Tuesday, April 19, 2005

புதிய யூனிகோட் எழுத்துருக்கள்

C-DAC குறுந்தகட்டில் நமக்குக் கிடைக்கும் அதிகபட்ச நன்மை அதில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துருக்கள் ஆகும். இப்பொழுதுதான் அந்த எழுத்துருக்கள் அனைத்தையும் முழுவதுமாகப் பரிசோதித்துப் பார்த்தேன்.

மொத்தமாகக் கிடைத்துள்ள எழுத்துருக்கள்:

1. C-DAC கொடுத்துள்ள 22 OpenType எழுத்துருக்கள், யூனிகோட் எழுத்துக் குறியீட்டில் இயங்குபவை. (இதே எழுத்துருக்கள் TAM, TAB குறியீடுகளிலும் கொடுக்கப்பட்டுள்ளன.) ஆனால் இவற்றில் உள்ள முக்கியமான குறைபாடு - இது வணிக நோக்கு இல்லாதவர்களுக்குத்தான் இலவசம். வணிக நோக்குடன் உபயோகிப்பவர்களுக்கு இலவசம் அல்ல! இதில் உள்ள காப்புரிமையை அப்படியே இங்கு கொடுக்கிறேன்:

"Copyright (c) 2005, C-DAC, GIST PUNE, INDIA-TAMIL-OPEN TYPE-<font name>.FOR NON-COMMERCIAL FREE USAGE. For commercial license contact C-DAC, GIST, Pune."

அதாவது என் இலவச வலைப்பதிவில் இந்த எழுத்துருவை உபயோகிக்கலாம். என் பதிப்பகத்துக்கான வலைப்பதிவில் உபயோகிக்க முடியாது. நான் ஒரு புத்தகம் போட வேண்டுமானால் இந்த எழுத்துருவைக் கொண்டு அச்சிட்டு, அதிலிருந்து நெகடிவ் தயாரித்து அதிலிருந்து புத்தகங்களை அச்சிட முடியாது. இதுபற்றி எங்குமே வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் அன்றைய தினம் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது இந்த எழுத்துருக்கள் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் இதனால் கணினி வழிப் பதிப்புத்தொழில் மேன்மையடையும் என்றும் சொன்னார்களாம். மேற்படிக் காப்புரிமையைப் பார்க்கும்போது இது சிறு வணிகர்களுக்கு வேலைக்குதவாது என்றும், இந்த எழுத்துருக்களை வணிக நோக்கில் உபயோகித்தால் அதன்மூலம் அவர்கள் சட்டத்தை மீறியவர்களாவார்கள் என்றும் அவர்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும்.

2. Cadgraf கொடுத்துள்ள 50 யூனிகோட் குறியீட்டிலான TrueType எழுத்துருக்கள். இந்த எழுத்துருக்களில் எந்தவிதமான காப்புரிமைத் தகவலும் கொடுக்கப்படவில்லை. அதனால் எல்லாவிதமான வணிக நோக்குள்ள தளங்களிலும், அச்சிடுதலிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

3. சென்னை கவிகள் நிறுவனத்தின் 24 TAB எழுத்துருக்கள், 43 TAM எழுத்துருக்கள். இதனால் நமக்கு அதிகப் பயன் இல்லை.

4. Modular Infotech நிறுவனத்தின் 20 TrueType யூனிகோட் எழுத்துருக்கள். இவற்றிலும் எந்தக் காப்புரிமைத் தகவலும், அனைவரும், எல்லாவிதமான செயல்களுக்கும் உபயோகித்துக்கொள்ளலாமா என்ற தகவலும் இல்லை.

இதில் சிரிப்பு என்னவென்றால் அரசு நிறுவனம் - நம் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனம் - தளையற்ற உபயோகத்தைக் கட்டுப்படுத்துகிறது. வணிக நோக்குள்ள நிறுவனங்கள் கொடுத்துள்ள எழுத்துருக்கள் நம் உபயோகத்தின்மீது எந்தத் தளையையும் விதிக்கவில்லை என்று தோன்றுகிறது.

குறைந்தபட்சம் லதா எழுத்துருவை மட்டுமே பார்த்து வளர்ந்த நம்மில் பலர், பார்க்க நன்றாக இருக்கும் 92 புது யூனிகோட் எழுத்துருக்களை உபயோகிக்க முடியும் என்று சந்தோஷப்படலாம்.

6 comments:

  1. பத்ரி, அந்த புதிய ஒருங்குறி எழுத்துருக்களுக்கும், தமிழா.காமிலுள்ள பான்ட்ஸ் இன்ஸ்டாலருக்கும் ஏதாவது ஒற்றுமையிருக்கிறதா என்று பாருங்கள். எனக்குத் தெரிந்து அதையும் அவர்கள் சுட்டிருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

    பார்க்க: http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=6&lid=2

    ReplyDelete
  2. //குறைந்தபட்சம் லதா எழுத்துருவை மட்டுமே பார்த்து வளர்ந்த நம்மில் பலர், பார்க்க நன்றாக இருக்கும் 92 புது யூனிகோட் எழுத்துருக்களை உபயோகிக்க முடியும் என்று சந்தோஷப்படலாம். //

    அந்த குறுந்தகடு தந்த மினிமம் சந்தோஷமா அது? நாராயணன் சொன்னதையும் சோதித்துப் பார்க்கலாம்.

    ReplyDelete
  3. Why Sonia and Manmohan photo and thaatha+Peeran photo on the CD ?

    Rajesh K

    ReplyDelete
  4. ஏன்.. ArialUnicode, முரசுவின் 3
    எழுத்துக்கள்ளை விட்டுட்டிங்கள்....???

    ReplyDelete
  5. இந்த யுனித்தமிழ் எழுதுருக்கள்
    பார்க்க எப்படி இருக்கின்றன?
    எழுதுருவின் பெயரும், மாதிரி
    வாசகம் ஒன்றும் வைத்த pdf கோப்பு
    ஒன்று பயனர்கள் தயார் செய்யலாமே.

    நா. கணேசன்

    ReplyDelete
  6. Open Type fonts in CD are 92 or 22? In one place, it says 22 and other place 92. Please clarify.

    ReplyDelete