Monday, December 01, 2008

மும்பை - 1: Audacity of Terror

இதுநாள் வரை நாம் பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆட்பட்டுள்ளோம். நகர பயங்கரவாதத்தில் பெரும்பாலும் நாம் கண்டது, மறைவிடங்களில் வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குண்டுகள். இவை RDX-ல் ஆனவை என்றால் கடும் சேதம் இருக்கும். உள்ளூர் வெடிமருந்து என்றால் சேதம் குறைவு. கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள் என்றால் சேதம் அதிகம். உதாரணம்: மும்பை ரயில். கூட்டம் இல்லாத இடங்கள் என்றால் உயிர்ச்சேதம் குறைவு.

கலவரம் மிகுந்த பூமியான காஷ்மீர், அசோம், முன்னாள்களில் பஞ்சாப் ஆகிய இடங்களில்தான் கைகளில் துப்பாக்கியுடனும் கிரெனேடுகளுடனும் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுப்பார்கள். அழிவை ஏற்படுத்தியபின்னர், ஓடி ஒளிவார்கள், அல்லது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள். இரு பக்கமும் சேதம். இடையில் மாட்டிய மக்கள் பலர் மடிவார்கள்.

28 டிசம்பர் 2005 அன்று, பெங்களூரு ஐ.ஐ.எஸ்சியில் நடந்த அறிவியல் மாநாட்டின்போது, நான்கைந்து பேர் உள்ளே நுழைந்து சுட்டதில் ஐஐடி டெல்லி பேராசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் லஷ்கர்-ஈ-தோய்பா - சிமி பெயர்கள் அடிபட்டன. அதற்கு சில மாதங்கள் முன்பு, 5 ஜூலை 2005 அன்று அயோத்தியின் சர்ச்சைக்குரிய ராமஜன்மபூமி தலத்துக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டனர்.

இதற்குமுன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் அது 2001, நாடாளுமன்றத்தின் மீதான துப்பாக்கித் தாக்குதல். அது நாடாளுமன்றம் என்பதால் கடுமையான பாதுகாப்பு இருந்ததால், படையினரால், உறுப்பினர்கள் யாருக்கும் எந்த அபாயமும் இன்றிப் போரிட்டு எதிரிகளைக் கொல்ல முடிந்தது.

அந்த வகையில், 26-28 நவம்பர் 2008 தாக்குதல்கள் மிக பயங்கரமானவை. இவை படையெடுப்புக்குச் சமானம். கப்பல்கள், படகுகளில் சர்வ சாதாரணமாக வந்து, வழியில் தென்படும் அப்பாவிகளைக் கொன்று, ஹாலிவுட் சினிமாக்களில் காண்பிப்பதுபோல, வாயில் சுயிங்கம் மென்றபடி, சில இளைஞர்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி, குறிப்பிட்ட இலக்குகளைக் கைப்பற்றி, வரைமுறையின்றி சுட்டு, கிரெனேடுகளை வீசி, பிணைக்கைதிகளைத் துன்புறுத்தி, பின் கொன்றுள்ளனர்.

குண்டு வைத்துவிட்டு, ஓடி ஒளியவில்லை. பாதுகாப்புப் படையினருடன் போரிட்டுள்ளனர்.

இதை வெறும் பயங்கரவாதமாக மட்டுமே கருதாமல், போராகக் கருதிச் செயல்படவேண்டும்.

எதையெடுத்தாலும் பாகிஸ்தான் என்று குற்றம் சாட்டுகிறது இந்தியா என்பது பாகிஸ்தானின் வாதம். பாகிஸ்தானின் பங்கு என்ன, பாகிஸ்தான் என்ற ‘தோல்வியுற்ற தேச அமைப்பு’ இந்தியாவுக்கு என்னென்ன ஆபத்துகளைக் கொடுக்கும் என்பதை நாம் கவனமாகப் பார்க்கவேண்டும்.

(தொடரும்)

5 comments:

 1. டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் anti-terrorism பற்றிப் பேச ஜெரூசலமிலிருந்து ஒருவர் லைவ் டெலிகாஸ்டில் வந்தார். அவர் கூறிய சில விஷயங்கள் ஆழமான கருத்தாக அமைந்தது. ஆனால் அதைப் பற்றி டைம்ஸ் நௌ செய்தி காம்ப்பியர் ஆர்ணாப் ஒன்றுமே சொல்லாமல் விட்டது வியப்பாக இருந்தது.

  அவர் கூறியது.

  பாகிஸ்தானில் ஒவ்வொறு பெரிய ஜாதியும் (tribes) அரபு தேசங்கள் போல் ஒவ்வொறு தேசமாக மாறினால் (பலோச்சிஸ்தான், சிந்த், பஞ்சாப் etc., ) தான் இந்தப்பகுதியில் அமைதி வர வாய்ப்புள்ளதாகக் கூறினார்.

  ReplyDelete
 2. vajra is funny ;-)

  Does he accept the same for India? at least in the wake of Mumbai attack?

  ReplyDelete
 3. பத்ரி

  ஓ அப்படியா இது பயங்கரவாதமா? போரா? இது ஏதோ முஸ்லீம்கள் தங்கள் அச்ச உணர்வினால் செய்த தாக்குதல் இல்லையா? இஸ்லாமியத் தீவீர்வாதம் என்பது அச்ச உணர்வினால் செய்யப் படுவது என்று மனசாட்சி இல்லாமல் எழுதியதும் இதே பத்ரிதானே? இது போன்ற பயங்கரவாதத்திற்கு இது வரை நியாயம் கற்பித்து வரும் நீங்களும் ஒரு பொறுப்பு அல்லவா? உங்கள் கைகளிலும் கொல்லப் பட்டவர்களின் ரத்தம் இருக்கிறதே? எங்கு இஸ்லாமிய பயங்கரவாதம் நடந்தாலும் அதற்கு நியாயம் கற்பித்து எழுதும் பத்ரிக்கு இப்பொழுது மட்டும் இது எப்படி போராகத் தெரிகிறது? இதையும் அவர்களின் நியாயமான தார்மீகக் கோபம் என்று அச்ச உணர்வின் விளைவு என்று வழக்கம் போல ஆதரித்து விட்டுப் போக வேண்டியதுதானே? இந்த பயங்கரவாதிகளை விட பல மடங்கு மோசமான தீவீரவாதிகள் உங்களைப் போன்று அவற்றை நியாயப் படுத்தும் அறிவு ஜீவிகளும் அரசியல்வாதிகளுமே.

  ச.திருமலை

  ReplyDelete
 4. Except few "minority" dominated areas no other part of India wage armed struggle, suicide bombings etc., against indian state. So, its perfectly logical to think that the Failed state of Pakistan should disintegrate into smaller states dominated by tribal affiliation.

  ReplyDelete
 5. // எங்கு இஸ்லாமிய பயங்கரவாதம் நடந்தாலும் அதற்கு நியாயம் கற்பித்து எழுதும் பத்ரிக்கு இப்பொழுது மட்டும் இது எப்படி போராகத் தெரிகிறது? இதையும் அவர்களின் நியாயமான தார்மீகக் கோபம் என்று அச்ச உணர்வின் விளைவு என்று வழக்கம் போல ஆதரித்து விட்டுப் போக வேண்டியதுதானே? //

  ஏன்? ஒருவர் ஒரு தீவிரவாத சம்பவம் குறித்த தகவல் அதன் அடிப்படையில் எழும் புரிதல் இல்லாமல் ஏதோ ஒருமுறை தீவிரவாதம் தவறில்லை என்று எழுதினால், அதன் பின் மேலும்பல தகவல்கள் அறியவரும்போது தனது விரிவடைந்த பார்வையை எழுதக்கூடாதா?

  "பெயரில்லா" உங்களது இந்த வாதம் வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது.

  பத்ரி நீங்கள் வன்முறைக்கு எதிராக தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

  ReplyDelete