போனி எம் பாடலைக் கேட்டிருப்பிர்கள்.
RA RA RASPUTIN
Russia's greatest love machine
நேற்று இரவு HBO-வில் 'ரஸ்புடின்' என்ற திரைப்படம் காண்பிக்கப்பட்டது. கிரிகொரி யெஃபிமோவிச் ரஸ்புடின் என்னும் தேசாந்திரி ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் சுற்றிவிட்டு ரஷ்யாவில் ட்ஸார் மன்னர் நிகோலாய் 2 அரண்மனைக்கு வந்து சேர்கிறார். நிகோலாய் 2 வின் மனைவி அலெக்சாண்டிரா, மகன் சிறுவன் அலெக்ஸி.
ரஸ்புடின் தன்னை கடவுளின் தூதனாக, அவ்வப்போது எதிர்காலத்தைக் காண்பவனாக முன்னிறுத்துகிறார். சிறுவன் அலெக்ஸிக்கு 'ஃபாதர் கிரிகொரி'யைப் பிடித்துப் போகிறது. அலெக்ஸிக்கு ஹீமோஃபீலியா என்ற நோய். இரத்த நாளங்கள் வெடித்து, இரத்தம் உறையாமல் அவ்வப்போது கொட்டும். ஃபாதர் கிரிகொரி தன்னைக் காப்பாற்றுவார் என்று அவனுக்கு நம்பிக்கை. அதனால் அலெக்ஸியின் தாய் அலெக்சாண்டிராவுக்கும் ரஸ்புடின் மீது நம்பிக்கை.
ரஸ்புடின் வித்தியாசமான மனிதர். மணமானவர். செக்ஸ் தொழிலாளர்கள் உள்பட, பல பெண்களுடன் உறவு வைத்திருப்பவர். ரஷ்யாவிலேயே மிக நீளமான ஆண்குறியை உடையவர் என்ற 'பெருமை'யையும் உடையவர். ஒரு காட்சியில் குடித்துவிட்டு அசிங்கமாக ஏதோ பேசுகிறார். ட்ஸாரினாவுடனும் தான் உறவு வைத்திருப்பதாக ஏதோ சொல்கிறார். அவரை எதிர்கொள்வோர்களின் வாயை அடைக்க, தனது உடையைக் கழற்றி, சுற்றி இருப்போர் ஆச்சரியப்படும் வகையில் தனது குறியைக் காண்பிக்கிறார்.
ரஷ்ய பிரபுக்குடும்பங்கள் பலவற்றிலும் உள்ள பெண்களுடன் உறவு கொள்கிறார். அவரது மத வழியைப் பின்பற்ற பல பெண்கள் (மட்டும்) அவருடன் சேர்கின்றனர். ரஸ்புடினின் சித்தாந்தம் என்னவென்றால் ஒருவர் பாவத்தைச் செய்வதன் மூலமும், பின் அதற்காக மன்னிப்புக் கோருவதன் மூலமுமே கடவுளை அடைய முடியும் என்பது.
ட்ஸாரின் ரகசிய போலீஸ் ரஸ்புடினின் நடத்தையைக் கண்காணித்து ட்ஸாரிடம் போட்டுக்கொடுக்கிறது. இதனால் ட்ஸார் ரஸ்புடினை நாடுகடத்தி சைபீரியா அனுப்புகிறார். ஆனால் சிறுவன் அலெக்ஸிக்கு ஒருநாள் நோய் முற்றிப்போக, அவன் ஃபாதர் கிரிகொரி வேண்டும் என்று அழ, தொலைபேசி மூலம் ட்ஸாரினா ரஸ்புடினைத் தொடர்பு கொள்ள, தொலைபேசி மூலமாகவே சிறுவனிடம் பேசி அவனுக்குத் தற்காலிகமாக நிம்மதியைத் தருகிறார் ரஸ்புடின்.
இதற்கிடையில் செர்பியன் ஒருவர் ஆஸ்திரிய இளவரசனைக் கொல்ல, முதலாம் உலகப்போர் மூள்வதற்கான நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. செர்பியாவும் ரஷ்யாவும் நண்பர்கள். ஆஸ்திரியாவும் ஜெர்மனியும் நண்பர்கள். செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுக்க, ரஷ்யா செர்பியாவுக்கு வேறு வழியின்றி உதவி செய்யப்போக, ஜெர்மனி ரஷ்யா மீது படையெடுக்க, பின் இங்கிலாந்து, பிரான்சு என்று அனைவரும் கோதாவில் இறங்க, முதலாம் உலகப்போர் ஆரம்பம். ரஷ்யாவிலோ மக்கள் உணவுப் பற்றாக்குறையில் வாடுகிறார்கள். போல்ஷ்வீக் புரட்சிக்கான வித்தும் இடப்படுகிறது. ட்ஸார் நிகோலாய் 2 போர் நடக்கும் முன்னணிக்குச் செல்கிறார். அந்த நேரத்தில் ட்ஸாரினா ஆட்சி நடத்த, ரஸ்புடின் தன் ஆள்களை உள்ளே கொண்டுவருகிறார். போல்ஷ்வீக்குகள் போஸ்டர் அடித்து எப்படி ரஷ்யா ரஸ்புடின் கையில் சிக்கித் தவிக்கிறது என்று பிரசாரம் செய்கின்றனர்.
ட்ஸாரினாவின் உறவினரும் வேறு சில பீட்டர்ஸ்பர்க் பெரிய ஆசாமிகளும் ரஸ்புடினைக் கொல்லத் தீர்மானிக்கின்றனர். அவரை யுசுபோவ் என்பவர் தன் வீட்டுக்கு வரவழைத்து உணவிலும், மதுவிலும் பொடாஷியம் சயனைடைக் கலந்து கொடுக்கிறார். அதையெல்லாம் சாப்பிட்ட ரஸ்புடின் இறப்பதில்லை. தொடர்ந்து அவரைத் துப்பாக்கியால் சுட்டு இழுத்துக்கொண்டு போய் தண்ணீரில் வீசி எறிகின்றனர். தான் இறப்பதற்கு முன் ட்ஸாரினாவுக்குக் கடிதம் எழுதிய ரஸ்புடின், தான் ட்ஸாரினாவின் உறவினர்களால் கொல்லப்பட்டால் அதன் விளைவாக ட்ஸார் குடும்பமே அழிந்துபோகும் என்று சொல்லியிருக்கிறார்.
அது உண்மையாகிறது. ரஸ்புடினின் இறப்புக்கு மூன்று மாதங்களுக்குள் போல்ஷ்வீக் புரட்சியில் காம்ரேடுகள் ரஷ்யாவில் கம்யூனிச ஆட்சியைக் கொண்டுவருகிறார்கள். இரண்டு வருடங்களுக்குள் நிகோலாய் 2, அலெக்ஸாண்டிரா, மற்ற பிறர் அனைவரும் கொல்லப்படுகின்றனர்.
சுவாரசியமான படம். நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் ரஸ்புடினைப் பற்றிக் குறைவாகவே தெரிந்துகொள்ள முடிந்தது. இந்தப் படம் பற்றிய பிற விவரங்களை அறிந்து கொள்ள IMDBஐ அணுகவும். ரஸ்புடினைப் பற்றிய விவரங்களுக்கு விக்கிபீடியா.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
11 hours ago
ரஸ்புடின் வச்சி நிறைய படம் வந்திருக்கு போலியே. நான் பார்த்தது 1966-ல் கிரிஸ்டோபர் லீ நடித்த Rasputin: The Mad Monk (1966). ரஸ்புடின் இன்றளவும் அமானுஷ்ய சக்தி நிறைந்த விளங்காத புதிராகவே இருந்து வருகிறார். நான் சொன்ன படத்தை பற்றி பார்க்க...
ReplyDeleteஅந்த படத்திலும் ரஸ்புடின் பற்றிய செய்திகள் அவ்வளவாக சொல்லப்படவில்லை. வெறும் மாயஜால ஹீரோவாக தான் வர்ணிக்கப்பட்டிருந்தார்.
ராஸ்புடீன் மரணத்தை ரிச்சர்ட் ஆர்மர் என்னும் நகைச்சுவை எழுத்தாளர் தன்னுடைய ஒரு புத்தகத்தில் இவ்வாறு வர்ணிக்கிறார்.
ReplyDelete"அவனுக்கு விஷமளித்தனர், அவன் இறக்கவில்லை. அவனைச் சுட்டனர், அவன் இறக்கவில்லை. அவனைக் கத்தியால் குத்தினர் அவன் இறக்கவில்லை. அவனை நதியில் மூழ்கடித்தனர், அப்போது இறந்துப் போனான். ஏனெனில் அப்போதுதான் தன்னை யாரும் விரும்பவில்லை என்று அவனுக்கு உறைத்தது!" (And then he died, suddenly aware of his unpopularity).1
அன்புடன்,
டோண்டு ராகவன்