நேற்று காலை (சனிக்கிழமை, 2 அக்டோபர் 2004) சத்யம் திரையகத்தில் ஸ்டுடியோ 5 அரங்கில் அம்ஷன் குமார் இயக்கிய 'ஒருத்தி' திரைப்படம் திரையிடப்பட்டது. சனி, ஞாயிறு இரண்டு நாள்களும், காலை 10.00 மணிக் காட்சி மட்டும்தான்.
ஸ்டுடியோ 5, சிறிய அரங்கு. கிட்டத்தட்ட 200-230 பேர்கள் உட்கார்ந்து பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். கூட்டம் அந்த அளவு வந்திருந்தது. நிச்சயம் 200 பேர்களுக்கு மேல் வந்திருப்பார்கள்.
ஒருத்தி சாதாரணமான வர்த்தக சினிமா அல்ல. ஒரு ஹீரோ, ஆறு பாட்டு, நாலு தொப்புள் டான்ஸ், தனியான விவேக் காமெடி டிராக், உருப்படியில்லாத கிளைமாக்ஸ் என்றெல்லாம் இல்லை. அதே சமயம் கலைப்படம் என்று நம் மக்கள் கேலி செய்யும், போரடிக்கும் படமும் அல்ல.
கி.ராஜநாராயணனின் கதையான 'கிடை' என்பதை நல்ல திரைக்கதையாக்கி உள்ளார் அம்ஷன் குமார். கதையை ஏற்கனவே பல இடங்களில் கேள்விப்பட்டிருப்பீர்கள். நியூ ஜெர்சி குறும்பட/ஆவணப்பட விழாவில் இந்தப் படம் சிறப்புப் படமாகப் போட்டுக் காண்பிக்கப்பட்டது. [அருண் வைத்யநாதனின் பதிவு, தி ஹிந்து விமர்சனம்]
சுருக்கமாக: 1800களின் இறுதியில் நடக்கிறது கதை என நினைக்கிறேன். ஆலம்பட்டி என்னும் கிராமத்தில் ஆடு மேய்ப்பவர்கள் இடையே நடக்கும் கதை. செவனி என்பவள் கூலிக்காக ஆடுகளை மேய்க்கும் தலித் பெண். துடுக்காகப் பேசக்கூடியவள். பயமற்றவள். எல்லப்பன் சொந்த ஆடுகளை மேய்க்கும் உயர்சாதி இளைஞன். இருவருக்குமிடையில் காதல். எல்லப்பன், அப்பொழுதைய தன் சாதி வழக்கப்படி செவனியை இரண்டாவது கல்யாணமாவது செய்து கொள்வதாக வாக்களிக்கிறான். இருவரும் ஆடுகளை மறந்து விட்டு கும்மாளம் அடிக்கும்போது ஆடுகள் விதவை ஒருத்தியின் பருத்திக்காட்டை மேய்ந்து விடுகின்றன. அதற்குப் பின்னால் இருவருடைய காதலும் வெளியே பரவலாகத் தெரிந்து விடுகிறது. எல்லப்பனின் தந்தை உறவிலேயே எல்லப்பனுக்கு இரண்டு பெண்களை மணமுடிக்க முடிவு செய்கிறார். (ஒருவன் இரண்டு மணம் புரியலாமாம், ஆனால் மூன்றாவது கூடாது. எனவே இந்த இரண்டு மணங்களும் முடிந்தால், செவனியை எல்லப்பனால் சாதி தாண்டி மணக்க முடியாது.)
அந்த ஊர் ஜமீன்தார் (கஞ்சாவில் மிதப்பவர்) ஊராரிடமிருந்து வரி வசூல் செய்து அதனை பிரிட்டிஷ் காரர்களிடம் கொடுக்காது தான் அனுபவிக்கிறார். வரி வசூல் செய்ய ஜான் வில்லியம்ஸ் என்றதொரு பிரிட்டிஷ் இளைஞன் அந்த ஊருக்கு வருகிறான். அவனுக்குக் கொடுக்க, தன் மக்களிடம் மேலும் அதிக வரி வசூல் செய்ய முடிவு செய்கிறார் ஜமீன்தார். விளைச்சல் அதிகமின்மையாலும், அதிக வரியைத் தாங்க முடியாதென்பதாலும், ஊரை விட்டே போய்விடலாம் என்று அந்த ஊருக்குப் பிழைக்க வந்த எல்லப்பன் சாதியினர் முடிவு செய்கின்றனர்.
இதற்கிடையில் செவனி பிரிட்டிஷ் அதிகாரியை சந்திக்க நேரிடுகிறது. அவனது கண்ணில் குளவி கொட்டிய எரிச்சலைப் போக்க ஆட்டுப்பால் தருகிறாள் செவனி. பின் தைரியமாக அவனிடம் ஜமீன்தார் ஏற்கனவே வரி வசூல் செய்ததைச் சொல்கிறாள். எல்லப்பன் சாதியினர் அனைவரையும் கூட்டிக்கொண்டு வந்து பிரிட்டிஷ் அதிகாரியைச் சந்திக்க வைக்கிறாள். உண்மையை அறிந்த பிரிட்டிஷ் அதிகாரி மேலிடத்திற்கு எழுதி ஜமீன்தார் என்ற இடைத்தரகர் தேவையின்றி வரியை பொதுமக்கள் நேரிடையாக அரசுக்குக் கட்டிவிடலாம் என்ற ஆணையை பிறப்பிக்க வைக்கிறான். கோபம் கொண்ட ஜமீன்தார் ஆட்கள் செவனியை நையப்புடைத்து மரத்தில் கட்டி வைக்கின்றனர்.
பிரிட்டிஷ் ஆணை வந்தவுடன், அதனால் வசதி பெற்றவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து செவனிக்கு 20 ஆடுகளைத் தர முடிவு செய்கின்றனர். இதற்கிடையே எல்லப்பனுக்கு மணம் பேசியுள்ள விஷயம், செவனிக்குத் தெரிய வருகிறது. அந்த ஊரின் வழக்கப்படி கிடையை மறிக்கிறாள். [கிடையை மறித்தல்: அனைவரும் மேய்க்கும் ஆடுகள் ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். யாருடைய ஆடுகளாவது வயலுக்குள் புகுந்து நாசம் செய்தால் அந்த வயலின் சொந்தக்காரர் கிடையை மறிப்பார். அதாவது நியாயம் சொல்லாமல், நஷ்ட ஈடு தராமல், யாருடைய ஆடுகளையும் மேய்ச்சலுக்கு விட மாட்டார்கள். யார் ஆடுகள் தவறு செய்தன என்று கண்டறிய முடியாவிட்டால் பொதுப்பணத்திலிருந்து நஷ்ட ஈடு கொடுத்துவிட்டு அதன்பின் குற்றவாளியைக் கண்டுபிடிப்பார்கள். கிடை மறித்தல் நீங்கிய பின்னர்தான் எல்லோருடைய ஆடுகளும் மேய்ச்சலுக்கு விடப்படும். எனவே அனைவரும் ஒன்றுசேர்ந்து நியாயத்தை சீக்கிரமாக வழங்க முயலும் அற்புதமான அமைப்பாக இருந்திருக்கிறது!]
இரகசியமாகக் கூடும் பஞ்சாயத்து செவனி, எல்லப்பன் சேரலாம், ஆனால் அந்த ஊரை விட்டுப் போய்விட வேண்டும் என்று உத்தரவிடுகிறது. செவனியால் இதைத் தாங்க முடிவதில்லை. தன் உதவியால் இப்பொழுது நல்ல வாழ்க்கையைப் பெற்றுக்கொண்டவர்கள், தன் பிறப்பினால் தன்னை அந்த ஊரை விட்டு விரட்டுவது என்ன நியாயம் என்று கேள்விகளால் அவர்களைத் தலைகுனிய வைக்கிறாள். தான் இருக்கும் இடத்தை விட்டுப் போகப்போவதில்லை, தனக்கு அந்தத் திருமணம் தேவையில்லை என்று முடிவு செய்கிறாள். எல்லப்பனுக்கு உறவிலேயே இரண்டு பெண்களுடன் திருமணம் முடிகிறது.
ராஜநாராயணின் முடிவிலிருந்து அம்ஷன் குமார் விலகுகிறார் [என அறிகிறேன்]. பிரிட்டிஷ் அதிகாரி எழுதப் பயன்படுத்திய பறவை இறகை செவனி முன்னர் பத்திரப்படுத்தியிருந்தாள். அவளது தோழிகள் அந்த இறகை விளையாட்டாக எடுத்து விட்டெறிய, பறந்து வரும் இறகை செவனி பாய்ந்து ஓர் எழுதுகோலைப் பிடிப்பது போலப் பிடிக்கிறாள். படம் அத்துடன் நிறைவு பெறுகிறது.
அம்ஷன் குமாரின் திரைக்கதையும், படமாக்கலும் பெரும்பாலும் தொய்வின்றி அழகாக எடுத்துச் செல்லப்படுகின்றன. படத்துக்கு இசை பலவீனமாகவே உள்ளது. தேவையற்ற இடங்களில் உச்சஸ்தாயியில் இசை பேச்சை மூழ்கடிக்கிறது. இன்னமும் இதமாக, இருப்பதே தெரியாமல் இருந்திருக்கலாம். செவனியாக நடித்த பூர்வஜா மிக நன்றாகச் செய்துள்ளார். எல்லப்பனாக நடித்த கணேஷ் பாபு இன்னமும் நன்றாகச் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. இவர்கள் இருவரையும் விட துணை நடிகர்களான கிதாரியாக (கிடைத் தலைவர்) நடித்த பாரதி மணி, ஊர் புத்திசாலி சுப்பையாவாக நடித்தவர் (பெயர் தெரியவில்லை), மற்றும் பலர் மிக நன்றாக, இயல்பாக நடித்தனர். ஒரு காட்சியில் மட்டும் வரும் சுருட்டு பிடிக்கும் கிழவி, கணக்கு வாத்தியார், கோமணத்தோடு ஊரைச் சுற்றும் சிறுவர்கள், செவனியின் வாயே-பேசாத முறை மாமன் (கடைசியில் அறுவாளை எடுத்து செவனியை ஒரே வெட்டில் வெட்டி விடுவேன் என்பான்), கை துரு-துருவென எதையாவது திருடியே ஆக வேண்டும் என்று துடிக்கும், ஆனால் கால்நடைகளுக்கு இலவச வைத்தியம் செய்யும் மருத்துவர், திரு-திருவென முழிக்கும் மீசையில்லாத துபாஷ், கஞ்சா போதையில் சதா சிரித்துக் கொண்டேயிருக்கும் ஜமீன்தார் என்று ஒவ்வொரு பாத்திரமும் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டுள்ளது.
இத்தனை திறமையுள்ள நடிகர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது. அவர்களை திறம்படப் பயன்படுத்தாதது யார் குற்றம்?
அம்ஷன் குமாரின் நெறியாள்கை மிகவும் பாராட்டப்பட வேண்டியது. செவனி, பிரிட்டிஷ் அதிகாரி நெருக்கம் இயல்பாகத் தோன்றவில்லை. ஜான் வில்லியம்ஸ் கேம்பில் அவள் எப்பொழுதும் இருப்பது போல காண்பிப்பது சரியாகத் தோன்றவில்லை. அதே சமயம் செவனிக்கு ஜான் வில்லியம்ஸ் மீது வெறும் மதிப்பும் மரியாதையும் மட்டும்தானா, அல்லது உடல் ரீதியாக விருப்பமும் உண்டா என்பதை பார்வையாளர்கள் கருத்துக்கே அழகாக விட்டுவிடுகிறார். திடீரென ஒருநாள் ஜான் வில்லியம்ஸ் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போய்விட செவனி பதைபதைப்பது நன்கு படமாக்கப்பட்டுள்ளது. சின்னச்சின்ன விஷயங்களான ஜமீன்தார் வெற்றிலைக்குள் அபின் வைத்து சாப்பிடுவது, கிராம மக்கள் வெற்றிலை போடுவது, மூக்குப்பொடி போடுவது, முள் எடுப்பான் மூலம் முள் எடுப்பது, உணவு முறை, உள்ளூர்ப் பழக்க வழக்கங்கள், கல்யாணச் சடங்கு, பெரியவர்கள் கள் குடித்துவிட்டு உளறுவது, திருமண ஊர்வலம், உள்ளூர இருக்கும் சாதிப்பற்று, நாட்டார் கடவுள்கள் பற்றி, சாமியாடுவது, குறி பார்ப்பது என்று பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். கி.ராஜநாராயணனின் கதையின் கட்டுக்கோப்பும் இதற்கு வெகுவாக உதவியிருக்கக் கூடும். ஆயினும் நல்ல நல்ல கதைகளையும் கூட குதறும் இயக்குனர்கள் மத்தியில் இத்தனை ஈடுபாட்டுடன், உலகத் தரத்துடன் 'ஒருத்தி'யை எடுத்த ஒருவரை, நல்ல தமிழ் சினிமாவை வேண்டும் அத்தனை பேரும் வாழ்த்தி வரவேற்க வேண்டும்.
பி.எஸ்.தரனின் கேமரா உறுத்தாமல், மிக அழகாய் இயங்கியுள்ளது. எடிடிங் நன்றாக உள்ளது.
இந்தப் படத்தை இன்னமும் கூட நன்றாகச் செய்திருக்கலாம் என்ற நினைப்பு தோன்றலாம். ஆனால் தமிழ் சினிமாவின் இன்றைய நிலையையும், இதுபோன்ற படங்கள் எடுக்கக் கிடைக்கும் குறைந்த பட்ஜெட்டையும் பார்க்கும்போது இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். படத் தயாரிப்பாளர்கள் தாரா அம்ஷன்குமார், திண்ணை கோபால் ராஜாராம், இணை-தயாரிப்பாளர் காஞ்சனா தாமோதரன் ஆகியோருக்கு நன்றி!
சப்-டைட்டில்கள் பல இடங்களில் சரியாக இல்லை. அதனைச் சரி செய்ய வேண்டும். [சாமியாடி பாடுவதெல்லாம் அபத்தமாக ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளன போலத் தெரிகிறது!] இந்தப் படம் டிவிடி, விசிடியாக வர வேண்டும். அதனை அனைவரும் வாங்கி, தயாரிப்பாளர்களையும், இயக்குனரையும் ஊக்குவிக்க வேண்டும்.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
6 hours ago
திரையிடப்படுவது ஓர் அரங்கில், அதுவும் இரண்டே நாட்கள், இரண்டே காட்சிகள், சிறந்ததொரு திரைப்படத்திற்கான நிலையைப் பாருங்கள்! விரைவில் டிவிடி, விசிடி வரட்டும்.
ReplyDeleteHi Badri, Thanks. It seems the response was good for the screening. So, it will be screened for two more weekends I guess. You may know the details sooner through media or If I get it, I will share too. Regards, PK Sivakumar
ReplyDeleteBy: PK Sivakumar
பத்ரி,
ReplyDeleteநன்றி. நீர் கொடுத்து வைத்தவர் ஐயா!! :)
பிட்ஸ்பர்க்கில் உட்கார்ந்துகொண்டு இந்தப்படத்தை எப்படி பார்ப்பது? விரைவில் DVD-யில் வரவேண்டுகிறேன்.
- முக
By: murugan kannan
நேற்றும் இன்றும் (25 அக்டோபர் 2015) இந்தப் படம் டிடி பாரதி சேனலில் ஒளிபரப்பானது. மீண்டும் எப்போதாவது அதே சேனலில் வர வாய்ப்பு இருக்கிறது.
ReplyDeleteசரவணன்