Saturday, April 09, 2005

இந்தியாவுக்குப் படு உதை

இரண்டு ஆட்டங்களில் அதிரடியாக ஜெயித்த இந்தியா தோற்றே ஆக வேண்டும் என்பது போலவே மூன்றாம் ஆட்டம் அமைந்திருந்தது. டாஸில் தோல்வி. இன்ஸமாம் இதற்காகவே காத்திருந்தது போலவே முதலில் பேட்டிங் என்றார். தொடர்ந்து பாகிஸ்தானின் பேட்டிங் பொறுப்பான முறையில் அமைந்திருந்தது. ஷாஹீத் ஆஃப்ரீதி சீக்கிரம் அவுட்டானாலும் சல்மான் பட், ஷோயப் மாலிக் இருவரும் பொறுப்பாக ஆடினர்.

சல்மான் பட் சதமடித்தார். மாலிக் 75 ரன்கள். இரண்டாம் விக்கெட்டுக்காக இருவரும் சேர்த்த 145 ரன்கள் மிக முக்கியமானவை. தொடர்ந்து யூசுஃப் யோஹானா 31 பந்துகளில் 43 ரன்கள் பெற்றார். ஐம்பது ஓவர்களில் 319 ரன்கள் கிடைத்தன. இந்த நிலையிலேயே இந்தியா ஆட்டத்தைத் தோற்றுவிட்டது.

இந்திய அணி மிகவும் மெதுவாகவே ஓவர்களை வீசியது. இந்தியா ஐம்பது ஓவர்கள் போட்டு முடிக்கும்போது மணி கிட்டத்தட்ட மதியம் 1.00 ஆகியிருந்தது. ஆனால் அடுத்த இன்னிங்ஸ் 1.15க்கே ஆரம்பிக்க வேண்டிய நிலை. பந்துவீச்சில் நேஹ்ரா ஒருவர்தான் நன்றாக வீசினார். இர்ஃபான் பதான் இரண்டு நெஞ்சளவு ஃபுல் டாஸ்களை வீசியதால், நடுவர் ஹரிஹரன் அவர் மேற்கொண்டு பந்து வீசத் தடை விதித்தார்.

ஹரிஹரன் அவசரக்குடுக்கை நடுவராக இருக்கிறார். இரண்டு முறை அவசரப்பட்டு சிக்ஸ் என்று சமிக்ஞை கொடுத்தார். ஆனால் பின் மூன்றாவது நடுவரிடம் பேசி அது நான்கு என்று தீர்மானமானதும் தன் தீர்ப்பை மாற்ற வேண்டிய நிலை.

மதியம் இந்தியா பேட்டிங்கில் சோபிக்க வேண்டுமானால் இருவராவது சதமடிக்க வேண்டும் என்றிருந்தது. சேவாக் வரிசையாக இரண்டு ஆட்டத்திலும் நல்ல ரன்கள் பெற்றதால் இங்கு தோல்வியுற வேண்டும் என்று குறளி சொல்லியது. அதைப்போலவே ஒரு பந்தை ஸ்கொயர் கட் செய்யப்போய் ஆஃப்ரிதியிடம் பாயிண்டில் கேட்ச் கொடுத்தார். டெண்டுல்கரையும், கங்குலியையும் பீடித்திருக்கும் வைரஸ் அவர்களைக் கொள்ளை கொண்டது. இருவரும் இரண்டாவது ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் சொல்லிக்கொள்ளுமாறு ரன்கள் பெறவில்லை. தோனி, திராவிட் இருவரும் சற்றே சரிவை நிறுத்தி நன்றாக விளையாடினார். ஆனால் இருவருமே எதிர்பாராது எழும்பும் பந்துகளில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இருவரும் தலா 28 ரன்கள் பெற்றனர்.

யுவராஜ் சிங்கும் அதிகம் ரன்கள் பெறாமல் ஆட்டமிழந்தார். காயிஃப், இர்ஃபான் பதான் இருவரும் சற்றாவது மானத்தைக் காத்தனர். பதான் பொறுமையாக ஆடினார். அவ்வப்போது இறங்கி வந்து சிக்ஸ் அடித்தார். இவர் ஒருவர்தான் அரை சதத்தைத் தாண்டினார். காயிஃப் கனேரியாவை கட் செய்து பாயிண்டில் கேட்ச் கொடுத்தார். பதான் ஸ்வீப் செய்யப்போய் மட்டையின் பின்பக்கத்தில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் வேகமாக பிற விக்கெட்டுகள் விழுந்தன. பாகிஸ்தான் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நவீத்-உல்-ஹஸன் மிக நன்றாகப் பந்து வீசினார். மொத்தமாக ஆறு விக்கெட்டுகளைப் பெற்றார். இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவுக்கு ஆதரவு கொடுத்தது. பந்துகள் சற்றே எழும்பி வந்தன. ஆனால் இந்திய மட்டை வீரர்களை மட்டும்தான் குற்றம் சொல்லவேண்டும். இப்பொழுதைக்கு முதல் ஏழு வீரர்களில் இருவர் நம்புதற்குரியனராக இல்லை. சேவாக் இரண்டில் ரன்கள் பெற்றால் ஒன்றிலாவது ஏமாற்றுவார். தோனி புதியவர்; அவர்மீது மிக அதிக நம்பிக்கை வைத்தல் தவறு. யுவராஜ், காயிஃப் இருவரும் இன்றைய ஆட்டத்தில் பெருத்த ஏமாற்றத்தை அளித்தனர்.

பிஹாரிலிருந்து பிரிந்தாலும் ஜார்க்கண்ட் மக்கள் நாகரிகத்திலிருந்து தள்ளியே இருக்கிறார்கள். ராஞ்சியில் பாகிஸ்தான் அணி செல்லும் பஸ் மீது கல்லெறிந்து கண்ணாடியை உடைத்திருக்கிறார்கள். கண்ணாடி அருகில் உட்கார்ந்திருந்த இன்ஸமாம் அதிர்ந்து போயிருக்கிறார். இன்று ஆட்டத்தில் சிறிய தடங்கல். மற்றுமொரு முட்டாள், இந்தியா தோற்பது உறுதி என்று தெரிந்ததும், பாகிஸ்தான் பந்து தடுப்பாளர்கள் மீது டீ குடிக்கும் மண் சட்டியை விட்டெறிந்தார். நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் சென்றிருந்தபோது இதுபோன்று ஏதேனும் நடந்ததா என்று இந்தியர்கள் தம்மைக் கேட்கவேண்டும்.

கொச்சியிலும், விசாகப்பட்டினத்திலும் பாகிஸ்தான் போராடிய அளவு இந்தியா இந்த ஆட்டத்தில் போராடவில்லை. காலையில் டாஸில் தோற்றவுடனேயே தோல்வி மனப்பான்மை பற்றிக்கொண்டது. இனி வரும் ஆட்டங்களில் இந்தியா டாஸில் தோற்றால் வெல்வதற்கு முயற்சி கூடச் செய்யாது என்று தோன்றுகிறது.

கங்குலி இனியும் 'எனக்குத் தேவை அதிர்ஷ்டம்' என்றெல்லாம் புருடா விட்டு, தன்னைத்தானே நம்ப வைத்துக்கொள்தல் கூடாது. அத்துடன் டெண்டுல்கரும் சற்று தன் ஆட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். தினேஷ் மோங்கியாவுக்கு ஓர் ஆட்டமாவது தர வேண்டும். ஆனால் யாருக்கு பதில்? இன்றைய ஆட்டத்தைப் பார்க்கும்போது யுவராஜ் சிங்கைத்தான் சற்று வெளியே தள்ள வேண்டியிருக்கும். டெண்டுல்கரும், கங்குலியும் பழம்பெருமையில் இன்னமும் இரண்டு ஆட்டங்களில் தொடர்வார்கள்.

1 comment:

  1. Wow...Those last lines were very harsh(especially to Tendulkar's fame) :). I already guessed it in one of your match report, that Tendulkar should get back to his best to counter the better teams. Scoring against Bangladesh is not an achievement.

    For Ganguly?...You suggested, Yuvraj could be out of the team for Dinesh Mongia, well, in my opinion, based on the current form, Ganguly is the one who qualified for that.

    ReplyDelete