Tuesday, April 19, 2005

பொன்விழி - ஒளிவழி எழுத்துணரி

C-DAC கொடுத்த குறுந்தகட்டில் உள்ள முக்கியமான மற்றுமொரு இலவச மென்பொருள் பொன்விழி எனப்படும் ஒளிவழி எழுத்துணரி (optical character recognition) மென்பொருள் ஆகும்.

இதை நான் ஏற்கெனவே வாங்கி வைத்துள்ளேன். நான் வாங்கும்பொழுது ரூ. 7,000 ஆனது. பின்னர் ரூ. 5,000 ஆனது. இப்பொழுது இந்த வணிக மென்பொருளின் பயன்பாட்டில் சிறு மாற்றங்களுடன் (பிழைதிருத்தி குறைவான செயல்பாட்டுடன் வருகிறது) இலவசமாக வழங்கப்படுகிறது.

சற்றுமுன்னர்தான் பயன்படுத்திப் பார்த்தேன். நன்றாகவே வேலை செய்கிறது.

இதன் பயன்பாட்டைப் பற்றியும், எப்படி இதனை உபயோகிப்பது என்றும் முன்னர் தமிழோவியத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைத் தேடிப் பிடித்துக் கொடுக்கிறேன்.

ஆனால் இதிலும் ஒரு சிறு விஷயம். இந்த மென்பொருள் தயாரிப்பில் மத்திய அரசும், தயாநிதி மாறனும் எந்த உதவியும் செய்யவில்லை. இது ஏற்கெனவே தமிழக அரசின் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தி்ன் பண உதவியுடன் உருவாக்கப்பட்ட மென்பொருள்.

அப்படிப்பட்ட நிலையில் அரசியல் காரணங்களுக்காக இந்த மென்பொருளையும் இப்பொழுதைய மத்திய அரசின் பங்களிப்பாக யாரும் சொல்லக்கூடாது. முக்கியமாக தயாநிதி மாறன்.

12 comments:

 1. பத்ரி, இந்த இலவச மென்பொருள் விவகாரத்தை நீங்கள் அக்குவேறு ஆணிவேறாக அலசுவது மிகவும் நல்ல காரியம். ஆனால் ஏன் இப்படி 'ஒளிவழி எழுத்துணரி' என்றெல்லாம் தமிழ் 'படுத்தி' படுத்துகிறீர்கள்? ஒருத்தராவது உபயோகிக்கமுடியாத ஒரு மொழியாக்கம் அவசியமா? ஓசியாருக்கு வேறு தமிழ்வடிவம் கிடையாதா? போட்டோ புட்ச்சி ஃபாண்ட்டா மாத்தற மெஷின் என்றால் எத்தனை சுலபமாகப் புரியும்!

  ReplyDelete
 2. திரு. தயாநிதி மாறன் "குங்குமத்திற்கு" அளித்த பேட்டியில் OCR பற்றி சொல்லியது

  "தமிழில் டைப் அடிக்கப்பட்ட செய்தியை ஸ்கேன் செய்தால் அது ஒரு புகைப்படம் போல பதிவாகும். ஸ்கேன் செய்யப்பட்ட செய்தியில் பிறகு வரிகள் சேர்ப்பதோ மாற்றம் செய்வதோ இயலாது. இப்போது உள்ள சாப்ட்வேர் வசதிகளால் ஸ்கேன் செய்யப்பட்ட ஒரு பக்கத்தை டெக்ஸ்ட் (Text) வடிவத்தில் கையாளலாம். இந்த டெக்ஸ்டில் நமது விருப்பதிற்கேற்ப எடிட் செய்து கொள்ளலாம். அடுத்ததாக "INTELLIGENCY OPTICAL CHARACTER RECOGNITION SOFTWARE" என்பதை உருவாக்கி வருகிறோம். சுருக்கமாகச் சொன்னால் பாமரனையும் கம்ப்யூட்டரைக் கையாள வைக்கிற பிரமாதமான செயல்திட்டம் அது. கம்ப்யூட்டரில் டைப் அடிக்கத் தெரியாதவர், கையால் எழுதி அதை ஸ்கேன் செய்தால், அதை டைப் அடிக்கவோ Text மேட்டராக மாற்றி விடும் வல்லமை கொண்டது இந்த சாப்ட்வேர். இது தமிழ்மொழியோடு சேர்த்து 22 இந்திய மொழிகளிலும் விரைவில் வரவுள்ளது. ஆனால், நமது செம்மொழியான தமிழில்தான் இது முதன்முதலில் இலவசமாக அளிக்கப்படுகிறது."

  ReplyDelete
 3. இப்பொழுதுதான் தயாநிதி மாறன் ஜூனியர் விகடனுக்குக் கொடுத்துள்ள பேட்டியை மீண்டும் படித்தேன். அதில் அவர் சொல்லியிருப்பது:

  "அடுத்து வேறு சில மென்பொருட்களையும் தயாரித்துள்ளோம். இவற்றை 'கணினி மொழிப்புரட்சி' என்று கூட சொல்லலாம். 'Optical Character Recognition software (OCR)' என்ற மென்பொருளைத் தயாரித்துள்ளோம். பொதுவாக ஸ்கேன் செய்யப்படும் ஒரு தாளில் இருக்கும் வார்த்தைகளை நாம் கம்ப்யூட்டரில் திருத்தம் செய்ய முடியாது. ஸ்கேன் செய்யப்பட்டால், அது அப்படியேதான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், நான் மேலே சொன்ன ஓ.சி.ஆர். மென்பொருள் மூலம் டைப் அடித்து வைக்கப்பட்டுள்ள ஒரு மேட்டரை ஸ்கேன் செய்தால், அதன்பிறகு கம்ப்யூட்டரில் அந்த செய்தியை நாம் திருத்தம் செய்ய முடியும். அதற்கேற்ற வடிவத்தில் அந்த செய்தி பதிவாகும். ஆங்கிலத்தில் இந்த வசதி இருக்கிறது. என்றாலும் அது இன்னமும் பரவலாக வரவில்லை. தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் இது ரொம்பவே புதுமையான முயற்சி."

  பேரா. கிருஷ்ணமூர்த்தி இதுபற்றி கடந்த சில வருடங்களாகவே பேசி வருகிறார். அவரது மென்பொருள் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகவே கிடைத்து வருகிறது. இதை என்னவோ இப்பொழுது ஆட்சிக்கு வந்த மத்திய அமைச்சர் செய்தது போலக் காட்டிக்கொள்ள வேண்டாம்! இத்தனைக்கும் இதற்கான நிதியுதவி தமிழக அரசிடமிருந்து வந்துள்ளது என்று ஏற்கெனவே பார்த்தோம்!

  ReplyDelete
 4. //இதன் பயன்பாட்டைப் பற்றியும், எப்படி இதனை உபயோகிப்பது என்றும் முன்னர் தமிழோவியத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைத் தேடிப் பிடித்துக் கொடுக்கிறேன்.//

  கட்டாயம். நான் மிக மிக மிக ஆவலாக இருக்கிறேன். சீக்கிரம்.

  அப்புறம் அந்த CDAC மென்பொருளை இணையத்தில் இறக்கிக் கொள்ள வசதியிருக்கா? இருந்தால் லிங்க் சொல்லவும்.

  ReplyDelete
 5. http://www.tamiloviam.com/html/Nettan31.Asp

  இது ஜூலை 2003ல் எழுதியது. பொன்விழி அவ்வளவு பழைய மென்பொருள். அதாவது தயாநிதி மாறன் அரசியலுக்கு வருவதற்கு முன்னமேயே உருவாக்கப்பட்ட மென்பொருள்.

  ReplyDelete
 6. பேரனையும் தாத்தாவையும் ஒருவழி பண்ணாம விடமாட்டிங்க போலருக்கே!

  ReplyDelete
 7. ஏனுங்க, நல்ல தமிழ் நேசு, "போட்டோ புட்ச்சி fanta மாத்தற மெஷின் களா, இது?" நாங்க ஏதோ "எழுத்தே ஒளியாலெ உணர்ரது"ன்னு சின்ன புள்ளைக்கும் புரியுற மாதிரி பத்ரி நல்லாச் சொல்லிப் போட்டார்னு நெனைச்சிக்கின்ருக்கோம்.

  படிச்ச குசும்பு உங்களுக்கு போகலியாக்கும். இன்னும் எத்தனை நல்ல தமிழ் வச்சிருக்கிறீங்க! தமிழெ ஒரு வழி பண்ணிடனுமாக்கும். :-)

  அன்புடன்,
  இராம.கி.

  ReplyDelete
 8. இதை பயர்பாக்ஸ் பேசும் பதிவிலேயே போட்டிருப்பேன் ஆனால், மிக கீழே சென்றுவிடும். அதனால் இங்கு பதிகிறேன். முகுந்த் தான் தமிழ் பயர்பாக்ஸின் நீட்சியினை செய்தார் என்பதற்கு ஆதாரமென்ன. தமிழா. காமில் எப்போது வேண்டுமானாலும் அவர் போட்டிருக்கலாம். ஆதாரம் டபுள் ஸ்ட்ராங்காக இருக்கிறது. தமிழில் பயர்பாக்ஸ் என்பது ஒரு நீட்சியே (Extension) இந்த நீட்சியினை ஏற்கனவே மொசில்லா பயர்பாக்ஸ் குழுமம் அங்கீகரித்துவிட்டது.

  பார்க்க: https://addons.update.mozilla.org/extensions/moreinfo.php?id=512

  ஆக எப்படி பார்த்தாலும், சீ-டாக் செய்தது கிரிமினல் காரியம். இது மக்களின் பார்வைக்கே.

  ReplyDelete
 9. இங்கு நீங்களும் மற்றவர்களும் குறிப்பிட்டது போல், முறையாகச் செய்ய வேண்டியதைச் செய்து CDAC-இன் நாணயமின்மையை தார்மீக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்க்க வேண்டும். ஆனால் தயாநிதி மாறன் (& கலைஞர்)-இன் சுயவிளம்பர நோக்கம்தான் CDAC போன்ற அரசு நிறுவனங்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக இருக்கின்றன. இந்த குறுந்தகட்டின் முகப்பைப் பார்த்தாலே புரியும். இந்த நோக்கத்தையும், அதனால் அரசு நிறுவனங்கள் செய்யும் முறையற்ற செயல்களையும் ஆதாரங்களுடன் பரவலாக விமர்சிக்கவிட்டால் இவர்களின் செயல்கள் தொடரும் என்பதே என் கருத்து.

  நன்றி - சொ. சங்கரபாண்டி

  ReplyDelete
 10. பத்ரியின் ஆர்வத்திற்காக இது; தேதியை கவனிக்கவும்.
  http://www.tamilvu.org/coresite/html/cwswoap1.htm

  ReplyDelete
 11. Seekkiram antha katturaiyai virivaaga kodungal
  Naangal malaysiyavil ezhuthaveandum puthakathil

  ReplyDelete
 12. நல்ல பதிவு திரு.பத்ரி.

  முனைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தற்போது ஆன்டிராய்டு அடிப்படையிலான தமிழ் ஐசிஆர் ஐ உருவாக்கிஉள்ளார். அவற்றினை தற்போது எங்களின் சிபேடு டேப்ளேட்களில் சோதித்து வருகின்றோம். விரைவில் அவரின் இந்திய மொழிகளுக்கான ஐசிஆர் மென்பொருட்கள் அடங்கிய எங்கள் சிபேடு டேப்ளேட் கணினியில் கொடுக்க உள்ளோம்.

  ReplyDelete