Sunday, April 17, 2005

ஆஃப்ரீதி பல்லே பலே!

இரண்டு நாள்கள் கழித்து எழுதுகிறேன். வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் ஷாஹீத் ஆஃப்ரீதி வெளுத்து வாங்கிவிட்டார்.

கங்குலி இல்லாத ஆட்டத்துக்கு திராவிட் தலைமை. டாஸில் வென்றதும் கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங். சரி, மட்டையைக் கையில் வைத்துக்கொண்டுமா கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங் செய்யவேண்டும்? காலையில் கான்பூரில் பந்து அங்கும் இங்குமாகக் காற்றில் சுழன்றது. டெண்டுல்கர், சேவாக் இருவரும் அவுட்டானதும் நான் ஏற்கெனவே சொல்லியிருந்தது போல காயிஃப், திராவிட் வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் தோனி வந்து அவுட்டானார். பின் யுவராஜ் சிங் அவுட். மிகக் கஷ்டமான நிலையிலிருந்து காயிஃப், திராவிட் இருவரும் ஆட்டத்தை நிலைநிறுத்தி இந்தியாவை 249/6 என்ற ஸ்கோருக்குக் கொண்டு வந்தனர்.

ஆடுவரிசையை மாற்றியிருந்தால் நிச்சயமாக 300 வரை போயிருக்கலாம். தோனி, யுவராஜ் இருவரும் 5, 6 இடங்களில் பேட்டிங் செய்திருந்தால்.

போகட்டும். மதியம் பாகிஸ்தான் - ஆஃப்ரீதி - செய்த மாயத்துக்கு யாருமே பதில் சொல்லியிருக்க முடியாது. இந்தியப் பந்துவீச்சாளர்கள் கதிகலங்கி ஓடினர். எங்கு யார் பந்து வீசினாலும் முன்னால் இறங்கி வந்து ஆஃப்ரீதி ஒரு சுழற்று சுழற்றுகிறார். மாட்டினால் சிக்ஸ். மாட்டாமல் விளிம்பில் பட்டாலும் சிக்ஸ். மாட்டவே இல்லையா? அவுட்டானால் ம** போச்சு என்ற கவலையே இல்லாத எண்ணம். இதற்கு வசதியாக பாகிஸ்தான் அணியில் 8 பேர் பேட்டிங் செய்யக்கூடிய நீண்ட வரிசை.

அடித்தார், அடித்தார், அடித்துக்கொண்டே இருந்தார். 9 ஆறுகள், 10 நான்குகள். 45 பந்துகளில் 102 ரன்கள். அடுத்த பந்தில் அவுட். கடைசியில் ஜாகீர் கான் வீசிய சில நல்ல பந்துகள் நாலைந்தை ஆஃப்ரீதியால் அடிக்க முடியவில்லை. இல்லாவிட்டால் 38-40 பந்துகளில் சதம் வந்திருக்கும். நடுவில் ஒருமுறை நோபாலில் ஷார்ட் ஃபைன்லெக்கில் கேட்ச். அதையெல்லாம் மறந்துவிடலாம்.

ஆனாலும் இதுபோன்ற இன்னிங்ஸை என்னவோ தலையில் வைத்துக் கூத்தாடத் தோன்றவில்லை. இந்தியாவின் பந்துவீச்சின் பலவீனம்தான் இப்படி ஆகின்றது. ஏன் ஆஃப்ரீதியால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவோ, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவோ, இங்கிலாந்துக்கு எதிராகவோ இப்படியெல்லாம் அடிக்க முடிவதில்லை?

கும்ப்ளே தன் முதல் ஓவரில் 23 ரன்கள் கொடுத்தார். பின் நன்றாகவே வீசி அடுத்த 9 ஓவர்களில் 31 ரன்கள் மட்டும்தான் கொடுத்தார். ஆனால் இதனாலெல்லாம் பாகிஸ்தானைத் தடுகக் முடியவில்லை. அடுத்து பேட்டிங் செய்ய வந்த அனைவருமே திறமையாக விளையாடி 43வது ஓவரில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.

இனி இன்று தில்லியில் நடக்கவிருக்கும் ஆட்டம் மட்டும்தான் பாக்கி. பாகிஸ்தான் இதையும் எளிதாக வெல்லும் என்று உள்மனதில் தோன்றுகிறது.

2 comments:

  1. நாம்மாளுங்களுக்கு தனிய பொய் விளையாட பயம். கூட்டமா இருந்த ஒரு வேளை போரடக்கூடிய குணம் இருக்குமோ என்னவோ (அதாவது பவுலிங்கை சொல்றேன். டார்கட் குறைச்சலா இருந்தக் கூட ஏதாவது செய்வாங்க). மட்டையைக் கொடுத்து தனியா அனுப்புனா உடனே வாபஸ். என்ன கருமமோ தெரியலை. என்னைக்கும் நாம (கிரிக்கெட்டை பார்க்கறதவிட்டு) திருந்தப் போறோமோ தெரியல. பாகிஸ்தானி பசங்ககிட்ட மானம் போவுது. இ மெயிலும் sms மா அனுப்பி மானத்தை வாங்கறானுங்க.

    ReplyDelete
  2. திராவிடின் மோசமான முடிவுகள் கடைசி இரண்டு தோல்விகளுக்கு முக்கிய காரணம். போன மேட்சில் டெண்டுல்கர், சேவாக் இருவருக்கும் பவுளிங் கொடுக்கப்படவில்லை. இன்றைய மேட்சில் டெண்டுல்கர் சிறப்பாக வீசியும் (ஹர்பஜன் தவிர்த்து மற்றவர்களுடன் ஒப்பிடுகையில்) 5 ஓவர்களுடன் நிறுத்தப்பட்டார். திராவிட்டுக்கும் மோங்கியாவிற்கும் அப்படி என்ன நெருக்கமான உறவு என்பது தெரியவில்லை. கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர் என்பதனை மீண்டும் உறுதி செய்து இருக்கின்றார். ரவி சாஸ்திரி போல் வைஸ் காப்டனாகவே ரிட்டையர்டு ஆவதுதான் இவருக்கும் இந்திய அணிக்கும் நல்லது.

    ReplyDelete