ஆஸ்திரேலியா 398, இந்தியா 146/5 (77 ஓவர்கள்) - காயிஃப் 47*, படேல் 16*
ஆஸ்திரேலியா, இந்தியா விளையாடிய கடந்த 9 டெஸ்ட்களில் இந்திய அணி தன்னளவில் மிகச்சிறந்த அணியையே அமைத்திருந்தது. சிலசமயம் ஹர்பஜன் விளையாடவில்லை, சிலசமயம் கும்ப்ளே. ஆனால் பேட்டிங் எப்பொழுதுமே சிறப்பானதாக இருந்துள்ளது. அதனால்தான் ஆட்டத்தின் முடிவுகளும் 3-3-3 (ஆளுக்கு மூன்று வெற்றிகள், மூன்று டிரா) என்று இருந்துள்ளது. ஆனால் நாக்பூர் டெஸ்டின் தொடக்கத்திலேயே இந்திய அணி ஆஸ்திரேலியா போன்ற உலக சாம்பியன் அணியை சிறிதும் எதிர்கொள்ள லாயக்கற்றது என்று தெரிந்துபோனது.
முதல்தரப் பந்துவீச்சு இல்லாமலேயே ஆஸ்திரேலியாவை 398க்கு ஆல் அவுட் ஆக்கியது சாதனைதான். இன்று காலை ஜாகீர் கான் முதல் ஓவரிலேயே புதுப்பந்தை எடுத்தார். சில ஓவர்களுக்குப் பின், கில்லெஸ்பியை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். கில்லெஸ்பி 9, ஆஸ்திரேலியா 376/8. அடுத்த ஓவரிலேயே அகர்கர் காஸ்பரோவிச்சை விக்கெட் கீப்பர் படேலிடம் கேட்ச் கொடுக்க வைத்து அவுட்டாக்கினார். காஸ்பரோவிச் 0, ஆஸ்திரேலியா 377/9. தன் நூறாவது டெஸ்டை விளையாடும் மெக்ராத் கடைசியாக மட்டை பிடிக்க வந்தார். அகர்கர் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்பிற்கு ஓரடி தள்ளி வந்தெல்லாம் காமெடியாக விளையாடினார், ஆனால் தடால் தடாலென்று இரண்டு நான்குகளும் (ஒரு கவர் டிரைவ், ஒரு ஹூக்!) ஒரு மூன்றும் அடித்தார். மறு முனையில் கிளார்க் தன் சதத்தை எட்டுவாரா என்பதே கேள்வியாக இருந்தது. ஆனால் கானின் பந்தில் படேலிடம் கேட்ச் கொடுத்து கிளார்க் அவுட்டானார். கிளார்க் 91, ஆஸ்திரேலியா 398.
படேல் கடைசியில் மூன்று கேட்சுகளும், ஒரு ஸ்டம்பிங்கும் செய்துள்ளார். ஆனாலும் அவர் விட்ட கேட்சுகள்தான் நம் மனதில் நிற்கும்.
இந்தியா பேட்டிங் செய்ய வந்தது. மோசமான ஃபார்ம், டெண்டுல்கரின் ஃபிட்னெஸ் பற்றிய கவலை, கங்குலி இல்லாதது, ஆஸ்திரேலியாவின் மிக அருமையான பவுலிங். இந்தியா ஃபாலோ-ஆனைத் தாண்டுவதே கடினம் என்று எனக்கு உள்மனதில் தோன்றியது. ஆனால் முதல் நான்கைந்து ஓவர்களில் சேவாக் பேட்டிங் செய்த போது யாருமே இப்படி நினைத்திருக்க முடியாது. முதல் ஓவர் மெக்ராத், ஆகாஷ் சோப்ராவுக்கு - மெய்டன். இரண்டாவது ஓவரில் சேவாக் கில்லெஸ்பியை வெளுத்து வாங்கினார். முதல் பந்து, பாயிண்ட் - நான்கு ரன்கள். இரண்டாவது பந்து யார்க்கர், தடுத்து விளையாடினார். மூன்றாவது பந்து ஸ்லிப் திசையில் உயர அடிக்கப்பட்டு, தர்ட்மேனில் நான்கு. நான்காவது பந்து ஆஃப் திசையில், நல்ல அளவில் வந்தது, கவர் திசையில் நான்கு ரன்கள். ஐந்தாவது பந்து, விளிம்பில் பட்டது, ஆனால் இரண்டாவது ஸ்லிப் கைக்குப் போகாமல் முன்னாலேயே விழுந்து விட்டது. ஆறாவது பந்து, கால் திசையில். சேவாக் அதை மிட்விக்கெட்டுக்கு மேல் தூக்கி அடித்தார், நான்கு ரன்கள்!
அதன்பிறகு பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. சோப்ரா விளிம்பில் பந்தைத் தட்டி, தர்ட்மேனில் இரண்டு நான்குகளைப் பெற்றார். சேவாக் அங்கும் இங்குமாக இரண்டுகளையும், ஒன்றுகளையும் பெற்றார். நடுவில் கொஞ்சம் அமைதி.
மெக்ராத் வீசிய ஓவரில் சேவாக் பந்தை வெட்டி ஆடப்போய் தவறினார். கொஞ்சம் சுதாரித்து அந்த ஓவரில் கவனமாக விளையாடியிருக்கலாம். அப்படிச் செய்வது சேவாகின் வழக்கமில்லையே? அடுத்த பந்து, எழும்பி வந்தது. வெட்டினார். கில்கிறிஸ்ட் முதல் ஸ்லிப்புக்கு முன்னால் தாவி வந்து கேட்சைப் பிடித்தார். சேவாக் 22, இந்தியா 31/1. இதன் பின் சேவாக் கையில் உதைவாங்கியதற்காக கில்லெஸ்பிக்கு பதில் காஸ்பரோவிச்சைப் பந்துவீச வைத்துக்கொண்டிருந்த கில்கிறிஸ்ட், மீண்டும் கில்லெஸ்பியை பந்துவீச்சுக்குக் கொண்டுவந்தார். சோப்ரா ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை அழகாக கேட்ச் பிராக்டீஸ் செய்வது போல தட்டி முதல் ஸ்லிப்பில் இருக்கும் வார்ன் கையில் கொடுத்தார். சோப்ரா 9, இந்தியா 34/2. டெண்டுல்கர் விளையாட வந்தார். அரங்கமே ஆர்ப்பரித்தது. (ஏன்?)
டெண்டுல்கர் விளையாடும்போது அவர் முழு ஃபிட்னெஸில் இல்லை என்றே தோன்றியது. உலகமே அவசரப்படுத்தி அவரை பேட்டிங் செய்ய அழைத்து வந்திருந்தது. இரண்டொரு முறை வலி தாங்காமலோ, என்னவோ, மட்டையைப் பிடித்திருக்கும் கீழ்க்கையை எடுத்துவிட்டார். ஆனால் டென்னிஸ் எல்போ வந்திருப்பது மேல்கை (அதாவது இடக்கை). உணவு இடைவேளையின்போது இந்தியா 35/2 என்று இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் திராவிடும், டெண்டுல்கரும் தட்டுத் தடுமாறி ஆடினர். ஒரு தடவை கூட எல்லைக்கோட்டை நெருங்குமாறு ஷாட் எதுவும் அடிக்கவில்லை. பந்துவீச்சாளர்கள் யாருமே மோசமான பந்துகளைத் தரவில்லை. தந்திருந்தாலும் கூட அடிக்கும் அளவிற்கு தன்னம்பிக்கையும் மட்டையாளர்களிடம் இல்லை. கில்கிறிஸ்ட் ஆனால் ஷேன் வார்னை பந்துவிச்சுக்குக் கொண்டுவரவில்லை. கில்லெஸ்பியின் பந்தில் டெண்டுல்கர் எல்.பி.டபிள்யூ ஆனார். ஸ்டம்பிற்கு நேராக அவரது காலில் பட்ட பந்து. அப்பொழுது டெண்டுல்கர் 36 பந்துகளில் 8 ரன்கள் அடித்திருந்தார். எந்த நான்கும் இல்லை. திராவிட் அப்பொழுது 53 பந்துகளில் 5 ரன்கள் அடித்திருந்தார்! இந்தியா 49/3.
லக்ஷ்மண் அடுத்து விளையாட வந்தார். இப்பொழுது கொஞ்சமாவது ரன்கள் வர ஆரம்பித்தது. திராவிட் மெக்ராத் பந்தை பாயிண்டில் அடித்து நான்கைப் பெற்றார். லக்ஷ்மண் கில்லெஸ்பியின் பந்தில் தர்ட்மேனில் ஒரு நான்கு அடித்தார். அதே ஓவரில் மீண்டும் ஸ்லிப் திசையிலேயே மற்றுமொரு நான்கு. காஸ்பரோவிச் பந்தில் மிட் ஆஃப் திசையில் லக்ஷ்மணுக்கு மற்றுமொரு நான்கு. காஸ்பரோவிச் பந்தில் திராவிடும் இன்னுமொரு நான்கைப் பெற்றார்.
ரன்கள் வரத் தொடங்கவே, கில்கிறிஸ்ட் ஷேன் வார்னைக் கொண்டுவந்தார். தன் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே வார்ன் லக்ஷ்மணுக்கு லட்டு போல ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்பில் போட்டுக் கொடுத்தார். மோசமான பந்து. அதை நான்கிற்கு அடித்திருக்க வேண்டும். ஆனால், அதைப் பார்த்தவுடன் வாயில் எச்சில் ஊற லக்ஷ்மண் பந்தைத் தூக்கி அடிக்க கல்லியில் கிளார்க் அழகான ஒரு கேட்சைப் பிடித்தார். லக்ஷ்மண் 13, இந்தியா 75/4.
திராவிட் உடனே ஒரு கூட்டுக்குள் போய்விட்டார். காயிஃபுடன் சேர்ந்து இந்த டெஸ்டை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து 'டொக்கு வைக்க' ஆரம்பித்தார். ஆனால் காயிஃப் சரியாக, நிதானமாக விளையாடினார். திராவிடும் அப்படியே செய்திருக்கலாம். செய்யவில்லை. தேநீர் இடைவேளையின்போது இந்தியா 95/4. திராவிட் 119 பந்துகளில் 19*. காயிஃப் 27 பந்துகளில் 15*.
இடைவேளைக்குப் பின் இந்தியா நூறைத் தாண்டியது. காயிஃப் மட்டும்தான் ரன்களைப் பெற முயற்சித்தார். இருவரும் 21 ரன்களை எட்டினர். மெக்ராத் வீசிய அருமையான பந்தில் - ஆஃப் ஸ்டம்பில் விழுந்து சற்றே விலகிச் சென்றது - திராவிட் முதல் ஸ்லிப்பில் இருக்கும் ஷேன் வார்னிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். திராவிட் 140 பந்துகளில் 21. இந்தியா 103/5.
அதன்பின் காயிஃப் - படேல் ஜோடி சேர்ந்து சிறிதாவது மானத்தைக் காத்தனர். சென்னையில் விளையாடியதைப் போலவே இருவரும் சமர்த்தாக விளையாடினர். படேல் சற்றே கவனமாகவும், காயிஃப் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரன்களைப் பெற்றும் ஆடினர். முன்னமே சொன்னது போல காயிஃப் ஒருவர்தான் முழுத் தன்னம்பிக்கையுடன், தன் இயல்பான விளையாட்டை விளையாடினார்.
மெக்ராத் வீசிய ஒரு 'நோபாலில்' - அளவு குறைந்து வந்தது - காயிஃப் கண்மூடித்தனமாக குனிய, பந்து பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்பில் வார்னிடம் கேட்சானது. அதை 'நோபால்' என்று கவனிக்காமல் காயிஃப் பெவிலியன் திரும்பி நடக்கலானார். திடீரென நடந்ததை உணர்ந்து மீண்டும் கிரீஸில் ஓடி வந்து விழுந்தார் - இல்லாவிட்டால் ரன் அவுட் ஆகியிருக்கும். ஆஸ்திரேலியர்கள் இதையெல்லாம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் அல்லவா? அதன் பிறகு காயிஃப் நிதானமாக ஆடி, மெக்ராத், காஸ்பரோவிச், கில்லெஸ்பி பந்துகளில் சில நான்குகளையும், வார்ன் பந்தில் லாங் ஆனுக்கு மேல் ஒரு ஆறையும் பெற்றார். இரண்டாம் நாள் ஆட்டம் முடியும்போது இந்தியா 146/5 என்று இருந்தது. மெக்ராத் படேலை நிறையவே பயமுறுத்தினார். ஆனால் படேல் அதைப்பற்றி கவலைப்படாது தைரியமாக - இதுவரை - நிற்கிறார். இன்று காலை நடைபெறும் ஆட்டம் முக்கியமானது. ஆஸ்திரேலியா இந்தியாவின் கடைசித் தடையை உடைத்துவிட்டால் நாளைக்குள் ஆட்டம் முடிந்து விடும். ஆனால் காயிஃப் தொடர்ச்சியாக இன்று முழுதும் விளையாடினால் இந்தியாவால் ஆட்டத்தை ஐந்தாவது நாளுக்குக் கொண்டுபோக முடியும்.
மற்றபடி ஆஸ்திரேலியா இந்த ஆட்டத்தில் ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றே இப்பொழுதைக்குத் தோன்றுகிறது.
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
11 hours ago
திராவிட் போன்ற ஆட்டக்காரர் கூட 140 பந்துகளில் 21 அடிப்பது கேவலமாக உள்ளது. கடும் அதிர்ச்சிக்கு ஆளானேன்.
ReplyDeleteBy: Meenaks
மாட்ச் பார்த்த எனது நண்பர்கள் (அமெரிக்காவில் இரவு பன்னிரண்டு மணிக்கு ஆரம்பித்து காலை ஏழரை மணிக்கு முடிவதால்...மேட்ச் கொஞ்சம் விறுவிறுப்பான நிலை வரும் வரை நான் நண்பர்கள் வீட்டுக்கு சென்று பார்ப்பது கிடையாது!) . உங்களின் விமர்சனம் மற்றும் இணையத்தளங்களில் படிப்பதை எல்லாம் பார்க்கும் போது, பார்க்காததே நல்ல விஷயம் என்று படுகிறது. சச்சின் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாவது அணிக்குள் வரவேண்டுமா? என்னைப் பொறுத்தவரை, அவர் நன்றாக ஓய்வெடுத்து தெனாப்பிரிக்கா பந்தயத்துக்கு வந்திருக்கலாம். திராவிட் இப்படி மகா ரம்பமாக ஆடுவதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. ஆக மொத்தம், இப்போதெல்லாம் சேவாக் அடித்தால் தான் இந்திய அணியின் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கிறது.
ReplyDelete- (சரி போதும்....என்னோட புலம்பலை முடிச்சுக்கறேன்) - அருண்
By: Arun