Thursday, December 11, 2008

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

நடப்பு நிகழ்ச்சிகள் பற்றி சிறு பிரசுரங்கள் வெளியிடுவது Pamphleteering எனப்படும். முச்சந்தி இலக்கியம் என்று சொல்லப்படுவது. அச்சடித்து, தெரு முனையில் நின்று, கூவி விற்கும் - அல்லது சும்மாவே கொடுக்கும் - பிரசுரங்கள்.

“அல்லேலுயா, இதோ வந்துவிட்டார்” முதற்கொண்டு “அமெரிக்க மாமாவின் அணுக்குடில்” வரையில் மதபோதகர்களும் கம்யூனிச போதகர்களும் மட்டுமே இப்போது தமிழ்நாட்டில் இந்தத் தெருப் பிரசுரங்களைப் பிரசுரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு மாறுபட்ட வடிவமே வலைப்பதிவுகள்.

ஆனால், வலைப்பதிவுகளைத் தாண்டி மக்களைச் சென்றடைய தெருப் பிரசுரங்கள் அவசியம். அவ்வாறு சிலவற்றை எழுத எனக்கு ஆசை. அதில் நான் முதலாவதாக எழுதியிருப்பது

123: இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்

என்னும் குட்டிப் புத்தகம். இதில் இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தை ஆதரித்து, பின்னணியை விளக்கி, ஏன் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்குத் தேவை என்றும், இதற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் மற்றும் பாஜகவினரின் எதிர்ப்புகள் சரியல்ல என்பதையும் என் பார்வையிலிருந்து விளக்கி எழுதியுள்ளேன்.

நேரம் கிடைத்தால் அடுத்து எழுத நான் எண்ணியிருக்கும் சில:

1. ஸ்பெக்ட்ரம். ஏன் இப்போதைய கொள்கை தவறில்லை, ஏன் அமைச்சர் ராசா மீதான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை (இப்போது தயாநிதி மாறன் கூட்டு சேர்ந்த காரணத்தால் சன் டிவி அமுக்கி வாசிக்கும்!)... ஸ்பெக்ட்ரம் ஏலம் தேவையா போன்ற சிலவற்றை விளக்கி எழுதவேண்டும்.

2. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: தேவையில்லை - அல்லது இப்போது இருக்கும் மாதிரியில் தேவையில்லை. கொடுக்கப்படும் சலுகைகள் அதீதமானவை. விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படும் நிலங்களுக்கு (சி.பொ.ம மட்டுமல்ல, வேறு எந்தத் தொழிற்சாலைக்காக அல்லது அணைக்காக இருந்தாலும் சரி) எந்த மாதிரியான நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் (இப்போது கொடுக்கப்படும் நஷ்ட ஈடுகள் மிகவும் குறைவானவை. பணமும் உடனடியாக மக்களுக்குக் கிடைப்பதில்லை) போன்ற சிலவற்றை வைத்து, சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு எழுதவேண்டும்.

பார்ப்போம்.

8 comments:

  1. பத்ரி!
    ஞாநி, அணு ஒப்பந்தம் பற்றி 'ஓ'பக்கங்களில் குறிப்பிடுகையில், பெரும்பாலான மிடையங்களில் இது குறித்து பெரிய அளவில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறவில்லை என்றும், இணையத்தில் (வலைப்பதிவுகளில்) மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டார். உங்களின் பதிவுகள் பெருமளவு அவரின் கருத்தை பாதித்திருக்கும் என நம்புகிறேன்!
    புத்தகம் படித்து விட்டு மடலிடுகிறேன்! (சோம்பாமல் மடலிட வேண்டும் :-))

    மற்றபடி ஆயிரத்தை நோக்கிய உங்கள் வெற்றிநடை 2008க்குள்ளேயே சாத்தியப்பட வாழ்த்துக்கள் ;-) அதையொட்டி ஏதேனும் சிறப்புச் சலுகைகள்?!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்
    பி.கு. இரண்டாம் பத்தி ஏதேனும் சஸ்பென்சை உடைப்பதாயிருந்தால் தூக்கிவிடவும்!

    ReplyDelete
  2. இரண்டாம் பத்தி சஸ்பென்ஸ் - புரியவில்லை. அதென்ன 1,000-ஐ நோக்கிய நடை? NHM வெளியிட்டுள்ள புத்தக/சிடிக்களின் எண்ணிக்கையா? அந்த எண்ணிக்கையைத் தாண்டிவிட்டோம். ஓர் ஆயிரம் ஐ.எஸ்.பி.என் எண்கள் முடிந்து, அடுத்த ஆயிரம் எண்களைப் பயன்படுத்த ஆரம்பித்தாகிவிட்டது.

    ReplyDelete
  3. ஆனால் http://nhm.in/printedbook/947 - 947உடன் முகவரி முடிந்து விடுகிறதே. ஒருவேளை வலையேற்றவில்லையா இல்லை புத்தகங்கள் (குறுந்தகடுகள், ஒலிப்புத்தகங்கள் நீங்கலாக) 947 தானா?!

    ReplyDelete
  4. சில ரெடியாகி, பிரிண்ட் கியூவில் உள்ளன. சில பிரிண்டாகி ஏற்றப்படாமல் உள்ளன.

    ReplyDelete
  5. Badri,

    Don't you want to qualify the title indicating the stand of the book- for or against. A generic title as the above requires an objective analysis presenting atleast two views of the story.

    ReplyDelete
  6. //
    “அல்லேலுயா, இதோ வந்துவிட்டார்” முதற்கொண்டு “அமெரிக்க மாமாவின் அணுக்குடில்” வரையில் மதபோதகர்களும் கம்யூனிச போதகர்களும் மட்டுமே இப்போது தமிழ்நாட்டில் இந்தத் தெருப் பிரசுரங்களைப் பிரசுரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
    //

    கம்யூனிஸமும் மதத்தைப் போல் போதிக்கப்படுவது தான் என்று சொல்கிறீர்களா ?

    ReplyDelete
  7. http://bluwiki.com/go/CricInfo_History - இதுவே ஒரு அழகிய கதை மாதிரிதானே இருக்கு. இதை தமிழில் செய்யலாமே...

    ReplyDelete
  8. இது போன்ற நூல்களில் எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளை விளக்கிவிட்டு,ஆதரவு,எதிர்ப்பு தரப்பு வாதங்களை தொகுத்துக் கொடுத்து
    விடுவதுடன் நிறுத்திக் கொள்வது உசிதம்.
    ஆசிரியர் ஒரு நிலைப்பாட்டினை எடுத்து,
    அதற்கான நியாயங்களை வலியுறுத்த தேவையில்லை. மாறாக தன் கருத்தை
    போகிற போக்கில் எழுதிவிட்டு போனால்
    போதும்.வாசகர் புரிந்து கொள்வார்.அவரே மேலும் படித்து அறிந்து கொள்வார்.
    ஆங்கிலத்தில் for, against என்ற
    இரு தரப்பினையும் பிரதிநிதித்துவப்படுத்தும்
    கட்டுரைகள் கொண்ட நூற்கள் உண்டு.கல்லூரி/பல்கலை
    மாணவர்கள் உட்பட பலரும் ஒரே நூல்
    மூலம் ஒரு சர்ச்சையை புரிந்து கொள்ள
    இது உதவும்.அமெரிக்காவில் இது போல்
    பல நூல்கள் உள்ளன.இவை வகுப்பறையிலும் பயன்படும்.

    ReplyDelete