Tuesday, April 12, 2005

கங்குலி மீது தடை

இன்றைய ஆட்டத்தில், கடைசி பந்தில் பாகிஸ்தான் இந்தியாவை வென்று இதுவரையிலான ஆட்டங்களை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

டெண்டுல்கர் இன்றைய ஆட்டத்தில் சதமடித்து தன் மோசமான ஃபார்மில் இருந்து மீண்டார். ஆனால் கங்குலி தொடர்ந்து திண்டாடுகிறார். இந்தியாவின் நல்ல காலம்... அணித் தேர்வாளர்கள் அவரை நீக்காவிட்டாலும், ஐசிசி மேட்ச் ரெஃபரீ கிறிஸ் பிராட் இந்திய அணி மிக மெதுவாக ஓவர்களை வீசிக்கொண்டிருப்பதால் அடுத்த ஆறு ஒருநாள் போட்டிகளில் கங்குலி விளையாடத் தடை விதித்துள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன!

கங்குலி இன்று செய்த ஒரே நல்ல காரியம் டாஸை ஜெயித்தது. ஆடுகளத்தில் முதல்நாள் விட்டிருந்த தண்ணீர் காயாததால் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. சேவாக், டெண்டுல்கர் இருவருமே தொடக்கத்திலிருந்தே அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சேவாக், டெண்டுல்கர் அடித்த பந்தில் ஒரு ரன் எடுக்க முன்னேறி இருந்தார். ஆனால் யூனுஸ் கான் அருமையாக பந்தைப் பிடித்து நேராக ஸ்டம்பில் எறிந்து சேவாகை ரன் அவுட் ஆக்கினார். அடுத்து வந்த மஹேந்திர சிங் தோனி டெண்டுல்கருக்குத் தேவையான ஆதரவிக் கொடுத்தார்.

இந்த ஆடுகளம் டெண்டுல்கர் தான் இழந்த ஃபார்மை மீட்க வசதியாக சற்று மெதுவாக விளையாடியது. பந்துகள் அவ்வளவாக எழும்பவில்லை. பந்துகள் ஆடுகளத்தில் விழுந்ததும் சற்றும் மெதுவாக மட்டைக்கு வந்தன. டெண்டுல்கர் எந்தத் தவறுமே செய்யவில்லை. இரண்டு அருமையான சிக்ஸ்களை அடித்தார். அதில் இரண்டாவது, படம் பிடித்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி கேமராமேன் தலையில் நங்கென்று விழுந்து அவருக்கு பலத்த காயத்தைக் கொடுத்தது.

டெண்டுல்கர் சதத்தைத் தாண்டியதும் கைவிரல்களை விரிக்க முடியாது, கால்களை அகற்ற முடியாது crampsஇனால் கஷ்டப்பட்டார். அதனால் ரன்கள் பெறுவது குறைந்து போனது. சேவாக் அவருக்கு உதவி ஓட்டக்க்காரராக வந்தார். ஆனாலும் 123 ரன்களில் (130 பந்துகள்) மிகவும் சோர்வுடன் ஸ்வீப் செய்யப்போய் பவுல்ட் ஆனார். தோனி அவுட்டானதும் வந்த கங்குலி பல பந்துகளை வீணடித்து, தடவித் தடவியே விளையாடினார். ரன்களை வேகமாகப் பெற வேண்டியவர் 33 பந்துகளில் வெறும் 18தான் அடித்தார். இதனால் அடுத்து வந்த பிற விளையாட்டு வீரர்கள் மீது பெருத்த அழுத்தத்தைக் கொடுத்தார். திராவிட் 19 (13), யுவராஜ் 35* (26), காயிஃப் 5 (3) என்று ஒவ்வொரு பந்துக்கும் அதிக ரன்கள் பெற வேண்டியிருந்தது. இதனால் அணியின் எண்ணிக்கை 48 ஓவர்களில் 315 என்றானது.

டெண்டுல்கர் ஆடுகளத்தின் danger area வில் இரண்டு முறை ஓடியதால் நடுவரின் கண்டனத்துக்கு ஆளானார். இரண்டாவது எச்சரிக்கையின் போது அவர் எடுத்த ரன் நிராகரிக்கப்பட்டது. இன்னமும் ஒருமுறை ஓடியிருந்தால் இந்தியாவுக்கு அபராதமாக எதிரணிக்கு ஐந்து ரன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். டெண்டுல்கர் போன்ற அனுபவம் வாய்ந்த 38 சதங்கள் பெற்றவர் இப்படி எச்சரிக்கைக்கு ஆளானது புதிராக இருந்தது.

பாகிஸ்தான் தனது இலக்கை அடைய அற்புதமாக பேட்டிங் செய்தனர். யாருமே பெரிய அளவுக்கு ரன்கள் பெறவில்லை என்றாலும் முதல் ஐந்து வீரர்களும் வேகமாக, ரிஸ்க் ஏதும் எடுக்காமல் அதே சமயம் நல்ல எண்ணிக்கைகளைப் பெற்றனர். ஷாஹீத் ஆஃப்ரீதி எப்பொழுதும் போல 23 பந்துகளில் 40 எடுத்தார். சல்மான் பட் 48 (55), அப்துல் ரஸாக் 44 (60), ஷோயப் மாலிக் 65 (65), இன்ஸமாம்-உல்-ஹக் 60* (59) என்று இவர்கள் அனைவரும் எடுத்த எண்ணிக்கை இந்தியாவைத் தோற்கடிக்க உதவியது. முக்கியமாக இன்ஸமாம் கடைசி வரை இருந்து பாகிஸ்தானை ஜெயிக்க வைத்தார்.

ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் ஜெயிக்க 3 ரன்கள் தேவை. ஓவரை வீச வந்தவர் டெண்டுல்கர். நன்றாகவே பந்து வீசினார். முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் ஏதுமில்லை. ஆனால் மூன்றாவது பந்தில் 2 ரன்கள். பின் அடுத்த இரண்டு பந்துகளில் ரன்கள் ஏதுமில்லை. கடைசிப் பந்தில் ரன் ஏதும் கொடுக்காவிட்டால் ஆட்டம் டை ஆகியிருக்கும். ஆனால் இன்ஸமாம் சற்றும் கவலைப்படாமல் பந்தை தர்ட்மேன் திசையில் தட்டிவிட்டு நான்கைப் பெற்றார். தடுப்பாளர்கள் அனைவரும் பந்தைப் பக்கத்திலே தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க முயற்சி செய்வார் என்பதால் உள்ளே வந்திருந்தனர்.

இந்தியாவின் பந்துவீச்சு சற்றே ஏமாற்றம் தருவதாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவருமே உதை வாங்கினர். முக்கியமாக நேஹ்ரா. முரளி கார்த்திக் நன்றாகப் பந்து வீசினார்.

அடுத்த ஆட்டத்தில் தினேஷ் மோங்கியா உள்ளே வருவார். ஆனால் எந்த இடத்தில் பேட்டிங் செய்வார் என்பது தெரியவில்லை. காயிஃப் சற்று மேலே வர வேண்டும். தோனி சற்று கீழே வரலாம் என்று நினைக்கிறேன். டெண்டுல்கர், சேவாக், காயிஃப், தோனி, திராவிட், யுவராஜ், மோங்கியா என்ற வரிசை சரியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

11 comments:

  1. இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரை, pakistan deserves this victory. 48 ஓவரில், முன்னூத்து சொச்சம் என்றாலும், ஆரம்பத்தில் இருந்தே கூலாக விளையாடி ஜெயித்துவிட்டார்கள். இன்ஸமாம், ரெண்டாவது ரன்னுக்கு ஓடுகிற அதிசய்த்தை இந்த மாட்சில்தான் பார்த்தேன். அப்படி ஒண்ணு ரெண்டாக எடுத்தே, ஆட்டத்தை முடித்துவிட்டார். யுவராஜ் சிங் பழமாக விட்ட கேட்ச்சினால் தான் நமக்கு அதிக சேதாரம். நெஹ்ராவை கொஞ்சம், சைடுக்கு தள்ளிவிட்டு, சேவாகுக்கு இன்னும் ரெண்டு மூணு ஓவர் கொடுத்திருந்தால், மேட்ச் கொஞ்சம் திசை திரும்பியிருக்கலாம். என்னமோ, நான் பாக்கிற மேட்செல்லாம் இப்படித்தான் ஆகிறது :-)

    ReplyDelete
  2. பத்ரி இதுல பிக்ஸிங் எதுவும் இருக்காதே? எனக்கு ஏமாத்தறாஙளோனு ஒரு சின்ன சந்தேகம்!

    ReplyDelete
  3. //என்னமோ, நான் பாக்கிற மேட்செல்லாம் இப்படித்தான் ஆகிறது :-)// ஹி ஹி.. இந்த சென்டிமெண்ட் பலருக்கும் உண்டு. இதுக்குதான் நாமெல்லாம் இந்த மாதிரிப் பந்தயங்களைப் பாக்கவே கூடாதுங்கறது ;-))

    கடைசிப் பந்தில் ஒரு வேளை ஒரு நாலைத் தட்டிடுவாங்களோன்னு பயந்துட்டே உலாவியில் 'reload'-ஐ சொடுக்க அங்கு மங்களமும் பாடி முடிக்கப்பட்டிருந்தது. இன்சமாமுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. இந்திய தேர்வுக்குழு கிறிஸ் பிராடிற்கு நன்றி சொல்ல வேண்டும்.இல்லாவிட்டால், தொடர்ந்து கங்குலியை இந்திய அணியில் வைத்திருப்பதற்கு மக்கள் அவர்களை திட்டித் தீர்த்திருப்பார்கள்.

    கங்குலிக்கு கொஞ்சநாள் ஓய்வு என்பதும், இந்திய அணிக்கு (கொஞ்ச நாளாவது) புதிய தலைமை என்பதும், சிட்டுக்குருவி லேகியம் மாதிரியான சங்கதி.(உண்மையில் பலனளிக்கிறதோ இல்லையோ, மனோரீதியாக ஒரு தெம்பைத் தரலாம்).

    ONEDOWN DHONI என்பதே வெற்றிகரமான வியூகமாகத்தேனே இருக்கிறது. அதை ஏன் மாற்ற வேண்டும் பத்ரி ?

    ReplyDelete
  5. தோனி எப்பொழுதுமே மூன்றாம் இடத்தில் விளையாட வேண்டுமா - என்பதில் எனக்குப் பல கேள்விகள் உள்ளன. சில நேரங்களில் சுதாரித்து ஆட வேண்டியிருக்கும். தோனி அடித்து ஆக்ரோஷமாக ஆடக்கூடிய மனநிலையிலேயே உள்ளார். ஆஃப்ரிதி மாதிரி இல்லாவிட்டாலும் கூட, சேவாக் மனநிலையில் உள்ளவர்.

    அதனால் தேவைக்கேற்ற மாதிரி காயிஃப், திராவிட் போன்றவர்களை மூன்றாமிடத்தில் விட்டுப் பார்க்க வேண்டும். மேலும் 7-ல் காயிஃப் சுத்த வேஸ்ட். அவர் அணியில் இருக்க வேண்டுமானால் முன்னால் வந்து விளையாடுவது நல்லது. இல்லாவிட்டால் கதாயுதத்தைத் தூக்கி பந்தை இழுத்துத் தாக்கும் வேறு யாராவது 7-ல் வந்து விளையாடலாம்.

    ReplyDelete
  6. ம்ம்ம்...pointஐ நல்லாத்தான் போட்டுத்தக்குறீங்க... இருந்தாலும், onedown positionனுக்கு நான் லாயக்கில்லைனு தோணியே நிருபிச்சுட்டு போகட்டுமே...அதுக்குள்ள நாம ஏன் அவசரப்பட்டு அவரை லாயக்கில்லாதவரா ஆக்க வேண்டும்கிறதுதான் என்ர point (போட்டுத்தாக்கும் கலை - உபயம் : அல்வாசிட்டி விஜய்)

    :))

    ReplyDelete
  7. I think, the penalty for Captain due to slow over rate is not fair. It is not captain alone resposible for this delay. I think over all penalty of 50% match fee for entire team is accetable.

    Badri sir... no bowler can do well in this type of one sided batting pitch. Poor bowlers...

    Dhoni can still come at No. 3 if any wicket goes within the 15 overs, if not it is better to bring Dhoni in the last 10 overs to get as much as runs.

    ReplyDelete
  8. Akbar is rightly said!
    See Pakistan Team. When they need they will bring Younus in No.3 other wise at No. 7.
    Any way, pakistan deserves it by their cool play in the 4th one day match. It was a Lesson to Indian Cricket's batting mentality.
    In such a Pressurized situations, no need for 4s and 6s but to keep the RunRate without fall by Singles and Doubles and that was nicely exhibited by Razzaq and Shoaib.

    ReplyDelete
  9. அடுத்த ஆட்டத்தில் நிச்சயம் இந்தியா ஜெயிக்கும். அப்படி இருந்தால் தான் முஷரஃப் டெல்லி வரும்போது ஆட்டம் களை கட்டும் (2000 பாகிஸ்தானியர்களுக்கு அதிக விலையில் டிக்கெட் விற்றுள்ளனர்- அவர்களுக்கும் ஒரு மஜா இருக்கும். இந்தியா டெல்லியில் தோற்கும். 3- 3 அப்படீன்னு சமம் ஆகும். முஷரஃப் முன்னால பாக். அணி ஜெயிச்ச சந்தோஷம். இந்தியா தொடரைத் தோற்காத சமநிலை. எல்லாரும் ஹேப்பி. 'ஓயே பப்ளி' என பெப்சி தூரதர்ஷனில் இன்னும் 800 முறை ஸ்லைடு காண்பிக்கும். டால்மியாவுக்கு கல்லாவுல காசு. டால்மியா ராஜ்ஜியத்துல இதெல்லாம் சகஜமப்பா..!

    - அலெக்ஸ்

    ReplyDelete
  10. //அடுத்த ஆட்டத்தில் நிச்சயம் இந்தியா ஜெயிக்கும்//

    சான்சே இல்லை. இரண்டு காரணங்கள். 1. முஷரஃப் மேட்ச் பார்க்க வருகிறார். பாக். வீரர்கள் வெறியுடன் ஆடுவார்கள். 2. மேட்ச் நடப்பது வெள்ளிக்கிழமை. அது அல்லாவின் தினம். வெற்றி அவர்களுக்கே.

    ReplyDelete
  11. அய்யா கோயிஞ்சாமி,

    வெள்ளிக்கிழமை என்றால் அல்லா தினம், ஞாயிற்றுக்கிழமை என்றால் கர்த்தர் தினம் சனிக்கிழமை என்றால் சாமி தினம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. எல்லா தினமும் மனிதர்களின் தினம்தான். ஒழுங்காக விளையாடினால் யார் வேண்டுமானலும் ஜெயிக்கலாம்.

    அக்பர் பாட்சா

    ReplyDelete