Friday, October 08, 2004

முதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை

இந்தியா 246, ஆஸ்திரேலியா 474 & 24/1 (5 ஓவர்கள்) - ஹெய்டன் 6*, காடிச் 18*

முதலில் இந்தியாவின் கடைசி விக்கெட்டுகள். உணவு இடைவேளைக்குப் பின்னர் படேல், கும்ப்ளே இருவரும் நிதானமாகவே விளையாடினர். கும்ப்ளேவை நிறையவே பாராட்ட வேண்டும். தன் குறைவான திறமையை வைத்துக்கொண்டு பந்துகளை நன்றாகவே தடுத்தாடினார். கில்கிறிஸ்ட் பழைய பந்தை வைத்துக்கொண்டே இந்தியாவின் கடைசி விக்கெட்டுகளை எடுத்து விடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் நடக்கவில்லை. ஷேன் வார்ன் வீசிய பந்து ஒன்று படேலின் பேட்டில் பட்டு, கால்காப்பில் பட்டு ஷார்ட் லெக்கில் பிடிபட்டது. ஆனால் பவுடன் பேட்டில் பட்டதா என்ற சந்தேகம் இருந்ததால் படேலை அவுட் கொடுக்கவில்லை.

ஆனால் படேல் அதன்பின் வெகுநேரம் நிற்கவில்லை. புதிய பந்தை எடுத்ததும் கில்லஸ்பி இன்கட்டர் ஒன்றை வீசி தன் முதல் பந்திலேயே படேலின் ஸ்டம்ப்களைத் தகர்த்தார். ஹர்பஜன் சிங் சிறிது நேரம் தாக்குப் பிடித்தார். பின் மெக்ராத் வீசிய மெதுவான பந்து ஒன்றை கேட்ச் பிராக்டிஸ் செய்வது போல ஷார்ட் கவரில் நிற்கும் லெஹ்மானில் கையில் அழகாகத் தட்டினார். கும்ப்ளே கில்லெஸ்பியின் மற்றுமொரு இன்கட்டரில் ஸ்டம்பை இழந்தார். ஆக இந்திய அணியின் எண்ணிக்கை 246இல் முடிந்தது.

ஆஸ்திரேலியா வேண்டுமென்றால் இந்தியாவை ஃபாலோ-ஆன் செய்யச் சொல்லியிருக்கலாம். ஆனால் கொல்கொத்தா, லக்ஷ்மண் போன்ற பீதிகள் இருந்ததாலோ, அல்லது மற்றொருமுறை தம் மட்டையாளர்களுக்கு நல்ல பயிற்சி கொடுப்போம் என்று நினைத்ததாலோ என்னவோ, மீண்டும் பேட் செய்யத் தொடங்கினர்.

முதல் ஓவரிலேயே பதான் உள்ளே கொண்டுவந்த பந்து ஒன்று லாங்கரின் கால்காப்பில் பட்டது. சற்று உயரம் அதிகமான பந்துதான். ஆனாலும் பக்னார் இது எல்.பி.டபிள்யூ என்று முடிவு செய்தார். 0/1. ஹெய்டன், காடிச் இருவரும் ஸ்லிப் வழியாகப் பல பந்துகளைத் தட்டினர். ஆனால் எதுவும் கேட்ச் ஆகவில்லை.

ஆஸ்திரேலியா 200-250 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்வார்கள் என நினைக்கிறேன். அதன்பின் இந்தியா எப்படி ஒன்றரை நாள் தாக்குப் பிடிக்கும் என்பதுதான் இந்த டெஸ்டின் மீதி.

1 comment:

  1. பத்ரி, இந்தமாதிரி எல்லா டெஸ்டுகளுக்கும் எல்லா இன்னிங்ஸ்களுக்கும் காலை/மதியம்/சாயங்கால வேளைத் தகவல் அறிக்கை தரும் உத்தேசம் இருக்கிறதா? இந்த சமூகசேவையை இணையம் என்றும் மறக்காது.-) இப்போதுதான் பெங்களூரிலிருந்து சொக்கன் அழைத்தான். பத்ரி வரும்போது ஒரு பொட்டலம் மழையைக் கொண்டுவரச் சொல்லி கேட்டுக்கொண்டான். மானம் காக்க அதுதான் உதவவேண்டுமாமே?

    By: para

    ReplyDelete