகு பதவியேற்ற கர்சாய் தலைமையிலான ஆட்சியில், இந்தியாவின் முதலீடு கணிசமாக இருந்தது. இதன் மூலம், தலிபான்களின் பிரச்சனைகள் நேரடியாக நமக்கு குறைந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

    உண்மையில், இன்றைக்கு பாகிஸ்தான் இருக்கும் நிலை, லெமேன் ப்ரதர்ஸ் அக்டோபரில் இருந்த நிலை. Mr.10% என்றழைக்கப்பட்ட சர்தாரியின் அரசு ஒரு கையாலாகாத அரசு என்பது தான் உண்மை. பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசின் அதிகாரம் செல்லாது என்பது தான் கசப்பான நிஜம். ஆனாலும், அமெரிக்க புஷ்த்தனமாக War on Terror என்று அறிவித்து முட்டாள்தனமாக பொதுமக்களை கொன்று குவிக்கக்கூடிய போரினை நாம் முன்னெடுக்கவில்லை என்பது பெரிய ஆறுதல். பொருளாதார ரீதியாக மாறியிருக்கக்கூடிய இன்றைய உலகத்தில், இந்தியாவும், சீனாவும் முக்கியமான நாடுகள் என்பதை ஏற்கனவே G-20 காட்டிக் கொடுத்துவிட்டது.

    இந்நிலையில் நமக்கிருக்கும் ஒரே ஆயுதம் - பொருளாதாரம் தான். பாகிஸ்தானிய ஊடகங்களில் வரும் செய்திகளை படித்தீர்களேயானால், எந்த அளவிற்கு அங்கே மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியும். நமக்கான ஆயுதம் பொருளாதாரமும், உலக ரீதியிலான அழுத்தங்களும்தான்.

    இரான், கியுபா போல கருத்து ரீதியிலான தலைமையொன்றும் பாகிஸ்தானில் கிடையாது. ஆகவே diplomatic pressures & political/economical sanctions கொடுத்தாலே, சர்தாரிக்கு டப்பா டான்ஸ் ஆடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

    முக்கியமான பிரச்சனை, அந்த நாடு இன்றளவும் ராணுவ பலத்தினை நம்பியே இருக்கிறது. நேற்றைய வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வந்த ஒரு கருத்து கொஞ்சம் ஒவராக தெரிந்தாலும், உண்மை அதுதான். அணுகுண்டு வெடித்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஒரு நாட்டால், கேவலம் சைக்கிளை கூட சொந்தமாக தயாரிக்க முடியவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் பொருளாதார ரீதியிலும், உலக ரீதியிலும் அழுத்தங்கள் கொடுக்கும் பட்சத்தில் மாறுதலுக்கான வாய்ப்புகள் அதிகம். ஒபாமா இப்போதைக்கு பாகிஸ்தான் மேல் குறி வைக்க மாட்டார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே $50 பில்லியன் டாலர் ஊழலில் கட்சியின் பேரும், அமைச்சர்கள் பேரும் இருப்பதில் அவர் கொஞ்சம் ஆட்டம் கண்டு தான் போயிருக்கிறார்.

    ReplyDelete
  12. //மற்றபடி இந்து-முஸ்லிம் விஷயத்துக்குள் இந்தப் பகுதியில் நான் இறங்கவில்லை. அதிலிருந்து நழுவப் போவதுமில்லை. அடுத்த சில பாகங்களில் வரும். அப்போது படித்துவிட்டு, தாக்கலாமா, பூச்செண்டு தரலாமா என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள்//

    பத்ரி! நீங்கள் வன்மம் கொண்டு எழுதுவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் இங்கு உங்கள் வர்ணனை தவறான் புரிந்துணர்தலை ஏற்படுத்துவது போல் இருக்கிறது

    ReplyDelete
  13. //
    நல்லவேளை. இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.
    //

    ஆமாம், ஆமாம்!

    மிகவும் நல்லவேளையாக காங்கிரஸ் ஆட்சி. இதே பா.ஜ.க ஆட்சி இருந்திருந்தால் NDTV, CNN-IBN, மற்றும் உங்களைப் போலுள்ள காங்கிரஸ் அபிமானிகள் என்னவெல்லாம் சொல்லியிருப்பீர்கள்?

    பா.ஜ.க தப்பிப்பிளைத்தது தீவிரவாதி புன்னியம்.

    IIM Bangalore பேராசிரியர் வைத்தியநாதன் சொல்லும் சில விஷயங்களைப் பாருங்கள்.

    ReplyDelete
  14. I would like to ask pro-war people one question. How prepared are we?

    Indian mega cities lack even basic civil defence facilities and the infrastructure to handle a limited strike.

    Are we equipped to handle even a conventional strike, never mind a nuclear one. There are no bomb shelters, and no training has been imparted to their emergency teams or our population to deal with such a nightmare scenario. Hospitals, blood banks, trauma and burn centres, ambulances and fire fighters are ill equipped and understaffed. In an emergency or in the event of an attack, they would dismally fail to respond effectively.

    How can we win the war comprehensibly if we are so underprepared?

    Wake up folks.

    But for God's sake no loan to pakistan. Let them descend into mullahcracy, let them fight all those bloody shia-sunni wars, let them fight all those tribal conflicts, let them do all those honour killings. Just seal our borders and watch the fun.

    ReplyDelete
  15. பத்ரி
    மிக மிக சரியான பதிவு, உடனடி சண்டையென்பதெல்லாம் ஒரு அர்த்தமில்லாத வாதம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அமெரிக்கா கூட உடனடி சண்டையெல்லாம் தன்னை தாக்க முடியாத தூரத்தில் உள்ள பலமிழந்த நாடுகளுடந்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும், தனக்கு சமமான அல்லது கொஞ்சம் பலமுள்ள ஈரான் போன்ற நாடுகளுடன் சண்டை என்பதை வெறும் வார்த்தை அளவிலேயே அவர்கள் வைத்திருப்பதை பார்க்கவேண்டும், சண்டை என்பது எவ்வளவு பெரிய இழப்பை ஒரு நாட்டுக்குத்தரும் என்பது மிகவும் யோசிக்க வேண்டிய விஷ்யம். நீங்கள் சொல்வது போல் பி.ஜெ.பி இப்போது இருந்தால் கூட அப்படி ஒன்றும் நடந்து விடாது, எதிர்கட்சியாய் இருப்பதால் இப்படி அவர்கள் பேசுகிறார்கள் அவ்வளவே, பிஜேபி ஆட்சிகாலத்தில்தான் பங்களாதேஷ் எல்லையில் நடந்த எத்தனையோ அத்துமீறல்கள் வெறும் கண்டிப்போடு விடப்பட்டது பழய செய்திகள். எனது கருத்துகள் இந்த தொடர்பில் எழுதியுள்ளேன்
    http://dhavaneri.blogspot.com/2008/12/11.html

    உங்களின் பார்வை மிக சரியாக உள்ளது அது அனைவர்க்கும் புரிய வேண்டும்.

    ReplyDelete