ஆஸ்திரேலியா 235, இந்தியா 28/1 (13 ஓவர்கள்) - சேவாக் 20*, பதான் 0*
சென்னை சேப்பாக்கம் அருகில் நெருங்கும்போதே பலர் "டேய் இன்னிக்கு ஆஸ்திரேலியா பேட்டிங்காம், வாடா வீட்டுக்குப் போகலாம்" என்று டிக்கெட் வாங்காமல் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தனர். அப்படியும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்தனர்.
பெங்களூரில் ஆட்டம் தொடங்கும் நாள் வரை தினமும் மழை பேய்ந்து கொண்டிருந்தது. ஆனால் சரியாக, டெஸ்ட் தொடங்கியது மழையே இல்லை. அதுபோல் சென்னையிலும் நேற்று மழை. இன்று எந்த பிரச்னையும் இல்லை.
இந்திய அணியில் மட்டும் ஒரு மாற்றம். ஆகாஷ் சோப்ராவுக்கு பதில், மொஹம்மத் காயிஃப். பந்துவீச்சைத் தொடங்கிய இர்ஃபான் பதானும், ஜாகீர் கானும் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹெய்டன், லாங்கர் இருவரையும் எந்தவிதத்திலும் கஷ்டப்படுத்தவில்லை. கானை விட பதான் ரன்கள் குறைவாகக் கொடுத்தார். முதலில் லாங்கரே அதிக ரன்களை எடுத்தார். நாலாபக்கமும் நான்குகள் பறந்தன. கங்குலி மூன்றாவது வீச்சாளராக ஹர்பஜன் சிங்கை ராயல் சுந்தரம் ஸ்டாண்ட் முனையிலிருந்து கொண்டுவந்தார். ஹெய்டன் ஹர்பஜனை நேராக தலைக்கு மேல் சிக்ஸ் அடித்து தன்னுடைய அரை சதத்தை எட்டினார். உடனேயே லாங்கரும் தன் அரை சதத்தைத் தொட்டார். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 111/0 என்ற எண்ணிக்கையில் இருந்தது. நடுவர் ஷெப்பர்ட் தாண்டித் தாண்டிக் குதித்துக் கொண்டே உள்ளே வந்தார்!
இன்று இந்தியா இரண்டு, மூன்று விக்கெட்டுகளைப் பெற்றாலே சந்தோஷம் என்ற நிலை எங்களுக்கு. மதிய உணவுக்குப் பின் ரன்கள் எடுப்பது நிறையவே தடைப்பட்டது. ஒரு பக்கம் ஹர்பஜனும், மறுபக்கத்திலிருந்து ஜாகீர் கானும் பந்து வீசினர். கான் நிறையப் பந்துகளை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். ஆனால் விக்கெட் எதுவும் விழுவதாகத் தெரியவில்லை. கானுக்கு பதில் கும்ப்ளே பந்துவீச வந்தபோது ஹெய்டன் மற்றுமொரு சிக்ஸ் அடித்தார்.
அணி எண்ணிக்கை 136 ஆக இருந்தபோது, ஆட்டத்தில் இன்னமும் சுவையைக் கூட்டலாம் என எண்ணிய ஹெய்டன் ஹர்பஜனை இறங்கி அடிக்கப் போய் லாங் ஆஃபில் இருக்கும் லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கேட்ச் பிடிக்கும் முன்னர் லாங்கர் மறுபக்கம் ஓடியிருந்தார். ஒரு பந்து கழித்து, அடுத்த பந்தை லாங்கர் வெட்டப் போய், விளிம்பில் பட்டு திராவிட் முதல் ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தார். இப்படியாக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் மூன்று பந்துகளுக்குள்ளாக உள்ளே திரும்பினர். இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் திரும்பத் தொடங்கியது. சைமன் காடிச் வந்ததும் ஹர்பஜன் பந்தில் முதல் ஸ்லிப்பில் இருக்கும் திராவிட் கையைத் தாண்டி ஒரு கேட்ச் போனது. பிடித்திருக்கலாம்.
சைமன் காடிச், டேமியன் மார்ட்டின் இருவரும் நிதானமாக, எந்தக் கவலையுமின்றி ஆடினர். கங்குலி முனைகளை மாற்றி, ஹர்பஜன் பந்துவீசும் பக்கத்திலிருந்து கும்ப்ளேயைக் கொண்டுவந்தார். உடனேயே கும்ப்ளே பந்துவீச்சில் மாறுதல். தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் கும்ப்ளேயின் பந்தை பார்வர்ட் ஷார்ட் லெக்கில் இருக்கும் யுவ்ராஜ் சிங்கிடம் கேட்ச் கொடுத்து மார்ட்டின் ஆட்டமிழந்தார். நடுவர்கள் தேநீர் இடைவேளை அறிவிக்கும்போது ஆஸ்திரேலியா எண்ணிக்கை 189/3.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு கங்குலி இரண்டு ஸ்பின்னர்களையும் இரு பக்கங்களிலிருந்தும் போடச் செய்தார். ஆஸ்திரேலியா விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளைப் போல விழ ஆரம்பித்தனர். லெஹ்மான் பெருந்தன்மையோடு தான் தன் இடத்தை புது வீரர் மைக்கேல் கிளார்க்குக்கு விட்டுக் கொடுத்துவிடுவேன் என்றார். இப்பொழுது அவர் விளையாடுவதைப் பார்த்தால், பெருந்தன்மை எதுவும் வேண்டாம். தேர்வுக்குழுவினரே அவரைத் தூக்கி விடுவார்கள். கும்ப்ளே பந்துவீச்சை அடித்து நொறுக்கியே தீருவது என்ற எண்ணத்தில் விளையாடினார். கும்ப்ளே பந்தை வெட்டி ஆடப்போய் மிக மெல்லிதாக பேட்டில் பட்டு படேலிடம் கேட்ச் கொடுத்தார். அதுவரை படேல் மிக மோசமாக கீப்பிங் செய்தார். நல்லவேளை இந்த கேட்ச் கையில் பிடிபட்டது. 191/4. பெவிலியன் முனையிலிருந்து ஹர்பஜன் வீசிய பந்தில் சைமன் காடிச் லட்டு போல சில்லி பாயிண்டில் இருக்கும் யுவராஜ் சிங்கிற்கு கேட்ச் கொடுத்தார். லட்டு வழுக்கி விழுந்தது!
காடிச், கிளார்க் இருவராலும் ரன்களைப் பெறுவது முடியாத காரியமாக இருந்தது. இப்படி இருந்தாலே விக்கெட் போகக் கூடிய நிலைமைதான். கும்ப்ளே வீசிய அருமையான பந்து ஒன்று... பிளிப்பர். பந்து சரேலென்று கீழே இறங்கி தரையில் பட்டதும் வேகமாக பேட்ஸ்மேனை நோக்கி வரும். கிளார்க் அதில் எல்.பி.டபிள்யூ ஆனார். 204/5. ஆனாலும் அடுத்து உள்ளே வரும் கில்கிறிஸ்டைப் பார்க்கும்போது கவலையாக இருந்தது. இப்படி இருக்கும்போதுதான் பெங்களூரில் கில்கிறிஸ்ட் அடித்து விளாசினார். ஆனால் இங்கு கும்ப்ளே வீசிய பந்தை ஷார்ட் லெக் திசையில் அடிக்க, யுவராஜ் சிங் அருமையாக பின்னாடி தாவி விழுந்து பிடித்தார். தான் காடிச் கேட்சை கோட்டை விட்டதற்கு பிராயச்சித்தம் செய்தார். 210/6.
இதையே சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு போயிருப்போம் நாங்கள். ஆனால் ஆஸ்திரேலியா இந்நிலையில் சுதாரித்து, நின்று ஆட விரும்பவில்லை. ஷேன் வார்ன் மிட் விக்கெட் திசையில் கும்ப்ளேயை நான்கு அடித்தார். பின் அதே ஓவரில் மற்றுமொரு சூப்பர் ஷாட் அடிக்கப்போய் பந்தை கும்ப்ளே திசையிலேயே அடிக்க, அவர் விழுந்து பிடிக்க, கும்ப்ளேயின் ஐந்தாவது விக்கெட். 216/7.
மறுமுனையில் ஹர்பஜன் பிரமாதமாகப் பந்து வீசினார். ஆனால் அவருக்கு மேற்கொண்டு விக்கெட் எடுக்கும் அதிர்ஷ்டம் எதுவும் இல்லை. சைமன் காடிச் இப்பொழுது ஹர்பஜனை இறங்கி தூக்கி அடித்து ஒரு நான்கைப் பெற்றார். கில்லெஸ்பி கும்ப்ளே பந்தை கட் செய்து ஒரு நான்கைப் பெற்றார். ஆனால் மற்றொரு பந்தை ஷார்ட் லெக்கில் இருக்கும் காயிஃப் கையில் சமர்த்தாகத் தட்டி அவுட்டானார். 224/8. அடுத்து வந்த காஸ்பரோவிச் கும்ப்ளே வீசிய பந்தை சில்லி மிட் ஆஃபில் இருக்கும் லக்ஷ்மண் கையில் அடித்தார். எல்லோரும் ஷெப்பர்டிடம் அப்பீல் செய்ய அவருக்கு இது கேட்சா இல்லையா என்று தெரியவில்லை. இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே காஸ்பரோவிச் பெவிலியன் திரும்பத் தொடங்கினார். இப்பொழுதெல்லாம் ஆஸ்திரேலியர்கள் ரொம்பவே மாறிவிட்டனர். 228/9.
மெக்ராத் கும்ப்ளே பந்தை பைன் லெக்கிற்குத் திருப்பிவிட்டு ஒரு ரன் ஓடினார். பின் இரண்டாவது ரன்னுக்குத் திரும்பும்போது, காடிச் அவரைத் திருப்பி அனுப்பினார். இதற்குள் கான் படேலிடம் பந்தை வீச, அவர் பந்தை கும்ப்ளே கையில் கொடுக்க மெக்ராத் ரன் அவுட். ஆஸ்திரேலியா 235 ஆல் அவுட். கும்ப்ளே 7/48, ஹர்பஜன் 2/90. ஆனால் உண்மையில் ஹர்பஜன் கும்ப்ளேவை விடச் சிறப்பாகத்தான் வீசினார் என்று சொல்ல வேண்டும். கும்ப்ளே அவ்வப்போது கால் திசையில் வீசிய பந்துகள், புல் டாஸ் ஆகியவை தவிர்த்து மிக அருமையாக வீசினார். இந்த ஆடுகளத்தில் பந்துகள் நன்கு எழும்பி வந்தன. அது அவருக்கு மிகவும் உதவியது.
இந்தியாவிற்கு யுவராஜ் சிங்கும், சேவாகும் ஆட்டத்தைத் தொடங்கினர். மெக்ராத் முதல் ஓவரை வீச, யுவராஜ் சந்தித்தார். நான்கு ஸ்லிப்கள், ஒரு கல்லி, ஒரு பாயிண்ட். வீசிய முதல் ஓவரில் யுவராஜ் பந்தை இரண்டாவது ஸ்லிப்பிற்கு கேட்ச் கொடுத்தார். ஆனால் கிளார்க் சுலபமான இந்த கேட்சை நழுவ விட்டார்.
அதன்பின் கடைசி ஓவர் வரை எந்த பிரச்னையும் இல்லை. சேவாக் அதிக நம்பிக்கை தரும் விதமாக விளையாடினார். கவர் திசையில் ஒன்று, ஸ்கொயர் லெக்கில் ஒன்று, மிட் விக்கெட்டில் ஒன்று என்று மூன்று முத்தான நான்குகள் அதில் உண்டு. விக்கெட் எதுவும் இழக்காமல் இன்றைய ஆட்டத்தை இந்தியா முடித்திருக்கலாம். ஆனால் நாளின் கடைசி ஓவரில் யுவராஜ் சிங் ஷேன் வார்ன் பந்தை வெட்டி ஆடப்போய் பேட்டின் அடிப்பாகத்தால் லேசாகப் பட்டு கில்கிறிஸ்ட்டிடம் கேட்ச் ஆனது. அந்நேரத்தில் இந்த ஷாட் தேவையற்றது. இந்தியா 28/1. அடுத்த இரண்டு பந்துகளையும் இரவுக் காவல்காரர் இர்பான் பதான் அமைதியாகத் தடுத்து விளையாட முதல் நாள் ஆட்டம் நிறைவுற்றது.
இந்தியா திருப்தியுடன் நாளை ஆடத் தொடங்கும். குறைந்தது 150 ரன்களாவது இந்தியா லீட் எடுக்க முயல வேண்டும்.
வெளியே வரும்போது அடுத்த நாள் டிக்கெட் வாங்க பெருங்கூட்டம் சூழத் தொடங்கியிருந்தது.
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
பத்ரி, தங்களின் வர்ணணை, வானொலியில் ஓலிப்பரப்பும் வர்ணணையைப் போல சுவையாக உள்ளது. குறிப்பாக, ராமமூர்த்தி, அப்துல் ஜப்பார், ரங்காச்சாரி கூட்டணி(இப்போதும் சென்னை வானொலி, ஒலிப்பரப்புகிறதா அல்லது தொலைக்காட்சியினால் அதுவும் தொலைக்கப்பட்டுவிட்டதா?).
ReplyDeleteநன்றி பல, தொடருங்கள்.
By: Raj Chandra
உங்கள் வர்ணணை லட்டு ரகம். கூடவே அல்வா, மிக்ஸர், கார பூந்தி எல்லாம் சேர்த்து கலந்து கட்டி எழுதுங்கள்!!!
ReplyDeleteBy: Pandi
இப்பொழுதெல்லாம் ஆஸ்திரேலியர்கள் ரொம்பவே மாறிவிட்டனர்.
ReplyDelete>>
I will wait till Langer 'walks' :)
தொலைக்காட்சியில் ஆட்டத்தினை பார்க்காத குறையினை உங்கள் உங்கள் வர்ணனைகள் பூர்த்தி செய்கிறது,
ReplyDeleteதொடர்ந்து வர்ணியுங்கள்.
சந்தோஷமான நிகழ்ச்சிகள் + சுவையான வருணனை = சுகமான வாசிப்பு.
ReplyDeleteஇரவுக் காவல்காரன்? பாரா உஷார்! :-)
இம்முறை வானொலி நேயர்களுக்கான தமிழ் வர்ணனையை, ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு சொல்லி இல்லாமல் செய்துவிட்டார்கள் போலுள்ளது. சிலர் இதைப்பற்றி நொந்துவிட்டுப் பிறகு மறந்துவிடப்போவதால் சம்பந்தப்பட்ட யாரும் இதைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteஇம்முறையாவது இந்திய அணி வெற்றி பெற முயலவேண்டும். பார்க்கலாம்.
இம்முறை வானொலி நேயர்களுக்கான தமிழ் வர்ணனையை, ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு சொல்லி இல்லாமல் செய்துவிட்டார்கள் போலுள்ளது. சிலர் இதைப்பற்றி நொந்துவிட்டுப் பிறகு மறந்துவிடப்போவதால் சம்பந்தப்பட்ட யாரும் இதைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteஇம்முறையாவது இந்திய அணி வெற்றி பெற முயலவேண்டும். பார்க்கலாம்.
இம்முறை வானொலி நேயர்களுக்கான தமிழ் வர்ணனையை, ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு சொல்லி இல்லாமல் செய்துவிட்டார்கள் போலுள்ளது. சிலர் இதைப்பற்றி நொந்துவிட்டுப் பிறகு மறந்துவிடப்போவதால் சம்பந்தப்பட்ட யாரும் இதைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteஇம்முறையாவது இந்திய அணி வெற்றி பெற முயலவேண்டும். பார்க்கலாம்.
Just phoned up Badri to enquire whether he can provide an hour on hour update in the blog, of today's play. I was given to understand that not even mobiles, let alone lap tops are allowed inside Chepauk!
ReplyDeletergds.,
era.mu
By: era.mu
பார்வையாளர்கள் பகுதியில் மொபைல் போன் அனுமதிக்கிறார்கள். ஆனால் நேற்று செய்தித்தாளில் அதுவும் இருக்காது என்று தகவல் வந்திருந்தது. மற்றபடி சிகரெட், நெருப்புப் பெட்டி, லாப்டாப் என எதையும் கொண்டுவர முடியாது.
ReplyDeleteஅதனால் மீண்டும் மாலை வரை...
தமிழில் வர்ணனைகள் கிடையாது. ஒலிபரப்ப சரியான அலைவரிசை இல்லை. ஆங்கில/ஹிந்தி வர்ணனைகள் FM, AM (MW as well as SW) இல் வருகின்றன.
ReplyDeleteதமிழ் வர்ணனையாளர்கள் ஆடிக்கொருதரம், அமாவாசைக்கொருதரம் மட்டும் வர்ணனைகள் செய்வதால் காணாமல் போய்விட்டார்கள். அப்துல் ஜப்பார் இந்தியாவிலேயே இல்லை என நினைக்கிறேன் (ஆசிப் இடம் கேட்க வேண்டும்). எங்கோ ஐரோப்பிய தமிழ் தொலைக்காட்சி சானலில் வேலை செய்கிறார் என நினைக்கிறேன். ராமமூர்த்திக்கு நிறைய வயதாகி விட்டது. குரல் நடுங்குகிறது. உலகக்கோப்பை சமயத்தின் என் அலுவலகம் வந்திருந்தார்.
ஆக, இப்பொழுது தமிழில் வர்ணனைகள் வந்தாலும் கேட்க அவ்வளவு சகிக்காது என்றுதான் தோன்றுகிறது.
மழை பேய்ந்து கொண்டிருந்தது
ReplyDeleteyou too?:(
para
பத்ரி,
ReplyDeleteஇந்த சுட்டிகளைப் பார்க்கவும்
http://ta.chinabroadcast.cn/1/2004/08/27/22@12165.htm
http://ta.chinabroadcast.cn/1/2004/01/14/1@968.htm
இவ்வளவு தமிழக மக்கள் சீன வானொலி கேட்டு, இணையத்திலும் கருத்து பதிகிறார்களா ? ஆச்சரியம்..
By: Mahesh