Sunday, October 17, 2004

இரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்

இந்த டெஸ்ட் மேட்ச் ஐந்தாவது நாளில்தான், அதுவும் கடைசி வேளையில்தான் முடிவாக வேண்டும் என்று இருக்கிறது!

ஆஸ்திரேலியா அசாதாரணமானதொரு விளையாட்டின் மூலம் இந்த டெஸ்டை ஜெயிக்க தனக்கொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. நான்காம் நாள் ஆட்டம் தொடங்கும்போது அப்படியொரு வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் என்று யாருக்கும் தோன்றியிருக்காது. கில்லெஸ்பி தடுத்தாடக் கூடியவர், நிறைய நேரம் மைதானத்தில் நின்று விளையாடக் கூடியவர் என்பது தெரிந்ததுதான். ஆனால் இந்த அளவுக்கு - கிட்டத்தட்ட நான்கு மணிநேரத்திற்கு நின்று இந்தியாவிற்கு இந்த அளவுக்கு எரிச்சலூட்டுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

முதல் மூன்று நாள்கள் நடந்த ஆட்டத்திலிருந்தே காலை முதல் வேளை அதிகமாக ஒன்றும் நடக்காது என்று தோன்றிவிட்டது. இதுவரை விழுந்த விக்கெட்டுகள் நாள், வேளைப்படி: முதல் நாள்: 0, 3, 8; இரண்டாம் நாள்: 1, 1, 3; மூன்றாம் நாள்: 1, 3, 4. இன்றும் உணவு இடைவேளைக்கு முதல் ஒரு விக்கெட்டும் விழவில்லை. கில்லெஸ்பி அத்தனை பேர் பந்துவீச்சையும் தடுத்தாடினார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசும்போது மட்டும் நிறையத் தடுமாறினார். ஆனால் விக்கெட்டை விட்டுவிடவில்லை. கும்ப்ளே, ஹர்பஜன் இருவரும் இரண்டு முனைகளிலிருந்தும் வீசினர். ம்ஹூம்! யுவராஜ் பந்துவீசினார். ஒன்றும் ஆகவில்லை. உணவு இடைவேளை போது ஆஸ்திரேலியா 230/4 - மார்ட்டின் 67*, கில்லெஸ்பி 15*

உணவு இடைவேளைக்குப் பிறகு உடனே விக்கெட் விழவேண்டும் என்று எதிர்பார்த்தோம். நடக்கவில்லை. ஒரு மணி நேரம் ஆனது. இப்படியே இரண்டாவது புதுப்பந்தை எடுக்க வேண்டியதாயிற்று. அப்பொழுதும் ஒன்றும் ஆகவில்லை. கங்குலி வந்து பந்து வீசினார். பிரயோசனமில்லை. மீண்டும் ஸ்பின்னர்கள். ஹர்பஜன் பந்துவீச்சில் கில்லெஸ்பி பந்துவீச்சாளர் கைக்கே சற்று கடினமான கேட்ச் கொடுத்தார். ஹர்பஜன் கையில் பந்து பட்டது, ஆனால் சிக்கவில்லை. படேல் - இவரை என்ன செய்ய? - ஹர்பஜன் பந்துவீச்சில் ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை இழந்தார். பின் கும்ப்ளே பந்துவீச்சில் மற்றொரு ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டார்.

இதற்கிடையே மார்ட்டின் தன் சதத்தை கும்ப்ளே பந்துவீச்சில் லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்துப் பெற்றார். அற்புதமான இன்னிங்ஸ். உச்ச அழுத்தத்திலிருந்து அணியைக் காத்து, கில்லெஸ்பியை அரவணைத்து மார்ட்டின் இந்த சதத்தைப் பெற்றிருக்காவிட்டால் இன்று ஆட்டம் முடிந்திருக்கும். புல், கட் ஆகியவையே மார்ட்டின் அதிகமாக அடித்த ஷாட்கள்.

கிட்டத்தட்ட தேநீர் இடைவேளை நேரம் வந்துவிட்டது - இன்னமும் பத்து நிமிடங்கள்தான் பாக்கி. ஹர்பஜன் வாலாஜா சாலை முனையிலிருந்து (இந்தப் பக்கம் இருந்து வீசினால்தான் அதிகமாக விக்கெட்கள் விழுகின்றன) வீசிய பந்து மார்ட்டினின் மட்டையின் அடிப்பாகத்தில் பட்டு முதல் ஸ்லிப்பில் இருக்கும் திராவிட் கையில் மிகவும் கீழாக விழுந்தது. 284/5, மார்ட்டின் 104 ரன்கள், 11x4, 1x6. அடுத்து விளையாட மைக்கேல் கிளார்க் வந்தார். முதல் பந்திலேயே ஒரு ரன் அடித்தார்.

அடுத்த பந்து சடாரென எழும்பி, உள்ளே ஸ்பின் ஆகி வந்த பந்து. அதுவரை அசைக்க முடியாத கில்லெஸ்பி பந்தை ஸ்லிப் திசையில் உயரத் தட்டிவிட, இம்முறை தன் வலதுகைப்பக்கம் பாய்ந்து விழுந்து திராவிட் அதையும் பிடித்தார். 285/5. மூன்று பந்துகளுக்குள் இரண்டு விக்கெட்டுகள். தேநீர் இடைவேளை போது ஆஸ்திரேலியா 290/6 - கிளார்க் 4*, லெஹ்மான் 2*

கடைசி வேளையின் போதுதான் நிறைய விக்கெட்டுகள் விழும் என்று எதிர்பார்ப்பு எங்களுக்கு. ஆனால் கிளார்க்கும், லெஹ்மானும் நன்றாக விளையாடினர். இருவரும் சேர்ந்து 62 ரன்கள் சேர்த்தனர். லெஹ்மான் திடீரென அடித்தாடி ரன்கள் சேர்க்க விரும்பினார். கும்ப்ளே வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் புல் செய்யப்போக, பந்து மேல் விளிம்பில் பட்டு எழும்பி படேலிடம் வந்தது. அவரும் பிடித்து விட்டார்! 347/7. உள்ளே வந்தவர் ஷேன் வார்ன். ஒரு பந்து, தடுத்தாடினார். அடுத்த பந்து - பந்தை நேராக பேட்டில் வாங்கி சில்லி பாயிண்டில் இருக்கும் காயிஃபிடம் கேட்ச் கொடுத்தார்! 347/8.

அவ்வளவுதான், ஆட்டம் முடிந்தது, இனி இந்தியா பேட்டிங்தான் என்று நினைக்கும்போது காஸ்பரோவிச், கிளார்க்குடன் இணைந்து 17 ரன்கள் சேர்த்தார். இந்நேரத்தில் கங்குலி கிளார்க்கை தாக்கி விக்கெட்டைப் பெற நினைக்காமல், கிளார்க்குக்கு ஒரு ரன் கொடுத்து, காஸ்பரோவிச்சை அவுட்டாக்க நினைத்தார். ஆனால் நடைபெறவில்லை. இப்படியே 7 ஓவர்கள் வீணாயிற்று. கும்ப்ளே வீசிய ஓவர் ஒன்றில், கிளார்க் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுத்து, கடைசி பந்தை காஸ்பரோவிச் கவனித்துக் கொள்வார் என்று விட்டுவிட, கும்ப்ளே காஸ்பரோவிச்சை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். 364/9.

ஹர்பஜன் வீசிய பந்தில் மெக்ராத் பவுல்ட் ஆக, ஆஸ்திரேலியா 369 க்கு ஆல் அவுட் ஆனது. கிளார்க் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கும்ப்ளே இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 178 ரன்கள் கொடுத்து 13 விக்கெட்டுகளைப் பெற்றார்.

இந்தியா ஜெயிக்க 229 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் யுவராஜ் சிங்கும், சேவாகும் ஆட்டத்தைத் தொடங்கினர். பத்து நிமிடங்கள்தான் பாக்கி - மூன்று ஓவர்கள் வீசப்படலாம். மெக்ராத் வீசிய முதல் ஓவரில் யுவராஜ் மூன்றாவது ஸ்லிப், கல்லிக்கு இடையே பந்தை உயர அடித்தார். லாங்கர் கையைத் தாண்டிச் சென்ற பந்து நான்கு ரன்களைப் பெற்றுத் தந்தது. ஒரு ரன்னைப் பெற்று யுவராஜ் அடுத்த முனைக்குச் செல்ல, சேவாக் தரையோடு கல்லியைத் தாண்டி பந்தை அடித்து நான்கைப் பெற்றார். முதல் ஓவரின் கடைசியில் இந்தியா 9/0. கில்லெஸ்பி வீசிய இரண்டாவது ஓவரில் யுவராஜ் பந்தைக் காலுக்கடியில் தட்டிவிட்டு அவசர அவசரமாக ஒரு ரன் அடித்தார். மற்ற பந்துகளை சேவாக் அழகாகத் தடுத்தாடினார். இந்தியா 10/0.

மூன்றாவது ஓவர் - நாளின் கடைசி ஓவர். யுவராஜ் மற்றுமொரு ஒற்றையை எடுக்க, சேவாக் பிரமாதமாக இரண்டு நான்குகளைப் பெற்றார். ஒரு பந்தை கவர் திசையில் அடித்து நான்கைப் பெற்றார். கில்கிறிஸ்ட் கால் திசையிலிருந்து மற்றுமொரு தடுப்பாளரை ஆஃப் திசைக்கு அனுப்பினார். நாளின் கடைசிப் பந்தை சேவாக் நேராக லாங் ஆஃபில் ஆஃப் டிரைவ் அடித்து மற்றுமொரு நான்கைப் பெற்றார். இந்தியா 19/0. இந்தியா வெற்றிபெற நாளை இன்னமும் 210 ரன்களைப் பெற வேண்டும்.

இதுவரை சென்னை டெஸ்ட்களில் கடைசி இன்னிங்ஸில் அதிகபட்சமாக எடுத்து ஜெயித்த எண்ணிக்கை 155தான். அதுவும் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜெயித்த ஆட்டம் 18-22 மார்ச் 2001 இல் - 155 ரன்களை எடுப்பதற்குள் இந்தியா எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்பொழுது ஆஸ்திரேலியா அணியில் இப்பொழுதிருக்கும் மூன்று முக்கிய பந்து வீச்சாளர்களும் இருந்தனர். பார்க்கலாம், நாளை எப்படி ஆட்டம் போகிறதென்று.

No comments:

Post a Comment