Wednesday, April 06, 2005

கானாவிலிருந்து கஸல் வரை

அபுல் கலாம் ஆசாத்கானா அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக் கூறுகளை முன்வைக்கும் பாடல் வடிவம். நாட்டுப்புறப் பாடல்களைப் போல நகர்ப்புறப் பாடல் எனலாம். "[இந்த] கானாவைப் பாட மெல்லிய போதை வேண்டும். மங்கலான இரவு வேண்டும். கூட சேர்ந்து பாட ஒரு கூட்டம் வேண்டும். இவை எதுவுமில்லாமல் பாட முடியாது. குறைந்த பட்சம் செய்யது பீடியோ, காஜா பீடியோ கிடைத்தாலொழிய கானா கிட்டாது." என்கிறார் கவிஞர் யுகபாரதி.

சவுதி அரேபியாவில் வசிக்கும் அபுல் கலாம் ஆசாத், மேற்படி சமாச்சாரங்கள் ஏதுமில்லாமலேயே, மயிலாப்பூரை கானாவில் வடிக்கிறார்:

காமதேனு த்யேட்டராண்டை காக்கி டவுசர் போட்டுக்குனு
கஞ்சா வித்த பையன் நானு எல்லே சார்! - அந்த
கதைய இங்க அவுத்து வுட்டா தொல்ல சார்!

மயிலாப்பூர் டேசனுக்கு மாமூலு வெட்டிக்கினு
மப்புலதான் வாழ்ந்த பையன் எல்லே சார்! - அத்த
மாருதட்டி சொல்ல நானும் வல்ல சார்!

தண்ணித்தொற மார்க்கெட்டுல தம்மட்ச்சு ஜகா வாங்கி
தாவாப் போன பம்பரந்தான் எல்லே சார்! - ஆனா
தள்ளாடி நடக்கறவன் இல்ல சார்!

கச்சேரி ரோட்டுலதான் கமுக்கமாக சைட்டட்ச்சு
கருவாட்டுக் கொயம்பு துன்னேன் எல்லே சார்! - அத்தக்
கைல தந்த பொண்ணழகி முல்ல சார்!

அன்னாடங்காச்சி நானு ஆகாசக் கோட்டகட்டி
அறுவத்தி மூவருல எல்லே சார்! - அங்க
அரபக்கிட்டு கூழ்குட்ச்ச புள்ள சார்!

கொளத்திச் சுத்தி வந்து பரமசிவ அண்ணாவாண்ட
கடனவாங்கி கம்பிநீட்டி எல்லே சார்! - இன்னும்
கடனடைக்க வசதி வாச்ச தில்ல சார்!

லஸ்ஸு கார்னருல லவ்ஸு வுட்ட பய்யன நான்
லைனு கட்டி சுளுக்கெடுத்தேன் எல்லே சார்! - அந்த
லடாய் இன்னும் பைசலாக வில்ல சார்!

போதும் போதுமடா பொறுக்கி வாழ்க்க போதுமுன்னு
பொறப்பட்டேன அங்கேருந்து எல்லே சார்! - இன்னும்
பொழுதுபோனா அய்துக்கறன் எல்லே சார்!

மயிலாப்பூரைச் சுற்றிச் சுற்றி வரும் எனக்கு இந்தப் பாடல் பிடிக்கும். ஆனால் ராகம் போட்டு பாடத்தான் தெரியாது.

இதே ஆசாத் எழுதி இப்பொழுது வெளிவந்திருப்பது சில புகழ்பெற்ற உர்து கஸல் பாடல்களின் தமிழாக்கம், ஆனால் அதே சந்தத்தில். கஸல் வடிவம் பாரசீக மொழியில் தோன்று, அங்கிருந்து முகலாயர்கள் வழியாக இந்தியா வந்தது. உர்து மொழியில் கவியரங்கங்களிலும் பேரரசர்கள் முதல் சிற்றரசர்களின் அரண்மனையில் வளர்ந்து இந்தி சினிமாவின் வழியாகப் பொதுமக்களைச் சென்றடைந்தது.

ஆசாத் புத்தகத்திலிருந்து - ஹஸ்ரத் மோஹானி இயற்றி நிக்காஹ் என்னும் படத்தில், குலாம் அலி பாடிய பாடலின் தமிழாக்கம்:

நித்தம் நித்தம் கண்களும் நீர்ச்சுனைகள் தந்ததே
நீங்கிடாத காதலின் நெருக்கம் நினைவில் நின்றதே!

நீயென் முன்னே வந்ததும் நான் பேச்சின்றி நின்றதும்
நகங்கடித்து நாணிய காட்சி நினைவில் நின்றதே!

மறைந்து பேசக் காவலாய்ப் படர்ந்து நின்ற மதிற்சுவர்
காலப்போக்கில் கல்வெட்டாகியென் நினைவில் நின்றதே!

திரையைக் கைகள் இழுத்ததும் திடுக்கிட்டே நீ தவித்ததும்
முகத்தை மறைத்து முக்காடிட்டதும் நினைவில் நின்றதே!

தனிமை என்னைத் தீண்டும் போதில் கருணை காட்டியே
என்னில் இணையும் காதல் தாகம் நினைவில் நின்றதே!

மீண்டும் ஓர்நாள் சேர்ந்த இரவில் விழிகளில் அருவியாய்
பிரிந்த கதைகள் பேசித் தீர்த்தது நினைவில் நின்றதே!

பாதம் நோகப் பகலிலே வெய்யில் வீசும் வீதியில்
நீ என் துணையாய் நடந்த நாழிகை நினைவில் நின்றதே!

=======

ஆசாத் எழுதி வெளிவரும் புத்தகம் "கஜல்: பாடப்பாடப் பரவசம்" கஸலின் இலக்கணம் என்ன என்பதை விளக்குகிறது. சில கஸல் பாடல்களின் பின்னணியை விளக்கி, அதன் பின்னர் அவற்றுக்கான தமிழ் மொழியாக்கத்தை அளிக்கிறது. கடைசியில் கஸல் கவிஞர்களின் வாழ்க்கை பற்றிய சிறுகுறிப்பும் புகைப்படங்களும் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

கானா, அபுல் கலாம் ஆசாத், ஜூன் 2004, கிழக்கு பதிப்பகம். விலை ரூ. 30
கஜல்: பாடப்பாடப் பரவசம், அபுல் கலாம் ஆசாத், மார்ச் 2005, கிழக்கு பதிப்பகம், விலை ரூ. 45

4 comments:

 1. கஸல் பற்றி ஆசாத் அண்ணாச்சி எழுதுவதைப் படித்துக்கொண்டே இருக்கலாம். கிழக்குப் பதிப்பகத்தினரின் வெளியீட்டில் நான் வாங்க வேண்டும் என்று பட்டியலிட்டிருக்கும் அடுத்த புத்தகம்.

  வாழ்த்துகள் ஆசாத் அண்ணாச்சி.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ஆசாத்!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ஆசாத். நன்றிகள் பத்ரி.

  ReplyDelete
 4. இனிய பத்ரி, மதி, பாலா, அனைவருக்கும் நன்றிகள்.

  மதி,

  மரத்தடியில் கஜல்களை மொழிமாற்றம் செய்து இட்டபோது நீங்கள் அதனைக் கேட்கும்வடியாகவும் சில சுட்டிகளைத் தந்து என்னைக் கவுரவித்ததை மறக்க முடியுமா?

  நன்றிகள் மதி.

  அன்புடன்
  ஆசாத்

  ReplyDelete