Wednesday, October 06, 2004

முதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்

தேநீர் இடைவேளை வரையில் ஆஸ்திரேலியா 177/4 (58 ஓவர்கள்) - சைமன் காடிச் 47*, மைக்கேல் கிளார்க் 16*

ஆஸ்திரேலியா சற்றே தன்னம்பிக்கை குறைவாக விளையாடியது போல இருந்தது. டாஸில் வென்று கில்கிறிஸ்ட் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். மாத்தியூ ஹெய்டனும், ஜஸ்டின் லாங்கரும் தடுமாறித் தடுமாறியே விளையாடத் தொடங்கினர். இர்பான் பதான் மிக நன்றாகப் பந்து வீசினார். ஜாகீர் கான் சுமாராகப் பந்து வீசினார். பதான் பந்துவீச்சில் ஓட்டங்கள் எடுப்பது கடினமாக இருந்தது. ஓவருக்கு 4.0 க்கு மேல் ஓட்டங்களை எடுக்கும் ஆஸ்திரேலியாவால் 2.5ஐத் தாண்டுவதே கடினமாக இருந்தது.

ஹர்பஜன் பந்துவீச்சை ஸ்வீப் செய்து டீப் ஸ்கொயர் லெக்கில் நின்றிருந்த யுவராஜ் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஹெய்டன் ஆட்டமிழந்தார். அந்தப் பந்தில் விசேஷமாக ஒன்றும் இல்லை. மூன்றாவதாக விளையாட வந்தவர் சைமன் காடிச். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக அமைதியாக, ஆரவாரமில்லாமல் ஆடினார் காடிச். வேறெந்த விக்கெட்டும் விழுவதற்கு முன் உணவு இடைவேளை வந்தது.

உணவு இடைவேளைக்குப் பின் இன்றைய ஆட்டத்தின் மிகச்சிறந்த பந்தை பதான் வீசினார். சற்றே பழைய பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். அதற்கு முந்தைய மூன்று பந்துகளும் லாங்கரின் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்றது. ஆனால் நான்காவது பந்து வளைந்து உள்ளே வந்து லாங்கரை முழுமையாக ஏமாற்றி ஸ்டம்பைத் தகர்த்தது. அதற்கிடையே லாங்கர் 52 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்து வந்த டேமியன் மார்ட்டின், தொடக்கத்தில் எப்பொழுதுமே தடுமாறுபவர்தான். கும்ப்ளே பந்துவீச்சில் இறங்கி அடித்து ஆட வந்தவர் கடைசியில் தன் ஷாட்டை நிறுத்தி, தடுத்தாட முனைந்தார். ஆனால் பந்து உள்புற விளிம்பில் பட்டு ஃபார்வார்டு ஷார்ட் லெக்கில் இருந்த ஆகாஷ் சோப்ராவிடம் கேட்ச் ஆனது. சோப்ரா அது கேட்சா என்று முடிவு செய்யும் முன்னால் பந்தை ஸ்டம்பில் வேறு எறிந்து மார்ட்டினை ரன் அவுட்டாக்க முனைந்தார். நடுவர் பக்னார் கேட்ச்தான் என்று முடிவு செய்தார்.

டாரென் லெஹ்மான் வந்த முதற்கொண்டே அடித்து அடித்தே பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்திருப்பார் போல. ரன்கள் ஏதும் இல்லாதபோது கும்ப்ளே பந்தைத் தூக்கி அடிக்க அது வானில் சுழன்று கொண்டிருக்கும் போது அதைப் பிடிக்க ஓடிய பதானால் முடியவில்லை. அடுத்த இரண்டு பந்துகளையும் கூட சற்று உயரத்திலேயே அடித்தார் லெஹ்மான். ஒன்று மிட் ஆஃப் வரை செல்லவில்லை. அடுத்தது பந்து வீச்சாளர் வரை செல்லாமல் முன்னமே விழுந்தது. ஆனாலும் அதிகம் தாக்குப் பிடிக்காமல் கும்ப்ளேயின் பந்தை வீசி அடிக்க முனைய, வெளி விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் நிற்கும் திராவிட் கையில் போய் விழுந்தது. நான்காவது விக்கெட்.

புதுமுகம் மைக்கேல் கிளார்க் அடுத்து ஆட வந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆண்டிரூ பிளிண்டாஃபுக்கு அடுத்து கவனத்தை ஈர்த்திருக்கும் ஆல் ரவுண்டர் இவர். நான் பார்த்தவரை அருமையாக விளையாடினார். பயமின்றி, சுழற்பந்து வீச்சாளர்களை தேவைப்படும்போது இறங்கி அடித்தார்.

கிளார்க்கும், காடிச்சும் சேர்ந்து நிறைய ரன்கள் எடுப்பார்கள் என்று தோன்றுகிறது. கும்ப்ளே இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் அவரது பந்துவீச்சு (இப்பொழுது 399 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்) அவ்வளவு பிரமாதமாக இல்லை. ஹர்பஜன் மிக நன்றாக வீசினார். நடுவில் நிறைய ரன்களைக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை எடுப்பார் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. பதானும் அப்படியே.

தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் கங்குலிக்கு தொடையருகில் சுருக்கென ஏதோ இழுத்துக்கொண்டது. இதனால் அவர் இன்று மீண்டும் விளையாட வருவாரா என்று தெரியவில்லை. நாளைக்குள் குணமாகி விடுமென்று நம்புவோம்.

No comments:

Post a Comment