காலையில் கோவை எக்ஸ்பிரஸில் கூட்டமாகப் பயணம் செய்தோம். டென்ஷனோடு ரூமி ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருந்தார். ஆட்டோ, கார் என்று ஸ்டேஷனிலிருந்து ரூமி வீட்டுக்குப் போய் அங்கு கனமாக காலையுணவை முடித்துக் கொண்டு ஆம்பூர் மஸருல் உலூம் கல்லூரிக்கு வந்தோம். கல்லூரி உள்ளே நுழையும்போதே ஒரு விளையாட்டுத் திடல் உள்ளது. நேராக நிகழ்ச்சிகள் நடப்பதற்கான என்.எம்.சக்காரியா அரங்கம். வலதுபுறத்தில் கல்லூரியின் முதன்மைக் கட்டிடம். அரங்கின் வாயிலில் கல்லூரி மாணவர்களின் கூட்டம். சிறிது நேரம் கல்லூரி முதல்வரது அலுவலகத்தில் அமர்ந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது கூட்டமாக பலர் வந்து மாலனுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். சிலர் மாலனுக்குப் பொன்னாடை போர்த்தி அதையும் 'கிளிக்'கிக் கொண்டிருந்தனர்!
சிறிது நேரம் கழித்து அரங்கிற்கு வந்தோம். கூட்டம் நிறைய ஆரம்பித்திருந்தது. மொத்தம் கல்லூரியில் 900 மாணவர்களாம். காலைக்கல்லூரி, மாலைக்கல்லூரி என்று இரண்டும் உண்டு. அரங்கில் கிட்டத்தட்ட 200 மாணவர்களாவது இருப்பர். மற்ற பல கல்லூரிகளிலிருந்தும், பள்ளிகளிலிருந்தும் மாணவ, மாணவியர் வந்திருந்தனர். அதைத்தவிர, இலக்கிய நாட்டமுள்ள பொதுமக்கள் சிலரும் வந்திருந்தனர்.
விழா தொடக்கமாக க்ரா-அத் ஓதியபின்னர், ஒரு மாணவர் வரவேற்புரை ஆற்றினார். மாணவர் மைக்கைப் பிடித்ததும், நண்பர் குழாம் அரங்கமே அதிரும் வண்ணம் கைதட்டி ஆர்பர்டித்தது, விசில் மழை அப்பொழுது ஆரம்பித்ததுதான், பின்னர் பலர் கடிந்துகொள்ளும் வரை ஓயவேயில்லை என்று தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து பாரதிபாலன் திசைகள் இயக்கத்தை அறிமுகம் செய்துவைத்தார். | |
அடுத்து மாலன் 'கயல் பருகிய கடல்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். | |
இறுதியாகக் கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்று, மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் என்னென்னவெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். |
இத்துடன் காலை நிகழ்ச்சிகள் முடிந்து, கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒரு குழு மாணவர்கள் கணினிப்பட்டறைக்கும், மற்றொரு குழு கவிதைப்பட்டறைக்கும் என்று பிரிந்தனர்.
No comments:
Post a Comment