நாளை தொடங்கவிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் ரசிகர்கள் மனங்களில் இனம்புரியாத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடரைப் பற்றி எழுதும்போது கிடியன் ஹை என்னும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர் சொல்கிறார்: "2000-01, 2003-04 இன் போது நடந்த இரண்டு தொடர்களுக்கும் பிறகு நம் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாகிவிட்டன. வேற்று கிரக வாசிகளால் ஆட்டங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலொழிய நாம் இந்தத் தொடரில் ஏமாற்றத்தைத்தான் அடையப் போகிறோம்!"
2000-01 தொடரின்போதுதான் வி.வி.எஸ் லக்ஷ்மண், திராவிட் ஜோடி கொல்கொத்தாவில் பட்டையைக் கிளப்பினர். ஹர்பஜன் சிங் தனியாளாய் விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதில் ஒரு ஹாட்-டிரிக்கும் அடங்கும். யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தியா ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து தொடரை வென்றது. ஸ்டீவ் வா கடைசிவரை இந்தியாவில் டெஸ்ட் தொடரை ஜெயிக்காமல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்தத் தொடரில்தான் ரிக்கி பாண்டிங் ஒரு ரன்னாவது கிடைக்காதா என்று கதறினார். பாண்டிங்கா? சரி ஹர்பஜனைக் கூப்பிடு, விக்கெட் உடனே விழும் என்று கங்குலி நடந்து கொண்டார். பாண்டிங்கின் எண்ணிக்கை ஐந்து இன்னிங்ஸில் 0, 6, 0, 0, 11 என்று இருந்தது. ஐந்து முறையும் பாண்டிங்கின் விக்கெட்டைப் பெற்றவர் ஹர்பஜன் சிங்!
அடுத்த தொடர் ஆஸ்திரேலியாவில் 2003-04 இல். இந்தியாவில் விளையாடுவதற்கும், ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தோம். நான்கு டெஸ்ட்களிலும் ஆஸ்திரேலியாவே ஜெயிக்கும் என்றும் பலர் நினைத்தார்கள். ஆனால் நான்கில் இரண்டு டிரா. மற்ற இரண்டில் ஆளுக்கொரு வெற்றி. சேவாக், கங்குலி, திராவிட், லக்ஷ்மண், டெண்டுல்கர் என்று அனைவரிடமிருந்தும் சதங்கள். திராவிடின் பிரமாதமான ஆட்டத்தால் இந்தியாவிற்கு ஒரு வெற்றி. பந்துவீச்சு பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது. அகர்கர், பதான், கான் மூவரும் அங்கும் இங்குமாக நன்றாக வீசினார்கள். கும்ப்ளே - நான் எதிர்பார்க்காத வகையில் - நிறைய விக்கெட்டுகளைப் பெற்றார். ஹர்பஜன் கைவிரல் எலும்பு முறிவால் ஓர் ஆட்டத்திலும் விளையாட முடியவில்லை. பாண்டிங்கின் ஸ்கோர்? ஏழு இன்னிங்ஸில் 54, 242, 0, 257, 31*, 25, 47.
இம்முறை ஹர்பஜன் ரெடி. ஆனால் பாண்டிங் விரலில் எலும்பு முறிவு! முதல் இரண்டு டெஸ்ட்களில் ஆட முடியாது. ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான ஆட்டக்காரர் பாண்டிங் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியாவிற்காக டெண்டுல்கர் விளையாடப் போவதில்லை என்றாலும் சேவாக், திராவிட், லக்ஷ்மண், கங்குலி, யுவராஜ் சிங் ஆகியோரால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியும். ஆனால் பாண்டிங் இல்லாத ஆஸ்திரேலியா வெகுவாக வலுவிழந்த அணி. பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கங்குலி இதை முக்கியமாகக் குறிப்பிட்டார்.
பெங்களூர் ஆடுகளம் முதல் நாள் தொடங்கி சுழற்பந்துக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் ஷேன் வார்ன் தவிர உருப்படியான சுழல்பந்து வீரர்கள் கிடையாது. இந்தியாவோ ஹர்பஜன், கும்ப்ளே, கார்த்திக் மூவரையும் களமிறக்கலாம் என நினைக்கின்றனர்.
பெட்டிங் நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவே ஜெயிக்கும் என நினைக்கின்றனர். எனக்கென்னவோ, இந்தியா ஜெயிப்பதற்குத்தான் அதிக வாய்ப்புகள் என்று தோன்றுகிறது.
ஆட்டத்தைப் பார்க்க, கடைசி இரண்டு தினங்கள் (சனி, ஞாயிறு) பெங்களூர் செல்கிறேன். ஐந்து நாள்களும் ஆட்டம் இருக்குமென்று நம்புவோம்!
மனநோய்…
5 hours ago
அன்புள்ள பத்ரி,
ReplyDeleteபெங்களூரில் மழை வர வாய்ப்புகள் உள்ளது போல் இருக்கிறதே? நீண்ட நாட்களாய் நான் கேட்க நினைத்த கேள்வி...'உங்களுக்கு டென்டுல்கர் பிடிக்குமா? பிடிக்காதா?'. அமெரிக்க வாசிகளுக்கு இந்தப் பந்தயங்களை எப்படி பார்ப்பது என்று இதுவரையில் ஒரு 'ஐடியா'வும் இல்லை. டி.டி யில் போன முறை, இணையம் வழியே பார்க்க காசு கொடுத்து, படு கேவலமாய் 'ஸ்ட்ரீம்' செய்தார்கள்.
- அருண் வைத்யநாதன்
(கலக்கலா எழுதுது உங்க பின்னூட்ட பெட்டி, எப்படி பண்ணனும் இது...ஜூப்பரா இருக்கு, நானும் கொடுக்க முயற்சிக்கறேன் :))
By: Arun
பத்ரி,
ReplyDeleteமுதலில் நானும் ஒரு கிரிக்கெட் ஆர்வலன்! என்னைப் பொறுத்த வரை, Ponting இல்லாத Australian அணியை விட Sachin இல்லாத நம் அணி தான் வழுக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால், அவர்கள் World Champions ஆக இருப்பதற்கு முக்கிய காரணமே எந்த ஒரு தனி ஆட்டக்காரரையும் நம்பி அவர்கள் களம் இறங்குவதில்லை! Tendulkar இல்லாத நம் அணியின் லட்சணத்தை தான் சமீபத்திய (இங்கிலாந்தில் நடந்த) ஆட்டங்களில் பார்த்தோமே! கங்குலியை ஒரு உன்னதமான கேப்டானாகவும் ஒப்புக்கொள்ள இயலாது! அவர் மகா கர்வி மட்டுமல்ல, கொஞ்சம் திமிரும் நிறைந்தவரே! Dravid-ai Captain ஆக்கினால் நல்லது.
By: BALA
முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவர் மெக்ரா. இவரும், ஜில்லெஸ்பியும் இனைந்தால் 'பிட்ச்' பஞ்சு மெத்தையாக இருந்தாலும் விக்கெட் வீழ்த்தக்கூடியவர்கள்.
ReplyDeleteBy: Raj Chandra
அருண்: பின்னூட்டம் எப்படிச் செய்துள்ளேன் என்பதை இங்கு கொடுத்துள்ளேன், உருவிக் கொள்ளுங்கள். சுரதா, க்ருபா ஷங்கர், கேவிஆர் ஆகியோரின் மாற்றங்களில் சில அதிகப்படியாய் செய்திருந்தேன். http://thoughtsintamil.blogspot.com/2004/09/blog-post_14.html
ReplyDeleteஎனக்கு டெண்டுல்கர் பிடிக்கும்:-) (திராவிட் அதிகமாய்ப் பிடிக்கும்!)
அருண்: இப்பொழுதைக்கு யார் இந்தத் தொடரை அமெரிக்காவில் காட்டப்போகிறார் என்றே தெரியவில்லை. நேற்றுதான் இந்தியாவிலே தூரதர்ஷனில் காட்டினால் தப்பில்லை என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது! ஒருவேளை எக்கோஸ்டார் ஆக இருக்கலாம். இணையத்தின் ஸ்டிரீமிங் நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றூ தோன்றுகிறது...
பாலா: ஆஸ்திரேலிய அணி இந்தியப் பயணத்தின்போது பாண்டிங்கை அதிகமாக நம்பியிருக்கும் என்பதுதான் என் கருத்து. 1. அவர் கேப்டன். இந்தியாவில் இதுவரை ஜெயிக்காத நிலையில் கேப்டனின் வேலை ரொம்ப முக்கியம். வெளியில் இருந்து கொண்டு அதிகம் ஒன்றும் செய்துவிட முடியாது. கில்கிறிஸ்ட் அணித்தலைமை மீது எனக்கு அதிக நம்பிக்கையில்லை. 2. பேட்டிங். பாண்டிங்கின் பேட்டிங் இல்லாதிருப்பது அவர்களை நிச்சயம் பாதிக்கும். பேட்டிங் ஆர்டரும் பாதிக்கப்படும்.
ராஜ்: மெக்ரா, கில்லஸ்பி - இருவரும் சேர்ந்தாலும் ஆடுகளம் முக்கியம். மெக்ராவின் ஆட்டம் வலுவிழந்து கொண்டே வருகிறது. இப்பொழுதைக்கு கில்லஸ்பிதான் அதிக ஆபத்தானவர். சென்ற இந்தியா பயணத்தின்போதே கில்லஸ்பிதான் இந்தியாவிற்கு முக்கிய எதிர்யாக இருந்தார்.
என் கணிப்பில் நாம் அவர்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவ்வளவாக பயப்பட வேண்டியதில்லை. ஷேன் வார்ன் நிச்சயம் அதிக விக்கெட்டுகளை எடுப்பார். ஆனால் எவ்வளவு ரன்களைக் கொடுப்பார் என்பதே முக்கியம்.