Tuesday, April 05, 2005

சேவாக், தோனி அபார ஆட்டம்

இந்தியா இரண்டாவது வெற்றி


டாஸில் ஜெயித்த இந்தியா, கொச்சியில் வெறுமே 282 மட்டும் அடித்ததோடில்லாமல் விசாகப்பட்டிணத்தில் நிறைய அடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர் என்று மட்டும் புரிந்தது. ஆனால் நிறைய என்றால் என்ன என்று முழுவதுமாகப் புரியவில்லை.

சேவாக் எப்பொழுதும் போல முதல் பந்திலிருந்தே அடிதடியை ஆரம்பித்தார். முதல் ஓவரிலேயே ஒரு பந்து உள்புற விளிம்பில் பட்டு ஸ்டம்ப்பில் விழாமல் பத்திரமாக ஃபைன் லெக் எல்லைக்கோட்டுக்குச் சென்றது. அதன்பின் ஒரே அடிதடியில் இறங்கினார். கவர் திசையில் சாமியை ஒரு சிக்ஸ். நவீத் வீசிய அளவு குறைந்த பந்தை ஸ்கொயர் லெக்கில் ஹூக் செய்து ஒரு சிக்ஸ். ஆனால் இதற்கிடையில் டெண்டுல்கர் மிக அவசரமாக ஒரு ரன் எடுக்க நினைத்து மிட்-ஆனில் நின்றிருந்த யூசுஃப் யோஹானா கையில் பந்து நேராக, வேகமாகச் சென்றிருந்தும் ஓடத் தொடங்கினார். யோஹானா நேராக ஸ்டம்பைப் பதம் பார்த்து டெண்டுல்கரை வீட்டுக்கு அனுப்பினார். இது தேவையற்ற ரன் அவுட்.

அடுத்து இந்தியா விக்கெட் கீப்பர் மஹேந்திர சிங் தோனியை அனுப்பியது. கமெண்டரி சொல்லிக்கொண்டிருந்தவர் - அமீர் சொஹெய்ல் என்று நினைக்கிறேன் - இந்த மாற்றத்துக்குக் காரணம் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரராக ஷாஹீத் ஆஃப்ரீதி வருவதாக இருப்பதுதான் என்றும் அதனால் இந்தியா பயந்து 280 எல்லாம் போதாது, நாம் 300க்கு மேல் அடிக்க வேண்டும் என்று தோனியை அனுப்பியுள்ளனர் என்பது போல ஏதோ பேசினார். பாவம், ஆஃப்ரீதி தான் பேட்டிங் செய்யும்போது ரன்களே பெறப்போவதில்லை என்று அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும் இந்த மாறுதல் தேவையில்லாதது போலவே தோன்றியது. அப்பொழுது இந்தியா ஓவருக்கு 7-8 ரன்கள் பெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் தோனி வந்ததும் ஓவருக்கு 8-10 ரன்கள் வந்தன.

சேவாக் ஆஃப்ரீதியின் ஓர் ஓவரில் முதல் நான்கு பந்துகளில் வரிசையாக நான்கு பவுண்டரிகளை அடித்தார். ஐந்து ஓவர்கள் கடைசியில் இந்தியா 47/1, பத்து ஓவர் கடைசியில் 89/1. யார் பந்து வீசினாலும் சேவாக் பிய்த்து உதறினார். நவீத்-உல்-ஹஸன் ஒருவர்தான் ஓவருக்கு ஆறு ரன்கள் என்று கொடுத்துக்கொண்டிருந்தார். பிறரெல்லாம் ஓவருக்கு 8-10 ரன்கள் என்று போய்க்கொண்டிருந்தனர். அதனால் மீண்டும் வந்த நவீத்-உல்-ஹஸன் 14வது ஓவரில் சேவாகை அவுட்டாக்கினார். முந்தைய பந்தில் ஃபைன் லெக் மேல் சுழற்றி நான்கை அடித்த சேவாக், அடுத்த பந்தில் மிட்-விக்கெட் மேல் தூக்கி அடிக்கப் போய் சல்மான் பட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். சேவாக் 40 பந்துகளில் 74 ரன்கள், 12x4, 2x6!

தோனி அறிந்து கொள்ள முடியாத அற்புதமாக இருந்தார். காட்டடி அடிக்கக் கூடியவர் என்று உள்ளூர் ஆட்டங்களிலிருந்தே தெரியும். ஆனால் சேவாக் அவுட்டானதும், நிதானமாக விளையாட ஆரம்பித்தார்.

கங்குலி வழக்கம் போல சொதப்பல். கொஞ்ச நேரம் பந்துகளை மட்டைக்கு நடுவில் வாங்கி அடித்து 'நெட் பிராக்டீஸ்' செய்வது போல விளையாடினார். பின் ஒரு நல்ல நான்கை அடித்தார். பின் மொஹம்மத் சாமி பந்தில் க்ளீன் பவுல்ட் ஆனார். இம்முறை தேவலாம். 9 ரன்கள். அடுத்து இந்தியாவின் காவல் தெய்வம் திராவிட் ஆட வந்தார். தோனி போன்ற முரட்டுக் காளையை சற்றே வழி காட்டி சதமடிக்க வைத்தார். சதத்தைத் தாண்டியும் தோனி நல்ல வலுவுடன் இரண்டு ரன்கள் ஓடிக்கொண்டிருந்தார். கொச்சியில் சேவாக், திராவிட் இருவருமே சதத்தைத் தாண்டியதும் வலுவிழந்து ஆட்டமிழந்ததை ஞாபகம் வைக்கவும்.

நடுவில் ஒரு தேனீக்கூட்டம் உள்ளே புகுந்து ஆட்டக்காரர்களை பயமுறுத்தியது. தோனியைத் தவிர அனைவரும் கீழே விழுந்து தரையோடு தரையாகக் குப்புறப் படுத்துக் கிடந்தனர். தோனிக்கு பந்து வீச்சாளர்கள் மீதும் பயமில்லை, தேனீக்கள் மீதும் பயமில்லை. தோனி இருந்த ஃபார்மில் தேனீக்களுக்குத்தான் பயம், மைதானத்தை விட்டுப் ப்றந்து சென்றன.

ஆட்டத்தின் தொடக்கத்தில் யாரோ சில பாவிகள் ஒரு புறாவைப் பிடித்து அதன் கழுத்தில் ஏதோ ஒரு கடிதத்தைக் கட்டி வைத்து அதன் முதுகில் இந்தியாவின் மூவர்ணக் கலவையைப் பூசியிருந்தனர். அது பாவம், மைதானத்தில் ஓரிடத்தில் கழுத்தைச் சுற்றி இறுக்கியிருந்த கயிற்றை எப்படி விடுவிப்பது என்று திண்டாடிக் கொண்டிருந்தது. அதன் வலியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத வர்ணனையாளர்கள் அது இன்ஸமாம்-உல்-ஹக்குக்கு ஒரு தகவலை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறது என்று ஜோக் அடித்து அசத்திக்கொண்டிருந்தனர்.

தோனி 15x4, 4x6 என்று 123 பந்துகளில் 148 ரன் அடித்து பந்தைத் தூக்கி அடித்து எல்லைக்கோட்டின் அருகில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு இன்னுமொரு ஸ்டார். திராவிட் அரை சதத்தைப் பெற்றார். பின் வந்தவர்கள் அனைவரும் (காயிஃப் தவிர்த்து) தம்மால் முடிந்தவரை வேகமாக ரன்கள் சேர்த்தனர். முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால் ஜாகீர் கான் அடித்த இரண்டு சிக்ஸர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். இந்தியா கடைசியில் 50 ஓவர்களில் 356 ரன்கள் பெற்றிருந்தது.

பாகிஸ்தான் பந்து வீச்சாலர்கள் மோசமாக வீசினார்கள் என்று சொல்ல முடியாது. சேவாக், தோனி இருவரும் மிக அற்புதமாக விளையாடினார்கள் என்று மட்டும்தான் சொல்ல முடியும். பாகிஸ்தான் தடுப்பாளர்கள் அதிகமாக இரண்டு கேட்ச்களை விட்டிருக்கலாம். அதுவும் கடைசி நேரங்களில்தான். இன்ஸமாம் ஒரு நேரத்தில் ஆட்டத்தில் ஆர்வத்தை இழந்து எதையுமே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

இந்த எண்ணிக்கையை பாகிஸ்தானால் மீறுவது மிகக் கஷ்டமே என்றாலும் கடைசிவரை போராடினர். சில முக்கியமான நிகழ்வுகளால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. முதலாவது ஆஃப்ரீதியின் விக்கெட். இரண்டாவது ஓவரை வீசவந்த நேஹ்ரா ஆஃப்ரிதிக்கு சற்றும் வாய்ப்பு கொடுக்காமல் நேராக ஸ்டம்பில் வீசினார். அதை வெட்டி ஆட முயற்சி செய்து பவுல்ட் ஆனார் ஆஃப்ரீதி. ஜீரோ.

இரண்டாவது இன்ஸமாமின் ரன் அவுட். அப்துல் ரஸாக் பந்தை ஷார்ட் ஃபைன் லெக்கிற்குத் தட்டிவிட்டார். இன்ஸமாம் படு வேகமாக ஓடி ரன் எடுக்கப் பார்த்தார், ஆனால் ரஸாக் நகரவேயில்லை. ஹர்பஜன் பந்தை டெண்டுல்கருக்குக் கொடுக்க, எளிதான ரன் அவுட். கொதித்துப் போன இன்ஸமாம், ரஸாக்கைத் திட்டிக்கொண்டே டிரெஸ்ஸிங் ரூமுக்குப் போனார். போகும் வழியில் கடுப்புடன் மட்டையை விட்டெறிந்தார். நிச்சயம் இந்தச் செய்கைக்காக அவருக்கு அபராதம் காத்திருக்கிறது.

மூன்றாவது ரஸாக்கின் விக்கெட். போனமுறை ஓசி விக்கெட்டுகள் டெண்டுல்கருக்குக் கிடைத்தது போல இந்த முறை யுவராஜ் சிங்குக்கு. மோசமான பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே. விட்டிருந்தால் வைட் கிடைத்திருக்கும். ஆனால் ரஸாக் அதை அடிக்கப் போய், மெலிதான விளிம்பில் பட்டு தோனியிடம் கேட்ச். ரஸாக் ஏற்கெனவே காலை நொண்டிக்கொண்டு ஷாஹீத் ஆஃப்ரிதியை ரன்னராக வைத்துக்கொண்டு ரன்கள் பெற்றுக்கொண்டிருந்தார். தொடர்ந்து யுவராஜ் சிங்குக்கு இன்ன்னமும் இரண்டு ஓசி விக்கெட்டுகள் கிடைத்தன.

நான்காவது யோஹானாவின் விக்கெட். அனைவரும் அவுட்டானாலும் யோஹானா இன்னமும் அவுட்டாகாமல் வேகமாகவே ரன்களைச் சேர்த்தார். ஹர்பஜன், டெண்டுல்கர், யுவராஜ் என்று அனைவரையும் சிக்ஸ் அடித்து விளாசினார். ஆனால் நடுவில் ரன் அவுட்டிலிருந்து மீள கீழே விழுந்து கையில் சிராய்ப்பு. அதை வைத்து சிறிது நேரம் கடத்தினார் யோஹானா. இதனால் கங்குலிக்குக் கோபம். நடுவர்களிடம் முறையிட்டார். பின் யோஹானாவிடமே சண்டை போட்டார். பொறுமையாக கையில் பிளாஸ்டர் போட்டுக்கொண்டு வந்த யோஹானா நேஹ்ராவை சிக்ஸ் அடிக்க முனைந்து கவர் திசையில் நின்ற காயிஃப் கையில் கேட்ச் கொடுத்தார்.

இதற்குப்பின் ஆட்டம் முடிய வேண்டியது ஒன்றுதான் பாக்கி. மெதுவாக ஒவ்வொரு விக்கெட்டாக விழுந்தது. ஆனாலும் 44 ஓவர்களில் பாகிஸ்தான் 298 வரை வந்துவிட்டது.

இந்தியாவின் பந்துவீச்சிலும் பிரமாதமாக ஒன்றுமில்லை. ஆனால் பேட்டிங் செய்தபோது நன்றாக ரன்கள் சேர்த்தது இந்தியாவுக்குக் கடைசியில் உதவி புரிந்தது. இப்பொழுதெல்லாம் 300, 350 போன்ற ரன்கள் கூட ஓர் அணியைக் காப்பாற்றாது போலிருக்கிறது.

அடுத்த முறை எப்படியாவது டாஸில் ஜெயித்துவிட வேண்டும் என்று இப்பொழுதிலிருந்தே இன்ஸமாம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்திருப்பார்.

4 comments:

 1. //அடுத்து இந்தியாவின் காவல் தெய்வம் திராவிட் ஆட வந்தார்.//

  காவல் தெய்வம்?! நீங்கள் திராவிட் ஆதரவாளர் மட்டுமல்ல. 'அம்மா' கட்சியை சேர்ந்தவர் என்பதும் இப்போதுதான் தெரிகின்றது.

  ReplyDelete
 2. //இந்த மாறுதல் தேவையில்லாதது போலவே தோன்றியது.//

  நல்ல ரன் ரேட்; நல்ல ஃபார்மில் ஷேவாக்; யாராவது strike rotate செய்து ஷேவாகை ஆட விட்டால் போதும் - என்ற நிலையில் தோனி களமிறங்குவதைக் கண்டதும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மாறுதல் என்று கங்குலி பேச்சிலிருந்து தெரிகிறது. எப்படியாகிலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தோனிக்கு பாராட்டுக்கள்! இந்த விஷயத்தில்தான் நமது தமிழக ஆட்டக்காரர்களெல்லாம் கோட்டை விட்டார்கள். (தற்போதைய தமிழக அணியின் ஆட்டக்காரர்கள் பற்றி உங்களிடமிருந்து ஒரு பதிவை எதிர் பார்க்கிறேன். முன்பெல்லாம் சுனில் சுப்ரமணியம், சரத், ஸ்ரீராம், டி. வாசு.. என்று பெயர் பெற்ற ஆட்டக்காரர்கள் இருந்தார்கள். இப்போது யார் நம்பிக்கையாக ஆடுகிறார்? சரத் இன்னும் அணியில் இருக்கிறாரா?)

  //நிச்சயம் இந்தச் செய்கைக்காக அவருக்கு அபராதம் காத்திருக்கிறது.//
  //கங்குலிக்குக் கோபம். நடுவர்களிடம் முறையிட்டார்.//

  நடுவர்கள், தமக்கு ஏற்பில்லாத முடிவை எடுக்கும்பொழுதெல்லாம் பந்து வீச்சாளர்கள்/கேப்டன்கள் அவர்களிடம் சென்று விளக்கம் கேட்பதை பார்க்க முடிகிறது. இன்றுகூட சாமி தனக்கு அளிக்கப்பட்ட வைடுக்கு இவ்வாறு விளக்கம் கேட்டார். இதெல்லாம் எந்தளவு அனுமதிக்கப்படுகிறது? இதற்கு விதிமுறைகளில் இடமுண்டா?

  //இப்பொழுதெல்லாம் 300, 350 போன்ற ரன்கள் கூட ஓர் அணியைக் காப்பாற்றாது போலிருக்கிறது//

  20-20 கிரிக்கெட்டை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இதெல்லாம் சகஜம் பத்ரி. முன்பெல்லாம் 230+ என்பது நல்ல எண்ணிக்கை. 250+ அசாத்திய எண்ணிக்கை என்று இருந்தது. தடவி தடவி 18, 19வது ஓவரில் ஐம்பது அடிப்பார்கள். கடந்த பத்து வருடங்களில் ஆட்டம் எவ்வளவு மாறி விட்டது என்பதை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. பரபரப்பும், எண்டர்டெய்ன்மெண்டும் கூடி விட்டது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், அதிரடி ஆட்டக்காரர்களுக்கு மட்டுமேயான ஆட்டமாக ஒருநாள் கிரிக்கெட் மாறி வருவது வருத்தத்தை தருகிறது. நளினமான, நுணுக்கமான ஆட்டக்காரர்களுக்கு அங்கே இடமில்லை.

  தற்போதைய இந்திய அணியின் இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம் - நெஹ்ரா தவிர, மற்ற கடைநிலை ஆட்டக்காரர்கள் அனைவரும் மட்டை வீசக் கூடியவர்களாக. தைரியமாக பந்தை எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இது சமீபமாக பல ஆட்டங்களில் நமக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது. இன்று ஆட்டத்தின் இறுதியில் பாலாஜியும், ஜாகீரும் ரன் குவித்திருக்கவில்லையென்றால் 300+ எண்ணிக்கையை பாகிஸ்தான் சுலபமாக எட்டியிருக்கக் கூடும். (சாமி வீசிய பவுன்ஸரை ஜாகீர் கான் முன்னங்காலில் சென்று அடித்த சிக்ஸர் இன்னும் கண்ணில் நிற்கிறது)

  ============
  முதல் ஆட்டத்தின் முடிவில், இரவு ஜெயா டி.வியில் நீங்கள் பங்குபெற்ற நிகழ்ச்சி கண்டேன். ஒரு கேள்வியை கேட்டுவிட்டு பிறகு உங்கள் யாரையும் பேச விடாமல் அடிக்கடி குறுக்கிட்டு, தானே அதற்கு நீண்ட விளக்கம் கொடுத்து ரமேஷ் நிகழ்ச்சியை நடத்திச் சென்ற விதம் எரிச்சலையே தந்தது. இன்றும் நிகழ்ச்சி இருந்ததா என்று தெரியவில்லை.

  ReplyDelete
 3. கே: ஆட்டக்காரர்கள் நடுவரிடம் அவ்வப்போது சென்று விளக்கங்கள் கேட்கலாமா? எந்த அளவுக்கு இதற்கு அனுமதி உண்டு?

  ப: கேட்கலாம். பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று நடுவருக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் நல்ல நடுவர்கள் அழுத்தமாக, ஆணித்தரமாக, நேரத்தை வளர்க்காமல் பதில் சொல்வார்கள், சொல்கிறார்கள். முன்பெல்லாம் பதிலைக் கேட்டதும் ஆட்டக்காரர்கள் "thanks" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் இன்று பலர் முரட்டுத்தனமாக நின்றுகொண்டே இருக்கிறார்கள்.

  ReplyDelete
 4. சென்ற கிரிக்கெட் பதிவின் பின்னூட்டத்தை இங்கு மீண்டும் இடுகிறேன்.

  Greg's column
  http://www.hindu.com/2005/04/07/stories/2005040701182100.htm
  the KING on sachin
  http://www.hindu.com/2005/02/10/stories/2005021008151600.htm
  http://www.hindu.com/2005/02/11/stories/2005021107792100.htm
  ஆனாலும் எனக்கு பிடித்த பத்தி இதுதான் :)
  Tendulkar stands still at the crease but loves to attack and is very positive. He could have scored more runs but then he is no Geoff Boycott. As a person, Tendulkar has invited less controversy than Brian. On a different note, I can't help commenting that when it comes to style, I find Rahul Dravid most stylish. In boxing parlance, he gets his punches without anyone noticing it. At the end of it, his opponent is bruised!

  ReplyDelete