Saturday, December 13, 2008

காக்கைகள் கூடுகட்டும் காலம்?

எங்கள் வீட்டுக்கு வெளியே, பக்கத்து வீட்டில் ஒரு வேப்ப மரம் உள்ளது. கோடை காலத்தில் அங்கே கிளிகள் வசிக்கும். கோடை முடியும்போது காணாமல் போய்விடும். மற்ற எல்லா நேரங்களிலுமே காக்கைகள்தான் அங்கே வாழும். சில குயில்கள் உள்ளன. ஆனால் அவற்றைக் கண்ணால் பார்க்கமுடியாது. அவை கூவுவதைக் கொண்டுதான் அவை இருப்பதையே அறியமுடியும்.

ஒருமுறை குயில் ஒன்று காக்கைக் கூட்டில் முட்டையை இடவோ, அல்லது காக்கையின் முட்டையைத் தள்ளிவிடவோ வந்து, கூட்டின் சொந்தக்காரக் காக்கைகளிடம் மாட்டிக்கொண்டது. குயிலைக் கொத்தித் தள்ளின காக்கைகள். வெகு அபூர்வமாகவே குயில்கள் காக்கையிடம் மாட்டிக்கொள்கின்றன. இப்படித் தொடர்ந்து மாட்டினால், குயில்கள் அழிந்துவிடுமல்லவா?


காக்கைகள் கூடு கட்டுவதில் கைதேர்ந்தவை. கூடுகள் பார்க்க அழகாக இருக்காது. ஆனால், காரே மூரே என்று கையில் கிடைத்ததை எல்லாம் கொண்டு பின்னிவிடும்.

வேப்ப மரத்துக்குப் பக்கத்தில் தென்னை மரம் ஒன்று உள்ளது. தென்னை ஓலைகள் காய்ந்து கட்டடக் கூரையில் விழுந்துகிடக்கும். அந்த ஈர்க்குச்சிகள் காக்கைகளுக்கு மிகவும் பயன்படும். ஆனால் நேற்று ஓர் அசம்பாவிதம் நடந்தது.

திடீரென அந்தக் கூரையின்கீழ் இருக்கும் சலூன் கடைக்காரர், தன் கூரையைச் சுத்தம் செய்ய முடிவெடுத்தார். கிடுகிடுவென நான்கு பேர் மேலே ஏறி, குப்பை, சத்தை எல்லாவற்றையும் திரட்டித் துடைத்துச் சுத்தமாக்கிவிட்டனர். தாங்கள் பிறருக்கு எவ்வளவு துன்பம் அளிக்கப்போகிறோம் என்பதைச் சற்றும் யோசியாமல் செய்த ஒரு செயல் இது.

இன்று காலை, காக்கைகளுக்குப் பெருத்த ஏமாற்றம். எப்போதும் போல ஈர்க்குச்சிகளைத் தேடியவற்றுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. பின், எதிரில் உள்ள காதி கிராமோத்யோக் பவனுக்குச் சென்று, தேடித் திரிந்து, சில மரக்குச்சிகளைக் கொண்டுவந்தன.

இனி அடுத்த சில நாள்கள் வீட்டில் உள்ள விளக்குமாறு பிய்ந்துவிடும். பால்கனியில் நுழைந்து விளக்குமாற்றில் கட்டியிருக்கும் சணலை ஆட்டி ஆட்டிப் பிய்த்து, ஈர்க்குச்சிகளை எடுத்துக்கொண்டு ஓடிவிடும்.

அந்த வேப்பமரத்தின் அடியில்தான் முன்னர் ஒருமுறை காக்கைகள் சண்டையிட்டு, ஒன்றை மற்றவை கொத்திக் குதறிக் கொன்றன. அதே மரத்தில்தான் மாஞ்சாக் கயிறு மாட்டி ஒரு கழுகுக் குஞ்சு சிக்கிக்கொண்டது. காக்கைகள் இட்ட கூக்குரலால்தான் என் மனைவி blue cross-ஐத் தொடர்புகொண்டார். அந்தக் கழுகு பின் காப்பாற்றப்பட்டது.

வேப்ப மரத்தில் இதுவரையில் எத்தனையோ காக்கைக் குஞ்சுகள் பிறந்திருக்கலாம். ஆனால் அவை வளர்ந்ததும் எங்காவது பறந்து சென்றுவிடும். ஆனால் சென்ற ஆண்டு பிறந்த இரண்டு காக்கைக் குஞ்சுகள் அங்கேயே தொடர்ந்து வளர்கின்றன.

இந்த ஆண்டு எவ்வளவு காக்கைக் குஞ்சுகள் வேப்ப மரத்தில் ஜனிக்கப் போகின்றன என்று பார்க்கவேண்டும்.

திருத்தம்: காக்கைகள் முட்டையிட இன்னமும் 2-3 மாதங்கள் ஆகுமாம்.

4 comments:

  1. இன்று காலை, காக்கைகளுக்குப் பெருத்த ஏமாற்றம். எப்போதும் போல ஈர்க்குச்சிகளைத் தேடியவற்றுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. பின், எதிரில் உள்ள காதி கிராமோத்யோக் பவனுக்குச் சென்று, தேடித் திரிந்து, சில மரக்குச்சிகளைக் கொண்டுவந்தன.

    மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி, அவர் நடத்திய காலச்சுவடு இதழில் எழுதிய காகங்கள் என்ற சிறுகதையை இவ்வரிகள் ஏனோ நினைவுபடுத்துகின்றன. புறவழிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டு திடீரென்று ஒரு நாளில் (காகங்களுக்கு அறிவிக்கப்படாமல்) அரிசி மூட்டைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் வழக்கமான பாதையிலிருந்து திருப்பிவிடப்படுகின்றன. இதை அறியாத காகங்கள் மறுநாள் காலை, வழக்கமாகச் சிதறிக் கிடக்கும் அரிசியைக் காணாமல் ஏமாற்றத்துக்கு உள்ளாவது பற்றிய கதை அது.

    - ஸ்வாமி

    ReplyDelete
  2. வெகு அழகாய் சொல்லியிருக்கீங்க !

    //வேப்ப மரத்தில் இதுவரையில் எத்தனையோ காக்கைக் குஞ்சுகள் பிறந்திருக்கலாம். ஆனால் அவை வளர்ந்ததும் எங்காவது பறந்து சென்றுவிடும். ஆனால் சென்ற ஆண்டு பிறந்த இரண்டு காக்கைக் குஞ்சுகள் அங்கேயே தொடர்ந்து வளர்கின்றன.
    //

    உறவுகள் பிரிந்தாலும் நட்புக்கள் சேர்ந்திருக்கும் வாழ்க்கை காகங்களின் வாழ்க்கை! (உண்மையா?) என்று எப்போதோ ஆசிரியர் ஒருவர் சொன்னது ஞாபகம் வந்தது !

    ReplyDelete
  3. சார்........ மனமார வாழ்த்துகிறேன். என்ன ஒரு மென்மையான பதிவு? அவசர கதியான சென்னையிலே இப்படியும் சில நெஞ்சங்கள்.உங்களின் விஞ்ஞானம்,அரசியல்,கணினி, எல்லாம் தாண்டி இந்த பதிவில்தான் உஙளைப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. நவீன காக்கைப்பாடினியார் ;)

    ReplyDelete