Sunday, April 24, 2005

"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்"

நேற்று நானும் சத்யாவும் க்ரியா ராமக்ரிஷ்ணனைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம்.

ராமகிருஷ்ணன் தமிழ்ப் பதிப்புலகின் தரத்தை மிகவும் உயர்த்தியவர். அதில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பவர். க்ரியா தற்காலத் தமிழகராதி என்னும் மிகச்சிறந்த தமிழ் அகராதியை வெளியிட்டிருப்பவர். மொழி அறக்கட்டளை மூலம் தமிழ் நடைக் கையேடு, தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி (இரண்டும், இப்பொழுது அடையாளம் பதிப்பாக வெளிவருகிறது) ஆகியவற்றை உருவாக்கியதில் பங்குவகித்தவர். ராமகிருஷ்ணன் 1974-ல் க்ரியா பதிப்பகத்தைத் தொடங்கினார். கடந்த முப்பது வருடங்களில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தரத்தால் மிகச்சிறந்த புத்தகங்களைத் தமிழுக்குக் கொடுத்திருக்கிறார்.

க்ரியா தற்காலத் தமிழகராதி விரைவில் ஆறாவது பதிப்பாக வெளிவரவிருக்கிறது.

ஓர் அகராதியை உருவாக்கும்போது சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இல்லையென்றால், அவற்றை அவர்களே உருவாக்குவார்கள் என்று நான் தவறாக நினைத்திருந்தேன். ராமகிருஷ்ணன் அவ்வாறில்லை என்று விளக்கினார். "அகராதியின் நோக்கம் புதிய சொற்களை உருவாக்குவதல்ல. ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும், புழக்கத்தில் இருக்கும் சொற்களுக்கு அங்கீகாரம் வழங்குவது. அந்தச் சொற்களின் பல்வேறு பொருள்கள் என்ன என்பதை விளக்குவது. சொற்களை எப்படிப் பல்வேறு வட்டாரங்களில், துறைகளில் பல்வேறு பொருள்களில் கையாள்கிறார்கள் என்று விளக்குவது. இலக்கண முறைப்படி ஒரு சொல்லை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைச் சொல்வது." என்றார்.

அதே சமயம் பல்வேறு காரணங்களுக்காக ராமகிருஷ்ணன் புதுச் சொற்களையும் உருவாக்கியுள்ளார். "Condom என்பதற்கு ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்" என்கிறார் ராமகிருஷ்ணன். சில நாள்களுக்கு முன்னர், முன்னாள் இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் எஸ்.ரமேஷ் நடத்திய ஜெயா டிவி கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். கொளுத்தும் வெய்யிலில் கொச்சி, விஷாகப்பட்டிணம், ஜாம்ஷெட்பூர் என்று இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் dehydration-ஆல் பாதிக்கப்பட்டார்கள். Cramps வந்தது. Rehydration தேவைப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியில் என்னுடன் கலந்துகொண்ட மற்றொருவர் physical trainer. அவர் மாறி மாறி dehydration, rehydration என்று பேசிக்கொண்டிருந்தார். எத்தனை பேருக்கு அது புரிந்திருக்கும் என்று அன்றே யோசித்தேன். சரியான தமிழ்ச்சொல் எனக்கு அன்று கிடைக்கவில்லை.

ராமகிருஷ்ணன் "Where There is no Doctor - A Village Health Care Handbook" என்னும் அற்புதமானதொரு புத்தகத்தினை க்ரியா மூலமாகத் தமிழில் "மருத்துவர் இல்லாத இடத்தில்" என்ற பெயரில் கொண்டுவந்திருந்தார். அந்த நேரத்தில் மருத்துவம் தொடர்பான பல சொற்களை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது என்றார். Dehydration என்ற சொல்லுக்கு இணையாக "நீரிழப்பு" என்ற சொல்லை அறிமுகப்படுத்தியதாகச் சொன்னார். எளிமையான, அழகான சொல். இனி இந்தச் சொல்லை நிறையப் பயன்படுத்துவேன். அதேபோல rehydration என்ற சொல்லுக்கு "நீரூட்டம்" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார். (இப்பொழுது இந்தப் புத்தகத்தின் அண்மைப் பதிப்பு க்ரியாவால் வெளியிடப்படுவதில்லையாம்.)

-----

எப்பொழுதெல்லாம் கணினித் துறையில் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தேவைப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் முனைவர் இராம.கியை அணுகுவது வழக்கம். வெங்கட்டும் பல இணையான தமிழ்ச்சொற்களை ஏற்படுத்திக் கையாண்டு வருகிறார்.

பலரும் புதிதாகத் தமிழ்ச்சொற்களைக் கண்டுபிடிப்பவர்களைக் கேவலமாகப் பார்க்கிறார்கள். சோ ராமசாமி முதல் இணையத்தில் நேற்று முளைத்தவர்கள் வரை கேலியும், கிண்டலும் எக்கச்சக்கம். இராம.கி கடற்கரைக் கூட்டத்தின்போது எவ்வாறு பேருந்து என்ற சொல் இன்று அனைவரும் அறியக்கூடியதாக உள்ளது என்று விளக்கினார். பேருந்து நிலையம் என்றுதான் இன்று எங்கும் எழுதப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பஸ் ஸ்டாண்ட் என்றாலும் பேருந்து நிலையம் என்றாலும் என்ன என்பதை அறிந்துகொண்டிருக்கின்றனர். இயல்பியல் (இன்றி இயற்பியல் என்று வழங்கப்படுகிறது) என்ற சொல்லை 1970களில்(?) உருவாக்கியதும் தான்தான் என்று இராம.கி. சொன்னார். அதுவரையில் பவுதீகம் என்ற சொல்லே இருந்து வந்தது. ஆனால் இன்று தானே இயல்பியல் என்ற சொல்லை விரும்புவதில்லை என்றார். வேறொரு சொல்லைக் குறிப்பிட்டார் ஆனால் நான் அதை என் மனதில் சரியாக வாங்கிக்கொள்ளவில்லை. (பருண்மவியல்?)

முன்னர் ஒருமுறை முன்னாள் நிதியமைச்சர் நெடுஞ்செழியன் ஏதோ ஓர் இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் வேட்பாளர் என்ற சொல் எப்படி வந்தது என்று விளக்கியிருந்தார். அப்பொழுதெல்லாம் 'அபேட்சகர்' என்ற சொல்தான் புழக்கத்தில் இருந்தது. அண்ணாதுரை 'வேட்பாளர்' என்ற சொல்லை முன்வைத்தபோது பலரும் - முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் - அதை எதிர்த்தனர். 'வேட்குனர்' போன்ற சொற்களெல்லாம் முன்வைக்கப்பட்டன. கடைசியில் வேட்பாளர் என்ற சொல்தான் இன்று நிற்கிறது. (ஆம், கேண்டிடேட் என்ற தமிழ்ச்சொல்லும் கூடவே உள்ளது:-)

பாரதியார் எவ்வாறு member என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான சொல்லைத் தட்டுத் தடுமாறி உருவாக்க முயற்சி செய்தார் என்று ஒருமுறை எழுதியிருக்கிறேன். இப்பொழுது சட்டெனச் சுட்டி கிடைக்கவில்லை. என்னென்னவோ முயற்சிகளுக்குப் பிறகு அங்கத்தார் என்றுவரை வந்து, பின் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார். இன்று அங்கத்தினர், உறுப்பினர் என்ற இரண்டு சொற்களுமே புழங்குகிறது.

தினமலர் கம்ப்யூட்டர் மலரில் எப்பொழுதுமே அந்நியமான ஆங்கிலச் சொற்களை மட்டுமே கையாண்டு வந்தனர். இணையத்தில் நாம் அனைவரும் மருத்துவர் ஜெயபாரதி கண்டுபிடித்த சொல்லான "இணையம்", அதலிருந்து "இணையத்தளம்" என்பதைப் புழங்க, தமிழ் இதழ்கள் பலவும் இண்டெர்நெட், வெப்சைட் என்று பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று தமிழ் நாளிதழ்கள் அனைத்துமே இணையம் என்பதை ஏற்றுக்கொண்டு விட்டன. ஆனால் முழுமையாக இல்லை. இண்டெர்நெட்டும் இருக்கும், இணையமும் இருக்கும். வெப்சைட்டும் இருக்கும், இணையதளம் (அ) இணையத்தளமும் இருக்கும். கணினியும் இருக்கும், கம்ப்யூட்டரும் இருக்கும். நாளடைவில் ஆங்கிலச் சொற்கள் மறைந்துபோகும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. உதாரணத்துக்கு இன்றைய தினமலரைப் பாருங்கள். இணையம், இணையத்தளம், கணினி, மென்பொருள், எழுத்து வடிவம், கணினியில் உள்ளீடு செய்தல், கணினி வழி அச்சுக்கோர்ப்பு, விசைப்பலகை என்ற சொற்கள் சர்வசாதாரணமாகப் புழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதே கட்டுரையில் கம்ப்யூட்டர், ஃபாண்ட், "இண்டெர்நெட் எனப்படும் இணையம்", "கீ-லே-அவுட்" என்றும் உள்ளது.

தமிழ்ச்சொற்கள் புழங்க ஆரம்பித்திருப்பதே மிகவும் ஆரோக்கியமான செயல்.

நான் எனது வலைப்பதிவில் ஆரம்பத்தில் இணையதளம் என்றே எழுதிவந்தேன், பின்னர் இணையத்தளம் என்று 'த்'த ஆரம்பித்தேன். அது தினத்தந்தியைப் பார்த்துக் கற்றுக்கொண்டது. பா.ராகவனிடம் தினத்தந்தியில் 'த்'துகிறார்கள், பிறர் (தினமலரில்) 'த்'தவில்லை. எது சரி என்று கேட்டேன். தமிழைச் சரியாக எழுதத் தெரிந்தவர்கள் தினத்தந்தி, அதனால் தினத்தந்தியில் சொல்லியிருந்தால் அதுதான் சரி என்றார். அன்றுமுதல் 'இணையத்தளம்'தான்.

வலைப்பதிவா, வலைப்பூவா, வலைக்குறிப்பா என்பது பற்றி சில விவாதங்கள் இருந்தது. அதேபோல மென்பொருள், மென்கலன், சொவ்வறை ஆகியவற்றுக்கும் சில விவாதங்கள் நடைபெற்றன. குறுவட்டு, குறுந்தட்டு, குறுந்தகடு - இதுவும் அப்படியே. ஆனால் இந்த விவாதங்கள் முழுமையாக நடைபெறாததற்குக் காரணம் தேவையான அளவு தமிழ் மொழியியல் அறிவுடையவர், ஆர்வமுடையவர் இப்பொழுதைக்கு இணையத்தில் மிகக்குறைவு என்பதுதான். வலைப்பதிவு, மென்பொருள், குறுந்தட்டு ஆகிய சொற்களையே நான் புழங்குகிறேன். ஏன் என்று கேட்டால் எனக்குச் சரியான பதில் சொல்லத் தெரியாது. ஆனாலும் ஓசையில் எனக்கு இவைதான் பிடித்துள்ளன. நான் அச்சு இதழ்களில் எழுதும் கட்டுரைகளிலும், தொலைக்காட்சியில் பேசும்போதும் இவற்றையே பயன்படுத்துகிறேன்.

இவற்றுள் ஏதோ ஒன்று ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்படும்போது, க்ரியா அகராதியில் போய்ச்சேரும். அப்பொழுது அந்தச் சொல்லுக்கும் அங்கீகாரம் கிடைத்துவிடும்!

[பி.கு: முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு எந்தத் தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது, தமிழ்ப் பத்திரிகை தர்மப்படி இதுதான் மனதில் தோன்றியது, மன்னிக்கவும்:-)]

23 comments:

 1. இன்றைக்கும் மலையாள,தெலுகு மற்றும் கன்னட செய்திகளில் நமஸ்காரம் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள், தமிழ் செய்திகளில் மட்டும் தான் வணக்கம் என்று கூறுகின்றனர், இது ஒரு நல்ல உதாரணம்

  ReplyDelete
 2. "மருத்துவர் இல்லாத இடத்தில்" படித்திருக்கிறேன். அதன் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கதுதான்.

  என்னுடைய இளங்கலை-அறிவியல் சான்றிதழில் இயற்பியலுக்கு பூதவியல் என்று எழுதியிருப்பார்கள். கொடுமை.

  அப்புறம் சென்ற வருடம் ஒரு புத்தகம் பிளாஸ்டிகைப்பற்றி, அதில் பிளாஸ்டிக்கை 'நெகிழி' என்று குறிப்பிட்டிருந்தார். புத்தகத்தின் பெயரும் அதுதான் என்று நினைக்கிறேன். நெகிழி சரியான சொல்லாகப் பட்டது.

  நன்றிகள்!

  ReplyDelete
 3. Badri

  This is a good posting dealing with using/coining Tamil words for English words particularly in the context of computer age.

  I am also very glad that you have met Cre-A Ramakrishnan. In fact when we met with you at Nithiyanandan's house in London, you expressed your views/vision on publication and that impressed us. Nithi and I really wished that you should meet with Cre-A, for, we thought, both together might take Tamil publishing to new direction and dimension. In a way, I
  consider this (meeting with Cre-A) as a starting point.

  I have been in touch with Cre-A & Ram since their first (3) books launched in 1974 and I am impressed and inspired by Cre-A ever since.

  Where there is no doctor is a good book and this came out at a time when our liberation struggle was in its early phase and naturally this book was a boon for 'poraalikal' who were mostly behind jungles and as the title of the book aptly named, they are unlikely to have access to doctors.

  Thatkaala Tamil Akarathi and History of Tamil dictionaries are really great works of Cre-A and I felt that these books should be supported and also that it should find way into all Tamil homes, I got down twenty copies of each of these books and several other Cre-A books 2/3 years back and distributed in London.Incidently, Nithi too was associated with Cre-A in the preparation of the Thatkaala Tamil akarathi.

  As for use of Tamil words, unlike in Tamil Nadu, Tamil newspapers in Sri Lanka and in Europe tend to use Tamil words for Technical and Scientific words as far as possible.

  With the internal war, newspapers, Radios, TVs have developed a high level of expression in Tamil of war related reports while readability too is good.

  Finally, with the introduction of Swabhasa medium (Sinhala and Tamil as medium of instruction) the Educational Publication Dept. in Sri Lanka have had developed Sinhala and Tamil glossaries for each and every subject taught and schools and Universities which are praiseworthy. While some of the words may need revison, most of them are really good.

  ReplyDelete
 4. போனால் போகிறது :-). இந்த முறை மன்னித்து விடலாம்! தமிழ்ப் பத்திரிக்கை தர்மத்தை எல்லாம் விடுங்கள். மற்றபடி நல்ல பதிவு.

  முயல்பவர்கள் முயற்சி செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் தமிழில் புதுச்சொற்கள் புழக்கத்திற்கு வரும். வலைப்பதிவு ஆரம்பித்த காலத்துக்கு முன் தெரியாத வார்த்தைகள் சிலவற்றை இப்போது சரளமாகப் பாவிக்கின்றேன் - காட்டாக: தரவுதளம், இற்றைப் படுத்தல், மட்டுறுத்தர்.

  இயற்பியலுக்கு இராம.கி பூதியல் என்று குறிப்பிட்டார் என்று எண்ணுகிறேன். (பூதியல், வேதியல்). இராம.கி தான் இயற்பியல் என்ற சொல்லை உருவாக்கினார் என்பது எனக்குத் தெரியாதது. வியப்பாய் இருக்கிறது.

  ReplyDelete
 5. கடற்கரைக் கூட்டத்தில் இயற்பியலுக்குத் தற்போதைய தனது விருப்ப சொல்லாக இராம.கி. அவர்கள் கூறியது "பூதியல்" ஆகும். தங்கமணி இதற்கு மிக நெருங்கிய சொல்லான பூதவியலை 'கொடுமை!!' என்று பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். இராம.கி. அவர்கள், இயற்பியலைப் பற்றிச் சொல்லுகையில் ஐம்பூதங்களின் இயல்புகளை/தன்மைகளை விளக்குவதே இயற்பியல் என்றும் அதற்கு பூதியல் என்பது மிகப் பொருத்தமானதே என்று சொன்னார். பௌதிகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு மிக நெருக்கமான தமிழாக்கம் இதுவே என்றும் சொன்னார்.

  ReplyDelete
 6. உறுப்பினர் என்ற வார்த்தை கிடைக்காது பாரதியார் நிரம்பவே திண்டாடினார். உறுப்பாளி என்றெல்லாம் முயற்சி செய்து பார்த்திருக்கிறார். இப்போது வெளிப்படையாக இருப்பவை அப்போது மறைபொருளாகத்தானே இருந்திருக்க வேண்டும்?
  "வாக்மென்"- க்கு பிரெஞ்சில் "balladeur" என்று கூறுகிறார்கள். அவர்கள் கலாசாரத்தில் ஊர் ஊராகச் சென்று பாட்டுக்கள் மூலம் கதை கூறுபவர்களை இச்சொல் குறிக்கும். நாம் கூட தமிழில் வாக்மெனுக்கு "பாணன் அல்லது தெருப் பாடகன்" என்று கூறலாமே.
  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 7. பூதியல், இயற்பியல் என்ற சொற்களைப் பற்றி மடற்குழுக்களில் முன் எழுதிய ஒரு பழைய கட்டுரையை நாலு பகுதியாகப் பிரித்து என் வலைப்பதிவில் போடுவேன். இன்றைக்கு முதற்பகுதியை இட்டுள்ளேன்.

  அன்புடன்,
  இராம.கி.

  ReplyDelete
 8. விவாவதங்களுக்கு வந்தவற்றுள் திறமூலம்-திறவூற்றும் ஒன்று. என்ன, பெரும்பாலான விவாதங்களில் முடிவுகள் எட்டப்படுவதில்லை. :-( இறுதியில், ஓர் ஆங்கிலச் சொல்லிற்கு (நுட்பியலில்) ஒன்றுக்கு மேற்பட்ட இணைச்சொற்கள் கிடைக்கும் போது 'ஓசையில் பிடித்த'வையையே உபயோகிக்கிறோம்.

  //இவற்றுள் ஏதோ ஒன்று ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்படும்போது, ..// ஊடகம் என்பதற்கு மாற்றாக மிடையம் என்ற சொல்லை இராம.கி. அவர்கள் கொடுத்துள்ளார்கள். பின்வரும் சுட்டியில் வரும் பின்னூட்டப் பகுதியில் பார்க்க: http://valavu.blogspot.com/2005/04/blog-post_16.html

  ReplyDelete
 9. நல்ல பதிவும், பின்னூட்டங்கலும். நன்றி.

  ReplyDelete
 10. பயனுள்ள பதிவு.

  புதுச்சொற்களை வெள்ளோட்டத்திற்கு விட்டால் மட்டும் போதாது,நடைமுறையில் அவை பரவாலக்கப்பட வேண்டும்.இல்லாவிடின்,சிலசமயங்களில் ஆர்வக்கோளாறில் அவை தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.

  எ.கா: ஒரு தடவை தனது நெருங்கிய உறவினர் மின்கசிவு விபத்தில் இறந்து போன துயர நிகழ்வை,நேரடியாக சொல்லாமல், திரு.இராமகி தன்னேர்ச்சி நிகழ்ந்ததாக மடற்குழு ஒன்றில் தெரிவித்திருந்தார்.சரியாக பொருள் புரிந்து கொள்ளாத தமிழன்பரொருவர் எல்லோருக்கும் தன்னேர்ச்சி ஏற்பட வேண்டும் என பதிலளித்திருந்தார் ;(

  [தன்னேர்ச்சி இது விபத்து என்பதற்கான இணையான தமிழ்ச்சொல்.இராம.கி உருவாக்கியது என நம்புகிறேன்.]

  மனதில் பட்டென்று பதியும் வகையில் சொற்கள் அமைக்கப்பட வேண்டும்.குழம்பி,கொட்டை வடி நீர் போன்றவை நேர வீணாக்கல்களுக்கு மட்டுமே.யுனிகோட்,விண்டோஸ் போன்ற தொழிற்நுட்ப பெயர்சொற்களை அப்படியே விட்டுவிட வேண்டும்.

  இணையம் எனும் சொல்லை உருவாக்கிய நபர் சிங்கை மாகோ என்பவர்.

  நன்றி.

  ReplyDelete
 11. ...ஆம், கேண்டிடேட் என்ற தமிழ்ச்சொல்லும் கூடவே உள்ளது...
  போங்க பத்ரி. உங்களுக்கு எப்ப பார்த்தாலும் பகிடிதான்.

  ReplyDelete
 12. வணக்கம், கிரியா உருவமைத்த தமிழகராதி சிறப்பானதுதாம்.எனினும் நூற்கட்டமைப்பு தரமாகவில்லை.ஜேர்மனியில் அந்தகராதிக்கு 40 யூரோ கொடுத்து வேண்டினோம்.இரண்டு வருடங்களுக்குள் நான்கு துண்டுகளாகிவிட்டது.வௌ;வேறாகியவற்றைச் சேர்ப்பதில் வேணாமென்றாகிவிட்டது.இந்திய ரூபாயில் 2000 க்கு வேண்டிய அகராதியோ நார் நாராய்க் கிழிந்துபோனதில் கிரியாவைத் திட்டித் தீர்த்தேன். ஜே.ஜே.சிலகுறிப்பை ஒழுங்காகப் பதித்துள்ள கிரியா, அகராதியின் கனதிக்கேற்றவாறு அதையொழுங்காகக் கட்டவில்லை. அகராதியென்பது நெடுக உபயோகத்திற்குள்ளாகும்,எனவே அதை தரமான முறையில் கட்டவேண்டும்.மற்றும்படி கிரியாவால் நாம் நல்ல நூல்களைப் பெற்றுள்ளோம்.

  டோண்டு ஐயா,வோக் மான் என்பதை தமிழில் தெருப்பாடகனென்பது பொருத்தமாகவில்லை. 'உலாப் பாடி','உலாவிசைப்பி''எடுப்பாரிசைப்பி' என்றெல்லாம் மிக நெருக்கமாகச் சொற்களையுருவாக்கலாம்.

  அன்புடன்
  ப.வி.ஸ்ரீரங்கன்

  ReplyDelete
 13. நன்றிகள் பத்ரி.

  முக்கியமான அறிவியல் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க முயலும் போது, எனக்கு சில அனுபவங்கள் கிட்டியது. நான் புரிந்து கொண்ட வரையில் (சில அகரமுதலிகள், மற்றும் இணையத்தளங்களிலிருந்து) ஒரு ஆங்கில வார்த்தைக்கு பல்வேறு தமிழ் மொழி பெயர்ப்பு இருப்பதாக பட்டது.
  இந்த முயற்சிகள் தேவையானதே என்றாலும், இவையனைத்திற்கும் மேலே ஒரு அறிவியலுக்கான பொது தமிழ் மொழி ஒன்று தேவை என்று கருதுகின்றேன். இதற்கு எத்தகைய முயற்சி தேவை என்று ஒரு திட்டம் எழும்பவில்லை மனதில். ஆனால், குறைந்தபட்சம் இருக்கும் வார்த்தைகளை பட்டியலிட்டு அவற்றில் இருந்து பொதுவான வார்த்தையை தேர்ந்தெடுப்பது நலம் எனத் தோன்றுகின்றது. இந்த முயற்சியை இதற்கு முன் மேற்கொண்டுள்ளனரா என்று தெரியவில்லை. ஆனால் இத்தகைய முயற்சி தேவை என்பது திண்ணம்.

  ReplyDelete
 14. /வோக்மான்/
  இதற்கு நடையன் என்றுகூட ஒரு காலத்திலே மோடிபெயர்த்திருக்கிறேன். ஆனால், இது ஸொனியின் பதிவு செய்யப்பட்ட கேட்பி. இதனை மொழிபெயர்ப்பது எந்தவகையிலே சரி என்று தெரியவில்லை.

  செல்வராஜ், நீங்கள் முனைவர் இராம. கிருஷ்ணனையும் க்ரியா ராமகிருஷ்ணனையும் குழப்பிக்கொண்டீர்கள்போல இருக்கின்றது.

  ReplyDelete
 15. ஸ்ரீரங்கன் அவர்களே, 'உலாப் பாடி', 'உலாவிசைப்பி' 'எடுப்பாரிசைப்பி' ஆகியவை நேரடி மொழிபெயர்ப்பாகப் படுகின்றன. அவை ஏற்கனவே புழக்கத்தில் உள்ளனவா? "பாணன்" எப்படி?
  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 16. LASER என்பதற்கு மிகத் துல்லியமான மொழிபெயர்ப்பு "தூண்டப்பட்ட கதிரியக்காத்தாலேற்படும் ஒளிப்பெருக்கம்" என்பது. இப்படி கூறுவோமானால், படிப்பவர் ஓடியேபோய்விடுவார். எனது திட்டப்பணி(Project) -ல் "ஒருங்கொளி" என்று மொழிபெயர்த்தேன். பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டனர்.

  ReplyDelete
 17. டோண்டு ஐயா,வணக்கம்!பாணன் என்பது தெருப்பாடகனைவிடச் சற்றுப் பொருத்தமாகவேயுள்ளது.நான் கூறியவை பொதுவாக மொழியாக்கஞ் செய்ததே. நடைபாடி என்றும் அழைக்கலாம்.எதற்கும் லேசரை மொழிபெயர்த்த அன்பரிடம் விடுவோம்,அவரிடம் அந்த ஆற்றல் உள்ளதுபோல் அவரது மொழியாக்கம் நிரூபிக்கிறது.
  அன்புடன்
  ப.வி.ஸ்ரீரங்கன்

  ReplyDelete
 18. இல்லை பெயரிலி. பத்ரி எழுதியிருந்த >> இயல்பியல் (இன்றி இயற்பியல் என்று வழங்கப்படுகிறது) என்ற சொல்லை 1970களில்(?) உருவாக்கியதும் தான்தான் என்று இராம.கி. சொன்னார்>> இந்த வாக்கியத்தை வைத்துத் தான் நான் அப்படிக் கூறினேன். கிரியாக்காரருக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

  வாசன் கூறியிருப்பது போல் "யூனிகோடு" என்பதை ஒருங்குறி என்பதில் எனக்கும் உடன்பாடில்லை. அது ஒரு பெயர் தானே. ஏன் பெயர்க்க வேண்டும்?

  Anonymous,
  Laserக்கு ஒருங்கொளி நன்றாக இருக்கிறது. ஒருங்கொளி நிபுணர் வெங்கட் என்ன பாவிக்கிறார் என்று நினைவில்லை.

  Projectக்குப் புறத்தீடு என்றொரு சொல்லை இராம.கி முன்வைக்கிறார். 'ject' = 'to throw' என்னும் வேரில் இருந்து கொண்டு வருவது நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 19. நன்றி திரு ஸ்ரீரங்கன் மற்றும் திரு செல்வராஜ். Walkman என்பது வணிகப்பெயர் என்பதால் அதை அப்படியே விட்டுவிடலாம் என்பது என் தாழ்மையான கருத்து

  ReplyDelete
 20. http://www.hindu.com/2005/04/28/stories/2005042806130400.htm

  ReplyDelete
 21. ///பாரதியார் எவ்வாறு member என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான சொல்லைத் தட்டுத் தடுமாறி உருவாக்க முயற்சி செய்தார் என்று ஒருமுறை எழுதியிருக்கிறேன். இப்பொழுது சட்டெனச் சுட்டி கிடைக்கவில்லை.///

  http://www.maraththadi.com/article.asp?id=700

  ReplyDelete
 22. I did not coin the word 'iNaiyam'.
  It was already there when I joined Tamil.net in Feb., 1997.

  I coined:

  1.Vaiya Viri Valai - World Wide Web

  2. KaNini or KaNani? - KaNini is correct

  3. Pulam Peyar Thamilzar

  4. uralai idiththal - Click the URL

  Dr.S.Jayabarathi

  ReplyDelete
 23. ஐயா ஜேபி வருவதற்கு முன் 'இணையம்' என்ற சொல் உருவாவதற்கு அடியேனும் ஒரு காரணம் என்பதை தெரிவித்த 'வாசன்' அவர்களுக்கு என் நன்றி.

  மாகோ (சிங்கை)
  http://Global-Tamils.21publish.com

  ReplyDelete