பெங்களூர் ரசிகர்கள் அனைவருக்கும் முடிவு என்ன என்று தெரிந்து விட்டதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆனாலும் உள்ளூர் திராவிட் அரை சதம், சதம் அடிப்பாரோ என்னும் ஆசையால் பத்தாயிரம் ஆசாமிகளாவது வந்திருந்தனர்.
திராவிட் என்னவோ இந்த உலகத்தையே தானே தாங்கப் போவதுபோல ஷேன் வார்ன் பந்துவீச்சைத் தன்னால் மட்டும்தான் விளையாட முடியும், பதானால் முடியாது என்று கிடைக்கும் ரன்களை எல்லாம் விட்டுவிட்டார். ஷேன் வார்ன் வீசிய முதல் ஓவரிலேயே திராவிட் ஆன் டிரைவ் அடித்து நான்கைப் பெற்று அரை சதத்தை எட்டினார். பின் அடுத்து வந்த ஷேன் வார்ன் ஓவரிகள் இரண்டிலும் ஓவருக்கு ஒன்றாக ஆஃப் திசையில் பவுண்டரிகளை அடித்தார். மறுமுனையில் பதான், காஸ்பரோவிச் பந்துவீச்சை நன்றாகவே சமாளித்தார் - ஓவரில் நான்கு பந்துகள் பேட்டிலேயே படாது. மற்ற இரண்டைத் தடுத்தாடுவார்.
ஷேன் வார்ன் எப்படியாவது பதானுக்கு பந்துவீச வேண்டும் என்பதற்காக வீசும் பக்கத்தை மாற்றினார். லெஹ்மான் வார்ன் வீசிய பக்கம் வந்து வீச, அடுத்த ஓவரில் ஷேன் வார்ன் அடுத்த பக்கம் மாற, திராவிட் ஒரு ரன் பெற்று மீண்டும் வார்னைச் சந்திக்க - ஆட்டத்துக்கு நடுவில் மற்றொரு சுவையான ஆட்டம்.
ஆனால் இதெல்லாம் தேவையில்லாததாகவே எனக்குத் தோன்றியது. இவ்வளவும் செய்தபின் காஸ்பரோவிச் பந்துவீச்சில் திராவிட் எல்.பி.டபிள்யூ ஆனார். பதானோ அதுவரை காஸ்பரோவிச் வீசிய பந்துகளை அதிக பிரச்னையின்று சந்தித்து வந்தார். திராவிட் போனதும் ஆட்டம் இன்னமும் அரை மணிக்குள் முடிந்து விடும் என்று அனைவரும் நினைத்தனர். கும்ப்ளே வந்தார். எப்பொழுதும்போல டென்ஷனாகவே இருந்தார். இரண்டு ரன்கள் பெற்றதும், காஸ்பரோவிச் பந்துவீச்சில் ஸ்டம்பை இழந்தார். 125/8. அவ்வளவுதான், இன்னமும் இரண்டு விக்கெட்டுகள்தான் பாக்கி.
ஆனால் அடுத்த சில மணிநேரங்களே ஆட்டத்தில் இந்திய ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்த நேரங்கள். ஹர்பஜன் சிங்கும், இர்ஃபான் பதானும் எந்தவித அழுத்தமும், இடையூறுகளும் இன்றி இயல்பாக விளையாடினர். காஸ்பரோவிச் பந்தில் பதான் இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க, அங்குள்ள வீரரால் அதைப் பிடிக்க முடியவில்லை.
முதலில் பதான் ஷேன் வார்ன் பந்துகளை விளாசத் தொடங்கினார். டிரெஸ்ஸிங் ரூமில் உட்கார்ந்திருந்த திராவிட் அதைப் பார்த்து வெட்கப்பட வேண்டும். பதான் மீது நம்பிக்கை வைத்திருந்தால் திராவிட் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கலாம்... ஒருவேளை இந்தியா இந்த ஆட்டத்தை டிரா கூட செய்திருக்கலாம். பதானைத் தொடர்ந்து ஹர்பஜனும் அடிதடியில் இறங்கினார். பதான் வெறும் அடிதடியோடு இல்லாமல் மிக அழகான தடுப்பாட்டத்தையும் காண்பித்தார். கில்கிறிஸ்ட் மெக்ராத்தை பந்துவீச அழைத்தார். ஒரு மாற்றமும் இல்லை. வார்ன் வீசிய பந்தை பதான் மிட்விக்கெட்டுக்கு மேல் சிக்ஸ் அடித்தார். மெக்ராத் பந்தை ஹர்பஜன் எல்லைக்கோட்டுக்கு சற்று முன் விழுமாறு ஒரு நான்கு அடித்தார்.
இப்படியே உணவு இடைவேளை வரை மேற்கொண்டு எந்த இழப்புமின்றி விளையாடினர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு பதான் தன் அரை சதத்தைப் பெற்றார். லெஹ்மான் வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் எழும்பி அடித்த மற்றுமொரு சிக்ஸ் அதில் அடங்கும். ஹர்பஜனும் வார்ன் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார். மெக்ராத்தால் விக்கெட் எதையும் பெற முடியவில்லை. வார்ன் தன் விக்கெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடியவில்லை. காலையில் எடுத்திருந்த இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் காஸ்பரோவிச்சாலும் எந்த விக்கெட்டையும் பெற முடியவில்லை. கிளார்க் ஓர் ஓவர் வீசினார். லெஹ்மான் பந்துவீச்சிலும் எந்த பிரயோஜனமும் இல்லை. கில்கிறிஸ்ட் கடைசியாக கில்லெஸ்பியை பந்துவீச்சிற்குக் கொண்டுவந்தார்.
55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில்லெஸ்பியின் பந்தை விளிம்பில் பட்டு கில்கிறிஸ்டிடம் கேட்சாக, பதான் அவுட்டானார். மிகவும் முதிர்ச்சியான இன்னிங்ஸ் இது.
ஆட்டம் இத்துடன் முடிவடையவில்லை. இன்னும் சிறிது நேரம் ஜாகீர் கானும், ஹர்பஜனும் வாணவேடிக்கை செய்து காட்டினர். கடைசியாக ஹர்பஜன் கில்லெஸ்பியை ஹூக் செய்யப் போய் டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் இருந்த மெக்ராத்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா 217 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியாவிற்கு அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்கள்: ஆகாஷ் சோப்ராவின் தடுப்பாட்டம் முழுவதுமாக தோல்வியுற்றது, சேவாக் இன்னமும் மோசமான நிலையில் இருப்பது, கங்குலிக்கு இன்னமும் எந்த ரன்களைப் பெறுவதற்கு ஓடலாம் என்று தெரியாமல் இருப்பது, லக்ஷ்மணுக்கு ஷேன் வார்ன் ஸ்பின்னை விளையாடத் தெரியாமல் இருப்பது, யுவராஜ் சிங்கிற்கு மெக்ராத்தின் பந்துவீச்சை சமாளிக்கத் தெரியாமல் இருப்பது. இன்னமும் பல குறைகள் உள்ளன.
அடுத்த டெஸ்டிற்கு இந்த அணியில் ஒரு மாற்றம் செய்தால் போதும். ஜாகீர் கானுக்கு பதில் அகர்கரைக் கொண்டு வரவேண்டும். டெண்டுல்கர் இன்னமும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு விளையாடப் போவதில்லை. கிரிக்கெட் வாரியம் இந்திய ரசிகர்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும். இப்பொழுதும் கூட இந்தியாவின் மேல்வரிசை ஆட்டக்காரர்கள் கொஞ்சம் நிதானமாக விளையாடினால் போதும்... இந்தியா இனி வரும் மூன்று டெஸ்ட்களில் ஒன்றையாவது ஜெயிக்க வாய்ப்புள்ளது. பந்துவீச்சில் இந்தியாவின் நம்பிக்கை ஒளி ஹர்பஜன் சிங் மட்டும்தான். கும்ப்ளே, பதான், மற்றும் இன்னுமொரு வேகப்பந்து வீச்சாளர் (பாலாஜி எப்ப வருவாரோ?) கொஞ்சம் உதவி செய்தால் - அதிகமாக ரன்களைக் கொடுக்காமல், அவ்வப்போது ஓரிரு விக்கெட்டுகளைப் பெற்றால் - உபயோகமாக இருக்கும்!
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
11 hours ago
Badri, They showed you on TV yesterday!!! :-)
ReplyDeleteBy: Meenaks
பத்ரி, மட்டமாக ஆடும் மேட்ச்களுக்கு சம்பளம் கிடையாது என்று சொல்ல கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அதிகாரம் உண்டா? அப்படி ஏதாவது மிரட்டினாலொழிய நம் வீரர்கள் பொறுப்பாக விளையாடமாட்டார்கள் என்று தோன்றுகிறது. உங்களது இந்த கிரிக்கெட் தொடர் ரிப்போர்ட்டை விடாமல் படித்து வந்தேன். (மேட்ச் பார்க்கவில்லை.) எனக்கென்னவோ நம் வீரர்களுக்குக் கொழுப்பு அதிகரித்துவிட்டதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் ஆதாரக் காரணமாகத் தோன்றுகிறது.
ReplyDeleteBy: para
பத்ரி அவர்களே, உங்கள் மேட்ச் அறிக்கைகள் அனைத்தும் பிரமாதம். சோப்ராவின் அட்டத்தை கடந்த 9 டெஸ்ட்களாக பார்த்ததில், அவரிடம் அபரீத ஆட்டத்திறன் இருப்பதாக தெரியவில்லை. இந்திய மந்த பிட்ச்களிலேயே, வேகப் பந்து வீச்சாளர்களை சந்திக்கும் பொழுது, அவருடைய டைமிங் மற்றும் பேட் ஸ்பீட் மிகவும் மந்தமாக இருப்பதாகத் தெரிகிறது. இதை improve செய்ய அடுத்த டெஸ்ட் மாட்ச் ஆடத் தேவையில்லை- domestric cricket ஆடி பயிற்சி பெற்றபின் வந்து ஆடினால் போதும்.
ReplyDeleteலட்சுமண் கடந்த ஆஸ்திரேலிய டூரில், ஸ்டுவர்ட் மெக்கில் சுழற்பந்து வீச்சில் தடுமாறினார் என்பது என் கருத்து. இதை சீர் செய்ய எந்த சிறப்புப் பயிற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. இதற்கு நேர் மாறாக, ஆஸ்திரேலிய அணி, இந்திய ஆணியை சந்திக்கும் முன்னரே நன்றாக homework செய்து விட்டு வந்திருக்கிரார்கள் என்பது அவர்களின் fielding வியூக அமைப்பிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.
என்வே, அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்காமல், நம் அணியின் வீரர்களை மாற்றியமைத்து, 'game plan'னிலும் புத்துயிர் புகுத்தினால் மட்டுமே வெற்றி பெற மட்டுமல்ல, கேவலமாக தோற்காமலும் இருக்க முடியும்.
By: Ravikumar
ரவிக்குமார்: நாம் விளையாடும் அணி உலகிலேயே மிகச்சிறந்த அணி என்பதை கவனத்தில் வைக்க வேண்டும். நாம் எவ்வளவுதான் சிறப்பாக விளையாடினாலும் கடைசியில் தோற்க வேண்டி வரலாம் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
ReplyDeleteகிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றி, தோல்வி - அதிலும் நம் அணியின் வெற்றி, தோல்வி - என்பதைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கக் கூடாது. வெற்றி நிச்சயம் முக்கியம். இந்திய ரசிகர்களுக்கு இந்தியாவின் வெற்றி நிச்சயம் இன்னமும் முக்கியம்.
இந்திய அணியைப் பொறுத்தவரை இப்பொழுதுள்ள அணியாலேயே (டெண்டுல்கர் இல்லாமல்) ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்க முடியும். அதை எப்படிச் செய்கிறார்கள் என்பதை வெளியில் இருந்து கூர்ந்து பார்க்க வேண்டும்.
தொடக்க்க ஆட்டக்காரர்களின் பலத்தாலேயே நாம் ஆஸ்திரேலியாவில் நன்றாக ஆடினோம். அங்கு சோப்ரா நன்றாகவே விளையாடினார். அதன்பின் சோப்ரா பாகிஸ்தானில் ஒரு டெஸ்ட் விளையாடவில்லை. பார்திவ் பேட்டிங்கைத் தொடங்கினார். அதன்பின் சோப்ரா விளையாடும் அடுத்த டெஸ்ட் இது. உடனே சோப்ராவை அணியை விட்டுத் தூக்்கச் சொல்வதில் என்ன பயன்?
சோப்ரா, சேவாக் இருவரும் வரும் ஆட்டங்களின் நிலையாக நின்று 40-50 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம். மற்றபடி லக்ஷ்மண் சீக்கிரம் பேட்டிங் விளையாட வருவதுதான் அவரது தோல்விக்குக் காரணம். இப்படி அப்படி திரும்பிப் பார்ப்பதற்குள் இந்தியா 20/4 என்று இருந்தால்?
சேவாக், லக்ஷ்மண் இருவருமே டெக்னிக்கை நம்பி ஆடுபவர்கள் கிடையாது. நாலு அடி சரியாகப் போனால் அன்று முழுவதும் அவர்கள் காட்டில் மழை. ஆனால் எக்கச்சக்கமாக அழுத்தம் இருக்கும்போது இறுகிப் போய், கையும் காலும் சொன்னபடி நடக்காது இருந்தால்? பத்து ரன்களைத் தாண்ட மாட்டார்கள்.
யுவராஜ் - சில டெக்னிகல் குறைபாடுகள் உள்ளன. முக்கியமாக வேகப் பந்து வீச்சாளர்கள் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசும் பந்துகளைச் சந்திப்பதில். அதைத்தான் மெக்ராத் இந்தத் தொடர் முழுவதும் துருவுவார்.
கங்குலி அருமையான 'டச்'சில் இருக்கிறார். ஆனால் யாராவது அவருக்கு ரன்கள் ஓடச் சொல்லித் தரவேண்டும். அடுத்த டெஸ்டில் கங்குலி ஒரு சதம் அடிப்பார் என்றே நான் எதிர்பார்க்கிறேன். திராவிட் நிச்சயமாக ரன்கள் பெற வேண்டும். இந்த ஆஸ்திரேலியன் பவுலிங்கை எதிர்கொள்வதில் - அது இந்திய ஆடுகளங்களாக இருந்தாலும், ஆஸ்திரேலிய ஆடுகளங்களாக இருந்தாலும் சரி - திராவிடுக்கு எந்த பிரச்னையும் இருக்கக் கூடாது.
இந்த அணியில் இப்பொழுதைக்கு மாற்றங்கள் தேவையில்லை. கேம் பிளான் மாற்றங்கள்... அப்படியொன்றும் செய்ய முடியாது. விக்கெட்டுகளைப் பெற வேண்டும். ஹர்பஜன் இரண்டாம் நாள் மிக மோசமாகப் பந்து வீசினார். அவர்தான் இந்தியாவின் முக்கிய பவுலர். (கும்ப்ளே பின்தொடர்பவர் மட்டுமே.) அதன் விளைவுதான் ஆஸ்திரேலியா எக்கச்சக்க ரன்களைப் பெற்றது. பதான் தவிர்த்து மற்றுமொரு நல்ல வேகப்பந்து வீச்சாளர் இல்லாது நாம் நிறையவே கஷ்டப்படுகிறோம்.
நன்றி பத்ரி. நம் அணியின் (+ வீரர்களின்) 'limitation'களை அழகாக விமர்சித்துள்ளீர்கள். அணியை மாற்றாமல், இருக்கும் ஆட்டக்காரர்கள் தஙகள் வேலையை முடிந்தமட்டில் சரியாகச் செய்தாலே போதும் என்ற உங்கள் ஆசை நிறைவேற வேண்டிக்கொள்வோம்.
ReplyDeleteBy: ravikumarBy: ravikumar
சூப்பர்...பெஸ்ட் கண்ணா பெஸ்ட்ட்ட்ட்ட்ட்ட் :-)
ReplyDelete- அருண் வைத்யநாதன்
By: Arun
பத்ரி,
ReplyDeleteஆட்டம் துவங்குவதற்கு முதல் நாள் வரை பெங்களூரில் மழை. ஆட்டம் முடிந்தபின், நேற்று - திங்கள்கிழமை மீண்டும் மழை :-)
பாரா. சொன்னது போல் performance based pay கொண்டுவந்தால் கொஞ்சமாவது ஒழுங்காக விளையாடுவர் என நினைக்கிறேன். அதாவது விளையாடும் 11/12 பேருக்கும் ஒரு மினிமம் தொகை. ஆட்டத்தில் ஜெயித்தால் - மீதித் தொகை இல்லையென்றால் எல்லாருக்கும் மினிமம் தொகை மட்டும் தான் என்று கொண்டுவந்தால் சரியாக இருக்கும். ஆனால் எங்கே... போர்டு ஆட்களுக்கும் கோர்ட் கேஸ்களில் நேரம் செலவிடவே சரியாக இருக்கும். கிரிக்கெட்டை யார் கவனிக்கப்போகிறார்கள்.
குமார்.வி.
By: kumar V