Monday, April 04, 2005

M.வரதராஜுலு கைது

இன்று செய்தித்தாளைப் புரட்டும்போது கண்ணில் பட்டது இந்தச் செய்தி. M.வரதராஜுலு என்பவர் துபாயில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்டார். இவருக்கு MV ராஜா, லூயி ஜூலு என்றெல்லாம் வேறு பெயர்கள் உண்டு. நடுவில் பிரெஞ்சுக் குடியுரிமையும் பெற்றுள்ளார்.

வரதராஜுலு 1996-ல் இந்தியன் வங்கியிலிருந்து ரூ. 200 கோடி பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் போலீஸிடம் மாட்டாமல் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து பிரான்சு சென்றார். இப்பொழுது ஒன்பது வருடங்கள் கழித்து CBIஇடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

நான் 1996ல்தான் இந்தியா திரும்பி வந்திருந்தேன். அப்பொழுது இந்த வழக்கைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ள வேண்டிய அவகாசம் ஏற்பட்டது.

வரதராஜுலுவின் மோசடித் திட்டம் மிகவும் எளிமையானது. முந்திரி விற்பனையை மையமாகக் கொண்டது. அந்த நேரத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் முந்திரிக்கு நல்ல வெகுமானம் உண்டு. ஆனால் அதே சமயம் இந்த ஏற்றுமதியாளர்கள் இந்தியாவின் வரித்தொல்லைகளிலிருந்து விடுபட விரும்பினர். அதனால் சிங்கப்பூரில் ஒரு வர்த்தக நிறுவனத்தை ஆரம்பிப்பார்கள். (பிரிட்டானியா நிறுவனத்தின் முன்னால் முதலாளி ராஜன் பிள்ளையின் வாழ்க்கைக் கதையைப் படித்தால் இதை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளலாம்.) அதன்படி இந்திய நிறுவனம் தயாரிக்கும் முந்திரிக்கொட்டைகளை சிங்கப்பூர் நிறுவனம் குறைந்த விலையில் வாங்கும். பின் அதே முந்திரியை எந்தவித மதிப்பையும் கூட்டாமல் அதிக விலைக்கு பிற நாடுகளுக்கு விற்கும். இதனால் இந்தியாவின் வரித்தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். சிங்கப்பூரில் குறைந்த வரிதான்.

இங்கிருந்து ஆரம்பித்த வரதராஜுலு அதற்கடுத்த நிலைக்குச் சென்றார். தன்னிடம் வேலை பார்ப்பவர்களை இயக்குனர்களாக வைத்து 'டப்பா கம்பெனி'களை நிறுவுவது. இவையெல்லாம் shell companies. அதாவது இந்த நிறுவனங்களுக்கென அலுவலகம், ஊழியர்கள் என்று எதுவும் கிடையாது. பெயரளவில் கம்பெனிகளாக இருக்கும். வரதராஜுலுவின் சிங்கப்பூர் நிறுவனம் இந்த டப்பா நிறுவனங்களுக்கு முந்திரி ஆர்டர் கொடுக்கும். அந்த ஆர்டரை வைத்துக்கொண்டு இந்தியன் வங்கியில் கடன் வாங்குவார்கள். அதற்கு இந்தியன் வங்கியின் மேல் அதிகாரிகள் - மிக மிக மேலிடம் வரை - உள்கை. அந்தக் கடன் பணத்தை வைத்துக்கொண்டு வரதராஜுலுவின் இந்திய நிறுவனத்திடமிருந்து கை மேல் காசு கொடுத்து முந்திரிகளைக் கொள்முதல் செய்யும் இந்த shell company. இந்த முந்திரியை வரதராஜுலுவின் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வரதராஜுலுவுக்குச் சொந்தமான கப்பலில் அனுப்பி வைப்பார்கள். ஆனால் சிங்கப்பூர் சென்றவுடன் வரதராஜுலுவின் சிங்கப்பூர் நிறுவனம் இந்த முந்திரி மோசமான தரத்தில் உள்ளது என்று பணம் கொடுக்காமல் சரக்கைத் திருப்பி அனுப்பிவிடும். உடனே இந்த shell company மேற்படி முந்திரியை மோசமான தரத்தில் உள்ளது என்று அடிமாட்டு விலைக்கு வேறொரு நிறுவனத்துக்கு (அதுவும் வரதராஜுலுவின் மற்றொரு phony நிறுவனம்) விற்றுவிடும். அந்த நிறுவனமோ அதைக் கொள்ளை லாபத்துக்கு வேறொரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்றுவிடும்.

நஷ்டமடைந்த shell company இந்தியன் வங்கியிடம் வந்து தான் போண்டியாகிவிட்டதாகவும் அதனால் கடனைத் திரும்பக் கட்ட முடியாது என்றும் கையை விரித்து விடும். அந்த ஷெல் நிறுவனத்துக்கு என்று எந்தச் சொத்தும் இருக்காது. இவையெல்லாம் limited liability companies. எனவே நிறுவன இயக்க்குனர்களை ஒன்றும் செய்ய முடியாது. இந்தியன் வங்கியும் இந்தக் கடனை non-performing asset என்று எழுதி, இழுத்து மூடிவைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுவார்கள்.

இப்படியாக இந்தியன் வங்கிக்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம். இது, மற்றும் அப்பொழுது வங்கியின் தலைவராக இருந்த கோபாலகிருஷ்ணன் செய்த சில புரட்டு வேலை ஆகியவற்றால் இந்தியன் வங்கி முற்றிலுமாக அழியப்போனது. அதன்பின் மத்திய அரசு சில கோடிகளை பங்குப்பணமாகக் கொண்டுவந்து அழிவிலிருந்து இந்த வங்கியை மீட்டது.

இப்பொழுது வரதராஜுலு கைது செய்யப்பட்டுள்ளார். இனி வரும் நாள்களில் எம்மாதிரியான திருட்டு வேலைகள் மூலம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்று விலாவரியாகத் தகவல்கள் கிடைக்கும். ஆனால் எத்தனை பணத்தை அவரிடமிருந்து மீட்க முடியும் என்று தெரியவில்லை.

1 comment:

  1. Good recap of Indian Bank scam. Also, there were allegations against Gopalakrishnan w.r.t. Bank of Thanjavur - Indian Bank merger in early 90s. If you remember, BoT was based in Thanjavur and Moopanar family had considerable influence in the bank. When Gopalakrishnan was arrested in 1996, these allegations flew thick & fast and I heard from reliable sources abt G.K.Moopanar's alleged role in the epdisode. But then, P.Chidambaram was the Finance Minister in Deve Gowda/IK Gujral government at that time and things were apparently swept under the carpet. Unfortunately, I don't remember the details of what-is-what to present a detailed picture.

    ReplyDelete