ஆஸ்திரேலியா 423/6 (115.1 ஓவர்கள்) - கிளார்க் 111*
இன்று காலை முழுதும் கிளார்க், கில்கிறிஸ்ட் கையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் உதை வாங்கினர். கிளார்க் தன் கன்னி இன்னிங்ஸில் சதமடித்தார். கில்கிறிஸ்ட் 109 பந்துகளில் 104 ஓட்டங்கள் எடுத்தார்.
உணவு இடைவேளை வெகு அருகில் இருக்கும்போது கில்கிறிஸ்ட் ஹர்பஜன் பந்தை மிட் ஆஃப் திசையில் அடிக்க, ஹர்பஜன் வலதுகைப் பக்கம் கீழே விழுந்து தரையை ஒட்டிய மிக அருமையான கேட்சைப் பிடித்தார்.
பள்ளிக்கூடத்தில் பெரிய முரட்டுப்பையன் (bully) ஒருவனிடம் தர்ம அடி வாங்கி, நையப் புடைக்கப்பட்ட சிறுவன் கடைசியில் ஓடிப்போகும்போது சிறு கல்லை முரடன் மீது எறிந்துவிட்டு தான் என்னவோ சாதித்து விட்டதாக நடந்துகொள்வதைப் போல, ஹர்பஜன் கில்கிறிஸ்ட் கேட்சைப் பிடித்ததும் வாய் கொள்ளாத பஞ்சாபி/ஆங்கில வசவுகளைக் கொட்டி விட்டு பந்தை வெறியுடன் கீழே ஓங்கி எறிந்தார்.
காலை முழுதும் கும்ப்ளேயும், ஹர்பஜனும், பதானும், கானும் வாங்கிய உதைகள் இந்த ஒரு கேட்சால் மறைந்துவிடவா போகின்றது?
இந்தச் சின்ன வயதில் கிளார்க் நன்றாக விளையாடினார், இன்னமும் களத்தில் இருக்கிறார். கில்கிறிஸ்ட் சென்ற 2000-01 தொடரில் மும்பையில் அடித்த சதத்தைப் போல பிரமாதமாக ஆடினார். இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஓர் இலக்கின்றி வீசியதைப் போல இருந்தது. காலையில் ஆட்டம் தொடங்கும்போதே இந்தியா புதுப்பந்தை எடுத்திருந்தது. ஆனால் இதனால் கிளார்க், கில்கிறிஸ்ட் இருவருக்கும் எந்தத் தொல்லையும் இல்லை. கிளார்க் தன் சதத்தை நெருங்கும்போது சற்றே தயங்கினார். ஆனால் அதைத் தாண்டியவுடன் அவசரப்பட்டு விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக ஆடுகிறார்.
அடுத்து வரவிருக்கும் ஷேன் வார்ன், காஸ்பரோவிச் இருவரும் மட்டையைச் சுழற்றுபவர்கள். கொஞ்சம் ரன்கள் கொடுத்தாலும் விக்கெட்டை எடுத்து விடலாம். கில்லெஸ்பி சரியான 'கடி'. கிளார்க் நின்று விளையாட நினைத்தால் கில்லெஸ்பி தன் விக்கெட்டை சட்டென்று கொடுத்து விடாமல் தொடர்ந்து நிற்பார். மெக்ராத் ஒருவர்தான் ஈசியாக அவுட்டாவார். ஆஸ்திரேலியா எண்ணிக்கை 500ஐத் தாண்டும் போலத் தோன்றுகிறது. இப்பொழுதைக்கு டிக்ளரேஷன் எதுவும் இருக்காது.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
17 hours ago
No comments:
Post a Comment