ஆஸ்திரேலியா 474 (130 ஓவர்கள்) - கிளார்க் 151, கில்கிறிஸ்ட் 104, காடிச் 81, லாங்கர் 52
உணவு இடைவேளைக்குப் பின் ஷேன் வார்ன் வெகு சீக்கிரத்திலேயே ஆட்டமிழந்தார். ஹர்பஜன் சிங்கின் தூஸ்ரா + டாப் ஸ்பின்னர் ஒன்று - இந்தப் பந்து விழுந்த இடத்திலிருந்து சுர்ரென்று வேகமாகக் கிளம்பி, கிட்டத்தட்ட நேராகப் போனது, வார்ன் எதிர்பார்த்த மாதிரி ஆஃப் ஸ்பின்னாகவில்லை - பேட்டின் மேல் விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் இருந்த திராவிடுக்கு எளிதான கேட்ச் ஆனது. திராவிடின் 100வது கேட்ச் இது. இவருக்கு மேல் இருப்பவர்கள் அசாருத்தீன், காவஸ்கர்.
அடுத்து 'கடி' கில்லெஸ்பி. அவர் வந்ததும் கிளார்க் வேகமாக ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தார். கும்ப்ளேயை வெளுத்துக் கட்டினார். 150ஐயும் தாண்டினார். கிளார்க்கின் பேட்டிங் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும். அவ்வளவு impressive! இவரை நாம் தொடர்ந்து பார்ப்போம்!
கங்குலி என்ன செய்வதென்று தெரியாமல் பிறந்த நாள் கொண்டாடும் ஜாகீர் கானை பந்துவீச அழைத்தார். அவரது பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெளியே செல்வதைத் தொட்டு பார்திவ் படேலிடம் கேட்ச் கொடுத்து கிளார்க் அவுட்டானார்.
அதன்பின் கடைசி இரண்டு விக்கெட்டுகள் ஹர்பஜனின் ஓர் ஓவரிலேயே விழுந்தன. காஸ்பரோவிச் ஹர்பஜனை ஸ்வீப் செய்யப் போனார். யுவராஜ் பார்வர்ட் ஷார்ட் லெக்கில் விழுந்து அருமையாகப் பிடித்தார். ஆனால் இந்தப் பந்து பேட்டில் பட்டதா? பட்டதும் தரையில் படாமல் எழும்பியதா? எழும்பியிருந்தாலும் யுவ்ராஜ் தரையில் படாமல் பிடித்தாரா என்ற பல கேள்விகள். இதில் கடைசி கேள்வியை மட்டும்தான் பக்னார் மூன்றாவது நடுவர் ஜெயப்பிரகாஷிடம் கேட்க முடியும். யுவராஜ் தொடர்ந்து நடுவரைக் கேட்டுக்கொண்ட பிறகு பக்னாரும், பவுடனும் பேசி, பின் ஜெயப்பிரகாஷைக் கூப்பிட, அவர் பலமுறை 'ரீப்ளே' பார்த்து, பின் காஸ்பரோவிச் அவுட் என்று முடிவு செய்தார். இரண்டு பந்துகள் கழித்து மெக்ராத் ஹர்பஜன் சிங்கின் பந்தை ஸ்வீப் செய்ய முயன்றார். பந்து நேராக கால்காப்பில் பட்டது. பக்னார் இது எல்.பி.டபிள்யூ என்று முடிவு செய்தார். ஆஸ்திரேலியா 474 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
ஹர்பஜன் சிங் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார், ஆனாலும் கில்கிறிஸ்ட் விக்கெட்டின் போது போட்ட ஆட்டத்தால் தன் மேட்ச் சம்பளத்தில் பாதியை அபராதமாக இழக்க நேரிடும் என்று தோன்றுகிறது.
இந்திய மட்டையாளர்கள் வேலை மிகவும் கடினமானது. என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்!
எதற்குரியது நம் வாழ்க்கை?
8 hours ago
No comments:
Post a Comment