Monday, April 18, 2005

பை பை ஜான் ரைட்

ஜான் ரைட்டின் கடைசி மேட்ச் தில்லியில் நடைபெற்ற ஆறாவது ஒருநாள் போட்டி. இந்திய அணியைத் தூக்கி நிறுத்திய அவருக்கு மரியாதை செய்யும் விதத்திலாவது இந்தியா நேற்று விளையாடியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.

பல்வேறு காலக்கட்டங்களில் இந்திய அணியினர் தாம் பிறர் மீது கொண்டிருக்கும் மரியாதையாலோ, பயத்தாலோ, அவர்களைத் தம்மால் அவுட்டாக்க முடியாது என்றும், அதனால் ரன்கள் தருவதை நிறுத்தினால் மட்டுமே போதும் என்றும் பந்துவீசுவார்கள். ஷாஹீத் ஆஃப்ரீதி வெள்ளிக்கிழமை அன்று கான்பூரில் அடித்த 45 பந்து சதத்தால் அரண்டு போன இந்தியர்கள் தொடக்கத்திலிருந்தே தடுமாற்றத்துடன்தான் அவருக்குப் பந்துவீசினார்கள். முக்கியமாக நேஹ்ரா. அவர் ஆஃப்ரீதிக்கு வீசிய முதல் ஓவரில் முதல் பந்தை ஆஃப்ரீதி அடிக்கப் போய் தோற்றார். ஆனால் தொடர்ச்சியாக அதேமாதிரியான பந்துகளாக வீசாமல் கால் திசையில் பந்துகளை வீசினாட். அடுத்தடுத்து மூன்று பந்துகள் கால் திசையில். மூன்றும் எல்லைக்கோட்டுக்குப் பறந்தன. ஐந்தாவது பந்து லாங் ஆன் மேல் சிக்ஸ். ஆறாவது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே. கவர் திசையில் எல்லைக்கோடு. இப்படி ஆரம்பித்த ஆஃப்ரீதி இன்னிங்ஸ் இந்தியர்களைக் கதறடித்தது. அதன்பின் பாகிஸ்தானின் முதல் ஆறு ஆட்டக்காரர்களும் - சல்மான் பட் தவிர்த்து - நன்றாக விளையாடி 300ஐத் தாண்டினர்.

தில்லி ஆடுகளம் 100 ஓவர்கள் தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி இருந்தாலும், இதே கேள்விதான் கான்பூரிலும் கேட்கப்பட்டது. ஆனால் ஆஃப்ரீதி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால் இந்தியர்களுக்கோ மனது முழுக்கக் கவலை. டெண்டுல்கர் இறங்கி வந்து தேவையின்றி அடிக்க முயற்சி செய்து சிலமுறை தோற்றார். பின் பவுல்ட் ஆனார். சேவாக் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகம் அடிப்பதில்லை. இங்கும் தர்ட்மேன் திசையில் ரன்கள் பெறுகிறேன் என்று பந்தை ஸ்லிப் கையில் லட்டு போல கேட்ச் கொடுத்தார். திராவிட் வந்ததிலிருந்து இறங்கி இறங்கித் தூக்கி அடிக்க முனைந்தார். இது அவர் எப்பொழுதும் விளையாடும் ஆட்டம் அன்று என்று தோன்றியது. மிட் ஆன் யோஹானாவிடம் பந்தைத் தட்டிவிட்டு வேகமாக ரன் எடுக்க முனைந்தவர் நேர் எறிதலில் ரன் அவுட் ஆனார். அத்துடன் இந்தியா தோற்றது. யுவராஜ் சிங்கும் யோஹானாவால் ரன் அவுட் ஆக, தோனி லாங் ஆனில் கேட்ச் கொடுத்து அவுட்டாக, காயிஃப் ஏமாற்றம் தரும் வகையில் எல்.பி.டபிள்யூ ஆனார். தினேஷ் மோங்கியா ரன் ஏதும் எடுக்காமல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். ஆக ஏழு மட்டையாளர்கள், அதில் ஒன்று கூட உருப்படியில்லை.

மொத்தத்தில் பாகிஸ்தான் 4-2 என்ற கணக்கில் வென்றிருந்தாலும் கூர்ந்து பார்த்தால் இந்தியா ஜெயித்த இரண்டு ஆட்டத்திலும் பாகிஸ்தான் கடைசிவரை போராடினர் என்பது புரியும். ஆனால் இந்தியா தோற்ற நான்கில், ஒரேயோர் ஆட்டத்தில் மட்டும்தான் கடைசிவரை போராடியது. மற்ற மூன்றிலும் பத்து ஓவரிலேயே தோற்றுவிட்டது.

இதுதான் இந்திய ரசிகர்களுக்கும் ஜான் ரைட்டுக்கும் ஏமாற்றத்தைத் தந்திருக்கும்.

இனி, இந்தியாவின் பயிற்சியாளர் யார் என்பதிலிருந்துதான் இந்தியா எப்படித் தன்னை மீண்டும் கட்டமைத்துக்கொள்ளும் என்பது தெரிய வரும்.

இதுவரையில் இந்தியாவுக்குப் பயிற்சியாளர்களாக இருந்தவர்களுள் ஜான் ரைட் ஒருவர்தான் சொல்லிக்கொள்ளக் கூடிய அளவுக்குத் திறமை வாய்ந்தவர் என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது.

பை பை ஜான் ரைட்.

ஜான் ரைட் பிறந்தநாள் வாழ்த்துகள்
கிரிக்கெட் பயிற்சியாளர்கள் பற்றி நான் முன்னம் எழுதியிருந்த கட்டுரை

1 comment:

  1. சந்தேகமே இல்லை பத்ரி...Johm Wright is the best ... ஆனால் அவர் விடைபெறும் ஆட்டத்தில் உயிரைக் கொடுத்து ஆடியிருக்க வேண்டாமா நம்மவர்கள்? சொங்கிப் பசங்க...

    ReplyDelete