Sunday, October 31, 2004

கவர்னர் பந்தாட்டம்

காங்கிரஸ் என்றுமே சர்க்காரியா கமிஷன் சிபாரிசுகளை ஏற்றது கிடையாது. இன்று நம் நாட்டில் உள்ள கட்சிகளிலேயே federalism பற்றிய மோசமான கருத்துகளை வைத்திருப்பது காங்கிரஸ்தான். இத்தனைக்கும் காங்கிரஸ் மிகவும் வலுவற்ற நிலையில்தான் உள்ளது. இதே காங்கிரஸ் வலுவான, தனியாகவே ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்தால் விளைவு மாநில அரசுகளுக்குப் படுமோசமாக இருக்கும்.

தமிழக ஆளுநர் ராம் மோகன ராவ் மாற்றத்தில் திமுகவுக்கு அதிமுக்கியப் பங்கு இருக்கிறது என்பது இப்பொழுது நன்கு தெளிவாகி விட்டது. முதல்வர் ஜெயலலிதா தனக்கும், மத்திய உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பாடிலுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதியை வெளியிட்டிருப்பது தவறாகவே தோன்றவில்லை. மத்திய அமைச்சர் ஒருவர் மாநில முதல்வர் ஒருவரிடம் எவ்வளவு முட்டாள்தனமாகப் பேசுகிறார் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கும்போது அதற்குத் தேவையான எல்லாவித சாட்சியங்களையும் நீதிமன்றத்தின் முன் வைப்பது சரியான முறைதான். தேநீர் விருந்து அளிக்கவில்லை என்பதற்காக ஓர் ஆளுநர் தூக்கியெறியப்படுகிறார் - அப்படித்தான் முதல்வரிடம் உள்துறை அமைச்சர் சொல்கிறார். இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மத்திய அரசு எப்படி பொறுப்பற்ற விதமாக நடந்து கொள்கிறது என்று காண்பித்துள்ளார்.

உடனே ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார் என்றெல்லாம் கதையளக்க தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தயாராகி விட்டன. இந்த ரகசியக் காப்பு பிரமாணத்தையே மாற்றி அமைக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்காத எதுவுமே ரகசியக் காப்புப் பிரமாணத்தின் பிடிக்குள் இருக்கக் கூடாது.

அதே சமயம் சுர்ஜித் சிங் பர்னாலா திமுக அனுதாபி என்று ஜெயலலிதா தேவையில்லாது குறை சொல்லக் கூடாது. பர்னாலா இதற்குமுன் கருணாநிதி முதல்வராக இருந்தபோது (1989-90) தமிழக ஆளுநராக இருந்துள்ளார். அப்பொழுது மத்தியில் இருந்த அரசு பர்னாலாவை நெருக்கி கருணாநிதி அரசுக்கு எதிரான அறிக்கைகளைக் கொடுக்கச் சொன்னது. அதை ஏற்காத பர்னாலா பதவி விலகினார். திமுக தலைவர் கருணாநிதிக்கும், சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கும் பலத்த நட்பு உள்ளது. எமர்ஜென்சியின் போது பஞ்சாப் தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா பிற தலைவர்களைப் போலவே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சில காலம் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்று நினைக்கிறேன். அப்பொழுதே பர்னாலாவுக்கும், திமுக தலைவர்களுக்கும் நல்ல பழக்கம். சுர்ஜித் சிங் பர்னாலாவின் வாழ்க்கைக் கதை (ஆங்கிலத்தில் Quest for Freedom - A Story of Escape) தமிழிலும் ("விடுதலையைத் தேடி - நான் தப்பித்த கதை") மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பர்னாலாவே ஷிரோமணி அகாலி தள் கட்சியின் தலைவராக, பஞ்சாபின் முதல்வராக இருந்தவர். அப்பொழுது மத்தியில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. எனவே மத்திய-மாநில உறவுகளில் அசிங்கங்கள் அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால், பர்னாலா ஜெயலலிதா அரசுக்கு வேண்டுமென்றே நெருக்கடியைத் தருவார் என்று ஜெயலலிதா நினைக்கக் கூடாது.

6 comments:

  1. ஒரு முழுமையான பதிவை படித்த உணர்வு ஏற்படவில்லை. நிறைய எடிட் செய்து விட்டீர்களா?

    ஆளுநர் என்ற பதவியின் அவசியம் என்ன? அது எதற்காக ஏற்படுத்தப்பட்டது? மாறி வரும் அரசியல் சூழ்நிலையில் இப்பதவி அவசியமானதா? என்பதைப் பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

    ராம்மோகனின் நடவடிக்கைகளில் ஜெயலலிதா சார்பு நிலை வெளிப்படயாக தெரிந்தது உண்மைதான். தன்னுடைய பதவியை தக்க வைக்க அரசியல் தொடர்புகளை உபயோகித்து முயன்றதும் தெளிவாகத் தெரிகிறது.

    இது நியாயப்படுத்தக் கூடியதா?

    அன்புடன்

    ReplyDelete
  2. ஆளுநர் பதவியின் அவசியம் குறித்து எனக்கு இப்பொழுது எந்தத் தீவிரமான எண்ணமும் கிடையாது. மாற்றவேண்டுமானால் பலவற்றையும் மாற்ற வேண்டும் - ஆளுநர் பதவி, குடியரசுத் தலைவர் பதவி, ஆர்டிகிள் 356, ஆர்டிகிள் 355 ஆகியவை, மத்திய, மாநில தலைமை நிர்வாகிகளை (பிரதமர், முதல்வரகள்்) நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது போன்ற பலவற்றைப் பற்றியும் எனக்கு இப்பொழுதைக்கு தீர்மானமான கருத்துகள் கிடையாது.

    ஆளுநர் பதவி என்று ஒன்று இருக்கும் வரையில், அந்தப் பதவி கண்ணியமான முறையில் நடத்தப்பட வேண்டும். அரசியல் கலப்பு முழுவதுமாக இல்லாவிட்டாலும், குறைக்கப்பட வேண்டும். கூர்ந்து பார்த்தால் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஆளுநர் பேரில் சர்ச்சைகள் நடப்பதில்லை. சில மாநிலங்களில் மட்டும்தான் - தமிழ்நாடு அதில் முதல் - இந்தக் கூத்து நடக்கிறது. அதற்குக் காரணம் முதிர்ச்சியற்ற அரசியல் இம்மாநிலங்களில் நடப்பதே.

    ராம்மோகன ராவ் ஜெயலலிதா சார்பு நிலை உள்ளவர் என்று எதைவைத்துச் சொல்கிறீர்கள்? தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தார் என்பது நியாயமற்ற குற்றச்சாட்டு. மத்திய அரசு/குடியரசுத் தலைவர் அவருக்கு ஐந்தாண்டு காலம் பதவி கொடுத்தனர். அதற்கிடையே அவரைப் போகச்சொல்லி பிறர் கேட்டுக்கொண்டதற்காக, உடனே அவர் எதற்காக பதவி விலகவேண்டும்? தான் தவறேதும் செய்யவில்லை என்ற எண்ணம் அவருக்கு இருக்கும் வரையில் எதற்காக அவர் பதவி விலக வேண்டும்?

    இப்பொழுதும் கூட அவர் தானாகப் பதவி விலகவில்லை. பிடித்துத் தள்ளப்பட்டிருக்கிறார். பாஜக ஆட்சியில் வந்தவர்தான் என்றாலும், இவர் ஒன்றும் ஆர்.எஸ்.எஸ் காரர் அல்லவே, துரத்தியே ஆக வேண்டும் என்பதற்கு? இவர் போவதற்கு ஒரே காரணம் திமுகவுக்குப் பிடிக்கவில்லை என்பதுதானே?

    ReplyDelete
  3. தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள அவரது சோனியா காந்தி தொடர்பு மூலமாக ராம்மோகன் செய்த முயற்சிகள், ஜுனியர் விகடன் மற்றும் ரிப்போர்டரில் வெளியாகியுள்ளன. இவற்றில் முழுவதுமாக உண்மை இல்லாவிட்டாலும், ஓரளவு உண்மை இருப்பதாக நான் கருதிகிறேன்.

    பல்வேறு விதமான சட்டங்களுக்கு போதிய ஆலோசனை பெறாமல் ஒப்புதல் அளித்ததைத்தான் ஜெயலலிதா சார்பு நிலை எனக் குறிப்பிடுகிறேன். கந்துவட்டியைக் குறித்த ஒரு சட்டம் ( அதிகப்பட்ச வட்டி விகிதத்தை குறித்து) செல்லாது என கோர்ட்டால் அறிவிக்கப்பட்டது.மற்றொரு சட்டத்தை ஜனாதிபதி திருப்பி அனுப்பினார் ( எதைக் குறித்து என்பது நினைவில் இல்லை)

    டெஸ்மா சட்டத்தைக் குறித்தும் அதை முன் தேதியிட்டு அமுல்படுத்தியது குறித்தும் அதை கவர்னை அனுமதித்தது குறித்தும் எனக்கு குமுறல்கள் உள்ளன. விவாதத்திற்குரிய அம்சங்கள் இவை. சரியா தவறா என்பதை நிர்ணயம் செய்ய முடியாது.

    இந்தியாவில் கவர்னர் பதவிக்கான சிறந்த தரநிர்ணயம் இதுதான்/இவர்தான் என்பதற்கான மதிப்பீடுகள் இல்லை. தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலிக்கூத்துக்கள் இப்பதவிக்கான அவசியம் என்ன என்ற கேள்வியைத்தான் மனதில் எழுப்புகின்றன.

    அரசியல் சார்புநிலையை வைத்துத்தான் கவர்னர் பதவியை பெறுகிறார்கள். ராம்மோகனிற்கு பதவி கிடைத்ததற்கு சந்திரபாபு நாயுடுதான் காரணம். இத்தகைய சூழ்நிலையில் கவர்னர் பதவியிலும் அரசியல் காரணங்கள் தவிர்க்க இயலாததாகிவிடும்.

    ReplyDelete
  4. ராஜ் குமார் சொல்வது சரியே. அவர் என்ன அப்படி செய்துவிட்டார்? அப்படி ஒருவர் இருப்பதே தெரியாமல் இருந்தது ஒன்றுதான் சாதனை. இருக்கும் உரிமைகளை அவர் வெளிப்படையாக, மாநில நலனுக்காகப் பயன்படுத்தி, அந்தப் பதவிக்கான கண்ணியததை நிலைநிறுத்தியதற்கு சில உதாரணங்கள் சொல்ல முடியுமா?
    படீல் சொன்னவை சொத்தைக் காரணங்கள், அதனால் மட்டும் அவர் புனிதராகிவிடமாட்டார்.

    By: காசி

    ReplyDelete
  5. கவர்னர் என்பவர் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை! அது ஓர் executive பதவி கிடையாது. நம் ஜனாதிபதி என்னதான் செய்தார் என்று யாராவது கேள்வி கேட்கிறார்களா?

    மாநில நலனுக்கான வேளைகளை எந்த கவர்னராலும் செய்ய முடியாது. இந்தக் கோப்பைக் காண்பி, அதைச் செய்யாதே என்று சொல்லக்கூட அவருக்கு அதிகாரம் இல்லை. சட்டமன்றம் அவருக்கு அனுப்பும் சட்டங்களைக் கைச்சாத்திட்டு நடைமுறைக்குக் கொண்டுவருதல், கேபினெட் அவருக்கு அனுப்பும் அவசரச் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவர கையெழுத்திடுதல், கேபினெட் தரங்கெட்டு, தடுமாறுவது போல இருந்தால் கூப்பிட்டு எச்சரிக்கை செய்தல் போன்ற ஒருசில பணிகள்தான் அவர் செய்வது. சரி, எங்கே கிடுகிடுவென ஹரியானா, பஞ்சாப், கேரளா, கோவா மாநில கவர்னர்களின் பெயர்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்? கூகிள் இல்லாவிட்டால் முடியாது. ஏனெனில் நாம் பொதுவாக கவர்னர்களின் பெயர்களைக் கேள்விப்படுவதே இல்லை - ஏதேனும் controversy இருந்தாலொழிய.

    ராம் மோகனராவ் அப்பழுக்கு இல்லாதவர் என்ற காரணத்தால் - புனிதமானவர். பாடிலின் சொதப்பலினால் அல்ல.

    நிற்க. பர்னாலா நல்ல மனிதர். என்ன செய்வார்? நல்லவராக, ஒன்றுமே செய்யாமல் இருத்தலே நலம்.

    ReplyDelete
  6. அப்படியானால், என்னிக்கோ செத்துப்போனா குடும்பம் பிழைக்க வழிபண்ண போட்டு வைக்கும் இன்சூரன்ஸ் மாதிரித்தான் கவர்னர். நாம் உயிரோடு இருக்கும் வரை அதனால் பிரயோசனமில்லை. அதே மாதிரி மாநில அரசு நடக்கும் வரை அவருக்கு வேலையில்லை. அதனால் பேசாமல் வேறு ஏற்பாடு (உ.ம். தலைமைநீதிபதி, அல்லது from a Central pool of earmarked people, on demand basis) செய்துவிட்டு இந்த கவர்னர்களையெல்லாம் விட்டுக்கனுப்பிவிடுவது எத்தனையோ வழிகளில் நல்லது. செய்ய மாட்டார்கள். அதைவைத்து அரசியல் பண்ண எல்லாக் கட்சிகளுக்குமே ஆசை. அதனால் செய்ய மாட்டார்கள். நாம்தான் பைசாபிரயோசனமில்லாத 'புனிதர்கள்' பிரச்னைக்கு நம் நேரத்தை விரயம் பண்ணிக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete