Wednesday, April 27, 2005

ரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4

காந்தி ஒருமுறை சொன்னாராம்: "முதலில் அவர்கள் உன்னைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். பின் உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். பின் உன்னுடன் சண்டையிட வருவார்கள். பின்... நீ ஜெயித்திருப்பாய்."
இது ரெட்ஹாட் இணையத்தளத்தில் கண்ட மேற்கோள்.

நேற்று, சென்னை தாஜ் கன்னிமரா ஹோட்டல் ஆடலறையில் ரெட்ஹாட் நிறுவனம் தனது 'ரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4' வெளியீட்டு விழாவினை நடத்தியது.

ரெட்ஹாட் போன்ற திறமூல, தளையறு மென்பொருள்கள் சார்ந்த இயக்குதளத்தை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் நடத்தும் ஒரு விழாவுக்கு வந்திருக்கும் கூட்டமே, 'லினக்ஸ் வயசுக்கு வந்துடுச்சு' என்பதை உணர்த்தியது. Maturity - லினக்ஸ் பொதி முதிர்ச்சியடைந்த ஓர் இயக்குதளப் பொதியா என்பதே பல நிறுவனங்களின் கவலையாக இருந்தது. பின் டெஸ்க்டாப் - சாதாரணப் பயனர் கணினி - தவிர்த்து பின் அலுவல் விஷயங்களைக் கவனிக்கும் வழங்கிக் கணினிகளில் (சர்வர்) லினக்ஸை நிறுவ யாருமே தயங்கவில்லை. தரவுத்தள வழங்கி, தடுப்புச்சுவர், இணையத்தள வழங்கி, மின்னஞ்சல் பரிமாற்றி எனப் பல்வேறு விஷயங்களுக்கும் இன்று அனைத்து முன்னணித் தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் பயன்படுத்துவது லினக்ஸ்தான். அதிலும்கூடப் பெரும்பான்மை ரெட்ஹாட்தான்.

ரெட்ஹாட் தன்கூடவே சில கணினி உலகப் பெருங்கோக்களைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தனர். இண்டெல், ஆரக்கிள் நிறுவனங்களிலிருந்து சிலர் வந்திருந்தனர்.

ரெட்ஹாட் பயனர் கணினிக்கும் - உங்கள் மேசைக்கும் - வந்துவிட்டது என்று அவர்கள் சொன்னார்கள். ஆங்கில இடைமுகத்தில் கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு இது நிச்சயம் நடந்துவிட்டது என்றுதான் சொல்வேன். ஃபயர்ஃபாக்ஸ், தண்டர்பேர்ட், ஓப்பன் ஆஃபீஸ் - இவை லினக்ஸில் பார்க்க அழகாகவும், வேண்டிய வேலைகளைச் செய்யத் தகுதியானவையாகவும் உள்ளன. எழுத்து வடிவங்கள் எக்ஸ் சாளர அமைப்பில் (கேடிஈ, குனோம்) சற்று சுமார்தான். இப்பொழுது True Type, Open Type எழுத்து வடிவங்கள் ஓரளவுக்கு நன்றாகவே தெரிந்தாலும் மைக்ரோசாஃப்ட் இயக்குதளங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு மாற்று கம்மிதான். ஆனாலும் இன்றைய நிலையில் இது போதும் என்று தோன்றுகிறது.

நேற்று ரெட்ஹாட் இந்திய மொழிகள் ஐந்தில் இடைமுகத்தைக் கொண்டுவந்திருப்பதனைக் காட்டினார்கள். ஆனால் நேரம் அதிகமானபடியால் நான் பாதியில் கிளம்பி வந்துவிட்டேன். ஹிந்தி, தமிழ், வங்காளம், பஞ்சாபி (குர்முகி எழுத்தில்), குஜராத்தி ஆகிய ஐந்து மொழிகள் இவை. இதில் தமிழைப் பொறுத்தவரை ழ கணினி குழுவுடன் இணைந்து ரெட்ஹாட் இந்த வேலையைச் செய்திருக்கின்றனர். அங்கூர் பாங்ளா என்ற குழுவுடன் இணைந்து வங்காள இடைமுகத்தைச் செய்திருக்கின்றனர். [அங்கூர் பாங்ளா தளத்தைப் பார்த்து நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இதுபற்றி நிறைய விவாதிக்க வேண்டும்!] அதனால் கடைசிவரை தமிழ் இடைமுகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவில்லை. இன்றோ, நாளையோ யாரிடமிருந்தாவது குறுந்தட்டை வாங்கிப் போட்டுப் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு தமிழ்க் கணினி மென்பொருள் வெளியீட்டு விழாவைப் போன்று இல்லாமல், வரிக்கு வரி திறமூல ஆர்வலர்களது பங்களிப்பை அங்கீகரித்தனர் ரெட்ஹாட் பேச்சாளர்கள்.

ஃபெடோரா பற்றி ஒரு கேள்வி எழுந்தது. அதற்கு ரெட்ஹாட் அதிகாரிகள் பதில்: "ஃபெடோரா என்பது பரிசோதனைப் படுகை. ஃபெடோராவை ஆர்வலர்களிடம் விட்டுவிட்டு அதில் புகுத்தியுள்ள புதுமைகள் முதிர்ச்சியடைந்ததும் அவற்றை ரெட்ஹாட் தொகுப்பில் சேர்க்கிறோம். எனவே ஃபெடோராவில் வேலை செய்வதெல்லாம் ரெட்ஹாட்டில் வேலை செய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால் ரெட்ஹாட்டில் ஒன்று சரியாக வேலை செய்கிறது என்றால் அது ஃபெடோராவில் சரியாக வேலை செய்திருக்கும்."

ரெட்ஹாட்தான் இப்பொழுதைக்கு இந்தியாவில் மைக்ரோசாஃப்டுக்குத் தீவிர மாற்று. பிற லினக்ஸ் சார்ந்த பொதிகளை வெளியிடும் நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவன ரீதியில் இல்லை. அதுவரையில் ரெட்ஹாட் நிறுவனத்துக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!

4 comments:

 1. தகவலுக்கும், மேல் விபரத்துக்கும் நன்றி பத்ரி.

  ஆடலறையில் - ballroomத்தான சொல்றீங்க? வாவ்...
  ஆனால் எனக்குத்தெரிந்து அந்த அறைகள் பெரியதாக இருப்பதால் - ஆடலரங்கு-ன்னுகூட சொல்லலாமோ:)

  ReplyDelete
 2. நல்ல பதிவு பத்ரி. தமிழில் ரெட் ஹாட் செய்துள்ளது குறுந்தகடாக உள்ளதா?

  ReplyDelete
 3. குறுந்தகடு எனக்குக் கிடைக்கும். கிடைத்தவுடன் சொல்கிறேன்.

  ReplyDelete
 4. //ரெட்ஹாட் நிறுவனத்துக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்! //
  உண்டு.

  ReplyDelete