இந்த வாரம் என்னவோ கல்வி சம்பந்தப்பட்ட பல விவகாரங்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
முதலில் திங்கள் அன்று தூரதர்ஷன் பொதிகை சானலுக்காக ஒரு நிகழ்ச்சி - புத்தக விமரிசனம். அதில் கல்வி தொடர்பான இரண்டு புத்தகங்களை அறிமுகம் செய்ய விரும்பினேன். அதில் ஒன்று: தமிழகத்தில் கல்வி, வே.வசந்தி தேவியுடன் உரையாடல். சந்திப்பு சுந்தர ராமசாமி. காலச்சுவடு பதிப்பகம், முதல் பதிப்பு ஆகஸ்ட் 2000, திருத்தப்பட்ட மூன்றாம் பதிப்பு ஜூன் 2004, பக்கங்கள் 210, விலை ரூ. 90
புத்தக விமரிசனத்தைத் தொலைக்காட்சியில்தான் பார்க்க வேண்டுமென்றால் வரும் வெள்ளிக்கிழமை இரவு 10.20க்குப் பாருங்கள். ஆனால் பற்பல காரணங்களால் நிகழ்ச்சி சொதப்பலாக இருக்கும். நிகழ்ச்சி எத்தனை நேரம் என்று எனக்கு முன்னதாகத் தகவல் ஏதுமில்லை. நிறைய எழுதி எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன். உரையாடலாக இல்லாமல் ஒருவர் என்னை அறிமுகம் செய்ய நான் தொடர்ச்சியாகப் பேசவேண்டிய நிலை. நடுவில் திடீரென்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இன்னமும் இரண்டு நிமிடங்கள்தான் இருக்கிறது என்பது போல நெருக்கடி கொடுக்க அவசர அவசரமாக மேற்படி புத்தகத்தைப் பற்றி பேசி முடித்து விட்டு, அடுத்த புத்தகத்தை எடுத்து அதைப்பற்றி ஓரிரு வார்த்தைகளைச் சொல்லி முடிந்துவிட்டேன். (இந்த இரண்டாவது புத்தகம் - "எனக்குரிய இடம் எங்கே? கல்விக்கூடச் சிந்தனைகள்", ச.மாடசாமி - பற்றிப் பின்னால் சொல்கிறேன்.)
இப்பொழுது தமிழகத்தில் கல்வி பற்றி:
வே.வசந்தி தேவி 1992 முதல் 1998 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர். தற்பொழுது தமிழக மாநில மகளிர் ஆணையத்தின் (Tamil Nadu State Commission for Women) தலைவராக உள்ளார்.
சுந்தர ராமசாமி தமிழில் அதிகம் அறியப்படும், முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர்.
சுந்தர ராமசாமியும், வசந்தி தேவியும் சந்தித்து கல்வி பற்றி நிகழ்த்திய உரையாடலின் புத்தக வடிவம்தான் மேற்சொன்ன புத்தகம். சுந்தர ராமசாமி தவிர கவிஞர் மனுஷ்யபுத்திரனும் சில உரையாடல்களில் கலந்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் கல்வித்துறை சந்திக்கும் பிரச்னைகள் பல. அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு முன்னர் அந்தப் பிரச்னைகளை முழுவதுமாக அலசி ஆராய்ந்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தப் புத்தகம் பிரச்னைகளை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள உதவும். உரையாடல்கள் பல மேலோட்டமாக இருந்தன. ஆழமாகச் செல்லவில்லை. பல இடங்களில் உரையாடல்கள் மிகவும் செயற்கையாகவும் இருந்தன. அதாவது பேச்சில் பொதுவாக வராத, எழுத்தில் மட்டுமே வரக்கூடிய சில நீண்டு வளைந்த, புரிந்துகொள்ளக் கடுமையான வாசகங்கள். ஒருவேளை இவை, செறிவு கருதி, பின்னால் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
புத்தகத்தின் அத்தியாயங்கள் இன்னமும் நன்றாகத் தொகுக்கப்பட்டிருக்கலாம்.
புத்தகத்தில் தமிழகக் (கல்லூரிக்) கல்விமுறையில் உள்ள பிரச்னைகள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வசந்தி தேவி கொண்டுவந்திருந்த சில மாற்றங்கள், வசந்தி தேவியின் சொந்தப் பின்னணி ஆகியவை வருகின்றன. அதில் கடைசி இரண்டையும் பற்றி இங்கு நான் எதுவும் சொல்லப்போவதில்லை.
பொதுவாக தமிழகக் கல்வி முறையில் உள்ள குறைபாடுகளைப் பின்வருமாறு சொல்லலாம்:
1. பாடத்திட்டங்கள்: பாடத்திட்டங்கள் படைப்புத் திறமையைத் தூண்டாமல் உருப்போட்டு மதிப்பெண்கள் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறது. பாடத்திட்டம் எங்கோ தயாரிக்கப்பட்டு ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகிறது. கல்லூரிகளிலாவது சில ஆசிரியர்கள் பாடத்திட்டம் தயாரிப்பதில் ஈடுபடுகிறார்கள், ஆனால் பள்ளிகளில் அதுவும் கிடையாது.
2. கற்பித்தல் வழிமுறை: பாடப்புத்தகங்களைக் கூடப் படிப்பது கிடையாது, வழிகாட்டிகள் மூலமாகப் படித்து, எந்தக் கேள்விகள் பரிட்சையில் வராது என்பதை முடிவு செய்து, பரிட்சையில் வரக்கூடிய கேள்விகளாக யூகித்து, அதற்கென மட்டுமே தம்மைத் தயார் செய்து தேர்வில் பாஸ் செய்வது மட்டும்தான் குறிக்கோள் என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களை இந்த வழியில்தான் தயார் செய்கிறார்கள்.
3. ஆசிரியர்களின் தரம்: ஆசிரியர்களை, தரத்தின் பேரில் பணிநீக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. சரியாகப் பாடல் சொல்லித்தராத, பள்ளிக்கூடத்துக்கே வராத ஆசிரியர்களை மாணவர்களோ, அவர்களது பெற்றோர்களோ அலல்து நிர்வாகமோ தட்டிக்கேட்க முடியாத நிலை. பல கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்க அரசியல் தலையீடுகள் நடக்கின்றன. லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
4. மாணவர்களை மதிப்பிடுவது: பொதுவாக, கல்லூரிகளைப் பொறுத்தவரை யாரோ ஒருவர் பாடத்திட்டம் தயாரிக்கிறார், யாரோ பாடம் நடத்துகிறார், யாரோ கேள்வித்தாள் தயாரிக்கிறார், வேறு யாரோ அதை மதிப்பிடுகிறார். ஆனால் ஐஐடி போன்ற இடங்களிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் பாடங்களை நடத்தும் ஆசிரியரே பாடத்திட்டம் தயாரிப்பதிலிருந்து விடைத்தாள்களை மதிப்பிடுவது வரை செய்கிறார். அதுதான் சிறந்த முறையாக இருக்கும். ஆனால் பல மாணவர்களுக்கு இந்த முறையில் ஆசிரியர் மாணவர்களைப் பழிவாங்கிவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது.
அதேபோல பொதுத்தேர்வு முறையிலேயே பல குறைபாடுகள். வினாத்தாள்கள் திருடப்பட்டு வெளியாவது. விடை திருத்துபவரைத் தேடிச்சென்று லஞ்சம் கொடுத்து மதிப்பெண்களை அதிகப்படுத்த முயற்சி செய்வது, ஆசிரியர் உயிரை அச்சுறுத்தி மதிப்பெண்களை அதிகமாகப் போடச்செய்வது. இப்படி பல ஊழல்கள்.
5. உயர் கல்விப் படிப்பில் குறைகள்: எம்.பில், பி.எச்டி போன்ற ஆராய்ச்சிப் படிப்புகள் கேலிக்கூத்தாக உள்ளன. ஏற்கெனவே கல்வித்துறையில் உள்ளவர்கள்தான் இந்தப் படிப்புகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் coursework எதுவும் செய்வதில்லை. ஆராய்ச்சிக் கட்டுரை மட்டும் எழுதி பட்டம் வாங்கிவிடுகின்றனர். பிற நாடுகளில் இப்படி கிடையாது.
6. சுயநிதிக் கல்லூரிகள்: சுயநிதிக் கல்லூரிகள் எக்கச்சக்கமாக நிதி வசூலிக்கின்றன. மாணவர்களுக்கு சரியான வசதிகளைச் செய்து தருவதில்லை. ஆசிரியர்களுக்கு சரியாக சம்பளம் தருவதில்லை. தன்னிஷ்டத்துக்கு பல்கலைக்கழகங்களிடம் அனுமதி பெறாமலேயே பலமுறை பாடத்திட்டங்களை அறிவிக்கின்றனர். மாணவர் எண்ணிக்கைகளை முன்னனுமதி இன்றி அதிகரிக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழகங்களால் இவர்களை முழுவதுமாகக் கண்காணிக்க முடிவதில்லை. இவர்கள் பொதுவாகவே எந்தப் பாடத்திட்டத்தையும் பட்டத்தையும் கொடுத்தால் மாணவர்கள் வருவார்கள் என்று பார்த்து அதை மட்டும் தருகின்றனர். ஆனால் அரசுக் கல்லூரிகள் தமது பாடத்திட்டங்களை மாற்றாமல் பழைய, எதற்கும் உதவாத பாடங்களையே வைத்துக்கொண்டிருக்கின்றனர்.
7. ஆங்கில வழிக் கல்வி: மாணவர்களுக்கு ஆங்கிலம் புரிவதில்லை. ஆனாலும் பெற்றோர்கள் எல்.கே.ஜி முதற்கொண்டே ஆங்கிலம்தான் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் மாணவர்களுக்கு இன்றைய நிலையில் ஆங்கிலத்திலும் பேசத் தெரிவதில்லை, தமிழும் தகராறு! சில பாடங்கள் தமிழில் படித்தால் நன்றாக விளங்கும், ஆனால் வேலை கிடைக்காது என்று பயம் இருக்கிறது.
8. மாணவர் பிரச்னைகள்: படிப்பைத் தவிர பல்வேறு பிரச்னைகள். இருபாலரும் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளில் காதல் விவகாரங்கள். மாணவிகள் தம் பெற்றோர், உற்றாருடன் சண்டை போட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வருவது. ஈவ்-டீஸிங். இன்ன பல பிரச்னைகள். இதற்கெல்லாம் கவுன்செலிங் தேவை. மாணவர்களை முழுமையானவர்களாக்க படிப்பைத் தவிர பிறவும் அவசியம். முக்கியமாக விளையாட்டு. மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வருமாறு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பது அவசியம்.
9. அஞ்சல் வழிக் கல்வி: அஞ்சல் வழியாகப் படிப்பவர்கள் தரும் பணத்தில்தான் பல பல்கலைக்கழகங்கள் நடக்கின்றன. அரசு கொடுக்கும் நிதி மிகக் குறைவு. தமிழக அரசு பல்கலைக் கழகங்களுக்கென ஒதுக்கும் மொத்த நிதி அளவுக்கு பிற மாநிலங்களில் ஒரு பல்கலைக்கழகத்துக்கே கொடுக்கிறார்கள். அஞ்சல் வழிக் கல்வியின் தரம் மோசமாகத்தான் இருக்கிறது.
10. இட ஒதுக்கீடு: இட ஒதுக்கீடு அவசியம். ஆனால் இதன் பயன் பரவலாகப் போய்ச்சேரவில்லை. பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு 50% என்பது இப்பொழுது இரண்டாகப் பிரிக்கப்பட்டு 20% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குச் சென்றுள்ளது. ஆனால் இப்பொழுதும் எல்லாத் தரப்பினருக்கும் போய்ச்சேரவில்லை. இதைப் பிரித்துக்கொண்டே போகவும் முடியாது. உச்ச நீதிமன்றம் creamy layer என்றெல்லாம் சொன்னது. ஆனால் நடைமுறைப்படுத்த முடியாத நிலை.
இது ஒருபுறமிருக்க பல தனியார் கல்லூரிகளில் ஜாதி சார்ந்துதான் ஆளெடுக்கிறார்கள். பல இடங்களில் தலித் மாணவர்கள் தள்ளி, தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள். பிற மாணவர்களுடன் கலப்பதில்லை.
======
இந்தப் பிரச்னைகளுக்கு பெரிய தீர்வுகளாக எதுவும் சொல்லப்படவில்லை. வசந்தி தேவி தன் ஆறாண்டுப் பணியின்போது சிலவற்றை முயற்சி செய்துள்ளார். ஆனால் இதுபோன்ற சிறு முயற்சிகள் போதாது என்றே நினைக்கிறேன். இந்தப் பிரச்னைகளின் ஆதாரங்களை கவனமாகப் பார்க்க வேண்டும். இதுபற்றி அதிகமாக விவாதிக்க வேண்டும். இந்த விவாதங்களிலிருந்து சில வழிமுறைகள் நமக்குக் கிடைக்கலாம்.
======
இன்று SRM School of Business கல்லூரிக்குச் சென்றிருந்தேன். முதலாமாண்டு MBA மாணவர்கள் செய்துள்ள புராஜெக்ட்களுக்கு நடுவராக. மேலே உள்ள பல பிரச்னைகள் பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதுபற்றி நாளை எழுதுகிறேன். நாளை ஐஐடி மெட்ராஸ் MBA மாணவர்களுடன் கலந்துரையாட இருக்கிறேன். இந்த அனுபவம் நிச்சயம் இன்றுபோல மோசமாக இருக்காது என்றே நினைக்கிறேன். இதுபற்றியும் நாளைக்கு.
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
18 hours ago
திண்ணையில் இது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. முடிந்தால் இணைப்பு தருகிறேன். மிகவும் அவசியமான கட்டுரையாய் வாசித்தபோது நினைத்தேன்.
ReplyDelete1-லிருந்து 10-வரை விவரமாக அலசியிருக்கிறீர்கள்.
ReplyDelete//பொதுவாக தமிழகக் கல்வி முறையில் உள்ள குறைபாடுகளைப் பின்வருமாறு சொல்லலாம்:// என்பது குழப்புகிறது. கட்டுரையின் தொனியையும், மேல் சொன்ன வாசகத்தையும் வைத்துப்பார்த்தால் இந்தப் பத்துக் குறிப்புகளும் உங்கள் கருத்துபோல தெரிகிறது. அப்படியா?
வினாக்களும், பிரச்னைகளும் தெளிவாகவே இருக்கின்றன. விடைதான் என்னவென்று நம்பிக்கையிழக்கும்வண்ணம் நிலைமை உள்ளது.
கிடைத்துவிட்டது : சுராவின் இந்தப்புத்த்கம் பற்றிய முன்னுரை :
ReplyDeletehttp://www.thinnai.com/pl0113026.html
காசி: இந்த சமாச்சாரமெல்லாம் அந்தப் புத்தகத்துலிருந்துத்தான் எடுத்தது. ஆனால் இந்த வரிசையில் அந்தப் புத்தகத்தில் எழுதப்படவில்லை. இங்க்லும் அங்குமாக rammbling conversation. அதை சற்றே கோர்த்து எழுதியிருக்கிறேன்.
ReplyDeleteபுத்தகத்தில் இன்னமும் விவரமான அலசல்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வசந்தி தேவி சில பிரச்னைகளைக் கையாண்டது பற்றியும் இருக்கும்.
you can read the works of krishna kumar.one monograph by him is available in tracts of the times series.and both seminar,and epw have published many articles on issues in education.but i wonder whether sundara ramasamy has read them.
ReplyDeleteபத்ரி: எஸ் ஆர் எம் அனுபவங்களைப்பற்றிய பதிவுக்கு காத்திருக்கிறேன். அது சரி, நீங்கள் எப்படி நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்? இது தகுதியைப்பற்றிய கேள்வி அல்ல, நடைமுறையைப் பற்றியது.
ReplyDeleteஅனைவரும் ஆங்கில மொழியில் படிக்க முயல்வது பற்றியும், அதன் பாதிப்பையும் கூறி உள்ளீர்கள். படிப்பின் கடினத்தினால், பலர் பள்ளிப்படிப்பை விட்டு விட வாய்ப்பு அதிகமாகிறது. எப்படியோ படித்து முடித்தாலும், போட்டியிட முடியவில்லை. Viscious cycle.
Before anyone accept for a programme on review of the books, the first thing they should have confirmed with DD is about the time allotted for that programme.
ReplyDeleteThis is not fair in your part to blame DD for pushing you just because they have run out of time.
SRM/IIT MBA என்ன ஆச்சு பத்ரி,நேரம் கிடைக்கும் போது மறந்துடாம எழுதுங்க.
ReplyDelete..aadhi